![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/02/01/q12.jpg?itok=pfKulaAo)
சிட்டி புட்போல் லீக் நான்காவது வருடமாக ஏற்பாடு செய்துள்ள அழைப்பு அணிகளுக்கு இடையிலான சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகின்றது.
சோண்டர்ஸ், ஜாவாலேன், றினோன், கலம்போ எவ்.சி. ஆகிய கழகங்கள் சம்பயின்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றன. சிட்டி லீக் முதலாம் பிரிவு போட்டிகளில் பங்குபற்றும் அணிகளில் சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக அந்த வீரர்கள் பங்குபற்றக்கூடிய வகையில் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடத்தப்படுவதாக சிட்டி புட்போல் லீக் தலைவர் ஆர். புவனேந்திரன் தெரிவித்தார்.
இப் போட்டிக்கான ஊடக சந்திப்பும் பகிரங்க குலுக்கலும் சிட்டி லீக் கேட்போர்கூடத்தில் அண்மையில் நடைபெற்றபோது புவேனந்திரன் இத் தகவலை வெளியிட்டார்.
இவ் வருட சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் இந்த நான்கு கழகங்களுடன் களுத்துறை புளூ ஸ்டார் கழகம், மாவனெல்லை செரெண்டிப் கழகம் ஆகியன அழைப்பு அணிகளாக பங்குபற்றவுள்ளன.
றினோன், ஜாவாலேன், மாவனெல்லை செரெண்டிப் ஆகிய கழகங்கள் ஏ குழுவிலும் சோண்டர்ஸ், கலம்போ எவ்.சி., புளூ ஸ்டார் ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன.
இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது போட்டியில் ஜாவா லேன் கழகமும் மாவனெல்லை செரெண்டிப் கழமும் விளையாடவுள்ளன.
ஏனைய போட்டிகளுக்கான திகதிகள் இவ் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது. பெரும்பாலும் சனி, ஞாயிறு தினங்களில் லீக் போட்டிகள் நடத்தப்படும்.
லீக் சுற்றில் இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிப் போட்டிகளில் விளையாட தகுதிபெறும்.
சம்பியனாகும் அணிக்கு சிட்டி லீக் தலைவர் கிண்ணத்துடன் 2 இலட்சம் ரூபா பணப்பரிசு, தங்கப் பதக்கங்ளும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு கிண்ணத்துடன் 150,000 ரூபா பணப்பரிசு, வெள்ளிப் பதக்கங்கள் என்பனவும் வழங்கப்படும். இறுதிப் போட்டி நாயகன், சிறந்த கோல்காப்பாளர் ஆகியோருக்கு கிண்ணத்துடன் தலா 5,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.