நீங்கள் தெருவில் நடந்து செல்லும்போது உங்களுக்குள்ளே கவனித்துப் பாருங்கள். அங்கே நடக்காமலும் ஒருவன் இருக்கிறான். நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கை கால்கள் அசைந்து கொண்டிருக்கின்றன. உங்களுக்குள்ளே சிறிதளவு கூட நடக்காமல் நீங்கள் நடப்பதை பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்கும் ஒரு தத்துவமும் இருக்கிறது.
கை கால்களில் அடிபட்டால் விழிப்புடன் உள்ளே நோக்குங்கள். அடி உங்களுக்குப் பட்டிருக்கிறதா அல்லது உங்கள் உடலுக்கு பட்டிருக்கிறதா என்று கவனியுங்கள். உடலில் எங்கே எந்த வேதனை ஏற்பட்டாலும் விழிப்புடன் வேதனை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா அல்லது நீங்கள் வேதனையை அறிபவராக சாட்சியாக இருக்கிறீர்களா என்பதைக் கவனியுங்கள். பசிக்கும்போது முழு நினைவுடன் பசி உங்களுக்கு எடுக்கிறதா அல்லது உடலுக்கு எடுத்து நீங்கள் அதை அறிபவராக மட்டும் இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.
சந்தோஷம் எதுவும் ஏற்பட்டால் அதையும் நன்கு கவனித்து, சந்தோஷம் எங்கே அமருவதும் என்பதை உறங்குவதும், விழிப்பதும் ஆகிய எந்தச் சம்பவமானாலும் அவை அனைத்திலும் ஒரு முழு நினைவுடன் சம்பவம் எங்கே நடைபெறுகிறது? எனக்கா அல்லது நான் சாட்சி மட்டுமா? என்பதை அறியும் முயற்சியை நிரந்தரமாக செய்வது விவேகம்.
நமது ஒன்றிவிடும் நிலை மிக ஆழமானது. ஒரு சினிமா பார்த்தாலும், நாடகம் பார்த்தாலும் கூட அதில் வரும் சோகக் கட்டங்களில் கண்ணீர் வடிக்கிறோம். சேர்ந்து நகைக்கிறோம். மற்றவர் பார்த்து விடக்கூடாதே என்று திருட்டுத் தனமாகக் கண்களை துடைத்து கொள்கிறோம். ஒரு படத்தை பார்த்துவிட்டு நாம் அழுதால் படத்தின் எவருடனாவது நாம் இணைந்துவிட்டோம். அவருக்கு வேதனை ஏற்பட்டிருக்கும். அந்த வேதனை உங்கள் வரை தொத்திக் கொண்டு நீங்களும் அழத்தொடங்கி விடுகிறீர்கள்.
ஒவ்வொரு நிமிடமும் உங்களையும், உங்சளைச் சுற்றி உள்ளவைகளையும் கவனித்துக் கொண்டே இருந்தால் ஒரு உண்மை தெரியவரும். அது என்னவென்றால், "நீங்கள் இந்த உடல் அல்ல, மனமும் அல்ல, இந்த உலகை பார்வையிட வந்த ஒரு பார்வையாளர்; வெறும் சாட்சி மட்டுமே. செய்பவன் அல்ல.
சோ. வினோஜ்குமார்,
தொழினுட்ப பீடம்,
யாழ். பல்கலைக்கழகம்,
கிளிநொச்சி.