![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/08/Capture-2.jpg?itok=DZJ6AmJO)
எதிர்வரும் டிசம்பர் 13, 14, 15ஆம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் 2வது சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்நிகழ்வை Sirahununi Centre for Arts and Media நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. ஜென்மனி, பிரேஸில், ஈரான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் கலந்து கொள்ளும் இத்திரைப்பட விழாவில் புதிய 7 முழு நீளத் திரைப்படங்களும் 6 குறுந்திரைப்படங்களும் முற்றிலும் இலவசமாகக் காண்பிக்கப்படவுள்ளன.
டிசம்பர் 13ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வும் அதைத் தொடர்ந்து 6.00 மணிக்கு Motorcycle Girl (2018, பாகிஸ்தான்) சிறப்புத் திரைப்படக் காட்சியும் இடம்பெறும். டிசம்பர் 14 (சனி), டிசம்பர் 15 (ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 10.00, பகல் 2.30, இரவு 6.00 என தினமும் மூன்று காட்சிகளாக மாறுபட்ட பிறமொழித் திரைப்படங்களை ரசிகர்கள் கண்டு களிக்கலாம். உருது, வங்காளம், பாரசீகம், ஜெர்மன், போர்த்துக்கல் ஆகிய மொழிகளிலமைந்த இத்திரைப்படங்கள் யாவும் ஆங்கிலத்தில் உபதலைப்பிடப்பட்டுள்ளன. சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெறும் Nagarkirtan திரைப்படம் மாத்திரம் வயது வந்தவர்களுக்கு உரியது. ஏனைய அனைத்து திரைப்படங்களும் பொதுவான பார்வையாளர்களுக்கான சான்றிதழைப் பெற்றவை.
சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும் மாலை 4.30க்கு கிழக்கு மாகாண இளம் இயக்குனர்களால் உருவாக்கப்பட்டு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள இலங்கைக் குறுந்திரைப்படங்(தமிழ்)களின் திரையிடலும் பார்வையாளர்களுடனான கருத்துப் பகிர்வும் இடம்பெறும்.
சிறகுநுனி நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களாக கலை, ஊடக செயற்பாடுகள் மூலம் சமூக மாற்றத்தை நோக்கிய பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. திரைப்பட விழாக்கள், மாதாந்த திரைப்படக் காட்சி, பத்திரிகை, இணையம், பயிற்சிப் பட்டறைகள், புகைப்பட- ஓவிய கண்காட்சிகள், நூல்கள்- இசைப்பாடல்- நாடகம்- குறும்படம்- ஆவணப்பட தயாரிப்புக்கள் மற்றும் வெளியீட்டு நிகழ்வுகள், உரையாடல்கள் எனத் தொடரும் அதன் பரந்து பட்ட பணிகளில் இத்திரைப்பட விழா ஒரு வரலாற்றுப் பதிவாகும். கிழக்கின் முதலாவது சர்வதேச திரைப்பட விழாவாக கடந்த வருடம் சிறகுநுனி நிறுவனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு இவ்வருடமும் தொடர்வது குறிப்பிடத்தக்கதாகும்.
தொடர்புகளுக்கு: [email protected] மேலதிக விபரங்களுக்கு: fb/Sirahununi, www.sirahununi.com
13 (வெள்ளி) இரவு 6.00
Motorcycle Girl (2018, Pakistan)
பாகிஸ்தானின் லாகூரில் வசிக்கும் 18 வயதுப் பெண்ணான ஜெனித் இர்பான், பாகிஸ்தானின் வடக்கே அமைந்துள்ள கடினமான மற்றும் ஆபத்தான மலைப் பகுதிகளை, மோட்டார் சைக்கிளில் கடந்து தனது தந்தையின் கனவை நனவாக்க எண்ணுகிறாள், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும் அவள் மோட்டார் சைக்கிளில் நாட்டின் வடக்கே தனியாகப் பயணம் செய்த பாகிஸ்தானின் முதல் பெண் என்ற பெருமையைப் பெற எத்தனிக்கிறாள்.
14 (சனி) காலை 10.00
Central Station (1998, Brazil)
முன்னாள் பள்ளி ஆசிரியர் டோரா, ரியோ டி ஜெனிரோவில் உள்ள கல்வியறிவற்ற மக்களுக்கு கடிதம் எழுதிக் கொடுப்பதன் மூலம் வருமானம் தேடுகின்றாள். ஆனால் அவர்களது கடிதங்களை உரியவர்களுக்கு அனுப்பாமல் பணத்தை மாத்திரம் எடுத்துக் கொள்கிறாள். அவளது வாடிக்கையாளர்களில் ஒருவரின் 9 வயது மகன் ஜோஸ்யுூ, பஸ் விபத்தில் தாயாரை இழந்து தனித்து விடப்படுகின்றான். நீண்ட காலமாகக் காணாமல் போன தனது தந்தையைத் தேடும் டோரா ஒரு சாலைப் பயணத்தில் சிறுவனைக் கண்டு அவனைத் தன்னுடன் வேண்டாவெறுப்பாகச் சேர்த்துக்கொள்கின்றாள்.
14 (சனி) பகல் 2.30
24 Weeks (2016, Germany)
ஆறு மாதக் கர்ப்பிணியான ஒரு பெண் தனது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு டவுன்ஸ் நோய் மற்றும் இதயக் குறைபாடு இருப்பதை அறிந்ததும் எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாகக் கொண்டது இத்திரைப்படம். கருவுற்று ஆறுமாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்தக் கருவை அவளால் கலைக்க முடியுமா? பிறக்காத அந்தக் குழந்தை வாழ்வதற்கு தகுதியானதுதானா? அல்லது அக்குழந்தை பிறந்து அவதியுறுமா? இறுதி முடிவை எடுப்பது யார்? போன்ற கேள்விகள் அவளையும் அவளது கணவரையும் அலைக்கழிக்கின்றன.
14 (சனி) மாலை 4.30
மூன்று குறுந்திரைப்படங்கள் (2019, இலங்கை)
ஹர்த்தால்
கூத்து
யாழ் திரும்பும் முபாறக்
14 (சனி) இரவு 6.00
Nagarkirtan (2017, India)
தனது ஆசிரியர் சுபாஷ்-டா என்பவரால் ஏமாற்றப்பட்ட அதிர்ச்சியைத் தாங்க முடியாத, திருநங்கையான போரிமல் வீட்டை விட்டு வெளியேறி பணம் சம்பாதிப்பதற்காக போக்குவரத்து சிக்னல்களில் புட்டி என்ற பெயரில் பாடுகிறாள். அங்கே அவள் சீன உணவகத்தில் டெலிவரி பையனாக வேலைபார்க்கும் மது என்பவரைக் காதலிக்கிறாள். பாலியல் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தைத் திரட்ட வேண்டும் என்ற கனவு இருவரையம் காதலில் விழ வைக்கின்றது. ஆனால் திருநங்கைகளை ஒதுக்கி வைக்கும் சமூகம், அவர்களின் கனவினை ஆதரிக்க மறுக்கிறது.
15 (ஞாயிறு) காலை 10.00
Fagun Hawai (2019, Bangladesh)
கிழக்கு பாகிஸ்தானில் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றும் காவல்துறை அதிகாரி கிராமவாசிகளை உருது மொழி பேசுமாறும் தாய்மொழியைக் கைவிடும்படியும் கட்டாயப்படுத்துகிறார்.
டிட்டோ ரஹ்மானின் Bou Kotha Kou (ஆங்கிலம்: இன் ஸ்பிரிங் ப்ரீஸ்) நாவலை அடிப்படையாகக் கொண்ட பங்களாதேஷ் வரலாற்று நாடகமான இத் திரைப்படம் கிழக்கு பாகிஸ்தானில் 1952 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மொழி இயக்கத்தைச் சித்தரிக்கிறது.
15 (ஞாயிறு) பகல் 2.30
Track 143 (2014, Iran)
ஓல்ஃபாட் மிகுந்த் சிரமத்தின் மத்தியில் தனது குழந்தைகளை வளர்த்து வருகிறாள். இவளுக்கு ஒரு மகளும் செப்புச் சுரங்கத்தில் பணிபுரியும் யோனோஸ் என்ற ஒரு மகனும் உள்ளனர். ஒரு நாள், வீட்டுக்குள் நுழைகையில் ”நானும் என் நண்பர்களும் போர் வீரர்களாக யுத்தத்துக்குப் போகப் போகிறோம்” என்றொரு குறிப்பைக் காண்கிறாள். இதைப் படித்த பிறகு, ஓல்ஃபாட்டும் அவளது மகனின் நண்பர்களின் பெற்றோரும் தங்களது மகன்களைப் பற்றிக் கவலை கொள்கின்றனர்.
வோலபாஜர் என்ற தாக்குதல் தோல்வியடைந்தபோது, யோனோஸின் நண்பரைப் பற்றிய செய்தி அவர்களுக்கு கிடைத்தது. ஓல்ஃபாட் தனது மகனுக்காகக் காத்திருக்கிறாள். ஈரானிய கைதிகளின் பெயர்களை ஈராக் அறிவிப்பதைக் கேள்விப்பட்டதும் அவள் ஒரு வானொலியைத் தன் முதுகில் கட்டிக் கொண்டு திரிகிறாள்.
15 (ஞாயிறு) மாலை 4.30
மூன்று குறுந்திரைப்படங்கள்: (2019, இலங்கை)
ஃபேக் ஐடி பார்த்துக் கொண்டிருக்கிறான்
முஸ்லிம் தெரு வழியே அபாயா
15 (ஞாயிறு) இரவு 6.00
Victoria (2015, Germany)
பேர்லினுக்குக் குடிபெயர்ந்த ஒரு இளம் ஸ்பானிஷ் பெண், ஒரு உள்ளூர்ப் பையனுடன் ஊர் சுற்றுகிறாள், அவனது நண்பர்களுடன் இரவு வெளியே செல்கையில் ஆபத்தான ரகசியமொன்று வெளிப்படுகின்றது.
இரவு விருந்தானது வங்கிக் கொள்ளையாக மாறுகின்றது.