வீழ்த்தப்பட முடியாத நாடாக ஜப்பான் தன்னைக் கட்டமைத்தது எப்படி? | தினகரன் வாரமஞ்சரி

வீழ்த்தப்பட முடியாத நாடாக ஜப்பான் தன்னைக் கட்டமைத்தது எப்படி?

சாமூராய் வீரர்கள்

ஆசியாவின் உண்மையான ஒரு ஆச்சரியமான நாடு என்றால் அது ஜப்பான்தான். இயற்கை வளங்கள் குன்றிய மனித வளத்தாலும் மனித மூலதனத்தாலும் போசிக்கப்பட்டு கைத்தொழில் மயமாகிய முதலாவது நாடு ஜப்பான். மேற்குலகின் கைத்தொழிற் பொருட்கள் உலகளாவிய ரீதியில் விற்கப்பட்டுக் கொண்டிருந்த வேளை எந்திரவியல், இலத்திரனியல், மின்சாரவியல் நுட்பங்களை மிக நுண்ணிய அறிவுடன் மேன்மைபடுத்திய கைத்தொழில் பொருட்களை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு வழங்கி மேற்குலகின் மூக்கின் மீது விரல் வைத்து ஆச்சரியத்துடன் பார்க்கவைத்த ஆசிய நாடு ஜப்பான்.

இரண்டாம் உலகப்போரின் போது ஒரு அச்சு நாடாக உலக பலவான்களின் கொள்ளைப்புறத்தில் குண்டுகளைக் கொட்டிய ஜப்பான், அமெரிக்காவின் பேர்ள் துறை முகத்தில் வான் தாக்குதல் நடத்தி ஏராளமான கப்பல்களை அழித்தது. இலங்கையிலும் கொழும்பு, திருகோணமலை துறைமுகங்களின் மீதும் அண்டிய பகுதிகளிலும் ஜப்பானிய விமானங்கள் குண்டு மழை பொழிந்தமை பலருக்குத் தெரியாது.

‘லிட்டில் போய்’, ‘ஃபெட்மேன்’ ஆகிய இரண்டு அசுர அணுகுண்டுகளை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாக சாகி ஆகிய இரண்டு நகரங்களின் மீதும் அமெரிக்கா போட்டு நாசகாரப் பேரழிவை ஏற்படுத்திய பின்னர் ஜப்பான் போரைக் கைவிட்டு சரணடைந்தது. அணுகுண்டுகள் விளைவித்த உயிரிழப்புகள், நீண்டகால கதிர்வீச்சினால் ஏற்பட்ட சூழல் பாதிப்புகள் மக்களின் உடல் உளரீதியான பாதிப்புகள் இற்றைவரையிலும் தொடர்வதாக கூறப்படுகிறது.

போரில் சரணடைந்த ஜப்பான் 1951ல் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு சுதந்திர நாடாக தன்னை தக்கவைத்துக் கொண்டது. போர்குற்றங்களுக்காகவும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகப்பெரிய ஒரு தொகையை செலுத்துமாறு உலகப்போரின் கூட்டு நாடுகளாக செயற்பட்ட அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஜப்பானை வற்புறுத்தின.

இக் கூட்டத்தில் இலங்கையின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருந்த அப்போதைய நிதி அமைச்சர் ஜே.ஆர். ஜயவர்தன, ஜப்பானுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை முன்வைத்தார். வெறுப்பினால் வெறுப்பை வேரறுக்க முடியாது. அன்பினாலேயே அதனைச் செய்யமுடியும். அணுகுண்டு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்பையும் கருணையையும் காட்ட வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியதுடன் நட்ட ஈடு என்ற பேரில் ஜப்பானை துன்புறுத்துதல் தவறு எனவும் வாதிட்டார். இது மிகப் பெரிய மனமாற்றத்தை நேச நாடுகள் மத்தியில் ஏற்படுத்தியதுடன் ஜப்பானை மன்னித்து சுதந்திர தேசமாக இயங்க அனுமதிக்கவும் வழிகோலியது.

