கனடிய பாராளுமன்றத் தேர்தல் மீண்டும் அதே ஆட்சியை அங்கீகரிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அறுதிப் பெரும்பான்மை பெறாது போனாலும் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக தெரிவாகியுள்ளார். அவரது லிபரல் கட்சி 156ஆசனங்களைப் பெற்று சிறு கட்சிகளின் கூட்டின் ஒத்துழைப்புடன் ஆட்சியமைக்கும் பலத்தினை பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான கன்சவேட்டிவ் கட்சி 121இடங்களில் மட்டுமே பெற்றுள்ளது. இப்பொதுத் தேர்தல் கனடிய மக்களின் அணுகுமுறையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை அளவிடுவதாக இக்கட்டுரை அமையவுள்ளது.
உலக நிலப்பரப்பில் இரண்டாவது மிகப் பெரிய தேசமாக விளங்கும் கனடாவில் பத்து மாகாணங்களும் மூன்று ஆட்சி பகுதியையும் கொண்டதாகும். ஆங்கிலம் பிரெஞ்சு ஆகியவை அதிகாரபூர்வ மொழிகளாக உள்ளன. முடியாட்சி முறையை அடிப்படையாக கொண்ட நாடாக கனடா விளங்குகிறது. தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களை கொண்ட மக்களவை மற்றும் நியமனம் செய்யப்படும் உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபை முதலிய இரட்டை அமைப்பை இந்த நாடு பின்பற்றி ஜனநாயகத்திற்கு வழியமைத்துள்ளது. கனடாவின் ஆட்சி முறைமைக்கான தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும். மக்களவைக்காக நிகழும் பொதுத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார். கனடாவில் மொத்தம் 338மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி குறைந்தது 170தொகுதிகளில் உறுப்பினரைக் கொண்டிருக்க வேண்டும்.
முதலாவது பிரித்தானிய பாரம்பரியத்தை அதிகம் கொண்டுள்ள கனடா கட்சியமைப்பிலும் இரு கட்சி பாரம்பரியத்தினை பிரதிபலித்து வருகிறது. அதிலும் பிரித்தானிய பாராளுமன்றம் போலவே இரு சபைகளைக் கொண்டிருப்பதுடன், கன்சவேட்டிவ் கட்சி பிரித்தானிய மரபுகளால் உருவானது. மற்றும் லிபரல் கட்சியும் ஏறக்குறைய பொருளாதார அர்த்தத்தில் வலிமையான கட்சிக் கட்டமைப்பினைக் கொண்டு இயங்குகிறது. ஒப்பீட்டடிப்படையில் தனித்து ஆட்சி அமைக்க முடியாமையை கனடிய மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். இது லிபரல் கட்சியின் மீதான நெருக்கடியாகவே தென்படுகிறது. அக்கட்சியின் கொள்கையை நிராகரிக்காத நிலையில் எச்சரிக்கை வழங்குவது போல் அமைந்துள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் 184இடங்களை பெற்று ஆட்சி அமைத்த லிபரல் கட்சியின் நிலையை கனடிய மக்கள் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளமை தென்படுகிறது.
இரண்டாவது கனடிய மக்கள் ஜஸ்டின் மீதான அதிருப்தியை அவரது கொள்கைகள் தொடர்பில் முதன்மைப்படுத்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக காலநிலை தொடர்பிலும் ஊழல் தொடர்பிலும் மற்றும் வறுமைக்கு எதிரான அவரது கொள்கை பொறுத்தும் அதிருப்தி அடைந்திருக்க வாய்ப்பு அதிகமாகவுள்ளது. மேலும் கியூபெக் மாகாணம் தொடர்பிலும் அவர் எடுத்த முடிவுகள் கனடிய மக்களது மனங்களை பாதித்திருக்க வாய்ப்புள்ளது. அது பெருமளவுக்கு இனவாத கருத்தியலாகவே அமைந்திருந்தது. இவற்றைவிட சர்ச்சைமிக்க இந்தியப் பயணத்தின் பாரிய விளைவை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பு அதிகம். கனடாவின் கார்பனீரொட்சைட்டின் வெளியேற்றத்தை குறைப்பதற்காக சர்வதேச அளவில் ஜஸ்டின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கனடாவி லுள்ள அனைத்து மாகாணங்களும் தாமாகவே திட்டங்களை முன்வைக்க வேண்டுமென்று பிரதமர் கேட்டிருந்தார்.
