ஈரான் -அமெரிக்க நெருக்கடி தீவிரம் அடைவதனைக் காணக்கூடியதாக உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களது அறிவிப்புகளும் இராணுவ நகர்வுகளும் அத்தகைய நெருக்கடியை தீவிரமடையச் செய்கிறது. இதில் அமெரிக்காவின் ஜனாதிபதியும் ஈரானிய தலைவரும் மட்டுமல்ல இரு தரப்பு இராணுவமும் பாதுகாப்பு அமைச்சுக்களும் மாறிமாறி நிகழ்த்தும் அதிரடி அறிவிப்புகள் உலக அரசியலில் அதிகமான முரண்பாட்டுச் சக்திகளாக அமைவதனைக் கோடிட்டுக் காட்டுகின்றன. மிகப் பிந்திய அறிவிப்பாக அமெரிக்காவின் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையும் ஈரான் யூரேனியத்தை செறிவூட்டப் போவதாக தெரிவித்தமையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அரசியல் முக்கியத்துவம் உடைய அம்சமாக மாறியுள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையின் விளைவுகளைப் பற்றி தேட முயலுகிறது.
முதலில் ஈரானின் நகர்வுகளை நோக்குவது பொருத்தப்பாடான விடயமாகும். ஈரான் அணுவாயுத உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகியதன் பின்பான போக்கில் அதிக அதிர்ச்சியான நகர்வுகளை செய்துள்ளது. அதில் மிக முக்கியமான விடயமாக பிரிட்டனின் எண்ணெய்க் கப்பலை கடத்தியமை சவூதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்கியமை மற்றும் அணுவாயுதத்தை செறிவூட்டப் போவதாக அறிக்கை வெளியிட்டமை என்பன படிப்படியாக அதன் நகர்வுகளாக அமைந்தன. அதில் சரியான இராஜதந்திர முயற்சிகளும் தவறான சில அணுகுமுறைகளும் அமைந்திருந்தன.
ஆனாலும் ஈரான் அனைத்தையும் கடந்து அமெரிக்காவை மிரட்டும் பாணியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீளமீள அணுவாயுதப் பரிசோதனையை நடத்தப் போவதாக அறிவித்து வருகிறது. அதற்கான பலத்தை ரஷ்யா மற்றும் சீனாவுக் கூடாக ஈரானுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவுக்கும் அதன் புலனாய்வுத்துறைக்கும் தெரிந்திருக்கும். அது ஒன்று மறைவான விடயம் கிடையாது. ஈரான் வெளிப்படையாக அணுவாயுத பலத்தை பரிசீலிக்கும் என்பதை தெரிவிக்கவே இல்லையே தவிர அதனிடம் அதற்கான வலிமை உண்டு என்பது அமெரிக்க தரப்புக்கு நன்கு தெரிந்த விடயமாகும்.
ஆனால் அமெரிக்காவி-ன் திட்டமிடலில் அணுவாயுதத்தை தயாரிக்க ஆரம்பித்த மறுகணம் அதனை தகர்த்து விடலாம் என்ற உபாயத்துடன் இராணுவ திட்டங்களை டீயாகோகாசியாத்தீவில் தயார் நிலையில் வைத்திருந்தது. தற்போதும் அதனை பராமரித்து வருகிறது. ஆனால் ஈரானே அதற்கான வாய்ப்பினை அமெரிக்காவுக்கு கொடுக்காது செயல்பட்டு வருகிறது. இதனால் தான் அமெரிக்கா தனது அடுத்த கட்ட நகர்வாக பொருளாதாரத் தடையை வலுவுடையதாக மாற்றும் உபாயத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஈரான் மீதான பொருளாதாரத் தடையை ஆரம்பித்தார். அதனை படிப்படியாக தீவிரப்படுத்தினார். அதன் உச்ச நகர்வாக சவூதி அரேபியா மீதான தாக்குதலுக்கு பின்னர் (14 செப்டம்பர்) அதனை அதிகரித்தார். இது ஈரானுக்கு பெரும் அழுத்தமாக மாறியது. குறிப்பாக முக்கியமான உணவுப் பொருட்களுக்கும் மருந்து மற்றும் மனித உணவுப் பொருட்களுக்கும் தடை ஏற்படுத்தியது.
அவ்வாறே செப்டம்பர் 20இல் ஈரானின் மத்திய வங்கிக்கும் தேசிய அபிவிருத்தி நிதியத்திற்கான உதவு தொகையையும் ஹஸ்புல்லா மற்றும் இஸ்லாமிய புரட்சிப் படைகளுக்கான நிதிகள் மற்றும் ஈரானுக்கு வெளியே இயங்கும் படைப்பிரிவுகள் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியினை 143224 தடை உத்தரவின் பிரகாரம் நிறுத்தியுள்ளது. அவ்வாறே மனிதாபிமான வர்த்தக நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்கான அனைத்தையும் அமெரிக்கா செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கான பிரிவுச் 311 சட்டத்தின் பிரகாரம் (ஒக்டோபர் 25) ஈரானுக்கு கிடைக்கும் நிதியினை அமெரிக்கா (Financial Crimes Enforcement Network (FinCEN) எனும் கட்டமைப்பின் ஊடாக கண்காணிக்கவும் தடை செய்யவும் முடிவு செய்துள்ளது. அது மட்டுமன்றி ஐரோப்பிய யூனியனையும் அதன் வழி செயல்பட நிர்ப்பந்தித்து வருவதுடன் பிற ஆசிய நாடுகளைக் கூட அத்தகைய நெருக்கடியை ஏற்படுத்தி ஈரானுக்கான நிதி உதவிகளை நிறுத்துமாறு பணித்துவருகிறது. மேலும் ஈரானில் இயங்கும் தனியார் நிதி நிறுவனங்களையும் அரச சார்பற்ற அமைப்புக்களையும் அணுகி வருவதுடன். அந்த அமைப்புகளின் ஊடாக நிதி ஈரானுக்கு செல்வதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இத்தகைய உத்தியை பயன்படுத்தியே ஈராக் மீதான தாக்குதலை வெற்றிகரமானதாக அமெரிக்கா மாற்றியது என்பது கவனிக்கத்தக்கது. அதே அணுகுமுறையை ஈரான் மீதும் அமெரிக்கா கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகள் ஆபத்தானவையாக அமைய வாய்ப்புள்ளது. படிப்படியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடை அதன் உள்நாட்டு அமைதியை சீர்குலைப்பதுடன் பாதுகாப்புக்கான அனைத்து அரண்களையும் தகர்க்க முயலும். அது ஈரானின் பிராந்திய சர்வதேச நெருக்கடியாக மாறும் போது தாக்குதலை இலகுவாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்த முடியும் என அமெரிக்கா கருதுகிறது.
எனவே, அமெரிக்காவின் நீண்ட காலத்திட்டமிடலை ஈரான் கருத்தில் கொள்ள தவறுமாயின் ஈராக்கின் நிலைக்கு தள்ளப்படும். அதனால் மேற்காசிய அரசியலி-ல் நிரந்தரமான இருப்பினை அமெரிக்கா இஸ்ரேல் தரப்பு தக்கவைத்துக் கொள்ளும்.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்