![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/20/Capture--1.jpg?itok=KlSAmbuz)
யாழ்ப்பாணத்திலை இருந்து சென்னைக்கு விமான சேவையும் ஆரம்பிச்சாச்சு. இனியென்ன படிப்படியாக விட்டகுறை, தொட்டகுறைகளையும் சரிப்பண்ணலாம் என்கிறார்கள் பலர். ஆனால், உதையா நாங்கள் கேட்டம்? பெயரை வேற பிழையாக எழுதிக்கிடக்கு! சரியெண்டால், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்று எழுதியிருக்க வேண்டும். உதென்ன யாழ்ப்பாணம்? உது தமிழ்ப் பிழையல்லே! என்று ஒரு சிலரும், யாழ்ப்பாணம் என்றே மூன்று மொழியிலும் எழுதியிருக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பும் சொல்கிறது. இப்பிடி கனக்க கதை.
எனக்ெகன்றால், விமான நிலையத்தின் உள்ளகங்களில் தமிழில் முதலில் எழுதி நெஞ்சைக் குளிர வைத்துள்ளார்களே! சென்னையில் இருப்பதைப்போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறதே! என்றேன் நண்பரிடம். அவர் சொல்கிறார். உண்மைதான், தமிழகத்தில் உள்ளக சேவையிலும் மாநிலங்களுக்கிடையிலும் சேவையில் ஈடுபடும் விமானம்தான் யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும்கூடச் சேவையில் ஈடுபடுகிறது என்கிறார்.
பேஸ்புக்கில் இந்த விமான சேவை பற்றிப் பலர் பலவிதமாக எழுதியிருக்கிறார்கள்; எழுதி வருகிறார்கள். சிலர், ம்..இனியென்ன? தனுஷ்கோடிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் பாலமா, படகுச்சேவையா? என்று கேட்கிறார்கள். சிலர் அதற்குப் பதில் அளிக்ைகயில், இல்லை, அடுத்ததாக ரயில் சேவை! என்று எழுதுகிறார்கள்.
இப்பிடியே பார்த்துக்ெகாண்டு போகேக்குள்ளதான் லதா கந்தையா என்பவரின் பதிவு கண்ணில்பட்டது. அதைப்பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். அதற்கு முதல்ல, யாழ்ப்பாணமா? யாழ்ப்பாணம் ஆ? என்ற விடயத்திற்கு வருவோம்.
அவர்கள் சொல்வது என்னெண்டால், உது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என்றுதான். வரவேண்டும். ம்மன்னா..வராது! அதாவது 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பதைப்போல. உது "யுனிவர்சிற்றி ஒப் ஜப்னா" (University of Jaffna) அப்பிடியெனும்போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பதே சரி. ஆனால், இது "இன்ரநஷனல் எயார்போட் ஒப் ஜப்னா" (International Airport of Jaffna) அல்ல. ஜப்னா இன்ரநஷனல் எயார்போட்! அப்பிடியென்றால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்பதுதான் சரி. அதாவது, எங்கள் (இலங்கை அரசின்) சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில் இருக்கிறது. அவ்வளவே! என்று நண்பருக்குச் சொன்னேன். அப்பிடியெண்டால் சரியென்றார். அப்பிடியெண்டால் அல்ல, அப்பிடித்தான் என்றேன்.
புத்தளம் சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயன தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து ஆலை, மீனம்பாக்கம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம், கோயம்புத்தூர் விமான நிலையம் என்பவற்றைப்போன்று இஃது "யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்" சரியா?
சரியென்கிறார்.
இனி, லதா கந்தையாவின் பதிவைப் பாருங்கள். அவரது கருத்துகளுடன் உடன்பட முடியுமா? என்று சிந்தித்துப்பார்ப்போம்!
"யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக திறந்து வைக்கப்பட்டு, தனது பயணத்தை தொடர்கிறது.
இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு போவதற்கு இரவிரவாக புறப்பட்டு பயணிக்கும் துயரம் முடிவுக்கு வருகிறது.
