தோட்ட மருத்துவத்துறையை அரசு கையேற்பதில் நான் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

தோட்ட மருத்துவத்துறையை அரசு கையேற்பதில் நான் விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும்!

(கடந்த வாரத் தொடர்)  

‘சுகாதார அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்ட நகர ஆஸ்பத்திரி பிரிவுக்கு 300 மில்லியன் நிதி ஒதுக்குவார்கள். அந்தப் பிரிவுக்குச் சென்று நிதி எவ்வாறு செலவு செய்யப்படுகிறது என்பது குறித்த ரிப்போர்ட் கேட்டபோது, இப்போதுதான் முதல் தடவையாக ஒருவர் வந்து அறிக்கை கேட்கிறார் என்றார் அப் பிரிவின் தலைவர். அறிக்கையை வாசித்தபோதுதான் தோட்ட மருத்துவ நிலையங்களுக்கு ஒரு சதமும் செலவு செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது’ 

அரசு நிறுவனங்கள் இயங்கும் முறை, நிர்வாக நடைமுறைகள் அவற்றில் உள்ள சிக்கல்கள் என்பனவற்றை பலரும் பேசுவதில்லை. இவை எல்லாம் இப்படித்தான் என்கின்ற மாதிரி இருந்து விடுவார்கள். கடந்த இரண்டு வாரங்களாக திலகராஜ் எம்.பி. இந்த சிக்கல்கள் பற்றித்தான் பேசினார். பொது மக்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை வாசகர்களும் புரிந்து கொண்டிருப்பார்கள். திலகருக்கும் ஏனைய அரசியல்வாதிகளுக்கும் இடையிலான வித்தியாசம் இதுதான். இவர், இவ்வாறான பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றை சாதாரண மக்களிடம் எடுத்துச் சொல்கிறார். 

திலகராஜூடன் பேசுவதே ஒரு புத்தகம் படிப்பது மாதிரித்தான். விஷயங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார். ஒரு மக்கள் பிரதிநிதி என்றால் எமக்கு அவரைப் பற்றிய ஒரு கணக்கு இருக்கும். அது அப்படி இப்படியாகத்தான் இருக்கும். அதற்கு எமது அனுபவங்கள்தான் காரணம். ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக எமது திலகராஜ்மீதான பார்வையின் பிரகாரம் இவரிடம் நாம் கண்டுபிடிப்பதற்கு பெரிதாக குறையொன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதில் உங்களில் பலருக்கும் உடன்பாடு இருக்கலாம். தமிழில், ‘வேலைன்னு வந்தா வெள்ளைக்காரன்’ என்ற ஒரு வழக்கு உண்டு. மலையகத்துக்கு இத்தகையோர் நிறையபேர் வர வேண்டும். பின்தங்கிய நிலையில் இருக்கும் மலையகத்தை நெட்டித் தள்ளி முன்னணிக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் பல திலகராஜ்மார் எமக்குத் தேவை. 

சுகாதாரத்துறை தொடர்பாக திலகராஜுடன் பேசிய போது அவர் ஒரு விஷயத்தை விவாதப் பொருளாக முன் வைத்தார். சுகாதார அமைச்சிலும், கல்வி அமைச்சு மாதிரியே, மலையக பெருந்தோட்ட மருத்துவ நிலையங்களும் ஒரு தனி யுனிட் உள்ளது. அதன் மூலம் தான் தோட்ட ஆஸ்பத்திரிகளும், மருத்துவ நிலையங்களும் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில் எம்.பி.பிஎஸ் மருத்துவர்கள் கிடையாது. எமது சுகாதார அமைச்சில் உள்ள பிரிவின் பெயர் பெருந்தோட்ட மற்றும் நகர சுகாதார பிரிவு என்பதாகும். இப்படி ஒரு நகர சுகாதார மருந்தகம் ஹட்டன் டன்பாரில் உள்ளது என்று தகவல் தந்தார் திலகராஜா.  

பெருந்தோட்ட ஆஸ்பத்திரிகள், மருத்துவநிலையங்கள் என நாடெங்கும் 450 நிலையங்கள் உள்ளன. இவற்றில் 44 மருத்துவ நிலையங்கள் ஏற்கனவே அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டு விட்டன. அவற்றில் 22 மருத்துவ நிலையங்கள் பல்வேறு காரணங்களினால் இயங்காமல் உள்ளன. மிகுதி 406 நிலையங்களும் அரசினால் சுவீகரிக்கப்பட வேண்டும். இவற்றை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன். அரசு மாறிய பின்னரும் எனது முயற்சிகள் தொடர்கின்றன. 

