![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/02/colvm-hong-kong-election3190306795_7785091_29112019_EPW_CMY.jpg?itok=Ki2DXQAB)
ஹொங்கொங்கின் அரசியல் வரலாறு புதிய திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளது எனக்கருத முடியும். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் ஹொங்கொங் ஜனநாயகவாதிகளை வெற்றியடையச் செய்துள்ளது. சீன ஆதரவு கட்சியினரது நிலை படுமோசமான தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி பாரிய அரசியல் நெருக்கடியொன்றினை சீன ஆதரவுக் கட்சிகள் அடைந்துள்ளமை சீனாவின் அரசியல் உறவை பாதிப்பதாக அமைந்துவிடுமா என்ற சந்தோகம் எழுந்துள்ளது. இக்கட்டுழரையும் அத்தகைய குழப்பத்திற்கு வி-டைகாண முயலுகிறது.
முதலில் சீன- ஹொங்கொங் உறவு நிலைக்கான அடிப்படையை அவதானிப்போம். 1898ஆம் ஆண்டு சீனாவை ஆட்சிபுரிந்த குவிங் (Qing) சந்ததியுடன் பிரித்தானியா மேற்கொண்ட 99ஆண்டுகால உடன்பாட்டின் அடிப்படையில் ஹொங்கொங் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றது. அக்காலப் பகுதி முதல் மேற்குலக பொருளாதார சமூக பண்பாட்டுத்தளத்தில் ஹொங்கொங் வளர்ச்சியடைந்தது. அதன் அரசியல் இருப்பும் நாகரீகமும் பிரித்தானிய மரபுக்குள்ளால் உருவாக்கப்பட்டது. அதனை ஒரு தாராள பொருளாதார பொறிமுறையுடைய தேசமாக மாற்றுவதில் பிரித்தானியா அதிக கரிசனை கொண்டு செயல்பட்டது. அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஹொங்கொங் ஒரு சொர்க்க புரியாக மாறியது. அந்த மக்கள் தம்மை நவீன ஜனநாயகவாதிகளாகவும் தாராள பொருளாதாரவாதிகளாகவும் அடையாளப்படுத்துவதில் முக்கியத்துவம் கொடுத்தனர். இதனால் தமது தாய் தேசமான சீனாவைவிட தாம் உயர்வானவர்கள் என்ற எண்ணத்துடன் காணப்பட்டனர். சீனாவின் அடக்கு முறைகளை தகர்த்துக் கொள்வதில் இவர்களுக்கிருக்கும் மனோநிலை அவர்களது பொருளாதார பலத்தினாலும் அரசியல் ஒத்துழைப்பினாலும் ஏற்பட்டதாகும்.
சீன_ஹொங்கொங் உடன்பாட்டுக் காலம் 1997உடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஹொங்கொங்கை சீன அரசிடம் பிரிட்டன் கையளித்தது. ஆனால் சீனா உடனடியாக தன்னுடன் அதனை இணைக்காது ெஹாங்ெகாங்கை சீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகவே இணைத்துக் கொண்டது.
அப்போது சீனா “ஒரே தேசம் இரு நாடு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்பட திட்டமிட்டது. அதற்கு வலுவான காரணம் ஒன்றிருந்தது. அதாவது தைவான் தீவு சீனாவுக்கு சொந்தமான போதும் அதனை அதனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாது மேற்குலகம் செயல்படுகிறது. அதனால் ஹொங்கொங்கை வேகமாக இணைக்காது படிப்படியாக இணைத்துக் கொள்வதன் மூலம் தைவானையும் எதிர்காலத்தில் இணைக்க முடியும் என சீனா கருதியது.
அது மட்டுமன்றி சீனா உலக அரசியல் பரப்பில் மென் அதிகாரத்தின் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்ற கொள்கையை பின்பற்றும் நாடாக வெளிப்படுத்தி வருகிறது. அதனை தன்னிலிருந்து பிரிந்து போன அரசுகளிடத்திலும் கடைப்பிடிப்பதன் மூலம் அகண்ட சீனாவை அமைதியாக உருவாக்க முடியும் என்ற எண்ணப்பாட்டுடன் செயல்பட முனைந்தது. இதனாலேயே மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்துள்ளது. இன்னோர் தினமென் நிகழக் கூடாது என்பதில் கவனம் கொண்டுள்ள சீன ஆட்சியாளர்கள் ஹொங்கொங்கையும் அவ்வாறு தான் கையாள முனைகின்றனர்.
ஹொங்கொங்கை சீனாவிடம் ஒப்படைக்கும் போது அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு சீனா ஹொங்கொங் மக்களின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைத் தவிர்ந்த ஏனைய விடயங்களில் ஹொங்கொங் மக்கள் அதிக அளவில் சுயாட்சியை அனுபவிக்க உரித்து உடையவர்கள் என்பதையும் சீனா ஏற்றிருந்தது. இது அவர்களின் அனைத்து உரிமைகளையும் அங்கீகரிப்பதாக அமைந்திருப்பதுடன் அம்மக்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்ெகாள்வதாக அமைந்துள்ளது.
இதனால் சீனர்களுக்குக் கிடைக்காத சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களை வெளிப்படுத்தும் உரிமை, கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் மற்றும் பேச்சுச் சுதந்திரம் ஆகியவற்றோடு ஹொங்கொங் மக்களுக்கு ஜனநாயகத்தை வளர்த்துக் கொள்ளும் உரிமையும் வழங்கப்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தபோதும் ஹொங்கொங் நாட்டுக்கென தனி நாணயம் மற்றும் அரசியல் சிவில் சட்டங்கள் தனித்துவமானதாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஹொங்கொங்கில் வாழ்பவர்கள் பொருமளவானவர்கள் சீனர்கள். ஆனால் அவர்கள் தங்களை சீனர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில்லை என்பது மட்டுமன்றி, அதை விரும்புபவர்களாகவும் இல்லை. 11சதவீதமான மக்களே தம்மை சீனர்கள் என அழைக்க விரும்புகின்றனர். இதுவே அண்மைய உள்ளூராட்சித் தேர்தலில் பிரதிபலித்தது. ஏறக்குறைய 3 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
இது 71சதவீதமாகும். இதில் 90சதவீத வாக்குகள் ஹொங்கொங் ஜனநாயகவாதிகளுக்கு கிடைத்துள்ளது. மீதி 10சதவீதமே சீனா சார்பு கட்சியினருக்கு கிடைத்துள்ளது. 18மாவட்டங்களில் 17ஐ ஹொங்கொங் ஜனநாயகவாதிகள் கைப்பற்றியிருந்தனர். எனவே தமக்கான ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதில் ஜனநாகயகவாதிகளே அதிக முடிவை எடுப்பவர்களாக விளங்குவார்கள். இது சீனாவின் இருப்பை ஹொங்கொங் மக்கள் நிராகரிப்பதாகவே அமைய வாய்ப்புள்ளது.
சர்வதேச மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் அதிக ஆதரவுடைய ஹொங்கொங் ஜனநாயகவாதிகள் சீனாவை ஆபத்தான நிலைக்குள் தள்ள முயலுவார்கள். ஒரே தேசம் இரு நாடு என்ற கோட்பாட்டை சீனா இழக்கும் நிலை ஏற்படுமா அல்லது மென்போக்கினை கைவிட்டுவிட்டு மீண்டும் ஒரு தினமெனை உருவாக்கி, ஆட்சியையும் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருமா என்பதே தற்போதைய சந்தேகமாகும். ஆனால் சீனா ஹொங்கொங்கை இலகுவில் இழந்துவிடாது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. முடிந்தவரை ஒத்துழைக்குமே அன்றி இழக்கும் நிலைக்கு சீனா செல்லாது என்பதை பதிவு செய்வதே பொருத்தமானதாகும்.
கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்