நல்லதை வரவேற்கும் மனநிலை இழந்தோர், செத்தவீட்டு புராணம் வாசிக்க தொடங்கி இருக்கிறார்கள். நாம் அனுபவித்த துன்பம் எமது சந்ததிக்கு வரக்கூடாதென்ற மனநிலை இல்லாத புலம்பல்கள்.
வீதி போட்டால் குற்றம்.
விமான நிலையம் வந்தால் குற்றம்.
துறைமுக அபிவிருத்தி செய்தால் குற்றம்.
அபிவிருத்திகளைப் பயனுடையதாக்கத் தெரியாத புலம்பல்களால் என்ன வந்து விடப்போகிறதெனத் தெரியவில்லை.
இன்று புலம்புவோர் நாளை வசதி கருதி இந்த விமானப்பாதையூடாகப் பயணித்து ஒரு செல்பியும் எடுத்து பதிவிடத்தான் போகிறார்கள்.
ஒரு கொண்டாட்டம் நடக்கும் போது இழவுத்துயர் பாடத் தமிழர்கள் எங்கு தான் கற்றுக்கொண்டார்களோ தெரியவில்லை.
நல்லவற்றை தமக்கு சாதகமாக்கி, அடுத்து வரும் சந்ததிக்குக் குண்டுங்குழியுமற்ற , குண்டுச்சத்தமில்லாத ஓர் எதிர்காலத்தைப் பரிசளிக்கத் தயாராக வேண்டும்.
பாதை திறந்தால் பழக்க வழக்கம் மாறும் என கருதுமளவுக்கு அந்நியப்பழக்க வழக்கத்தை உறிஞ்சும் அட்டைத்தனமான சிந்தனை வளராதிருக்க எமது இளையோருக்கு அறிவூட்ட வேண்டிய தேவையை ஏற்படுத்த வேண்டும். கற்றுக்கொடுக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்.
கொழும்பு மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்குப் பலதடவை சென்றிருக்கிறேன். அந்தப்பல்கலைக்கழக வளாகம் அமைதியில் நிறைந்திருக்கும். மாணவர்களின் தேனீர்ச்சாலையும் நீண்ட திறந்தவெளி மண்டபத்தை உடையது. அங்கு சிற்றுண்டி அருந்துவதற்காகக் கதிரை மேசை போடப்பட்டுள்ளது. ஆனால், அந்த இடத்தையும் மாணவர்கள் பேரமைதி காத்துப் படிப்பகமாகப் பயன்படுத்துகிறார்கள். ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கக்கூடிய அமைதி பேணப்படுகிறது. நல்லனவற்றை யாரிடம் வேண்டுமாயினும் கற்றுக்கொள்ளலாம். அதில் தவறில்லையே!
உயர்ந்த பழக்கவழக்கங்களும் சிந்தனைகளும் வளர என்ன செய்யலாம் ? என்ற சிந்தனையை விட்டு விட்டு, கடந்து போன இழவுத் துயரைப் பாடித் தனக்குக் கிடைக்காத சந்தோசங்கள் வசதி வாய்ப்புகள் மற்றையோருக்கும் கிடைக்க கூடாதென நினைக்கும் மனங்களில் மாற்றம் வர வேண்டும்.
வரும் வாய்ப்புக்களைச் சாதகமாக்கும் மனங்களைக் கட்டிெயழுப்பப் பழக வேண்டும்.
கோதுமை பயன்பாடு வந்தபோது, மாட்டுக்கு வைத்த சந்ததிதான் இன்று பாணும், பருப்பும் சுவை எனத் துதி பாடுகிறது.
பலாலி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தனக்கென்ற கம்பீரத்தோடு இன்று எழுந்தருளுகிறது. வரவேற்போம். வருவதை எமக்கான சாதகமான வசந்தங்களாக மாற்றிக்கொள்வோம். அது தான் நல்லதும் தகுதியுமானது" இனித்தீர்மானிக்க வேண்டியது நீங்கள்?