துருக்கிய ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் வெளிப்படுத்தும் செய்தி | தினகரன் வாரமஞ்சரி

துருக்கிய ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் வெளிப்படுத்தும் செய்தி

மேற்காசிய அரசியல் கள நிலவரம் தினம் தினம் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்கான தேர்தல் காலத்திலிருந்து ரஷ்யா ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக மாறியுள்ளது. அத்துடன், அரபு வசந்தத்தின் சிரியா தோல்வியின் பின்னர் அமெரிக்கா தனது இருப்பினை உறுதிப்படுத்த முயல்கிறது. அதில் ஒரு கட்டமாக துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் (13.11.2019) அமெரிக்க விஜயம் அமைந்துள்ளது. இக்கட்டுரை எர்டோகன்_- ட்ரம்ப் சந்திப்பு ஏற்படுத்தியுள்ள அரசியல் களத்தை புரிந்து கொள்வதாக அமையவுள்ளது.  

இச்சந்திப்புக்கான முதன்மைக் காரணம் அமெரிக்காவினுடைய பொருளாதார தடையும், துருக்கிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளும் ஆகும். மேற்கு நாடுகள் உலக நாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு பொருளாதார தடை எனும் ஆயுதத்தை வெற்றிகரமாக பிரயோகித்து வருகிறது. சதாம் ஹுசைன் தலைமையிலான ஈராக்கை முதலில் பொருளாதார தடை எனும் ஆயுதத்தால் அமெரிக்காவும் மேற்கு நாடுகளாலும் பலவீனப்படுத்தின. அதன் பின்னரே போரில் ஈராக் தோற்றுப் போனது. அதே உத்தியை ஈரான் மீது அமெரிக்கா பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது.

எனினும் அமெரிக்காவின் நடவடிக்கை துருக்கியின் எதிர்காலத்தை அல்லது துருக்கியின் ஆட்சியாளர்களின் எதிர்காலத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனை சரி செய்வதற்கான நியாயப்பாடுகளை துருக்கிய ஜனாதிபதி ட்ரம்பிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.  

இரண்டாவது காரணி துருக்கியின் எல்லையில் சிரியாவிற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போரினை குறிப்பிட முடியும். குர்திஷ் போராட்டக்காரர்களை அழித்து ஒழிக்கும் விடயத்தில் துருக்கியின் நகர்வு அமைந்திருந்த போதும் அது சிரியாவின் எல்லைக்குள்ளும் சிரியாவிற்கு எதிராகவும் மாறியுள்ளது. சிரியா- துருக்கி- ரஷ்யா,- சீனா ஆகிய நாடுகளின் கூட்டுறவுப் பாலமான ஒர் அரசியல் களத்தை நோக்கி நகர்ந்திருந்தது. ரஷ்யாவின் எஸ்- 400 ஐ கொள்வனவு செய்ததுடன் துருக்கி - ரஷ்யா உறவு பலமானதாக அமைந்திருந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சிரியா ஆட்சியை தக்க வைப்பதற்காக ரஷ்யா பாரிய பங்காற்றி வந்தது. இந்நிலை தற்போது எழுந்திருக்கும் போரினால் துருக்கி அமெரிக்காவிடம் இருந்தும் ரஷ்யாவிடம் இருந்தும் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்ற அச்சம் துருக்கிய ஜனாதிபதி எர்டோகனுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இவ்விஜயத்தின் ஊடாக அதனை சரி செய்ய முடியும் எனவும் அமெரிக்காவுடன் தனது உறவை பலப்படுத்த முடியும் எனவும் துருக்கி ஜனாதிபதி கருதியிருந்தார். ஆனால் அதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்பட்ட அளவிலேயே உள்ளன. இதனையே மூன்றாவது காரணி தெளிவாக விளக்குகின்றது.  

அதாவது நேட்டோவின் அங்கத்துவ நாடான துருக்கி ரஷ்யாவின் எஸ் -400 ஏவுகணையை கொள்வனவு செய்திருப்பது அதிக சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பில் இருவரும் உரையாடிய மிகப் பிரதான விடயம் எஸ்- - 400 தொடர்பானதே. ஆனால் துருக்கிய ஜனாதிபதியின் வாதம் தெளிவானதொரு நிலைப்பாட்டை முன் வைக்க முயல்கின்றது. எப்-35 இராணுவ விமானத்தை அமெரிக்காவிடம் துருக்கி பல தடவை கோரியிருந்தது.

 துருக்கியின் பாதுகாப்பிற்கும் அதன் இருப்பிற்கும் அவசியமானது எனக் கருதி எப் - 35 இனை பெற்றுக் கொள்ள முயன்றது. எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்ரேலின் நலனுக்காக அமெரிக்கா துருக்கிக்கு வழங்காது தவிர்த்துக் கொண்டது. இதுவே எஸ் - 400 ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதற்கு காரணம் என துருக்கி நியாயப்படுத்துகிறது. அடுத்த மாதம் லண்டனில் நேட்டோ தலைமையிலான சந்திப்பில் துருக்கி தொடர்பான சர்ச்சை முக்கிய இடம் பெறும் என்பதை ட்ரம்ப் - பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் சந்திப்பு உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, துருக்கியின் நேட்டோ அங்கத்துவம் சர்ச்சைக்குள்ளாகும் வாய்ப்பு ஒன்று ஏற்படவுள்ளது. எனவே தான் அமெரிக்கா ஜனாதிபதியுடான சந்திப்பினை துருக்கி ஜனாதிபதி முதன்மைப்படுத்தியிருப்பதுடன் அதனை சரி செய்வதற்கு இச்சந்திப்பினை பயன்படுத்த முயற்சித்துள்ளார்.  

