![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/15/colshooting-incident-outside-british-parliament-bbc145322090_7849680_14122019_VKK_CMY.jpg?itok=k-979yxy)
பிரிட்டன் நாட்டு பாராளுமன்றத்தில் பொதுச்சபை, பிரபுக்கள் சபை என இரு சபைகள் உள்ளன. பொதுச்சபையில் 650 எம்.பி.க்கள் பிரபுக்கள் சபையில் 788 எம்.பி.க்கள் என மொத்தம் 1,438 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பிரிட்டன் ராணியின் ஒப்புதலுடன் கடந்த 2011-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி பாராளுமன்றத்துக்கு முந்தையை தேர்தல் நடத்தப்பட்ட நாளில் இருந்து ஐந்தாவது ஆண்டில் வரும் கடைசி மே மாதத்தின் முதல் வியாழக்கிழமையில் மறுமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனினும், பிரதமர் விரும்பினால் அதற்கு எதிர்க்கட்சியினரில் ஒரு பகுதியினர் ஆதரவு அளித்தால் 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்த இந்த சட்டத்தில் அனுமதி உண்டு. அவ்வகையில், முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த கடந்த 2017-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தெரசா மே எடுத்த முடிவு தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுச்சபையில் வாக்குப்பதிவு நடைபெற்றபோது ஆதரவாக 522 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
இதைத் தொடர்ந்து 8-.6-.2017 அன்று நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தெரசா மே மீண்டும் பிரதமரானார்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் விவகாரம் தொடர்பாக தெரசா மே செய்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல மந்திரிகள் ராஜினாமா செய்ததால் விரக்தியடைந்த தெரசா மே தனது பிரதமர் பதவியை 24.-7.-2019 அன்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தற்போதைய பிரதமர் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க மறுத்து விட்டதால் எரிச்சலடைந்த போரிஸ் ேஜான்சன் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த முடிவுக்கு எதிர்க்கட்சியும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும் என்பதால் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் முடிவுக்கு பாராளுமன்றத்துக்கு தொழிலாளர் கட்சி ஒப்புதல் அளித்தது.
இதுதொடர்பாக பாராளுமன்ற பொதுச்சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடந்த வாக்கெடுப்பில் முன்கூட்டியே பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து 438 எம்.பி.க்களும் எதிராக 20 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
டிசம்பர் 12-ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தனது கட்சி எம்.பி.க்களிடையே பேசிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவரும் பிரதமருமான போரிஸ் ஜோன்சன், ‘பிரெக்சிட்டை நிறைவேற்ற நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரமிது. இது மிகவும் கடினமான தேர்தலாக இருக்கும். நம்மால் இயன்றதை சிறப்பாக செய்து முடிப்போம்’ என குறிப்பிட்டார். தொழிலாளர் கட்சி தலைவர் ஜெரேமி கார்பின், ‘நமதுநாடு இதுவரை காணாத வகையில் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் வகையில் வரும் தேர்தலில் எங்களது பிரசாரம் மிக தீவிரமாக அமையும்’ என தெரிவித்தார்.
1923-ம் ஆண்டுக்கு பிறகு பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு இந்த ஆண்டுதான் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது என்ற நிலையில் பாராளுமன்ற பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானத்துக்கு பிரபுக்கள் சபையும் ஒப்புதல் அளித்ததால் திட்டமிட்டபடி டிசம்பர் 12-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
1. இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்ததுதான் பிரிட்டன் எனவே இந்த நான்கு நாடுகளில் உள்ள 650 தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
2.இந்த தேர்தலில் மொத்த 3322 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
3.முடிவுகள் ஏறத்தாழ வந்துவிட்ட நிலையில், அந்நாட்டின் கன்சர்வேடிவ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4.தொடர்ந்து நான்காவது முறையாக தோல்வியை சந்திக்கும் தொழிலாளர் கட்சிக்கு இது பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. பிரிட்டனின் இரண்டு முக்கிய கட்சிகளாக இந்தக் கட்சிகளும் உள்ளன.
5.கடந்த 1987ஆம் ஆண்டிற்கு பிறகு கன்சர்வேடிவ் கட்சி பெறும் மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. அதேபோல் 1935ஆம் ஆண்டிற்கு பிறகு தொழிலாளர் கட்சி பெறும் மோசமான தோல்வியாக இது அமையும் என்று கூறப்பட்டுள்ளது.
6. அடுத்த பொதுத் தேர்தலில் தனது கட்சியை வழிநடத்த போவதில்லை என ஜெர்மி கோபின் தெரிவித்துள்ளார்.
7.இந்த தேர்தலை பொறுத்தவரை பிரெக்ஸிட்டே முக்கிய அம்சமாக பார்க்கப்பட்டது. பிரெக்ஸிட் என்பது பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது ஆகும். இதற்கான கருத்தறியும் வாக்கெடுப்பு 2016ஆம் ஆண்டு நடைபெற்றது.
8.முன்னதாக போரிஸ் ஜோன்சன் பிரதமராக பதவியேற்றபோது அக்டோபர் 31ஆம் திகதிக்குள் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் என தெரிவித்திருந்தார் போரிஸ் ஜோன்சன். தற்போது அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் பெருன்பான்மை கிடைத்துள்ளதால் பிரெக்ஸிட்டிற்கான ஆதரவு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை.
9.கன்சர்வேடிவ் கட்சி, தொழிலாளர் கட்சி, தாராளவாத ஜனநாயகவாதிகள், ஸ்காடிஷ் தேசிய கட்சி, கிரீன் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, பிளைட் சிம்ரு கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
10 போரிஸ் ஜோன்சன், ராணி எலிசபெத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.