ஜனவரி மாதத்தின் இறுதி நாளில் பிரித்தானியா 43ஆண்டுகளுக்குப் பின்பு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து சட்டபூர்வமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளின் கீழேயே பிரித்தானியாவின் செயற்பாடுகள் காணப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இடைப்பட்ட இக்காலப்பகுதி நிலைமாறு காலமாகக் கருதப்படுகிறது. பிரித்தானியாவின் வெளியேற்றம் அதன் உள்நாட்டு அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம் ஒருபுறம் இருக்க மறுபக்கத்தில் வர்த்தகம், சந்தை இரண்டிலும் கணிசமான அளவு மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கணிப்பீடு காணப்படுகிறது. இக்கட்டுரையும் பிரித்தானியாவின் வெளியேற்றத்தின் அரசியலில் சுழற்சி அமைவு பற்றித் தேட முயலுகிறது.
பிரிட்டன் வெளியேற்றம் 2016ஆம் ஆண்டு ஜூன் 23 பொதுவாக்கெடுப்பின் பயனாக எழுந்த அரசியல் நெருக்கடியாக அமைந்துள்ளது. குறிப்பாக மேற்குலகத்தில் எழுந்த பயங்கரவாதத் தாக்குதல்களும் பிற கண்டங்கள் நோக்கிய மேற்கின் அரசியல் இராணுவ பொருளாதாரக் கொள்கைகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தின. அதன் பிரகாரம் எழுந்த நிதி நெருக்கடியும் அகதிகள் வருகையும் சுதேச சிந்தனையை மேற்கில் ஏற்படுத்தியது. அதன் பிரதிபலனாக பொருளாதார நெருக்கடியும் அரசியல் கொதிநிலையும் பெரும் குழப்பத்தினை மேற்குலகம் முழுவதும் உருவாக்கியது. அதன் பிரதியாகவே பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறத் திட்டமிட்டது. இதன் விளைவாக ஐரோப்பாவில் ஏற்படவுள்ள மாறுதல்கள் அதிகம் மேற்குலகத்தினை நெருக்கடிக்குள் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்று, ஏற்கனவே பிரிட்னுக்கு எதிரான உணர்வுடனேயே ஐரோப்பிய நாடுகள் பயணிக்கின்றன. அதிலும் பிரான்ஸ் இத்தாலி ஜேர்மனி என்பன தனித்துவமான கொள்கையுடன் பிரித்தானியாவை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகைய ஐரோப்பியக் கூட்டினை உருவாக்கும் முயற்சியில் அதிக கரிசனை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்கியது. மாஷல் திட்டத்தினூடாக ஐரோப்பாவை ஆக்கிரமித்த அமெரிக்கா ஐரோப்பாவை ஒன்றிணைத்து சோவியத் யூனியனை எதிர் கொண்டது. அப்போது ஐரோப்பாவின் ஐக்கியமும் ஒத்துழைப்பும் அமெரிக்காவுக்கு அவசியமானதாக காணப்பட்டது. அதனால் பிரிட்டன் ஐரோப்பிய பொது அடையாளத்திற்குள் இணைந்து கொண்டது. அல்லாது விட்டால் கம்யூனிஸம் முழுமையாக விழுங்கிவிடும் என்ற அச்சுறுத்தலை அமெரிக்காவும் முதன்மைப்படுத்திக் கொண்டு ஐரோப்பாவை ஒன்றிணைத்தது. ஆனால் இன்ைறய உலக ஒழுங்கு புதிய வடிவத்தினை எட்டியுள்ளது. அதனை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஐரோப்பாவுக்குள் பிரிட்டனுக்கு ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் மட்டுமல்ல ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் தனித்துவமும் சுதேசியமும் அவசியமாகிறது.
இரண்டு, பொருளாதாரமாக நோக்கினால் ஐரோப்பாவின் தனித்துவம் என்பதைக் கடந்து சந்தையும் வர்த்தகமும் மீளவும் அதிக கட்டுப்பாட்டுக்குள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து விடுபடுவது உலகப் பொருளாதாரத்திலிருந்து நாடுகள் விலகுவதாக உணர்ந்தாலும் யதார்த்தமாக தமது மக்களது நலன்களையும் அதிலும் மேட்டுக்குடிகளின் நலன்களையும் இலாபங்களையும் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி இந்தியா சீனாவினது பொருளாதாரப் பாய்ச்சலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் மேற்குலக நாடுகளுக்குள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவற்றை கூட்டாக எதிர்கொள்ளும்போது ஏற்படும் விளைவுகளைக் காட்டிலும் தனித்துவத்துடன் எதிர்கொள்ளும் போது அதிக மாற்றத்தை மட்டுமல்ல, அந்நாடுகளுடன் கூட்டிணையவும் வாய்ப்பான காலமாக காணப்படுகிறது. பொருளாதார அசைவு வேறு ஒரு திசை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அதில் ஆசியாவும் அதன் பிராந்திய நாடுகளும் மைய நாடுகளாகியுள்ளன.
மூன்று, இராணுவ ரீதியாக நோக்கினாலும் ஐரோப்பாவின் இருப்பு புதிய திசையை நோக்கி நகர்கின்றது. மீளவும் ரஷ்யாவின் வலிமை அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள்வது அல்லது அதன் வழி நகர்வது ஐரோப்பிய நாடுகளுக்கு பொருத்தமான கொள்கையாக அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி மென் அதிகாரக் கனவுடன் சில நாடுகள் பயணிக்க முனைகின்றன. உலகத்தில் ஆயுதமும் இராணுவ பலமும் அதிகரிக்குமளவுக்கு பாரிய யுத்தங்கள் நிகழாத உலகத்தினை அவதானிக்க முடிகிறது. எனவே இராணுவ ரீதியான வளர்ச்சியானது பாதுகாப்பினையும் அதே நேரம் அமைதியையும் சாத்தியமாக்கி வருகிறது..
நான்கு பிரிட்டன் பிரதமர் தெரிவித்த கருத்தானது கவனத்திற்கு உரியதாகும். பிரிவினை அற்ற பிரித்தானியாவை உருவாக்கும் நகர்வில் அரசாங்கம் செயல்படும் எனக் குறிப்பிட்டார். எனவே அயர்லாந்து, ஸ்கொட்லாந்து போன்ற பிரிட்டனின் தனித்துவமான நிலப்பரப்பின் மீது அரசாங்கத்திற்கு அதிக கரிசனை ஏற்பட்டுள்ளதே அவரது கருத்திற்கு அடிப்படைக் காரணமாக தெரிகிறது. குறிப்பாக ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் நிக்கோலா ஸ்ட்ர்ஜன் ஸ்கொட்லாந்தின் சுதந்திர பொதுவாக்கெடுப்பினை நடத்துவதென அறிவித்துள்ளார். இது பிரிவினையை தடுக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துவதாகவே தெரிகிறது.
எனவே பிரிட்டனின் நிலை மட்டுமல்ல, உலகப் பொருளாதார அரசியலில் இராணுவப் போக்கு புதிய திசையை நோக்கியதாக மாறுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தியுள்ளது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்