நான்காவது காரணி துருக்கிய ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பில் மிக முக்கிய பகுதி ஐ.எஸ் தொடர்பாகவும் சிரிய குர்திஷ் அகதிகள் தொடர்பாகவும் அமைந்திருந்தது. அதில் பிரதானமாக ஐ.எஸ் தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்படுதல் என்ற நோக்கத்துடன் ஐஸ் தீவிரவாதத்தினை துருக்கிற்குள் ஊடுற விடாது தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமன்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் குர்திஷ் படைகளோடு சேர்ந்து துருக்கிக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாகவும் அதனை தடுப்பதற்கான போராகவே சிரியாவின் எல்லைப் பகுதி யுத்தத்தை தாம் பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் நியாயப்படுத்தியுள்ளார். அவ்வாறே எல்லை மீறும் சிரிய அகதிகளை கட்டுப்படுத்தவும் அவர்களுக்கு என தனியான வலயம் ஒன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அது தொடர்பாக நேட்டோவுடன் புரிந்துணர்வு எட்டியுள்ளதாகவும் துருக்கிய ஜனாதிபதி வாதிடுகிறார்.

ஆனால் நேட்டோ விதித்தபடி துருக்கிய ஜனாதிபதி செயற்படவில்லை என்பது நேட்டோ நாடுகளின் அதிருப்தியாக உள்ளது.  

ஐந்தாவது காரணி ஐ.எஸ் அமைப்பில் அங்கத்துவம் பெற்று இருக்கும் மேற்குலக தீவிரவாதிகளை கையாள்வது தொடர்பில் அமைந்துள்ளது. வெள்ளை இன முஸ்லிம்கள் ஐ.எஸ் உடன் இணைந்து மேற்காசியா நாடுகளில் தீவிர தாக்குதலை மேற்கொள்வதும் துருக்கிக்கு எதிரான நகர்வில் அத்தீவிரவாதிகள் ஈடுபடுவதும் துருக்கிய ஜனாதிபதி குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார்.

ஏறக்குறைய மேற்கு நாடுகளே தீவிரவாதத்தை துருக்கிக்குள் ஏற்படுத்த முயல்கின்றன என்ற குற்றச்சாட்டு மிக நீண்ட காலமாக துருக்கியால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு புதிய உத்தியாக அமைந்திருக்கின்றது. அராபியர்கள், இஸ்லாமியர்கள், மேற்காசியர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளாக இருப்பதை விட மேற்குலக வெள்ளை இன முஸ்லிம்கள் ஐ.எஸ் இல் அதிக இடம் பெற்றிருப்பது கவனத்திற்குரியதாகும். இத்தகைய நியாயப்பாட்டை மேற்குலக நாடுகள் நிராகரித்த போதும் அதுவே ஐ.எஸ் இன் அரசியல் இருப்பாக பார்க்கப்படுகின்றது. இதனை மேற்கு - கிழக்கு யுத்தமாக மதீப்பீடு செய்ய முடியும். இது பற்றிய பதிவுகள் அரபுலக அறிஞர்களாலும் அரசியல் தலைமைகளாலும் முதன்மைப்படுத்தப்படுகின்றது.  

எனவே, துருக்கிய ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரண்டு பிரதான சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி நேட்டோவிலிருந்து பெறுகின்ற அனைத்து வாய்ப்புக்களையும் இழப்பது என்பதும், வெள்ளை இன முஸ்லிம்களது ஐ.எஸ் பிரவேசமும் பிரதான விடயங்களாக அமைந்துள்ளது.

இதனை கடந்து துருக்கி, - சிரிய யுத்தம் ரஷ்யாவின் தலைமையால் சரி செய்யப்பட வேண்டும் என்பதோடு நேட்டோவினதும் அமெரிக்காவினதும் நெருக்கடிக்கு துருக்கி சரியான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்பதும் பிரதான அம்சங்களாக உள்ளது.

ஆனாலும் மேற்காசியாவின் களம் ரஷ்யாவின் பிடிக்குள் அகப்பட்டுள்ளது.

அதனை விடுவிப்பது என்பது அமெரிக்கா -துருக்கிய நட்பினால் சாத்தியமாகும் என்பது கடினமாகவே அமைந்துள்ளது.

ஆனால் இங்கு குர்திஸ் போராளிகளின் அரசியல் நகர்வுகளே இத்தகைய சர்ச்சைகள் எல்லாவற்றிற்கும் தீர்வு தரக்கூடியதாக அமையும்.  

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments