வெற்று வேட்டும் வீரப்பேச்சும்! | தினகரன் வாரமஞ்சரி

வெற்று வேட்டும் வீரப்பேச்சும்!

இப்போதெல்லாம் முழுநேர ஊடகவியலாளர்களுக்கும் செய்தியாளர்கள், நிருபர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இருந்தாலும் இருப்பதாகச் சொன்னால் விரும்பவும்மாட்டார்கள். பிராந்தியத்தின் நடப்புகளைத் தீர்மானிப்பவர்கள் பெரும்பாலும் நிருபர்கள்தான். அங்குள்ள அரசியல்வாதிகள் நிருபர்களின் அனுமதியுடன்தான் வாயே திறக்க வேண்டும். அப்படித்திறந்தாலும், அது ஊடகத்தில் அச்சேறாது: வெளிவராது! இதுதான் வடக்கிலும் கிழக்கிலும் நடந்துகொண்டிருக்கின்றது என்கிறார் நண்பர். 

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டால், விசயம் இருக்கிறது என்கிறார். 

எங்காவது ஓர் ஊடகவியலாளனுக்கு அல்லது நிருபருக்கு ஏதாவது பிரச்சினையென்றால், அவர்கள் ஆடுகிற ஆட்டம் இருக்கிறதே! அப்பாடா பூமி தாங்காது. அண்மையில் ஹற்றன் பகுதியில் ஓர் அரசியல்வாதியின் புதல்வர் ஒரு செய்தியாளரை அச்சுறுத்திவிட்டார் என்று வீரப்பேச்சுகள், எதிர்ப்புக்குரல்கள் இன்னமும் ஊடகத்திலும் சமூக வலைத்தளத்திலும் முழங்கிக்கொண்டிருக்கின்றன. ஊடகத்துறையினருக்கிடையில்கூட இன்னமும் பிரதேசத் தொற்றுநோய் புற்றுநோய்போல் பீடித்துக்கொண்டிருக்கின்றது. தாங்களாகவே கத்தித் தாங்களாகவே அடங்கிப்போகும் நிலைமை நீடித்துக்கொண்டிருக்கின்றது. 

இதில், விசேடம் என்னவென்றால், யாருக்காவது ஓர் அரசியல் சார்ந்த ஒருவரால் ஒரு தீங்கு நேர்ந்தால் மட்டுந்தான் முட்டையிட்ட கோழியைப்போல் கத்துகிறார்கள். ஊடகவியலாளர்களின் பொறுப்பு என்பது இப்போதெல்லாம் அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகச் செய்படுவது என்றாகிவிட்டது. 

இல்லையென்றால், ஒரு மாத காலத்திற்கும் மேலாகக் காணாமற்போயுள்ள ஒரு செய்தியாளரைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருப்பார்களா? கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனியார், அரச ஊடகங்களுக்கு நிருபராக இருந்த இவரை யாருக்கும் தெரியாமல் இருக்காது. அவர்தான் கொட்டகலையைச் சேர்ந்த அருணாசலம் பொன்னம்பலம். கடந்த ஜனவரி 22ஆம் திகதி கொட்டகலையிலிருந்து பஸ்ஸில் கொழும்பு வந்தவர், அன்றிலிருந்து காணாமற்போயுள்ளார். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது. அவர் காணாமல் போனமைபற்றிச் சமூக வலைத்தளத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. பலர் லைக்குகள் போட்டதுடன் சரி. இப்போது அவரைத் தேடும் பணியைப் பொன்னம்பலத்தின் உறவினர்கள் மாத்திரமே மேற்கொண்டிருக்கிறார்கள். காணாமல்போன இந்த ஊடகவியலாளர் பற்றி எந்தவொரு செய்தியாளனும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இவர் காணாமல்போனது ஹற்றன் பகுதியில் என்பதாலோ என்னவோ, யாரும் அக்கறைகொள்ளவில்லை என்கிறார் நண்பர். இவர் காணாமல்போனாரா, காணாமல் ஆக்கப்பட்டாரா? என்பதும் தெரியவில்லை.

பொன்னம்பலத்தைத் தேடி அவரின் உறவினர்கள் ஒவ்வொரு வைத்தியசாலையின் அமரர் அறைகளிலெல்லாம் தேடிப்பார்த்ததாகச் சொல்கிறார்கள். எங்குமே அவரைக் காணவில்லை. கொட்டகலைப் பகுதியில் ஏற்கனவே ஒருவர் கடந்த ஏழு மாதகாலமாகக் காணாமற்போயுள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களுக்கு நெருக்கமானவர்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள இப்போதெல்லாம் செயலிகள் வந்துவிட்டதாகவும் ஒரு குறிப்பிட்ட இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும் சொல்கிறார்கள். ஆனால், பொன்னம்பலத்திடம் உள்ள கைபேசியைக் கண்டுபிடிக்க நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார் அவரின் மருமகன். பொன்னம்பலம் கடைசியாக வைத்திருந்த அலைபேசி எண் 077 571 2708. ஊடகவியலாளர்கள் முடிந்தால் தங்களின் திறமையைக் காட்டட்டும்! 

சிலவேளை, இவர் இலங்கையின் வேறு ஏதாவது ஒரு பகுதியில் வாழ்ந்து காணாமல்போயிருந்தால், இந்நேரம் அந்தப் பகுதியின் ஊடகவியலாளர்கள் அவரைத் தேடிக்கண்டுபிடித்திருப்பார்கள்! குறைந்தபட்சம் கண்டுபிடி, கண்டுபிடி! என்று ஆர்ப்பாட்டத்தையாவது நடத்தியிருப்பார்கள். இதன்மூலம் ஊடகவியலாளர் காணாமல்போன விடயம் நாட்டு மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கும்.

சும்மா தொண்டமானையும் திகாம்பரத்தையும் விமர்சித்துக்கொண்டிருப்பதும் முச்சக்கர வண்டி பள்ளத்தில் வீழ்வதைப் பார்த்துக்கொண்டிருப்பது மட்டுந்தான் செய்தியாளரின் பணியென்று நினைத்தால், உருப்பட முடியாது!

Comments