சகலருக்கும் சமமான மருத்துவ சுகாதார சேவை என்பது அரசாங்கத்தின் கொள்கை. அவ்வாறானால் ஏன் நாட்டின் ஒரு பிரிவு மக்களை மட்டும் வேறுவிதமாக, போதுமான சுகாதார வசதிகளை செய்து தராமல் வைத்திருக்கிறீர்கள்? என்று நான் சுகாதார அமைச்சைக் கேட்டிருக்கிறேன். பாடசாலைக் கல்வியை பாரபட்சமாக வைத்துவிட்டு அருகில் உள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை என்று கூறுவது எவ்வாறு பொருளற்றுப் போகிறதோ அவ்வாறே நாட்டின் ஒரு பிரிவினருக்கு போதிய மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளை போதுமான அளவுக்கு அளிக்காமல் தேசிய மட்ட சுகாதார குறிகாட்டியை எப்படி உங்களால் உருவாக்கக் கூடும்? என்று நான் சுகாதார அமைச்சிடம் கேட்டிருக்கிறேன். இது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் பேசியிருக்கிறேன். எஞ்சியுள்ள தோட்ட ஆஸ்பத்திரிகள், மருத்துவ நிலையங்களை அரசு பெறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன். என் வாதத்தை அவர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு நல்ல விஷயம் தான் எனச் சொல்லி பச்சைக் கொடி காட்டவும் செய்தார்” என்று விவரங்கள் அடுக்குகிறார் நுவரெலிய மாவட்ட எம்.பி.  

“சுகாதார அமைச்சின் பெருந்தோட்டப் பிரிவுக்கு வருடா வருடம் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிய அந்தப் பிரிவுக்கு ஒரு நாள் சென்றேன். அப்பிரிவின் பொறுப்பாளரிடம் பேசியபோது ஒதுக்கப்படும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது என்பதை விசாரித்தேன். அது தொடர்பான கோப்புகளை பார்வையிட்டேன். செலவு செய்திருக்கிறார்கள் தான். ஆனால் எந்தவொரு தோட்ட மருத்துவமனைக்கும் அல்ல. நகர்ப்புற மருத்துவமனைகளுக்கே நிதி செலவு செய்யப்பட்டுள்ளது. எனக்கு அது அதிர்ச்சியாக இருக்கவில்லை. இப்படித்தானே எல்லா இடங்களிலும் நடக்கிறது! நாம் தொடர்ந்தும் இந்த நிலையிலேயே நீடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதால்தான் அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். தோட்ட மருத்துவமனைகளுக்கு ஏன் செலவு செய்யவில்லை? என்று அந்தப் பொறுப்பாளரிடம் கேட்டபோது, அப்படி அம் மருத்துவ நிலையங்களுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதையே அவர் நினைத்தும் பார்த்திருக்கவில்லை என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இங்கே வந்து தோட்ட மருத்துவமனைகள் பற்றி இதுவரை யாருமே விசாரிக்கவில்லை. ரிப்போர்ட் கேட்டு அதை வாசித்தும் பார்த்த முதல் நபர் நீங்கள்தான் என்றார் அவர்! இதில் இருந்து தோட்டப்பகுதி மீதான கவனிப்பு எப்படி இருக்கிறது என்பது புரிகிறது அல்லவா?” என்ற அர்த்த புஷ்டியான கேள்வியுடன் நிறுத்திவிட்டு எம்மைப் பார்த்தார் திலகராஜ். 

