இலங்கை-இந்திய டெஸ்ட் தொடர் இவ்வாரம் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை-இந்திய டெஸ்ட் தொடர் இவ்வாரம் ஆரம்பம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் அறிமுகப்படுத்தப்பட்ட டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரின் 2வது அத்தியாயம் தற்போது நடைபெற்று வருகின்றது. இதன் முதல் சம்பியனாக நியூசிலாந்து மகுடம் சூடிக்கொண்டது. முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் தொடரில் 7வது இடத்துக்கு தள்ளப்பட்ட இலங்கை அணி இம்முறை இத்தொடரின் கீழ் இதுவரை தாம் சந்தித்த இரு போட்டிகளிலும் வெற்றிபெற்று 100சதவீத வெற்றியுடன் முதலிடத்திலுள்ளது. டெஸ்ட் உலகக் கிண்ண வரிசையில் இலங்கை அணி சந்திக்கும் இரண்டாவது தொடராக இவ்வார இறுதியில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து இருபோட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. 

டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அத்தியாயம் கடந்த நவம்பர் மாதம் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற தொடருடன் ஆரம்பமாகி 2023ம் ஆண்டு நடுப்பகுதிவரை ஆட்டங்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. டெஸ்ட் அந்தஸ்துப் பெற்ற 12நாடுகளில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, அயர்லாந்து அணிகளைத் தவிர மற்றைய 9நாடுகளும் இத்தொடரில் பங்குபற்றுகின்றன. ஓர் அணி ஆறு அணிகளுடன் 6தொடர்களில் விளையாட வேண்டும். இவ்வடிப்டையில் உள்நாட்டில் 3தொடர்கள், வெளிநாடுகளில் 3தொடர்களில் பங்குகொண்டு விளையாடி வருகின்றன. 

இத்தொடரில் இம்முறை அதிக போட்டிகளில் விளையாடும் அணியாக இங்கிலாந்து அணி 22ஆட்டங்களில் மோதுவதுடன், அவ்வணிக்கு இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனும், இந்திய அணி 18போட்டிகளில் விளையாடவுள்ளதுடன் அவ்வணிக்கு பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுடனும், அவுஸ்திரேலியா இத்தொடரில் 19ஆட்டங்களில் மோதவுள்ளதுடன் பங்களாதேஷ், நியூசிலாந்து அணிகளுடனும், தென்னாபிரிக்க அணி 15போட்டிகளில் களமிறங்கவுள்ளதுடன் அவ்வணிக்கு இலங்கை, பாகிஸ்தானுடன் போட்டிகள் இல்லை. 

இலங்கைக்கு இம்முறை இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகளுடனும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்தியா, நியூலிலாந்து அணிகளுடனும், பங்களாதேஷ் அணிக்கு இங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுடனும் போட்டிகள் இல்லை. பாகிஸ்தான் அணி 14போட்டிகளிலும் கடந்த முறை சம்பியனான நியூசிலாந்து அணி 13போட்டிகளிலும், பங்களாதேஷ், இலங்கை அணிகள் தலா 12போட்டிகளிலும் உலக டெஸ்ட் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் மோதவுள்ளன. இதுவரை இலங்கை நூறு சதவீத வெற்றியுடன் முதலிடத்திலுள்ளதுடன் அண்மையில் முடிவுற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-0என்ற ரீதியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி 80சதவீத வெற்றியுடன் இரண்டாவது இடத்திலுமுள்ளது. பாகிஸ்தான் 75சதவீத வெற்றியுடன் மூன்றாவது இடத்திலுமுள்ளது. 

இம்முறை இலங்கை அணி சந்தித்த முதல் தொடரிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணியை 2--0என்ற ரீதியில் வென்று நல்ல ஆரம்பத்தைப் பெற்றுள்ளது. அடுத்து இவ்வார இறுதியில் ஆரம்பமாகும் இந்தியத் தொடர் இலங்கை அணிக்கு கடினமான தொடராகும். 40வருட கால இலங்கை டெஸ்ட் வரலாற்றில் இதுவரை இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதில்லை. டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்திலும், பந்து வீச்சிலும் இலங்கை அணி தற்போது முன்னேற்றம் கண்டு வருவதால் இத்தொடரில் சாதிக்கும் என எதிர்பார்க்கலாம். உலக டெஸ்ட் கிண்ணத் தொடரின் அடிப்படையில் இவ்வருட ஜூன் மாதத்தில் அவுஸ்திரேலிய அணியுடனும், ஜுலை மாதத்தில் பாகிஸ்தான் அணியுடன் இரு தொடர்கள் இலங்கையில் நடைபெறவுள்ளன. இவ்விரு அணிகளும் பிரபல அணிகளானாலும் தொடர் இலங்கையில் நடைபெறுவதால் இலங்கை அணிக்கு அது அனுகூலமாக அமையலாம். டெஸ்ட் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கைக்கான அடுத்த இரண்டு தொடர்களும் நியூசிலாந்திலும், பங்களாதேஷிலும் நடைபெறவுள்ளன. இத்தொடர்களில் நியூசிலாந்துடனான தொடர் சற்றுக் கடினமானதாக அமையுமென்றாலும் அம்மண்ணில் இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ளதால் முடிவுகள் இலங்கைகு சாதகமாக அமையலாம். பங்களாதேஷுடனான தொடரில் இலங்கை அம்மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியிலாவது தோல்வி கண்டதில்லை. எனவே நம்பிக்கையுடன் இத்தொடரில் இலங்கை அணி விளையாடும் என எதிர்பார்க்கலாம். 

இத் தொடர் போட்டிகளுக்கு இதுவரை கொரோனாவால் பாதிப்பேற்படவில்லை. ஆனால் கடந்த தொடரின் போது கடைசி நேரத்தில் கொரோனா பரவல் காரணமாக அவஸ்திரேலியா அணியின் நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான தொடர்கள் இரத்தானாதால் அவ் அணிக்கு இறுதிப் போட்டிக்குத் தெரிவாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேவேளை பங்களாதேஷ்-பாகிஸ்தான், பங்களாதேஷ்-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான தொடர்களும் இத்தொற்றால் கைவிடப்பட்டது. இதுவரை இந்திய அணி இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகளுடன் மூன்று தொடர்களில் 10போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 5போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 3போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. கடைசியாக தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 3போட்டிகள் கொண்ட தொடரில் 2--1என்ற ரீதியில் அவ்வணி தோல்வியடைந்துள்ளது. அதன் பின் அவ்வணியின் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விராட் கோஹ்லி விலகியுள்ளதால் புதிய தலைவர் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி முதலாவது டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ளது. 

இரு அணிகளையும் பொறுத்த வரையில் இந்திய அணியே முன்னிலையில் உள்ளது. அவ்வணியின் சுழற்பந்து, வேகப்பந்து என இரு துறைகளிலும் சம பலத்திலுள்ளது. எந்த ஆடுகளங்களிலும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா திறமையாகவே பந்து வீசி வருகிறார். அவர்களது சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஜோடி இந்திய மண்ணில் அந்நிய அணிகளுக்கு சவாலாகவே பந்து வீசி வருகின்றனர். துடுப்பாட்டத்தைப் பொறுத்த வரை மாயக்ங் அகர்வால், ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேஸ் அய்யர் என அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்டம் மற்றுமல்லாது நடுவரிசைகூட பலமாகவே உள்ளது. கடந்த இரு வருடங்களில் சதங்கள் குவிக்காவிட்டாலும் சுமாரான ஓட்டங்களை விராட் கோஹ்லி சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்களித்து வந்துள்ளார். ஆனால் இத்தொடரில் அவரின் துடுப்பாட்டம் பழைய நிலைக்கு திருப்ப வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இலங்கை அணியைப் பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் தலைவர் திமுத் கருணாரத்னவையே பெரிதும் எதிர்பாத்துள்ளது. கடந்த காலங்களில் அவரே இலங்கை அணியின் துடுப்பாட்டத்துக்கு வலுச் சேர்த்துள்ளார். கடந்த வருடம் ஓட்டங்கள் குவித்தோர் வரிசையில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட்டுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். புதிய வீரர்களான அசலங்க, பெத்தும் நிஸ்சங்க இவர்களுடன் அனுபவ வீரர்களான குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ் போன்ற வீரர்களும் சோபித்தால் சிறந்த போட்டித் தொடராக இது அமையும், பந்து வீச்சைப் பொறுத்த வரை சுழற்பந்து வீச்சாளர்களான லசித் எம்புல்தெனிய, கடந்த மேற்கிந்தியத் தொடரில் 2போட்டிகளில் 18விக்கெட்டுகளை வீழ்த்திய ருமேஷ் மெண்டிஸ் ஆகியோரையே இலங்கை அணி பெரிதும் நம்பியுள்ளது. 

சுமார் 40வருட இலங்கை இந்திய டெஸ்ட் வரலாற்றில் இதுவரை 44போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 20போட்டிகளில் இந்திய அணியும் 07போட்டிகளில் இலங்கை அணியும் வெற்றி பெற்றுள்ளது. 17போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றுள்ளது. இரு அணிகளுக்கிடையில் கூடிய ஓட்டங்களாக 1997ம் ஆண்டு ஆர் பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி பெற்ற 952ஓட்டங்களே பதிவாகியுள்ளது. குறைந்த ஓட்டங்களாக 1990ம் ஆண்டு சண்டிகாரில் இலங்கை அணி பெற்ற 82ஓட்டங்களே பதிவாகியுள்ளது. 

ஒரு வீரர் பெற்ற கூடிய ஓட்டங்களாக 1997ம் ஆண்டு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கையின் சனத் ஜயசூரிய பெற்ற 340ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இதுவரை பெற்ற கூடிய மொத்த ஓட்டங்களாக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கார் 25போட்டிகளில் பெற்ற 1995ஓட்டங்களே பதிவாகியுள்ளது. ஒரு வீரர் பெற்ற கூடிய சதங்களாக சச்சின் டெண்டுல்கார் பெற்ற 9சதங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை ஒரு வீரர் பெற்ற மொத்த விக்கெட்டாக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 22போட்டிகளில் பெற்ற 105விக்கெட்களே பதிவாகியுள்ளது. ஒரு இன்னிஸ்சில் சிறந்த பந்து வீச்சாக 2001ம் ஆண்டு கொழும்பு எஸ். எஸ். சி மைதானத்தில் முத்தையா முரளிதரன் 87ஓட்டங்களுக்கு 8விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

இதுவரை உலக டெஸ்ட் சம்பியன் தொடரில் நடைபெற்ற போட்டிகளில் அடிப்படையில் அணிகளின் புள்ளிப்பட்டியல் வருமாறு: 

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments