![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/10/26/q21.jpg?itok=tc5EjdSq)
உங்கள் வாழ்வில் பொருள், மக்கள், புலனின்பம், புகழ், செல்வாக்கு என்ற ஐவகைப் பற்று ஏற்படுவது இயல்பே. கடமையுணர்வோடும் அளவுமுறை அறிந்தும் விழிப்போடும் இப்பற்றுக்களை வளர்த்துக் காத்துக்கொள்ள வேண்டியது பிறவிப்பயனை எய்த அவசியமானது. நீரில் குளிப்பது தேவைதான். ஆனால் நீரில் முழுகிவிடாமல் காத்துக்கொள்ள வேண்டும். நெருப்பு வாழ்வுக்குப் பல வகையிலும் தேவைதான். ஆனால் நெருப்பு எரித்து விடாமலும் காத்துக்கொள்ள வேண்டும்.
எந்த இடத்தில் மனிதன் மேலே சொல்லப்பட்ட ஐவகைப் பற்றுதல்களால் அறிவு குறுகி மயங்கி தன் பிறவி நோக்கத்தையும் வாழ்வின் நெறியையும் மறக்கின்றானோ, அந்த நேரத்தில் மனிதனிடம் அமைந்துள்ள அடித்தள ஆற்றலாகிய பேரறிவானது, குறுகி நிற்கும் புற அறிவை நேரான வழிக்குத் திசை திருப்புவதற்காகவே, நம் விருப்பங்கள், செயல்கள் இவற்றில் தடைகள் விளைந்து வாழ்வில் மாற்றங்கள் தோன்றுகின்றன. இன்பத்திலிருந்தும் புற மனதை மீட்க, பேரறிவானது, மனிதர்கள் மூலமாகவும், விரிந்த இயற்கை ஆற்றல் மூலமாகவும் உதவிக்கொண்டேதான் இருக்கும். இந்த நிலையிலேனும், மன இயக்கத்தில் குறுகியுள்ள மனிதன் அவன் வாழ்வின் இயக்கக் களமான அருட்பேராற்றலை நினைவுகொள்வோம்..!
சோ. வினோஜ்குமார்,
தொழில்நுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.