தானே தனக்குள் இரசிக்கின்றார்! | தினகரன் வாரமஞ்சரி

தானே தனக்குள் இரசிக்கின்றார்!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்றொரு பழமொழி சொல்வார்கள். கரும்பு ஆலை இல்லா ஊரில் சர்க்கரை கிடைக்காது. அப்படியென்றால், அந்த ஊரில் இலுப்பைப்பூவையே சர்க்கரையாகப் பயன்படுத்துவார்கள்.  

இலுப்பையை ஒரு பணம் காய்க்கும் மரம் என்பார்கள். அந்தளவிற்கு அதிலிருந்து பயன்களைப் பெற முடியும். இலுப்பையின் பயன்கள் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கிடைக்கும். ஆனால், இங்கே நாம் சொல்லப்போகும் இலுப்பை, சிலருக்கு ஜூலை மாதத்தில் பணத்தைச் சொரியும். இம்முறை டிசம்பர் மாதம் வரை தள்ளிப்போய் இருக்கிறது.  

சரி, சர்க்கரைக்குப் பதிலாகத்தானே இலுப்பையைப் பயன்படுத்துவார்கள். கரும்பு ஆலையும் இருந்து சர்க்கரையும் இருக்க, எதற்காக இலுப்பையைப் பயன்படுத்த வேண்டும்? என்று கேட்கிறார் நண்பர். நியாயமான கேள்வியாகத்தானே இருக்கிறது!  

ஊடகத்துறையில் சாதித்தவர்கள் என்ற சிலருக்குக் கடந்த பத்தாந்திகதி விருதுகளை வழங்கினார்கள். (சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் விதிவிலக்கு) சர்க்கரை இருக்கத்தக்கவே இலுப்பைகளுக்கு விருது வழங்கினார்கள் என்பது நண்பரின் ஆதங்கம்.  

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டால்,  

"ஏன் அப்பிடியா? "  

"உங்களுக்கொன்றும் விளங்காது. விருது விழாவுக்கு வந்திருந்தால் தெரியும். சென்ற முறையும் ஒரே ஆக்களுக்குத்தான் குடுத்தவை. உந்த விருதுகள் உவங்களுக்ேக எழுதி ஒதுக்கி வைச்சமாதிரியல்லே கிடக்குது! இந்த முறை விருது பெற்ற ஆட்களைவிட மற்றொரு தேசிய பத்திரிகையிலை திறமையான எழுத்தாளர்கள் இருக்கினம்.

விருது பெற்றவை எவரும், அவங்களிட்டை நெருங்கவும் முடியாது! வெறும் பீத்தல் கனகர்கள் அல்ல அவர்கள். போனமுறை விண்ணப்பிச்சும் சரியாகத் தெரிவு செய்யேல்லயாம். இந்த முறையும் எல்லா விருதுகளையும் அந்த மனிசனே எடுத்துக்ெகாண்டிருக்கிறார். ஆசிரியர் குழுவை ஆட்டுவிப்பவரும் அவர்தான்; தெரிவுக்குழுவைக் கைக்குள் வைத்திருப்பவரும் அவர்தான். அது தவிர; அவரைவிட்டால், வேறு ஆளில்லை என்ர மாதிரியும்; தன்ர பேப்பரிலை எல்லாம் திறமையான ஆட்கள்தான் இருக்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்துக்ெகாண்டு மற்றைய இதழ்களை மட்டந்தட்டுவதுதான் இவரது வேலை" என்று பொரிந்து தள்ளுகிறார் நண்பர்.  

