![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/02/q1.jpg?itok=t2ZTJkMI)
90களின் இறுதிப் பகுதியில் எமது நாடு விளையாட்டுத்துறைகளில் உச்ச நிலையில் இருந்தது. சுசந்திகா ஜெயசிங்க, தமயந்தி தர்ஷா, சிறியானி குலவங்ச, சுகத் திலகரத்ன போன்ற மெய்வல்லுநர்கள் இலங்கை சார்பாக தெற்காசியா, பொதுநலவாயம், ஒலிம்பிக் என பல பதக்கங்கள் வென்றனர். கிரக்கெட் போட்டிகளிலும் உலகக் கிண்ணம் வென்று சாதித்தனர். அதே போல் கால்பந்தாட்டத்திலும் அமானுல்லா, ரொஷான் பெரேரா, லலித், சம்பத் பெரேரா என சிறந்த வீரர்கள் இலங்கை அணியைப் பிரதி நிதிதுவப்படுத்தினர்.
இவ்வீரர்கள் 1995ம் ஆண்டு பிரபல இந்திய அணியை வீழ்த்தி தெற்காசிய வெற்றிக் கிண்ணத்தை வென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது இவ்வனைத்துத் துறையிலும் அவ்வப்போது ஓரிரு வெற்றிகளைப் பெற்று சில பதக்கங்களைப் பெற்றாலும் மெய்வல்லுநர் கால்பந்தாட்டப் போட்டிகளில் எமது வீரர்கள் பெரிதாக சாதிக்கவில்லை என்றே கூறலாம். குறிப்பாக அநேகரால் ரசிக்கப்படும் கால்பந்தாட்டம் கடந்த சில வருடங்களாக பல சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டாலும் தோல்விகளையே சந்தித்து வருவதால் அண்மையில் வெளியிடப்பட்ட சர்வதேச கால்பந்தாட்ட தரப்படுத்தலிலும் பின்னடைவையே சந்தித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கால்பந்து புதிய தரவரிசைக்கமைய இலங்கை கால்பந்தாட்ட அணி 203வது இடத்தில் உள்ளதுடன் ஆசியப்பிராந்திய தரவரிசைப் பட்டியலிலும் 46வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
கடந்த வாரம் வெளியிடப்பட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியல் இலங்கை உதைபந்தாட்ட அணி கால்பந்து வரலாற்றில் மோசமான நிலையை அடைந்துள்ளதை காட்டுகின்றது.
2022ம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு ஆசியப்பிந்தியத்திலிருந்து தெரிவு செய்யப்படுவதற்கென இப்பிராந்திய நாடுகளுக்கிடையில் நடைபெற்ற தெரிவுப் போட்டியில் இலங்கை அணி முகங்கொடுத்த அனைத்துப் போட்டியிலும் படுமோசமாகத் தோல்வியுற்றதாலேயே இலங்கை அணிக்கு இந்நிலை ஏற்பட்டது. உலக தரவரிசையில் ஆசியப் பிராந்திய அணிகளில் 106இடத்தைப் பெற்று இந்தியாவே முன்னிலையிலுள்ளது. கடந்த காலங்களில் உதைபந்தாட்ட உலகிலிருந்து விலகியிருந்த பாகிஸ்தான் அணி இலங்கையை விட இரு இடங்கள் முன்னாலுள்ளதும் இங்கு குறிப்படத்தக்கது. இந்நிலையில் இலங்கை அணி அடுத்த மாதம் நேபாள் காத்மண்டுவில் நடைபெறவிருக்கும் 13வது சாக் விளையாட்டு விழாவில் நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டிக்கு தயாராகிவருகிறது.