அதற்கு இணங்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யாத மாகாணங்கள் கூடுதலாக வரி செலுத்த வேண்டுமென்ற நிபந்தனையையும் முன்வைத்திருந்தார். இத்தகைய நிலைப்பாட்டில் நான்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டன. அதில் முதன்மையான மாகாணமாக கியூபெக் அமைந்திருந்தது. இதனால் ஜஸ்டின் அரசு மீது மக்களிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனாலும் கன்சவேட்டிவ் கட்சியால் அதனை நிரப்ப முடியவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
மூன்றாவது லிபரல் கொள்கை மீதான பற்றும் அரசியலில் பொருளாதார எண்ணங்களுக்குள்ளும் மேற்குலக மக்கள் செயல்பட முனைவதனையும் அவதானிக்க முடிகிறது. குறிப்பாக தாராளப் பொருளாதாரப் பொறிமுறைக்குள் கனடா மட்டுமல்ல, உலகமே பயணிக்க விரும்புவதனை காணமுடிகிறது. இன்றைய உலகப் பொறிமுறையானது தாராளத்தை அதிகம் கொண்டுள்ள நாடுகளையும் அத்தகைய நாட்டின் ஆட்சியையும் முதன்மையாக மக்கள் கருதும் நிலை வளர்ந்துள்ளது. முழுமையான முதலாளித்துவத்தையோ முழுமையான சோசலிஸத்தையோ ஏற்றுக் கொள்ளாத நிலை வளர்ந்துள்ளது. ஆனால் முழுமையான தாராளப் பொருளாதாரப் பொறிமுறைக்குள் செயல்படுவதென்பது அரசியலாகவும் பொருளாதாரமாகவும் இலகுவானது என்பதுடன் சமூக மட்டத்தில் அதிக சலுகைகளையும் இலகுவான வாழ்க்கை அமைப்பினையும் அடைய முடியும் எனக் கருதும் நிலை வளர்ச்சி அடைந்துள்ளது.
நான்காவது முதல் தடவையாக கூட்டணி அரசியல் அரங்கேறியுள்ளது. அதில் பங்கெடுத்துள்ள லிபரல் கட்சியுடன் புதிய ஜனநாயகக் கட்சி (New Democratic Party) பிரதான பங்காளியாக மாறியுள்ளது. அது இந்திய சீக்கிய இனத்தை பிரதிபலிக்கும் கட்சியாகும் கடந்த ஆண்டு தமிழர் லிபரல் கட்சிக்கு அளித்த ஆதரவே அதன் அறுதிப் பெரும்பான்மைக்கு காரணம் எனக் கூறப்படுகிற நிலையில் தற்போதைய நெருக்கடிக்கு தமிழர் வாக்களிப்பில் கவனம் கொள்ளாதமை முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. 2016ஆம் ஆண்டு கனடாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஏறக்குறைய 1,57,000தமிழர்கள் வாழ்கிறார்கள். அத்துடன் பல ஆயிரக்கணக்கான தமிழகத்தை சேர்ந்தவர்கள் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். எனினும் அவர்கள் வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்களாகவே உள்ளனர். ஈழத்தமிழர்களே வாக்களிக்கும் உரிமையை கொண்டிருக்கின்றனர். இதனால் கனடிய அரசியலில் ஈழத்து தமிழர்கள் பாரிய பங்கு வகிக்கின்றார்கள். எனினும் “ஈழத்தமிழர்கள் வாக்களிப்பில் அக்கறை செலுத்தாமையும் அரசியலில் தீவிரமான ஆதரவோ அல்லது எதிர்ப்போ இல்லாத நிலைப்பாடும் சுய வேலைப்பளு, அரசியல் மீதான நம்பிக்கையின்மை போன்றவற்றின் காரணமாகவும் தமிழர்கள் தேர்தலில் வாக்களிப்பை தவிர்க்கிறார்கள் என கனடா வாழ் ஈழத்தமிழரான நீதன் சண் குறிப்பிடுகின்றார்.
எனவே, கனடியப் பராளுமன்றத் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல, அங்கு வாழும் ஈழத் தமிழருக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியிருக்கும். அதன் பிரதிபலிப்பு இலங்கையிலும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் அமையும் என்பதில் அதிக சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
உலகப் பரப்பில் பொருளாதார வாய்ப்புக்களுக்கான அரசுகளை ஆட்சியில் அமர்த்துவதே நோக்கமாக கொண்டு மக்கள் வாக்களிக்கிறார்கள். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இன்னுமே இன மத மொழி அடையாளங்களுக்கான தெரிவுகள் நிகழ்கின்றன. இதில் மாற்றம் ஏற்படும்போதே இலங்கையிலும் மாற்றம் நிகழும்.
கே.ரீ.கணேசலிங்கம்