அது மட்டுமில்லை, ஆசிரியர் குழுவை ஆக்கிரமித்துக்ெகாண்டுள்ள இவரின் கீழ் பணியாற்றுபவர்களே விருதுகளை வழங்கிக்ெகாள்கிறார்கள் என்றால், அதனைவிடக் கொடுமை வேறு இருக்க முடியுமா? தேசிய பத்திரிகையென்றால், இவர்கள் மட்டுந்தான் என்ற ஒரு மாயையைத் தக்கவைத்துக்ெகாள்ளும் சுயநலப் போக்கினால், பக்கச்சார்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு தேசிய பத்திரிகையின் மாற்றத்தினால், கலங்கிப்போயுள்ள இந்தச் சிவபெருமான், அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் சென்றுவிடக் கூடாது என்பதில் கண்ணுங்கருத்துமாக இருந்திருக்கிறார் என்பது நிரூபணமாகியிருக்கின்றது.

அதனால், விருதுகளுக்கான தெரிவுக்குழுவிலும் அவருக்குச் செல்வாக்கு இருக்குதாம். இதனாலை, பத்தியின் வாசனையை அறியாதவர்களுக்கும் சிறந்த பத்தி வியாபாரிகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இலங்கையில் தமிழ் பத்திரிகை வியாபாரத்தின் இலட்சணத்தை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். பொது மக்களுக்கு இவையெல்லாம் புரிவதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. ஏனென்றால், பாம்பின் காலை பாம்புதானே அறியும்!  

அதிலும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குப் பொருத்தமானவர்களைத் தெரிவுசெய்வதிலும் பக்கச்சார்பு. சில மூத்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் கண்டுகொள்வதேயில்லை இவர்கள். 

என்றாலும், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் மிகச் சரியான தெரிவுகளாகவே இருக்கின்றன. தமிழ் மொழியில் மேற்கொள்ளப்படும் தெரிவுகள் மாத்திரமே பொருத்தமில்லாமலும் பக்கச்சார்பாகவும் இருக்கின்றன. ஒரு காலத்தில், ஒரே நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பித்து அவர்களே விருதுகளையும் பெற்றுக்ெகாண்டார்கள். ஆனால், காலப்போக்கில், இவர்கள் எதிர்பாராத அளவிற்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதும், இவர்களின் புறக்கணிப்பு தொடர்ந்து வருகிறது என்று அடித்துச் சொல்கிறார் நண்பர்.  

நண்பர் ஒரு சுயாதீன ஊடகவியலாளர். நன்றாக எழுதுவார். கட்டுரை, கவிதை, இலக்கியம், அரசியல், விமர்சனம் எனப் பல துறைகளில் ஆளுமை நிறைந்தவர். ஆரம்பத்தில் சிறந்த எழுத்தாளருக்கான விருதினையும் பெற்றுக்ெகாண்டுள்ளார். விருது வழங்குவதில் நடக்கின்ற பாரபட்சங்களால் அவர் விருதுக்கு விண்ணப்பிப்பதையே நிறுத்திவிட்டதாகச் சொல்கிறார். சில மாதங்களுக்கு முன்னரும் அரசின் சார்பில் வழங்கப்பட்ட விருதுகளுக்கும் பக்கச் சார்பாகத் தெரிவுகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.  

இந்த நிலையில்தான் தற்போது வழங்கப்பட்டுள்ள விருதுகளும் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒரு நிறுவனத்திற்குப் 11 விருதுகள். ஒரு தமிழ் நிறுவனத்திற்கு ஒன்பது விருதுகளாம். ஆனால், மற்றொரு தேசிய பத்திரிகையைச் சார்ந்த ஒரு பிராந்திய நிருபருக்கு மாத்திரம் விருது வழங்கப்பட்டிருக்கின்றது.

விருதுகளைப் பெற்றுக்ெகாண்டால் மாத்திரம்தான் மக்கள் மத்தியில் நிலைத்திருக்கலாம் என்பது சிலரின் கருத்தாக இருக்கலாம். ஆனால், மக்களோடு மக்களாக நிற்கும் ஊடகத்தையும் ஊடகவியலாளர்களையும் எவ்விதத்திலும் யாராலும் வீழ்த்திவிட முடியாது என்பதற்குக் காலம் பதில் சொல்லியே தீரும் என்பது நண்பரின் எண்ணம்!    

Comments