சிரியாவில் நிகழும் போர் ஒரு தசாப்தத்தை எட்டுகிறது. ஆனால் நிலைமை என்றுமே முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் உக்கிரமடைந்துள்ள போர் மனிதாபிமான நெருக்கடியை என்றுமில்லாதவாறு ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபை உலக நாடுகளுக்கு பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறிப்பாக குழந்தைகளது நிலை மிக மோசமானதாக அமைந்துள்ளதோடு அழிவுகளின் நெருக்கடிக்குள் சிரியாவின் இட்லிப் மாகாண மக்கள் காணப்படுகின்றனர். இக்கட்டுரையும் சிரியாவில் நிகழ்த்தி வரும் போரும் சிரியா துருக்கி மற்றும் ரஷ்ய இராணுவ புவிசார் அரசியல் சூழலையும் புரிந்துகொள்ள முயல்வதாக அமையவுள்ளது.
முதலாவது, சிரியாவின் பிரதான நகரங்களில் ஒன்றான அலெப்போவை அண்டிய கிராமங்கள் அனைத்தையும் கைப்பற்றி அப்பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களை வெளியேற்றிவருகிறது. ரஷ்யாவின் வான் தாக்குதல் உத்தியுடன் அலெப்போ இண்ட்லிப் பிராந்தியம் மற்றும் லடாக் மாகாணம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நிகழ்ந்தாலும் பிரதானமாக இண்ட்லிப் பகுதியை தற்போது இலக்கு வைத்து தாக்குதல் நிகழ்ந்து வருகிறது. அலெப்போ மற்றும் இண்ட்லிப் பகுதிகள் முழுமையாக துருக்கியின் எல்லையோரத்தில் அமைந்திருப்பதனால் கணிசமாக இடம்பெயரும் மக்கள் துருக்கியின் எல்லையை நோக்கி நகர்கின்றனர். அதனாலேயே பாரிய மனித இழப்பும் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே துருக்கி தனது சிரியாவுடனான எல்லையை மூடியுள்ள நிலையில் அப்பகுதியில் ரஷ்யாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் பிரகாரம் அமைந்துள்ள 12 கண்காணிப்பு மையங்களில் தொடர்ந்து துருக்கி செல்வாக்கு செலுத்தி வருகிறது. இதே நேரம் 2012 க்கு பின்பு சிரியாவின் பிரதான நெடுஞ்சாலையை தமது இராணுவம் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறே அலெப்போ பிரதேசத்தை அண்டிய கிராமங்களையும் முழுமையாக கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. அண்மைய மோதலில் 3.6 மில்லியன் மக்கள் துருக்கியின் எல்லையை நோக்கி நகர்ந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையிட்டுளளது.
இரண்டு, துருக்கிய ஜனாதிபதி எர்டோகனின் இறுதி எச்சரிக்கை என்ற வாசகம் சிரியா துருக்கி மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான மோதலை ஏற்படுத்தும் ஒன்றாக மாறிவருகிறது. இது ஒரு புவிசார் அரசியல் மோதலாகவே தெரிகிறது. காரணம் துருக்கியின் எல்லை வழியாக சிரிய அகதிகள் மட்டுமல்ல கிளர்ச்சிக் குழுக்களும் ஐஎஸ் தரப்பும் துருக்கிக்குள் புகுந்துவிடும் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபக்கத்தில் குர்திஸ் படைகளின் ஊடுருவல் சாத்தியமாகிவிடும் என்ற அச்சமும் துருக்கியிடம் காணப்படுகிறது. அத்துடன் அண்மையில் சிரியா குர்திஸ் நெருக்கம் துருக்கிக்கு தனது நிலம் மீதான குர்த்துகளது ஆக்கிரமிப்பினை பற்றிய சந்தேகத்தினை தந்துள்ளது. இதனாலேயே இந்த நெருக்கடியில் துருக்கி சிரியா படைகள் மீதான தாக்குதலைப் பற்றிய எச்சரிக்கையை முதன்மைப்படுத்தியுள்ளது. அது மட்டுமன்றி கடந்த மாதம் துருக்கிய படைகள் மீதான ரஷ்யப் படைகளது தாக்குதலில் 13 படைகள் கொல்லப்பட்டமை துருக்கியை தாக்குதலுக்கு தூண்டியுள்ளது. அதேநேரம் ரஷ்யா இந்நடவடிக்கையிலிருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அல்லது முற்றாக ரஷ்யா வெளியேற வேண்டும் என்றும் துருக்கி கருதுகிறது. இம்மாத இறுதிக்குள் சிரியப்படைகள் இண்ட்லிப் பகுதியிலிருந்து வெளியேறாது விட்டால் சிரியாவின் படைகள் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக துருக்கி