1952ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையிலான இலங்கை ஜப்பான் நட்புறவு நீடித்து நிலைத்திருப்பதற்கு இந்தச் சம்பவமே பின்னணியில் இருந்தது என்பது வரலாற்று உண்மை. உலகப்போரின் பின்னர் சிதைந்துபோன தமது பொருளாதாரத்தை மீளக்கட்டியமைத்து மூன்றே தசாப்தங்களில் மீண்டும் பொருளாதார வல்லமையை உலகுக்கு மீள உணர்த்திய ஜப்பான் இன்றைய நிலையில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக நீடித்துள்ளது.

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் வரிசையில் ஜப்பான் முன்வரிசையில் இருந்தமைக்கு ஜப்பான் இலங்கை நட்புறவே காரணம். கடந்த காலத்திலும் கூட ஜப்பான் தொடர்ச்சியாக இலங்கையுடன் தொடர்பில் இருந்தமைக்கும் விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்து இலங்கை தொடர்பில் விசேட அக்கறை செலுத்தியமைக்கும் மேலே நாம் குறிப்பிட்ட நன்றிக்கடனே பின்னணியாகும்.

1977ல் ஜே.ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபோது தனிப்பட்ட ரீதியில் ஜப்பான் ஜயவர்த்தனவுக்கு உதவி செய்ய முன்வந்தது. ஜயவர்த்தனபுர வைத்தியசாலை முழுக்க முழுக்க ஜே.ஆருக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பாகும். ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இருசுபாய, செத்சிரிபாய, பரீட்சைத்திணைக்களம் போன்ற கட்டடத் தொகுதிகளும் ஜப்பானிய மானியத்தின் கீழ் வழங்கப்பட்ட கொடைகளாகும். அதற்கு மேலதிகமாக தொடர்ச்சியாக இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவிகளை வழங்கி வருகிறது. இந்நிதி உதவிகளில் பெரும்பாலானவை அன்பளிப்புகளாகவே வழங்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது.

1954ல் இருந்து இலங்கையின் ஒரு அபிவிருத்திப் பங்காளியாக செயற்பட்டு வரும் ஜப்பான் தற்போது இலங்கையின் முக்கியமான ஒரு இருபக்க கொடையாளி நாடாகும்.

ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகம் (Japan International, Cooperation Agency – JICA) 1982தனது இலங்கைக் கிளையை ஆரம்பித்தது தொடக்கம் பல்வேறு திட்டங்களுக்காக சுமார் 2000பில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது.

1868ம் ஆண்டு வரையில் மிகவும் வறிய நாடாகவும் உலகின் மூடப்பட்ட நாடுகளில் ஒன்றாகவும் காணப்பட ஜப்பான் மூன்றாவது வல்லமை கொண்ட நாடாக மாறியது எவ்வாறு? 1853ல் அமெரிக்க தளபதியாகிய கொமாண்டர் மெத்திவ் பெரி என்பவர் டோக்கியோ வளைகுடாவில் வந்திறங்கி ஜப்பானை வெளிநாட்டவர்களுக்கு திறந்து விடுமாறு கோரினார். அதுவரை டச்சுக் கம்பனிகள் சிலவற்றிற்கு மட்டும் ஜப்பானிய துறைமுகங்கள் திறந்து விடப்பட்டன. ஏனைய நாடுகளுக்கு அது மூடப்பட்டிருந்தது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கிழக்காசிய பிராந்தியங்களில் தமது செல்வாக்கை பெருக்கி வந்த காலப்பகுதியில் பெரியின் கோரிக்கைகளை தவிர்ப்பது புத்திசாலித்தனமாகக் கருதப்படவில்லை. அக்காலப்பகுதியில் ஜப்பானிய சக்கரவர்த்தியே நாட்டின் தலைவராக இருந்த போதிலும் டொகுகாவா ஷோகன் (Tokugawa Shogun) என்னும் இராணுவ ஆட்சியாளரே நாட்டின் நிர்வாகத்தினை கட்டுப்படுத்தி வந்தார். இந்த ஆட்சியின் கீழ் நாட்டின் பொருளாதாரம் இராணுவ மயப்படுத்தப்பட்டதாகவும் மூடப்பட்டதாகவும் இருந்தது. இந்த ஆட்சியின் கீழ் பிராந்திய ஆட்சியாளர்களாக போர் வீரர்களாகிய சமுராய்கள் (Samurai) இருந்தனர்.

