![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2019/12/21/q2.jpg?itok=fTG7fwRK)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டிவந்தாலும் குண்டுத்தாக்குதலில் நேரடியாக பாதிப்புக்களைச் சந்தித்த இலங்கை அணியை அங்கு சென்று விளையாட இலங்கை அரசும், இலங்கை கிரிக்கெட்டும் அனுமதித்தமையானது இரு நாடுகளுக்கிடையில் விளையாட்டுக்கும் அப்பாற்சென்ற நட்பே காரணமாகும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதற்கு பிரதியுபகாரமாக இலங்கையில் ரி/20பிரிமியர் லீக் போட்டித் தொடரை நடத்துவதற்கு அனுசரணையும், உதவியும் வழங்குவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டிடம் உறுதியளித்துள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இங்கு பிரிமியர் லீக் நடத்துவதற்கான ஒத்துழைப்பு, அனுசரணை வழங்குதுடன், வீரர்களை அனுப்புவதாகவும் உறுதியளித்துள்ளதால் அடுத்த வருடம் இலங்கையில் அவ்வகைத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.
இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் கூறுகையில்: ‘இச்சந்தர்பத்துக்காக நாம் கடந்த 10வருடங்களாகக் காத்திருந்தோம். இதற்காக இலங்கை கிரிக்கெட் சபைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைவர் சம்மி சில்வா அணியை அனுப்ப சம்மதித்தை நாம் மிகுந்த கௌரவத்துடன் ஏற்றுக்கொள்கின்றோம். எங்கள் இரு நாடுகளுக்கிடையிலான நட்பும் இதன் மூலம் மேலும் வலுவடைகின்றது. இலங்கை கிரிக்கெட் முன்னேற்றத்துக்காக இலங்கையுடன் மனப்பூர்வமாக கைகோர்க்கத் தயாராகவுள்ளோம்.
இலங்கை அரசாங்கத்துக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இலங்கை அணி இங்கு வந்து விளையாடியதன் பின் குமார் சங்கக்ககார எம். சி. சி. அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப சம்மதித்துள்ளார். பாகிஸ்தான் சென்ற இலங்கை டெஸ்ட் அணியையும், அதிகாரிகளையும் பிரமிக்கவைக்கும் வகையில் பாகிஸ்தான் நகரங்களில் நாலா புறமும் இலங்கைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் ரசிகர்கள் ராவல்பிண்டி மற்றும் கராச்சி மைதானங்களில் ஒரு கையில் பிறைக்கொடியையும் மறுகையில் சிங்கக்கொடியையும் ஏந்திய வண்ணம் போட்டியை காண வந்திருந்திருந்தனர். தனஞ்சயடி சில்வா துடுப்பெடுத்தாடும் போது கூடியயிருந்த ரசிகர்கள் அவரை உற்சாகப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. திமுத் கருணாரத்ன, தனஞ்சய, மத்தியூஸ் போன்ற வீரர்கள் துடுப்பெடுத்தாடும் போது சிங்கக் கொடியையும், நஸீம் ஷா, அப்பாஸ், அப்ரிடி போன்ற பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றும போது பிறைக்கொடியை உயர்த்திய காட்சி தொலைக்காட்சி ரசிகர்களையும் நெகிழ வைத்தது. ‘எங்கள் அணி இலங்கையுடன் விளையாடும் போது யார் வென்றாலும் கவலையில்லை. எங்கள் நாட்டுக்கு அடுத்து நாம் அதிகமாக நேசிப்பது இலங்கையைத்தான்’ என ஒரு ரசிகர் உணர்வுபூர்வமாகக் கூறியிருந்தார். விளையாட்டின் மூலம் இவ்வாறான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்தியது இக்காட்சிகள். பாகிஸ்தான் மைதானங்களில் விளையாட எந்தவொரு அணியும் அங்கு செல்ல மறுத்த நிலையில், இலங்கை வீரர்கள் அங்கு சென்று விளையாடியமை நாடுகளுக்கிடையில் இருக்கும் பகைமையை மேலும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை கூறிவரும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த உதாரணமாக நமது வீரர்கள் திகழ்ந்தார்கள்.
எம். எஸ். எம். ஹில்மி