அறிவித்துள்ளது. இதனைத் தடுக்கும் விதத்தில் ரஷ்யா போர் நிறுத்த உடன்பாடு தொடர்பில் உரையாடி வருகிறது. அதற்கான முயற்சிகள் தோற்றாலும் அவ்வகை முயற்சிகளை ரஷ்யா தொடர்ந்து முயன்று வருகிறது. ரஷ்யா கட்டுப்படுத்தும் வல்லமையுடனேயே துருக்கியை நேட்டோவுடனும் அமெரிக்காவுடனும் முரண்பட வைத்துள்ளது. ஏற்கனவே அத்தகைய மோதல் போக்கு துருக்கிக்கும் நோட்டோவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது துருக்கியை மீளவும் அணுகி செயல்பட முயலுகின்ற செய்முறையில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக சிரிய அரசின் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா முற்றாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் துருக்கிய ஜனாதிபதியுடன் ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
மூன்று அலெப்போ நகரைக் கைப்பற்றும் முயற்சியில் பாரிய தாக்குதல் ஒன்றினை சிரியப்படைகள் ரஷ்ய விமானப்படை மற்றும் ஈரான் ஆதரவுக் கிளர்ச்சிக்குழு என்பன ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. முதலில் ரஷ்யாவின் விமானப்படையின் பாரிய தாக்குதலை அடுத்து சிரியாவின் தரைப்படையும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவும் அலெப்போ நகரைக் கைப்பற்றி-யுள்ளன. இது இப்பராந்தியத்தில் எழுந்து வரும் கூட்டணியினைக் குறிப்பதாகக் காட்டுகின்றது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள சிரியத் துறைமுகம் அமைந்துள்ள பகுதியை அண்மித்த இண்ட்லிப் மற்றும் அலெப்போ பிராந்தியங்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்கான அதிக வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இப்பகுதி மீதான பிடியையும் தாக்குதலையும் தீவிரப்படுத்தும் பலம் ரஷ்யாவுக்குரியதாக மாறிவருகிறது. ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே சிரியப்படைகளின் தாக்குதல் பலம் காணப்படுகிறது. எனவே இப்பகுதியிலிருந்து ரஷ்யாவை இலகுவில் வெளியேற்றுவது கடினமாகவே அமையும். அது ரஷ்யாவின் மேற்காசிய அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதாக அமைவதுடன் அமெரிக்க இஸ்ரேல் பலத்தை அதிகரிப்பதாக அமையும்.
நான்கு இப்பிராந்திய அரசியல் சூழலானது மேலும் அமெரிக்க நலன்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. ஆனால் மேற்காசிய சக்திகளின் தற்போதைய பாதுகாப்பு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளது பாதுகாப்பு ரஷ்யாவுடனான நட்பிலேயே அதிகம் தங்கியுள்ளது. அரசியல் மற்றும் இராணுவ விடயங்களில் ரஷ்யாவுடனேயே அதிக பாதுகாப்பு உள்ளது என்பதை சிரிய போர் அந்த நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. இதிலிருந்து துருக்கியை விலக்கிக் கொள்ள அமெரிக்கா கடும் பிரயத்தனம் செய்கிறது. ஆனால் அது துருக்கிய நலன்களுக்கு பாதகமாக அமைய வாய்ப்பு அதிகமாக உள்ளது. அெமரிக்காவின் எப்-16 ரக போர் விமானங்களை வாங்குவதில் ஏற்பட்ட முரண்பாடே ரஷ்ய தயாரிப்பான எஸ்- 500 ஏவுகணைகளை கொள்வனவு செய்வதில் அமெரிக்காவுடனும் நேட்டோவுடனும் துருக்கி மோதிக் கொண்டது. தற்போது ரஷ்யாவின் மெளனமும் அமெரிக்காவின் பரபரப்பும் துருக்கி விடயத்தில் காணப்படுகிறது. இதனால் ஏற்படவுள்ள பாதிப்புகளை அடுத்துவரும் வாரங்களில் சிரியாவில் மட்டுமல்ல மேற்காசிய அரசியலில் காணமுடியும். இதில் துருக்கி சிரியாவுக்கு எதிராக போரைத் தொடக்குமாயின் அதனால் ஏற்படும் பாதிப்பு துருக்கியை விட ரஷ்யாவுக்கே அதிகமானதாக அமையும். இது பிராந்திய அரசியலில் குழப்பத்தினை ஏற்படுத்தும் ஆனால் ரஷ்யாவும் அதன் தலைமையும் துருக்கி விடயத்தினை இலகுவாக கையாளும் எனக் கூறிவிட முடியாது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்