![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/15/colunnamed134322215_8243065_14032020_VKK_CMY.jpg?itok=jp5Tmm1d)
நுவரெலியாவை இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி கொள்வது உறுதியாகும். இங்குள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் விட்டத்தவறை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவரது முழுமையான நேர்காணல் வருமாறு,
கேள்வி : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆரம்பகட்டமாக இடம்பெற்றுவரும் பணிகள் தொடர்பில் விளக்கமளிக்க முடியுமா?
பதில் : வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளோம். அந்த பணிகளை நிறைவுசெய்துள்ளோம். ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளோம். என்றாலும், சிறிய சிறிய கட்சிகளுக்கான வேட்புமனு தொடர்பில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றுக்கும் விரைவில் தீர்வுகாணப்படும். நாம் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் என்பதுடன், அனைத்து மாவட்டங்களிலும் பணிகளையும் ஆரம்பித்துள்ளோம்.
கேள்வி : ஆசனப் பங்கீடுகள் இறுதிப்படுத்தப்பட்டுள்ளனவா? உங்களது கூட்டணியின் பிரதான தரப்பாகவுள்ள சு.கவுக்கு எத்தனை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன?
பதில் : 99 சதவீதமான ஆசன ஒதுக்கீடு முடிவடைந்துள்ளது. ஒருசில பிரச்சினைகள் உள்ளன. சு.கவுக்கு இத்தனை ஆசனங்களைத்தான் ஒதுக்கியுள்ளோமென கூற முடியாது. ஆனால், அனைத்து மாவட்டங்களிலும் சு.கவுக்கு குறைந்தது 2 ஆசனங்களை ஒதுக்கியுள்ளோம். இன்னமும் அந்தப்பணி தொடர்கிறது. நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் இரண்டு ஆசனங்கள் வீதம் சு.கவுக்கு ஒதுக்கியுள்ளோம். இவ்வாறுதான் வடக்கு, கிழக்குக்கு வெளியில் நாம் போட்டியிடும் அனைத்து மாவட்டங்களிலும் ஆசனங்களை ஒதுக்கியுள்ளோம். ஒட்டுமொத்தமாக 35, 40 வரையான ஆசனங்கள் சு.கவுக்கு கிடைக்குமென எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு அதிகமாக ஆட்சி செய்துள்ளது. சமகால அரசியல் நிலவரங்களின் பிரகாரம் எவ்வாறான தேர்தல் பெறுபேற்றை எதிர்பார்க்கின்றீர்கள்?
பதில் : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட பெறுபேறுகள் இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நல்லதல்ல. இதனை இரண்டு சமூகங்களும் உணர்ந்திருக்கும். 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன அரசியலமைப்பை உருவாக்கும் போது கூறியதாவது, சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி இந்நாட்டில் எவராலும் ஜனாதிபதியாக முடியாது என்பதாகும். ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிறுபான்மை மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது சிறுபான்மையினரின் ஆதரவு எமக்கு கிடைத்திருக்கவில்லை. இவ்வாறுதான் ஜனாதிபதித் தேர்தலிலும் இடம்பெற்றது. ஆனால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிவிசேட வெற்றியை பதிவுசெய்தார். இது சிங்களவர்களின் வெற்றியாகும். இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், ஒருமைப்பாடு, சகோதாரத்துவம் மற்றும் சமத்துவத்திற்கு இது மோசமானதாகும்.
இதனை தமிழ் மக்கள் உணர்ந்துக்கொண்டுள்ளனர். ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக்கு முன்னர் இந்நாட்டின் முஸ்லிம்கள் முஸ்லிம் கட்சிகளை உருவாக்கவில்லை. காமினி திஸாநாயக்கவும், ஜே.ஆர்.ஜெயவர்தனவும் அந்த இடத்திற்கு முஸ்லிம்களை தள்ளினர். 13ஆவது திருத்தச்சட்டத்தின் பின்னர்தான் இது நடைபெற்றது. மக்கள் ஆணையின் மூலம் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டுமென்று அன்று உரத்த குரல் கொடுத்தது சு.கதான்.
கேள்வி : கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 90 சதவீதமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் சஜித் பிரேமதாசவுக்குதான் கிடைக்கப்பெற்றது. இம்முறை பெறுபேறுகள் எவ்வாறு அமையும்? தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றிக்கொள்ள முன்னெடுக்கப்பட்டுள்ள பணிகள் எவை ?
