![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/11/10/75col716-qzmxzncnxc-1518933389142622412_7687375_09112019_VKK_CMY.jpg?itok=MoZ5XAgF)
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினை எழுந்தது.
இந்த சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்கள் பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற மூன்று பிரிவினரும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். அதன் தீர்ப்பே இன்று வெளியாகியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக இந்த வழக்கு கடந்து வந்த பாதையை இனி பார்ப்போம்.
1528- பாபர் மசூதியை முகாலய மன்னர் பாபரின் படைவீரரான மிர் பாக்வி கட்டினார்.
1885- பாபர் மசூதியின் வெளிப்புறத்தில் ஒரு விதானம் கட்ட அனுமதி கோரி ஃபைஸாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மஹாந்த் ரகுபிர் தாஸ் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
1949- சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள குவிமாடத்தில் ராம் லல்லாவின் சிலைகள் வைக்கப்பட்டன.
1950- இந்த கோயிலில் தொடர்ந்து வழிபாடு நடத்தவும் சிலைகளை வைக்கவும் பரமஹன்ச ராமசந்திர தாஸ் வழக்கு தொடுத்தார்.
1959- அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என உரிமை கோரி நிர்மோஹி அகாரா வழக்கு தொடர்ந்தது
1961- அது போல் அந்த இடம் தங்களுடையது என உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியமும் உரிமை கோரி வழக்கு தொடர்ந்தது.
பிப். 1, 1986- இந்து மதத்தை சேர்ந்த பக்தர்களுக்கு கோயிலை திறந்துவிடுமாறு உள்ளூர் நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு ஆணை பிறப்பித்தது. இந்த முடிவு எடுத்த போது பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார்.
ஆக.14, 1989- சர்ச்சைக்குரிய இடத்தை பராமரிக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
செப். 25, 1990- பாஜக தலைவராக இருந்த எல்கே அத்வானி குஜராத் மாநிலம் சோம்நாத்திலிருந்து ரதயாத்திரையை தொடங்கினார்.
டிச. 6, 1992- கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது
ஏப்.3, 1993- அயோத்தியா வழக்கில் குறிப்பிட்ட இடத்தை கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது.
அக்.24, 1994- மசூதிகள் இஸ்லாமின் அங்கம் இல்லை என இஸ்மாயில் ஃபரூகி வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது.
ஏப். 2002- சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த விசாரணையை உயர்நீதிமன்றம் தொடங்கியது
மார்ச் 13, 2003- கையகப்படுத்தப்ட்ட நிலத்தில் யாரும் மத வழிபாடு நடத்தக் கூடாது என அஸ்லாம் (எ) பூரே வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மார்ச் 14- வகுப்புவாத நல்லிணக்கத்தை காக்க அலகாபாத் நீதிமன்றத்தில் உள்ள சிவில் வழக்குகளை முடியும் வரை நிறைவேற்றப்பட்ட இடைக்கால உத்தரவு செயல்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது
செப். 30, 2010- 2:1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா விராஜ்மன் என்ற 3 பிரிவினரும் சர்ச்சைக்குரிய இடத்தை பிரித்து கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 9, 2011- அயோத்தி நில பிரச்சினை தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மீது சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
பிப் 26, 2016- சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்டில் அனுமதி கோரினார்.
மார்ச் 21, 2017- வழக்கு தொடர்ந்தவர்களே சுமுகமாக பேசி முடிவெடுத்துக் கொள்ளும்படி அப்போதைய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜேஎஸ் கெஹர் ஆலோசனை வழங்கினார்.
ஆக 7- அலகாபாத் உயர்நீதிமன்றம் 1994-இல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது
ஆக. 8 - சர்ச்சைக்குரிய இடத்திலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் மசூதியை கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டில் உத்தரப்பிரதேச ஷியா வக்பு வாரியம் கூறியது.
செப். 11- சர்ச்சைக்குரிய இடத்தை பராமரிக்க 10 நாட்களுக்கு கூடுதல் மாவட்ட நீதிபதிகள் இருவரை நியமனம் செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
நவ. 20- அயோத்தியில் ராமர் கோயிலும் லக்னோவில் மசூதியும் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட்டில் உத்தரப்பிரதேச ஷியா வக்பு வாரியம் கூறியது.
டிச.1- அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-இல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து 32 சிவில் உரிமை ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர்
பிப்.8, 2018- சிவில் உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க தொடங்கியது.
ஜூலை 20- தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது
செப் 27- அக். 29 முதல் இந்த வழக்கை 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்துவதால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
டிசம்பர் 24- ஜனவரி 4-ஆம் திகதி வழக்கு தொடர்பான புகார்களை விசாரணைக்கு எடுத்து கொள்ள சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது.
ஜன. 8- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் எஸ் ஏ பாப்டே, என்வி ரமணா, யு யு லலித் மற்றும் டி ஒய் சந்திரசூட் அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது.
ஜன. 25- 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை சுப்ரீம் கோர்ட் அமைத்தது. அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே, டி ஒய் சந்திரசூட், அசோக் பூசன், எஸ் ஏ நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வு உருவாக்கப்பட்டது.
ஜன. 29- சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் கோரியது.
பிப். 20- பெப்ரவரி 26-ஆம் தேதி வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது
மார்ச் 8- முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு அமைக்கப்பட்டது
மே 9- ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பை சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு இடைக்கால அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்தது.
ஜூலை 18- மத்தியஸ்தம் செய்யும் பணியை தொடருமாறும் அதுகுறித்த முழு அறிக்கையை ஆகஸ்ட் 1-ஆம் தேதி சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.
ஆக. 1- சீலிடப்பட்ட கவரில் அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆக. 6- நில பிரச்சினை வழக்கில் தினசரி விசாரணையை சுப்ரீம் கோர்ட் தொடங்கியது
அக். 16- அயோத்தி வழக்கில் விசாரணையை முடித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்தி வைத்தது
நவ.9- பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.