சமகால கிரிக்கெட் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் யார்? | தினகரன் வாரமஞ்சரி

சமகால கிரிக்கெட் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் யார்?

கிரிக்கெட் உலகில் அதிகமாப் பேசப்பட்டு வரும் துடுப்பாட்ட  வீரர்களில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, அவுஸ்திரேலிய அணியின்  முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்து அணித் தலைவர் கேன்  வில்லியம்சன், இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஆகியோர் சமகாலத்தில்  கிரிக்கெட் உலகுக்கு அறிமுகமான வீரர்கள். கடந்த காலங்களில் இவர்களின் அதீத  துடுப்பாட்டத்திறமையின் காரணமாக தங்களது அணி வெற்றிகளில் அதிக  பங்காற்றியிருந்தனர். கடந்த காலங்களில் கிரிக்கெட் ரசிரகர்களினதும்,  விமர்சகர்களினதும் ஒப்பீட்டில் இவர்கள் நால்வரும் துடுப்பாட்டத்திலும்,  அணியை வழிநடத்துவதிலும் சிறந்து விளங்கியதால் ஒப்பீட்டளவில் யார் சிறந்த  வீரர்கள் என்று ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலை இருந்தது. 

ஆனால் கடந்த ஓரிரு வருடங்கள் ஜோ ரூட் மற்றும் கேன்  வில்லியம்சன் ஆகியோர் துடுப்பாட்டத்தில் சற்று பின்னடைவைச் சந்தித்ததால்,  மற்றைய இரு வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், விராட் கோஹ்லி இருவரிடையே இப் போட்டி  நிலவி வந்தது. ஸ்டீவ் ஸ்மித்தின் ஒரு வருட போட்டித் தடை காரணமாக விராட்  கோஹ்லியின் கையே துடுப்பாட்டத்தில் ஓங்கியிருந்தது. 

ஆனால் இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடருடன்  மீண்டும் சர்வதேச கிரிக்கெட் உலகுக்குத் திருப்பிய ஸ்டீவ் ஸ்மித் அது  தொடக்கம் தனது துடுப்பாட்டத் திறமையால் அவுஸ்திரேலிய அணியை தூக்கி  நிறுத்தியுள்ளதோடு, கோஹ்லி -ஸ்மித் இருவருக்கிடையே ஒப்பீட்டளவில் மீண்டும்  பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

இது இன்று நேற்று ஏற்பட்ட போட்டியல்ல ஆரம்ப காலம் முதலே கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்களுக்கிடையே ஏற்பட்டுவந்த போட்டியாகும்.  

ஒருகாலத்தில் கபில்தேவா- இயன் பொதமா? இம்ரான்கானா- ரிச்சர்ட்  ஹெட்லியா, கவஸ்காரா-விவியன் ரிச்சட்சா, சச்சினா- பிரயன் லாராவா, முரளிதரனா-  ஷேன் வோனா என்று இரு வீரர்களை ஒப்பிட்டு அவர்களில் சிறந்தவர் யார் என்ற  போட்டி நிலவி வந்தது. மேலும் கிரிக்கெட் ரசிகர்களிடமும் இவை பற்றிய  வாதப்பிரதிவாதங்கள் ஏற்படுவதையும் பார்த்திருக்கிறோம். 

அண்மைக்காலமாக ஸ்மித்-கோஹ்லி ஆகியோரே இப்போட்டியில் முன்னிலை  பெற்றிருக்கின்றனர். எனவே இவ்விரு வீரர்களின் துடுப்பாட்டம் பற்றியும்,  அதன் நுணுக்கங்கள் பற்றியும் முன்னாள் வீரர்கள் பல கருத்துக்களை முன்  வைத்துள்ளனர். 

இந்திய அணியின் தலைவர் விராட்கோஹ்லி மற்றும்  அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பற்றி முன்னாள் அவுஸ்திரேலிய தலைவர் இயன்  செப்பல் குறிப்பிடுகையில்: 

இதில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி, ரி/20மற்றும் ஒரு  நாள் போட்டகளில் ஆடும் ஆட்டங்களுக்கும் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடும்  ஆட்டத்திலும் பெரும் வித்தியாசமுள்ளது. ரி/20, ஒருநாள் போட்டிகளில் ஆடும்  போது அவர் விலாசும் ஷொட்கள் கிரிக்கெட் மரபை மீறிய ஷொட்களாவே உள்ளது. ஆனால்  டெஸ்ட் விளையாடும் போது இம்மாதிரியான துடுப்பாட்டத்திலிருந்து மாறுபட்டு  மரபு ரீதியான ஆட்டத்தின் மூலமே அவர் ஓட்டங்களைச் சேர்க்கிறார். சர்வதேச  அளவில் வெற்றிபெற வேண்டுமெனில் ஒரு இன்னிஸ்ஸை எப்படி கட்டுக்கோப்போடு  முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் விராட் கோஹ்லி இன்றைய இளம்  வீரர்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறார். எனவே இன்றைய அதிரடி  துடுப்பாட்ட வீரர்களுக்கும், மெதுவாக விளையாடும் வீரர்களுக்கும் இவரின்  துடுப்பாட்டத்திலிருந்து நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளலாம். 