பதில் : தமிழ் ஈழத்தை அமைப்பதல்ல தேவை. ஈழத்தை கோரும் எவருக்கும் ஈழம் அவசியமற்றதாகும். தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றிக்கொள்வதற்காக ஈழத்தை விற்பனை செய்கின்றனர். ஈழத்துக்கு ஆதரவளிக்கும் இளைஞர்கள் பாவம். பிரபாகரனின் குரலைதான் அங்குள்ள இளைஞர்கள் கேட்டனர். பிரபாகரனின் தொலைக்காட்சி மற்றும் வானொலியைத்தான் அவர்கள் பார்த்ததும் கேட்டதும். அந்த இளைஞர்களுக்கு இன்னமும் புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை. அதற்கு தமிழ்த் தலைவர்களும் இடமளிக்க மறுக்கின்றனர். சீ.வி.விக்னேஸ்வரன் மாற்றங்களை ஏற்படுத்துவாரென எதிர்பார்த்தோம்.
ஆனால், இன்று அவர் பிரபாகரனின் தந்தையாக மாறியுள்ளார். அவர்தான் இன்று இளைஞர்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறார்.
இனங்களுக்கு இடையிலான சமத்துவம், நல்லிணக்கம் தொடர்பில் பெரும்பாலான தமிழ் மக்கள் அறிந்துள்ளனர். விக்னேஸ்வரன் போன்றோர் அவ்வாறே இருப்பது நல்லது. எம்முடன் புதிய சிந்தனையுடைய, அறிவுடைய சமூகம் எம்முடன் இணையலாம்.
கேள்வி : வடக்கு, கிழக்கில் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
பதில் : வடக்கு, கிழக்கில் மொட்டு சின்னத்தில் போட்டியிட நாம் எதிர்பார்க்கவில்லை. அங்குள்ள எமது கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்பளித்துள்ளோம். அவர்களது சின்னத்திலேயே போட்டியிட அனுமதியளித்துள்ளோம். கருணா, பிள்ளையான், வரதராஜப் பெருமாள் உட்பட பலர் எமது கூட்டணியில் உள்ளனர்.
கேள்வி : ஐ.தே.கவுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெற்றிகொள்வது இலகுவாகியுள்ளதா?
பதில் : ஐ.தே.கவுக்குள் நெருக்கடி இல்லாத சந்தர்ப்பத்திலேயே நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெற்றிக்கொள்ள எதிர்பார்த்திருந்தோம். நெருக்கடி என்பது மேலதிக சந்தர்ப்பமாகும். ஜனாதிபதித் தேர்தலில் நாம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் பிரகாரம் 128 பாராளுமன்ற உறுப்பினர்களை பெறுவோம். ஜே.வி.பிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும். சஜித், ரணில், திகாம்பரம், மனோகணேசன், ஹக்கீம், ரிசாட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என அனைவருக்கும் 95 ஆசனங்கள் கிடைக்கும். சிறிய கட்சிகளை ஒதுக்கிப் பார்த்தால் 62 ஆசனங்கள் வரைதான் ஐ.தே.கவுக்கு கிடைக்கும்.
வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் ஒரு தேர்தலில் தோல்வியுற்ற கட்சி மறு தேர்தலில் அதனைவிடவும் பாரிய தோல்வியை சந்திக்கும். வெற்றியடைந்த கட்சி அதனைவிடவும் பாரிய வெற்றியை பெறும். அந்த சித்தாந்தம் இம்முறையும் பொருந்தும். ஐ.தே.கவுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியுடன் ஒப்பிடுகையில் இம்முறை 50இற்கும் குறைவான ஆசனங்களையே அவர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.
நுவரெலியா, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை நாம் வெற்றிக்கொண்டால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
கேள்வி: நுவரெலியாவில் தொடர்ந்து சு.க அல்லது பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தோல்வியையே தழுவியுள்ன. நீங்களும் நுவரெலியாவில் போட்டியிட உள்ளீர்கள். ஆகவே, அங்கு களச் சூழல் மற்றும் சவால்கள் எவ்வாறுள்ளது?
பதில்: அங்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. 1994 – 2000ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நுவரெலியாவில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. அதற்குத் தீர்வை அரசாங்கத்திடம் கோரிய போதும் அது நடைபெறவில்லை. ஆனால், 1300 சமுர்த்தி நியமனங்களை வழங்கினேன். அவர்கள் அனைவரும் பட்டம் பெற்று இன்று நல்ல நிலையில் உள்ளனர். தோட்டப்புறங்களுக்கும் 200 வரையான ஆசிரியர் நியமனங்களை வழங்கினேன். கிராம சேவகர் பற்றாக்குறையும் இங்கு நிலவியது. இதற்கும் தீர்வை பெற்றுக்கொடுத்தேன். இவர்கள் அனைவரும் தற்போது என்னுடன் இணைந்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தில் நுவரெலியா மக்களுக்கு எவ்வித அபிவிருத்தி திட்டங்களும் கிடைக்கவில்லை. இதனை தோட்டப்புற மக்களும் கூறுகின்றனர். ஆகவே, இங்கு எவ்வித சவால்களும் எமக்கு இல்லை. நுவரெலியாவில்தான் அதிக நீர்வளம் உள்ளது. ஆனால், இன்று மரங்களை வெட்டி நாசமாக்கியுள்ளதால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகள், பாதைகள், பாடசாலைகளை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. நுவரெலியாவில் பல்கலைக்கழகங்களையும் உருவாக்க உள்ளோம். நுவரெலியாவை சுற்றுலாத்துறையாகவும் மாற்றவுள்ளோம். அதன்மூலம் பாரிய வருமானத்தை இங்குள்ள மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். நுவரெலியாவை இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிக்கொள்வது உறுதியாகும். இங்குள்ள சிங்களம், தமிழ், முஸ்லிம் என மூவின மக்களும் பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்த்துள்ளனர்.
கேள்வி : ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் அதன் தலைமையையும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் சு.கவினரே. இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுக்கு தாய் கட்சியென்ற பாசம் இல்லையா?
பதில் : மைத்திரிபால சிறிசேன ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிட்ட போதும் நாம் அவருடன் இணைந்திருக்கவில்லை. அவர் ஜனாதிபதியான பின்னர் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியை மஹிந்த ஒப்படைத்தார்.
ஐ.தே.கவுடன் இணைந்து ஆட்சியமைக்கப்பட்டதாலேயே சு.க கடும் வீழ்ச்சியை சந்தித்தது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கிய செய்தியானது, உடனடியாக ஐ.தே.கவைவிட்டு சு.க விலக வேண்டுமென்பதாகும். இவையனைத்தும் நடந்து முடிந்தவை. தற்போது விமர்சனங்கள் அவசியமற்றதாகும் என்பதே எனது நிலைப்பாடு.
கேள்வி : நீங்கள் முதிர்ச்சியுள்ள அரசியல்வாதி என்ற அடிப்படையில், தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கையாகவுள்ள அதிகாரப் பகிர்வு குறித்து உங்களது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில் : அதிகாரப் பகிர்வு என்பது வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலைப்பாடு அல்ல. இது அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகும். அருணாச்சலம் பொன்னம்பலம் போன்றோர் சிங்கள மக்களுடன் இணைந்து பிரித்தானியாவின் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அன்று போராடினர். அன்று அரச சபைக்கு சிங்கள மக்கள் தமிழ் தலைவர் ஒருவரைத்தான் தமது பிரதிநிதியாக தெரிவுசெய்தனர். சிங்கள தலைவர் ஒருவர் போட்டியிட்டும் அவரை சிங்கள மக்கள் நிராகரித்திருந்தனர்.
இவ்வாறான வரலாறுதான் எமக்கு இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளின் நிலைப்பாடல்ல தமிழ் மக்களின் நிலைப்பாடு. இந்த மக்கள் அபிவிருத்தியைதான் எதிர்பார்க்கின்றனர். கடந்த காலத்தில் வடமாகாண சபைக்கு ஒதுக்கபட்ட நிதியைக்கூட பயன்படுத்தியிருக்கவில்லை. ஆரம்பத்தில் எவரும் ஈழத்தை கேட்கவில்லை. 1912களில் அதிகாரப் பகிர்வை கோரினர்.
1920களில் சிங்களவர்களுக்கு இரண்டு பிரதிநிதிகள் என்றால் தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதி என்றனர். 1950களில் 50:50 சதவீதம் என்றனர். பின்னர் சமஷ்டியை கோரினர். 1970களின் பின்னர் ஈழத்தை கோரினர். தமிழ் தலைவர்கள் தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளவே காலத்துக்குக் காலம் எவ்வாறு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.
சிங்கள தலைவர்கள் தரப்பிலும் தவறுகள் உள்ளன. ஆரம்பத்தில் தமிழ் தலைவர்கள் மாவட்ட சபைகளையே கோரினர். ஆனால், அதனை நிராகரித்தனர். இவ்வாறுதான் பிரச்சினைகள் உருவெடுத்தன.
தற்போதைய சூழலில் அதிகாரப் பகிர்வுக்கு காணப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியாது. அதில் காணப்படும் பொலிஸ், காணி அதிகாரங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில்த்தான் அமுல்படுத்த முடியும்.
கேள்வி : நீங்கள் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளீர்கள். இங்கு தமிழ் வாக்குகளும் பிரதானமானவை. 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்போமென அரசாங்கம் உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸ் உட்பட சர்வதேச ரீதியில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இது சாத்தியமாகுமா?
பதில் : இது சாதாரணமான கோரிக்கையாகும். 1000 ரூபாவை பெற்றுக்கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. என்றாலும், கொரோனா தாக்கம் காரணமாக ஏற்றுமதி இறக்குமதிகள் பாதிப்படைந்துள்ளன. தேயிலை ஏற்றுமதியையும் இது பாதிக்கும்.
கேள்வி : கொரோனா நோய் தாக்கம் இலங்கையிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பொதுத் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதா?
பதில் : பொதுத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை. அவ்வாறு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலும் ஏற்படும். தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என்றார்.
நேர்காணல் - சுப்பிரமணியம் நிஷாந்தன்