பிராந்திய அரசியலில் நெருங்கிவரும் இந்தியாவும் அமெரிக்காவும் | தினகரன் வாரமஞ்சரி

பிராந்திய அரசியலில் நெருங்கிவரும் இந்தியாவும் அமெரிக்காவும்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப இன் இந்திய விஜயம் இந்திய- அமெரிக்க உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. இது பிராந்திய சர்வதேச மட்டத்தில் புதிய ஆரம்பத்தை தெரியப்படுத்தியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டது போல் கடந்த ஆறு மாத கலப்பகுதியில் ஐந்து தடவை அமெரிக்க அதிபரை சந்தித்ததான செய்தி சாதாரணமானது கிடையாது. அவ்வளவுக்கு இரு தரப்புக்குமான நெருக்கம் வலுவடைந்து செல்கிறது. மறுபக்கத்தில் சீனாவில் ஏற்பட்டுள்ள கெவிட் -19 இன் தாக்கம் அதன் அரசியலை மட்டுமல்ல, பொருளாதார இருப்பையும் பாதிக்க ஆரம்பித்துள்ளது. இதனை நன்கு திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ள இந்தியாவும் -அமெரிக்காவும் கூட்டாக முனைகின்றதை உணரமுடிகிறது. இக்கட்டுரையும் இத்தகைய இரு தரப்பின் நகர்வை அடையாளப்படுத்துவதுடன் அதன் பிராந்திய சர்வதேச அரசியல் போக்கினை தேடுவதாக அமையவுள்ளது.  

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன் இந்திய விஜயத்தின் போது இரு நாட்டு தலைவர்களுக்குமிடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. அதில் வர்த்தக உடன்படிக்கை மிக முக்கியமானதெனவும் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 5- ஜி தொழில்நுட்பம் தொடர்பிலும் தாம் இருவரும் உரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார். இன்றைய உலகப் பொருளாதாரத்தில் பிரதானமானது வர்த்தகமாகும். பெருமளவுக்கு அமெரிக்காவின்  தற்போதைய நெருக்கடியும் வர்த்தகத்தைப் பாதிக்கின்றது. சீனாவுடனும் ஐரோப்பாவுடனும் மேற்காசிய நாடுகளுடனும் அமெரிக்கா மோதல் போக்கினை கையாண்டு வருகிறது. அதிலும் அதிக இலாப நோக்குடன் செயல்படும் ட்ரம்ப் இன் வர்த்தகக் கொள்கைகளால் அமெரிக்கா வர்த்தக ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் உலகம் முழுவதும் அதிக முரண்பாட்டை ஏற்படுத்தி வரும் ட்ரம்ப் இந்திய சந்தைகளை நோக்கி நகர முனைகிறதை இதன் மூலம் உணர்த்தியுள்ளார்.

இந்திய எண்ணெய் நிறுவனங்களுடனும் சுகாதாரத்துறையினருடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள ட்ரம்ப் மிக முக்கியமாக பாதுகாப்பு சார்ந்து 21 ஆயிரம் கோடி ரூபாவுக்கு ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதிலும் அமெரிக்காவின் தயாரிப்பான அப்பாச்  வகை உலங்குவானூர்திகள் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை பிரதானமானதாகும். அத்துடன் நீர்மூழ்கி எதிர்ப்பு உலங்குவானூர்திக்கான உடன்பாட்டிலும் இரு தலைவர்களும் ஒப்பமிட்டதுடன் ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்திற்கு 1.9 பில்லியன் அ.டொ. ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தோ- பசுபிக் கடல்சார் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் மீளவும் இரு தரப்பும் ஏனைய ஜப்பான் அவு ஸ்திரேலியாவுடன் பேசுவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுடன் நெருக்கமான பாதுகாப்பு உடன்படிக்கைக்கு அமெரிக்கா எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடுவதனை உணரமுடிகிறது. அது மட்டுமன்றி இரு நாட்டுத்தலைவர்களும் கொண்டிருந்த நெருக்கம் இருவரும் வெளியிட்ட அறிக்கை வரலாற்றில் மிக முக்கிய விடயமாகவே தென்படுகிறது.  

