இஸ்லாமிய மேற்குலக முரண்பாட்டுக்கான தொடர்ச்சியின் பிரதிபலிப்புக்கள் சமகாலத்திலும் நிகழ்ந்து கொண்டிருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், துருக்கி, சிரியா மற்றும் ஈரானிலும் மேற்கு எதிர் இஸ்லாம் என்ற உணர்வு வலுவான அரசியல் விம்பத்தினை ஏற்படுத்தி வருகிறது. ஏறக்குறைய புதிய உலக ஒழுங்கு உருவான பின்பு எழுந்த போர்களும் அரசியலும், இஸ்லாமுக்கு எதிரானதாகவே அடையாளம் காணப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மேற்குலகத்திற்கு இஸ்லாத்துக்கான முரண்பாடாக அமைந்தாலும் அடிப்படையில் இஸ்ரேலிய நலன்களை பாதுகாப்பதாகவே தெரிகிறது. ஒரு வகையில் யூதர்கள் உலகத்தினை கையாளும் சக்திகளாக தம்மை மாற்றிக் கொள்ளும் உத்தியை மேற்குலகம் ஊடாக நிறைவேற்றுகின்றனர். இக்கட்டுரையும் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுவரும் அண்மைய மாற்றங்கள் வெளிப்படுத்தும் அரசியலை தேடுவதாக அமைந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பிரதான மாற்றம் அமெரிக்க -தலிபான் போர்நிறுத்த உடன்படிக்கையாகும். இது முடிந்த வாரத்தின் முதல் நாள் டோஹா நகரில் இந்தியா, பாகிஸ்தான் கட்டார், உஸ்பகிஸ்தான், தஜகஸ்தான் துருக்கி ஆகிய நாடுகள் முன்னிலையில் இரு நாட்டுப்பிரதிநிதிகளாலும் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் படிப்படியாக வெளியேறுதல் அவ்வாறு வெளியேறும் காலத்தை 14மாதங்களாக வரையறுத்தல், அக்காலப்பகுதியில் எந்தவித தொந்தரவும் அமெரிக்கப்படைகளுக்கு தலிபான் ஏற்படுத்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறே ஆப்கான் உள்நாட்டு அமைதிப் பேச்சுக்கள் மார்ச் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளன. நிரந்தர மற்றும் உறுதியான போர் நிறுத்தம் ஏற்படுவதை இவ்வுடன்படிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இரு தரப்புக்குமான போர் நிறுத்த உடன்படிக்கையானது பிரதானமாக அன்னிய நாட்டுப்படைகள் மீதான தாக்குதலை தவிர்ப்பதாகவும், தலீபான் தரப்பு தெரியப்படுத்தியதுடன் ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். அது மட்டுமன்றி அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ தலிபான்கள் தமது கட்டுப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இங்கு ஏன் அமெரிக்கா தலிபான்களுடன் போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்தியது என்பது முதன்மையானதாகும்.
ஒன்று, மாறிவரும் பிராந்திய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு இத்தகைய நகர்வை அமெரிக்கா முன்னெடுத்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
அதாவது மேற்காசியா முழுவதும் ரஷ்யாவின் ஆதிக்கமும் செல்வாக்கும் பரவலடைந்து வருகிறது. அப்பிராந்தியத்தில் ஈரானின் அதிகாரம் சீனா ரஷ்யாவுடன் இணைந்து நகரத் தொடங்கியுள்ளது.
இரண்டு, இராணுவ ரீதியில் தலிபான்கள் வலிமை அதிகரித்திருப்பதுடன் அதிக தாக்குதலால் அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளன. இதன் அதிகரிப்பால் அதிகமான பாதிப்பு அமெரிக்காவுக்கே அன்றி ஆப்கானிஸ்தானுக்கல்ல. ஆப்கான் நிலம் கொரில்லா போர்முறைக்கு மிகப்பலமானதாக அமைந்திருப்பதனால் அதில் இலருவில் வெற்றி கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்கா நன்கு விளங்கியுள்ளது.
மூன்றாவது, அண்மையில் ஈரானின் தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் பிற்பாடு அதிக அச்சுறுத்தல் இப்பிராந்தியத்திலுள்ள, அமெரிக்க படைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அத்தகைய நெருக்கடியைத் தவிர்க்கும் முகமாக படைவிலகலை அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
நான்கு, ஈராக் மீதான ஈரானின் தாக்குதலுக்கு பின்பு அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்த நேட்டோ தரப்பு படைகளும் அந்நாடுகளும் அமெரிகாவின் நகர்வில் அதிருப்தி கொண்டுள்ளன. அதனால் ஏற்பட்டுள்ள முறுகலானது படை விலகலை தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. குறிப்பாக ஆப்கானில் மட்டும் 17ஆயிரம் நேட்டோ படைகள் நிலை கொண்டுள்ளன. 14ஆயிரம் அமெரிக்க படைகளுடன் இவை சேர்ந்து செயல்படுகின்றன.
ஐந்தாவது, 2018முதல் அமெரிக்க தலிபான்களுடன் பேச்சுவார்த்தை செய்து வருவதுடன் ஜனாதிபதி ட்ரம்ப் ஆட்சிக்கு வரும்போதே அன்னிய நாடுகளிலுள்ள அமெரிக்கப்படைகளை விலக்கிக் கொள்ளப் போவதாக ெதரியப்படுத்தியிருந்தார். அதன் பிரதிபலிப்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ட்ரம்ப் போட்டியிடுவதனால் அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக ஆப்கான் நகர்வை முன்வைக்க திட்டமிட வாய்ப்புள்ளது.
ஆறு, கேந்திர ரீதியில் ஆப்கானிஸ்தான் கைவிடுவதனால் எந்த பாதிப்பும் அமெரிக்காவுக்கு ஏற்படாது என்ற நிலை ஏற்பட்டதன் பின்பே பென்ரகன் இத்தகைய முடிவுக்கு திட்டமிட்டிருக்கும். அதனடிப்படையில் இத்தகைய நகர்வு சாத்தியமாகியிருக்க வாய்ப்புள்ளது.
ஏழு, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான நெருக்கம் ஆப்கான் படை விலகலை தீர்மானித்த காரணியாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கருத இடமுண்டு.
எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படை விலகும் திட்டமானது அமெரிக்க நலன்களுடன் அதிக தொடர்புடையதாக அமைந்துள்ளது எனக்கூறலாம். வெளிப்படையாக அமெரிக்கா விலகுவதாக கூறினாலும் உண்மையிலேயே வெளியேறும் காலத்திற்குள் ஏற்படும் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை அமெரிக்கா மேற்கொள்ளும்.
தலிபான்கள் அமெரிக்காவுடன் உடன்பட்டாலும் ஆப்கான் அரசுடன் மோதல் போக்கினையே கடைப்பிடிக்க விரும்புகிறது. அவ்வாறே ஆப்கான் அரசாங்கமும் தொடர்ச்சியாக தலிபான்களுடன் மோதல் போக்கினையே பின்பற்றி வருகின்றன. எனவே இவ்வாறு எத்தனை உடன்படிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்ட போதும் சரிவர அதில் ஈடுபட்டதா என்பது கேள்விக்குரியதேயாகும்.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்