1868ல் சமுராய்கள் ஒன்றிணைந்து ஷோகனுக்கு எதிராக போர் செய்து ஆட்சி அதிகாரத்தை மீண்டும் ஜப்பானிய சக்கரவர்த்தியாகிய ‘மேஜி’ (Emperor Meiji) என்பவரின் கீழ் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் ஒரு புரட்சியாக பார்க்கப்படுகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகிய பரப்புகளில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சமூராய் குடும்பங்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் ஜப்பானிய முதலீடுகளாக மாறின. குறிப்பாக 1980களில் குபோட்டா, சுமிடோமோ, யமஹா, ஹொண்டா, மிட்சுபிஸி போன்ற சமுராய் குடும்பப் பெயர்கள் வர்த்தக குறியீடுகளாக மாறின.

இயற்கை வளம் குன்றிய ஜப்பான் தனது பொருளாதாரத்தை திறந்து விட்டதன் பின்னர் மூலப்பொருள் பற்றாக்குறையை பெருமளவு தீர்த்துக் கொண்டது. தனது மக்களை வெளிநாடுகளில் கல்வி பெறச்செய்து அறிவுச் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டதன் மூலம் அர்ப்பணிப்புள்ள மனித மூலதனத்தைக் கட்டி எழுப்பியது. ஒழுக்கத்திற்கும் நேரந் தவறாமைக்கும் ஜப்பானியர்களை உதாரணமாகக் கொள்வது இதன் காரணமாகவே யாகும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை பிரித்து அவற்றின் பாகங்களை ஆராய்ந்து அவற்றில் உள்ளடங்கியுள்ள தொழில்நுட்ப வளங்களை இனங்கண்டு அதைவிடவும் மேம்பட்ட நுட்பங்களை கண்டறிந்து பயன்படுத்துவதில் ஜப்பானியர்கள் வல்லவர்களாக இருந்தனர்.

உதாரணமாக தொலைக்காட்சியை அமெரிக்கா கண்டு பிடித்தபோது அவற்றில் ஓரிரண்டை சமுராய் குடும்பங்கள் ஜப்பானுக்கு கொண்டு சென்றன. அவற்றை ஒரு நுகர்வுப் பொருளாக பார்க்காமல் அதனைப் பிரித்து ஆராய்ந்து மேம்பட்ட தொழில்நுட்ப அறிவின் மூலம் அமெரிக்காவை விட விஞ்சிய தொழில்நுட்பங்கள் மிக்க தொலைக்காட்சிகளை ஜப்பான் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்தது. வாகன உற்பத்தித் தொழில்நுட்பம் தொடர்பிலும் ஜப்பானியர்கள், இதே உத்தியையே பின்பற்றினர். 1980களின் பின்னர் பெரும் எண்ணிக்கையிலான ஜப்பானியர்கள் அமெரிக்காவின் சாலைகளில் ஓடத்தொடங்கியமைக்கும் இதுவே காரணமாகும்.

எளிமையான ஒரு வாழ்க்கை முறை, ஒழுக்கம், நேரம் தவறாமை, நாட்டுப்பற்று, சிக்கனம் என்பன ஜப்பானியர்களை மேல் நிலைக்கு உயர்த்தின. மேஜி சீர்திருத்த காலப்பகுதிகளில் சமூராய்கள் சேர்த்து வைத்திருந்த செல்வம் நாட்டின் கைத்தொழில் மற்றும் விவசாயத்துறைகளில் முதலீடு செய்யப்பட்டது. மாளிகைகளை கட்டவோ, சமய கட்டடங்களை அமைக்கவோ அவை வீணடிக்கப்படவில்லை. மிகவும் கடினமாக வாழ்க்கையை மேற்கொண்ட ஜப்பானியர்கள் தமது வளங்களை சிக்கனமாகவும் சீராகவும் பயன்படுத்தி வெற்றி கண்டனர்.

ஜப்பானிய அனுபவங்களில் இருந்து இலங்கை கற்று கொள்ளவேண்டிய பாடங்கள் ஏராளம். ஆனால் தனது கடந்தகால சொந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்க மறுத்து அடம்பிடிக்கும் இலங்கை, இன்னொரு நாட்டின் அனுபவத்தை பாடமாக ஏற்றுக்கொள்ளும் என்பது நடக்கக்கூடிய ஒன்றல்ல.  

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments