காசிம் சுலைமானி படுகொலை; அமெரிக்க - ஈரான் போர்ப் பதற்றம்? | தினகரன் வாரமஞ்சரி

காசிம் சுலைமானி படுகொலை; அமெரிக்க - ஈரான் போர்ப் பதற்றம்?

ஈரானின் புரட்சிகர படைப் பிரிவின் தலைவரான காசிம் சுலைமானி கொல்லப்பட்ட சம்பவம் மேற்காசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்- அமெரிக்க பதற்றம் மீண்டும் ஒரு தடவை நெருக்கடியை சந்தித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல் ஈரானுடனான அணுகுமுறையை மாற்றிக் கொண்ட அமெரிக்க ஆட்சித்துறை ஈரானுடன் ஒரு மோதல் போக்கினை கையாண்டு வந்தது. ஈரான் ஒரு அணுவாயுத நாடாக மாறிவிடும் என்ற அச்சுறுத்தலின் பிரகாரமே அமெரிக்கா அவ்வாறு நடந்து கொண்டதை அவதானிக்க முடிகிறது. 

அதற்கான உடன்பாட்டுக்கு எதிரான நகர்வுகளையும் பொருளாதார தடைகளையும் ஏற்படுத்தி ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டது. அதில் அதிக அச்சுறுத்தலாக அமைந்த விடயம் ஈரானுக்குள் இயங்கிவந்த ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்திய விமானத் தாக்குதல்,  இரு நாட்டுக்குமான பதற்றத்தினை அதிகரித்திருந்தது. இதற்கு பதிலாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தினை ஹிஸ்புல்லாக்கள் தாக்கி துடைத்தழித்தனர். இதற்கு பதிலடியாகவே காசிம் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இக்கட்டுரையும் இத்தாக்குதல் ஏற்படுத்தியுள்ள பதற்றம் எவ்வகை நிலையை ஏற்படுத்தப் போகின்றது என்பதை தேடுவதாக அமையவுள்ளது. 

முதலாவது இத்தாக்குதலானது ஈராக்கின் தலைநகரமான பத்தாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. ஆளில்லாத விமானத்தின் மூலம் ஏவுகணை கொண்டு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காசிம் சுலைமாணியுடன் ஈராக்கின் ஹுத்- அல்- ஷாபி இராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹ்தி அல்-முஹந்தி உள்ளிட்ட 7பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசிம் ஈரானின் இரண்டாவது அதிகாரமளிக்கப்பட்ட இராணுவத் தளபதியாக பார்க்கப்படுபவர். ஆட்சியாளர் மத்தியில் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் பலம் வாய்ந்த நபராக காசிம் விளங்கினார் என்பது கவனிக்கத்தக்கதாகும். ஈரானின் இன்றைய நெருக்கடியான சூழலில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்ட தலைவர் என்பதுவும் குறிப்பிட வேண்டும்.  

இரண்டாவது இத்தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே தாம் இப்படுகொலையை ஏவுகணைத் தாக்குதல் மூலம் மேற்கொண்டதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. மேலும் பென்டகனது அறிக்கையில், வெளிநாட்டிலுள்ள அமெரிக்கப் பணியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலும் ஈரான் எதிர்காலத்தில் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கவும் காசிம் சுலைமாணியைக்  கொல்லும் முடிவை அமெரிக்கா எடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்களை பாதுகாக்க அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. மூன்றாவது ஈராக்கில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பணியாளர்களை தாக்க காசிம் சுலைமாணி திட்டமிட்டிருந்ததாகவும் அதனைத் தடுக்கவே அவரை கொன்றதாகவும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.  

நான்கு, இத்தாக்குதலை அடுத்து ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்க தேசியக் கொடியை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அது பதிவிட்ட இரு மணி நேரத்தில் 1.8 இலட்சம் மக்கள் விருப்பம் (Like) தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் அமெரிக்காவின் ஆதிக்கத்தினையும் துரைத்தனத்தையும் காட்டுகிறது. ஒரு நாட்டின் எல்லைக்குள் அங்கீகாரம் மிக்க அரசு ஒன்று அதுவும் வல்லரசு ஒன்று அனுமதியோ ஒப்புதலோ அன்றி தாக்குதல் நிகழ்த்தியிருப்பதுடன் அத்தகைய தாக்குதல் ஒரு நாட்டின் இராணுவத் தலைமை என்பதைக் கூட பொருட்படுத்தாது நிகழ்திவிட்டு உரிமை கோரிவருகிறது. சட்டம் இறைமை எல்லை எல்லாம் வெள்ளைக்காரருக்கு மட்டுமுரியதென்பதை மீண்டும் ஒரு தடவை அமெரிக்க ஆட்சியாளர்கள் உணர்த்தியுள்ளனர்.   இத்தகைய செயலை எந்த அரசும் செய்யத் துணியாது. சுலைமாணியை பின்லேடனுடன்  ஒப்பிட முடியாது என்பதை புரிந்து கொள்ளாத மேற்கு ஊடகங்கள் குறிப்பாக அமெரிக்க சார்பு ஊடகங்கள் சுலைமாணியை பயங்கரவாதியாக சித்தரிப்பதில் முனைப்புக் கொண்டு செயல்படுகிறது. அமெரிக்காவுக்கு வளைந்து கொடுக்காது விட்டால் அமெரிக்கா பயங்கரவாதி என்று குறிப்பிட்டு அழித்து ஒழித்துவிடும்.  

இதன் மறுபக்கம் மேற்காசியா முழுவுதுமல்ல உலகம் முழுவதும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானின் பதிலடி எப்படி அமையும் என்பது தெரியாதிருந்தாலும் அது ஆபத்தானதாக அமையும் என்பதில் அமெரிக்கர்களுக்கு மாற்றுக் கருத்திருக்காது. அதனால் தான் உடனடியாக தனது நாட்டு பிரஜைகளை விமான மார்க்கமாக அல்லது தரை மார்க்கமாக ஈரான் ஈராக்கினை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா பணித்துள்ளது. அது மட்டுமன்றி அமெரிக்க படைகளையும் ஈராக் பகுதியிலிருந்து குறைக்கத் திட்டமிட்டு அறிவிப்பினை பென்டகன் வெளியி-ட்டுள்ளது. தனது படைகளை தக்கவைக்க முடியாத நிலையை அமெரிக்காவின் செயல் ஏற்படுத்தியுள்ளது. 

இப்படுகொலை மூலம் ஈரான் மற்றும் ஈராக் மீது அமெரிக்கா போரை அறிவித்துள்ளதாக ஈரானின் மதத் தலைவர் அயதுல்லா அலி காமினி தெரிவித்துள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்திருப்பதுடன் சுலைமாணிக்காக மூன்று நாள் துக்க தினமாக அறிவித்துள்ளார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் ஜாவித் ஜாரிப் குறிப்பிடும்போது அமெரிக்கா ஆபத்தினை தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் அதிக முட்டாள்தனத்தை செய்துள்ளதாகவும் அமெரிக்கா சர்வதேசப் பயங்கரவாதத் செயலை செய்துள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.  

இரு நாட்டுக்குமான பதட்டம் பாதுகாப்பு சபையை கூட்டுமளவுக்கு முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது. ஐ.நா. வின் பொது செயலாளர் அமைதியை கடைப்பிடிக்குமாறு இரு நாட்டுத்தலைவர்களையும் கோரியுள்ளார். உலகத்தின் பாதுகாப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்த தாம் முனைவதாக அவர் அறிவித்துள்ளார். ரஷ்யா,  சிரியா என்பன இத்தாக்குதல் மேற்காசியாவின் அமைதியை அழித்துவிடும் என எச்சரித்துள்ளன. சீனா, பிரிட்டன், இந்தியா, பிரான்ஸ், ஜேர்மனி என்பன அமெரிக்காவும் ஈரானும் நிதானமாக செயல்பட வேண்டும் எனக் கேட்டுள்ளன.  

ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கை மேலும் நெருக்கடியான அரசியல் சூழலை மேற்காசியாவில் ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ஈராக்குடன் இணைந்து நடவடிக்கை எடுக்க முயல்வதுடன் எதிர்காலத்தில் அதன் புவிசார் அரசியல் தன்மை பலமானதாக ஆக்கிக் கொள்ள முயலும்.  அதில் ஈரான், ஈராக் இணைவு சாத்தியமானதாக  அமையுமாயின் அமெரிக்கா அதிக நெருக்கடியை இப்பிராந்தியத்தில் எதிர்கொள்ளும். இது ஒரு போராக மாற்றப்பட வாய்ப்புள்ளதாக ஈரான் கருதினாலும் அதனை உலகம் ஏற்படுத்துமா என்பது கேள்விக்குரியதாகவே தென்படுகிறது. ஆனால் அத்தகைய போர் ஒன்று ஏற்படுமாக இருந்தால் தனிப்பட்ட ரீதியில் ட்ரம்ப் அதிக நன்மையடைய வாய்ப்புள்ளது.  

இஸ்லாமியர் மீது கைவைத்தால் அமெரிக்காவிலும் சரி ஐரோப்பாவிலும் சரி அதிக செல்வாக்கினை பெறலாம் என்ற கருத்து நிலை ஒன்றுள்ளது. அதிலும் ட்ரம்ப்பைப் பொறுத்தவரை அதிக நெருக்கடியான கட்டத்தில் வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள உள்ளார். அதனால் அமெரிக்கா பக்கம் ஒரு போருக்கான வாய்ப்புள்ளது.

ஆனால் அத்தகைய போர் ஈரானுக்கு பாரிய சிதைவை அழிவைச் சந்திக்கும் நிலையை ஏற்படுத்தும். அது மட்டுமன்றி அதன் அணுவாயுதத் திட்டத்தினை தகர்த்து விடுவதற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் தயாராக உள்ளன. எனவே ஈரான் போர் ஒன்றினை தவிர்த்து செயல்படுவது இலாபகரமானதாக அமையும். குறிப்பாக அமெரிக்க பிரஜைகளையும் படைகளையும் இரு நாடுகளிலிருந்தும் அகற்றுதல் தற்போதைக்குரிய உத்தியாக அமைவது ஈரானுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.  

இரு நாட்டுக்குமான பதட்டம் உடனடியாக எண்ணெய் விலையை அதிகரிக்க செய்துள்ளது. பொருளாதார சுமையை மேலும் அதிகரிக்கும் நிலை வறிய நாடுகளுக்கு ஏற்படும். உள்நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை பொருளாதார நெருக்கடியால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பரஸ்பரம் இவ்வகைத் தாக்குதல் மேற்காசியாவில் மட்டுமல்ல முழு உலகத்திலும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை முழு அளவிலான போராக மாற்றுவதும் கைவிடுவதும் ஈரானின் கைகளிலேயே உள்ளது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்   

Comments