கோஹ்லி யாருடைய துடுப்பாட்டத்தையும் முன்மாதிரியாகக்  கொள்ளாமல் தனக்கேயுரிய பாணியில் மூவகைப் போட்டியிலும் விளையாடுவதால்  அனைத்து வகைக் கிரிக்கெட் போட்டியிலும் மிளிர்கிறார். 

இதே போல் ஸ்மித்தும் தனக்குப் பொருந்தி வரக்கூடிய தனக்கேயுரிய  ஒரு முறையை துடுப்பாட்டத்தின் போது கையாள்கிறார். போட்டியில் பந்து  வீசுவதற்கு முன்பாகவே இடதுபக்க விக்கெட்டிலிருந்து வலது பக்க  விக்கெட்டுக்கு நகர்வதும், அங்க அசைவுகள் மாறுபட்டாலும் ஆடும் தருணத்தில்  சரியான நிலைக்கு வருகிறார். எனவே பந்து வீச்சாளர்கள் சில வேளைகளில்  நிலைகுலைவார்கள். 

ஒரு முறை இவரிடம் பந்து வீச முன் ஏன இவ்வளவு நகர்வுகள்,  இத்தனை செயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள், பந்து வீச்சாளர்களை நிலைகுலையச்  செய்யவா என்று கேட்டதற்கு துடுப்பாட்டம் என்பதே பந்து வீச்சாளர்களை  நிலைகுலையச் செய்வதுதான் என்று பதிலளித்துள்ளார். 

அண்மையில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஸ்மித்தை வீழ்த்த முடியாமல்  இங்கிலாந்து அணியின் தலைவர்  ஜோரூட் தடுமாறியதைக் காணக்கூடியதாக இருந்தது.  இறுதியில் பௌன்சர் பந்து மூலம் அவரை வீழ்த்தினாலும் மீண்டும் வந்து  இங்கிலாந்து பந்து வீச்சாளர்களைத் துவம்சம் செய்தார் என்று செப்பல்  குறிப்பிட்டுள்ளார். 

அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர் டொன் பிரட்மென்னுக்குப்  பின் சிறந்த வீரர் என்று புள்ளிவிபரங்கள் கூறும் நிலையில் பாகிஸ்தான்  வேகப்பந்து வீச்சாளர் ஷொய்ப் அக்தர் ஸ்மித் பற்றிக் கூறும்போது: ஸ்மித்  இப்படி ஆடுவது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஸ்டீவ் ஸ்மித்தின்  துடுப்பாட்டத்தில் நுட்பத்தையும் காணவில்லை, துடுப்பாட்ட ஸ்டைலையும்  காணவில்லை ஆனால் அவர் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடுகிறார். என் காலத்தில்  அவர் விளையாடியிருந்தார். அவர் என் பந்தில் காயமடைந்திருப்பார். அவரை என்  பந்து வீச்சின் மூலம் காயப்படுத்த முயற்சித்திருப்பேன். ஆனால் அவர்  ஆடுவதைப் பார்த்தால் காயப்படுத்துவதும் முடியாத காரியம் என்று தெரிகிறது.  மிக நன்றாக ஆடுகிறார். என்று அவரின் யூடீயூப் வீடியோவில்  தெரிவித்திருந்தார்.  

அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிரான ரி/20போட்டியில் 52  பந்துகளில் 88ஓட்டங்கள் எடுத்து அதிரடியாக ஆடுவதிலும் தான் கில்லாடி  என்பதை நிரூபித்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.  தற்போது சொந்த மண்ணில் இந்திய அணி பங்களாதேஷ் அணியுடனும்,  அவுஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியுடனும் டெஸ்ட் சம்பியன் ஷிப் தொடரில்  மோதுவதால் இவ்விரு வீரர்களும் ரசிகர்களுக்கு சிறந்த விருந்து படைப்பர்  என்பது திண்ணம். 

எம்.எஸ்.எம். ஹில்மி 

Comments