இவ்வருட நடுப்பகுதியில் இலங்கை அணி மெகோவொவில் இடம் பெற்ற உலக தகுதிகான் ஆரம்பப் போட்டியை 1 - -1என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக்கொண்டதே அண்மையில் இலங்கை அணியின் சிறந்த பெறுபேறாக அமைந்தது. அதன் பின் நடைபெற்ற போட்டிகளில் லெபனானுடன் 3 - -0என கோல்கணக்கிலும், துர்க்மெனிஸ்தானுடனான போட்டியில் 2 - -0என்ற கோல்கணக்கிலும், வடகொரியாவுடனான போட்டியில் 1 - -0என்ற கோல்கணக்கிலும், தென் கொரியாவுடனான போட்டியில் 8- - 0என்ற கோல் கணக்கிலும் படுதோல்வியடைந்தது. மேலும் ஒக்டோபர் மாதம் 5ம் திகதி கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியாவுடனான நட்பு ரீதியான போட்டியிலும் 6 -0என்ற கோல்கணக்கில் இலங்கை தோல்வியடைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய தரப்பட்டியலின்படி 1990களில் இலங்கையிடம் கால்பந்தாட்ட நுணுக்கங்களையும் மற்றும் உதவிகளையும் பெற்ற மாலைதீவு அணி தற்போது 156இடத்தில் உள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் எமது பிராந்தியத்தில் கால்பந்தில் ஈடுபடும் மற்றொரு நாடான பாகிஸ்தான் அந்நாட்டில் நிலவும் பயங்கரவாத நிலைமை காரணமாக கடந்த 10வருடங்களாக சர்வதேசப் போட்டிகளில் ஈடுபடவில்லை. ஆனால் அண்மையில் உலகக் கிண்ணத் தகுதிகான் போட்டிகளில் சிறப்பாகவே விளையாடி வருகின்றது. அதன்படி கம்போடியாவுடன் நடைபெற்ற போட்டியில் 2- 0கோல்கணக்கிலும், துர்கிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் 2- 1என்ற கோல் கணக்கிலும் தோல்வியுற்றாலும் தரவரிசையில் கடந்த காலங்களில் கடைசி இடத்திலிருந்த அவ்வணி தற்போது இலங்கையை முந்திச் சென்றுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட அணியின் பின்னடைவை நோக்கும் போது விசேடமாக தென்னாசியப் பிராந்தியத்தில் கடந்த காலங்களில் இலங்கை அணியிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்த பூட்டான் அணி கூட தற்போது தரவரிசையில் இலங்கை முந்திச் சென்று 189ஆவது இடத்திலுள்ளது. இப்பிராந்தியத்தில் இலங்கை அணியின் போட்டியாளர்களான இந்தியா (106), ஆப்கானிஸ்தான் (149), நேபாளம் (167), பங்களாதேஷ் (184) இடங்களில் உள்ளன.
இதனடிப்படையில் ஆசிப் பிராந்தியத்தில் முதலாமிடத்தில் ஈரான் அணியுள்ளதோடு உலக தரவரிசையில் அவ்வணி 27வது இடத்தில் உள்ளது. இதுவரை உலக தரவரிசையில் முதலாமிடத்திலிருந்த பிரான்ஸ் அணியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெல்ஜியம் முன்னிலை பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கை உதைபந்தாட்ட வரலாற்றில் இதுவரை இலங்கை அணியின் உச்ச திறமையாக 1995ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசியக் கிண்ணத் தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி கிண்ணம் வென்றதே இன்று வரையும் உள்ளது. இதுவரை இலங்கையின் உதைபந்தாட்ட முன்னேற்றத்துக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் சர்வதேச கால்பந்தாட்ட சங்கமும் (பீபா), ஆசியா உதைபந்தாட்ட சங்கமும் பலகோடி ரூபாக்களை வழங்கியும் இலங்கை அணி இன்னும் பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.
கடந்தாண்டு பெப்ரவரி மாதம் அதுவரை மாலைதீவு உதைபந்தாட்ட அணிக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்த ரூமி பக்கீர் அலியின் சேவையைப் பெற்றுக் கொண்டும் கூட இலங்கை உதைபந்தாட்ட அணி பின்னோக்கிச் செல்வது கவலைக்குறியதே.
எம். ஐ. எம். சுஹைல்