“தோட்ட மருத்துவமனைகள், டிஸ்பென்சரிகள் அனைத்தும் அரசின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்பது கடந்த அரசின் அமைச்சரவையின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த அரசு அதைத் தொடர்ந்து முன்னெடுக்கும் என நம்புகிறோன். இதை செயல் வடிவத்துக்கு கொண்டு வருவதற்கு இ.தொ.க தலைமை முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என நம்புகிறேன். எமது திட்டப்படி பத்து தோட்ட ஆஸ்பத்திரிகளுக்கு ஒரு தகுதிவாய்ந்த எம்.பி.பி. எஸ் மருத்துவர் கடமையில் இருப்பார். படிப்படியாக மருத்துவமனைகள் அபிவிருத்தி செய்யப்படும். இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் சிக்கல்கள் உள்ளன. முதலாவது, காணிப் பிரச்சினை. மருத்துவமனை விஸ்தரிப்புக்கு தோட்ட நிர்வாகங்கள் காணி வழங்க வேண்டும் மருத்துவர்கள், தாதிமார் தங்குவதற்கான விடுதிகள் அமைக்கப்பட வேண்டும். மாகாண சபையின் ஒப்புதல்களும் ஒத்துழைப்பும் அவசியம். ஆஸ்பத்திரி பெரிதாக இருக்குமானால் சுகாதார அமைச்சு அத்தகைய மருத்துவமனைகளை தன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டிய அவசியம் உள்ளது. உதாரணமாக கிளங்கன் ஆஸ்பத்திரி. அது ஆதார வைத்தியசாலை தரம் கொண்ட ஒரு பெரிய ஆஸ்பத்திரி. தோட்ட மருத்துவமனையின் கீழ் இது வராது. ஆனால் மத்திய மாகாண சுகாதார அமைச்சின் பொறுப்பின் கீழ் விடப்பட்டது. மாகாண சபையோ, ஆஸ்பத்திரியின் மின்சாரசெலவையும் கூட எம்மால் ஈடு செய்ய முடியாது என்கிறது. கிளங்கன் ஆஸ்பத்திரி, மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் வரவேண்டிய மருத்துவமனை எப்படியோ, நான் விட்ட இடத்தில் இருந்து மற்றவர்கள் இதைத் தொடர்ந்தால் சரி!” 

என்று சுகாதாரதுறை பற்றி எம்மிடம் கூறினார் திலகராஜ்   

எமது உரையாடல் அப்படியே கட்சி அரசியல் பக்கமாகத் திரும்பியது. ஐ.தே.கவில் நீடிக்கும் குழப்பம் பற்றி அவர் பேசினார். 

ஒரு கட்சிக்கு சட்டத்தின் ஆட்சியும் ஊடக தொடர்புகளும் மிகவும் அவசியம். ஜே. ஆர். ஜயவர்தன தன் கட்டுப்பாட்டுக்குள் அவற்றை வைத்திருந்தார். அவர் காலத்தில் கட்சிக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டபோது உறுதியான நடவடிக்கைகள் எடுத்தார். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் தான் பெண்ணை ஆணாக்கும் மற்றும் ஆணை பெண்ணாக்கும் சக்தியைத் தவிர ஏனைய அனைத்து அதிகாரங்களும் கொண்டவன் என அவர் சொல்ல நேர்ந்தது. 

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இப்போது வயதாகிவிட்டது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. தாராளவாத கொள்கை உடையவர். அதி புத்திசாலி எனலாம். விஷயங்களை சட்டென புரிந்து கொள்வார். அவரிடம் ஒரு விஷயத்தை எடுத்துச் சென்றால், விஷயத்தை விளக்க ஆரம்பிக்கும் போதே பிரச்சினை என்ன என்பது அவருக்கு புரிந்துவிடும். அதற்கான பதிலையும் சொல்லி விடுவார். ஆனால் அது தீர்க்கமானதாகவும் உங்களை  திருப்திப்படுத்துவதாகவும் இருக்காது. சமாளித்து உங்களை அனுப்பி வைத்துவிடுவார். ஆனால் அவர் இனவாத சிந்தனை கொண்டவர் அல்ல. வளைந்து கொடுக்கக் கூடியவர். அவரது பலவினம் கட்சியை உறுதியாக, ஜே.ஆரைப்போல பேணாமல் விட்டது தான். உதாரணத்துக்கு ரஞ்சன் ராமநாயக்க விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்.

விஜயகலா மகேஸ்வரன் விடயத்தில் அவர் நடந்து கொண்டது. முற்றிலும் தவறு ஆனால் அவர் மீது ரணில் நடவடிக்கை எடுக்கத் தவறியதுதான் இன்றைக்கு இவ்வளவு பெரிய பிரச்சினையாகி இருக்கிறது. இதனால் தான் சொல்கிறேன், கட்சி ஒன்றுக்கு ஊடக மற்றும் சட்ட நிர்வாகம் மிகவும் அவசியம் என்று. ஐ.தே.கவில் ஆளாளுக்கு பேசத் தொடங்கியதும் அதை ரணில் பார்த்துக் கொண்டிருந்ததும் தவறு.

ஜே.ஆர். ஒரு தடவை சொன்னார், அரசியல் என்பது ஒரு விளையாட்டு ஆனால் சட்ட திட்டங்களுக்கு அமைய விளையாடத் தெரிய வேண்டும் .

உரையாடியோர்: அருள் சத்தியநாதன், பி.வீரசிங்கம்

Comments