இது பிராந்திய மட்டத்திலும் அதிகமான ஒத்துழைப்பினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை இந்தியாவுக்குள் ஏற்படுத்தியுள்ளது. இரு நாடும் பிராந்திய ரீதியில் ஒன்றுடன் ஒன்று கலந்து பேசியே தீர்மானம் எடுக்கும் நிலையை இது உணர்த்துகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரதான நோக்கம் தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்ப்பதாகவே அமைந்திருந்தது. நவீன ஆயுதங்களை வாங்குவதற்கான காரணம் தீவிரவாதம். அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இந்தியா கைகோர்த்துள்ளது என்பதுடன் அமெரிக்கா இந்தியா நெருக்கத்தை பாகிஸ்தானுக்கு எதிரானதாக காட்டிக் கொள்வதில் அதிக முனைப்புக் கொண்டிருந்தார் மோடி. 

இதன் பிரதிபலிப்பு காஷ்மீர் விடயத்தில் பாகிஸ்தான்- அமெரிக்க நெருக்கத்திற்கு எதிராக இந்தியா எடுத்துக் கொண்ட நடவடிக்கையாகவே தென்படுகிறது. அதே நேரம் இந்தியா இப்பிராந்தியத்தில் மேற்கொள்ளும் அனைத்து நகர்வுக்கும் அமெரிக்கா பலமான ஒத்துழைப்பு வழங்கும் என்பதையும் மோடி  வெளிப்படுத்தியிருந்தார்.

பிராந்திய மட்டத்திலும் இரு நாடுகளும் சேர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையாகவே அமெரிக்க -இந்தியத் தலைவர்களது வெளிப்பாடுகள் அமைந்திருந்தன. நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அதனையே உணர்த்துகிறது. இருவரும் ஒரு புதிய வரலாற்றை ஏற்படுத்த முனைவதனை காண முடிந்தது. இதன் மூலம் சீனாவுக்கு மட்டுமல்ல அயல் நாடுகளுக்கும் ஒரு செய்தி மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இந்தியாவின் விருப்புக்குள்ளும் எல்லைக்குள்ளும் பிராந்திய நாடுகள் பயணிக்க வேண்டும் என்பதாகவே தெரிகிறது. இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பில் கரிசனை கொண்டுள்ள அமெரிக்காவையும் உலகளாவிய பாதுகாப்பிலும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்திய அமெரிக்க ஒத்துழைப்பினையும் காணமுடிகிறது. அவ்வாறே பூகோள ரீதியில் தெளிவான மூலோபாயத்தினை வகுப்பதில் இரு தலைவர்களும் முனைப்புடன் செயல்பட்டனர்.  

எனவே இந்திய அமெரிக்க நெருக்கம் பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கு அதிக இலாபத்தை ஏற்படுத்தியது போல் இந்தியாவின் பாதுகாப்பு பொறுத்து அதிக மாற்றங்களையும் உத்தரவாதங்களையும் அடைந்துள்ளது. குறிப்பாக நவீன ஆயுதங்களை அமெரிக்காவிடமிருந்து பெறுவதில் இந்தியா வெற்றிகரமான பங்களிப்பை பெற்றுள்ளது. ஆனால் இதனால் ரஷ்யாவுடனான ஆயுத கொள்வனவை பாதிக்கும் என்பதுடன் புதிய ஆயுத தளபாடத்திற்கான தொழிநுட்பத்தினை பெறும் முனைப்பில் இந்தியாவின் நிலை மாறியுள்ளது. இது பிராந்திய அரசியல் தளத்தையும் சர்வதேச அரசியல் சமநிலையும் மாற்றத்திற்கு உள்ளாக்கும் என்பதில் குழப்பமடையத் தேவையில்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இராணுவ ரீதியில் புதிய வரலாற்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்  

Comments