![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/15/colradha-04114222188_8242952_14032020_SPW_CMY.jpg?itok=fTg04DhS)
மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வீ. இராதாகிருஷ்ணன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.
ரணில் தலைமையிலான ஐ.தே.க தனிச் சின்னத்திலும் சஜித் தலைமையிலான கூட்டணி தனிச் சின்னத்திலும் போட்டியிடுவதாக எடுக்கப்பட்டிருக்கும் முடிவு ஆளும் கட்சிக்கு சாதகமாக அமையும் அல்லவா...!
ஒரு நாளும் இல்லை. காரணம், இன்று மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஏனெனில் அரசாங்கத்தின் கடந்த நூறு நாட்களில் மக்களுக்கு செய்வதாக வாக்குறுதியளித்த எந்தவொரு வேலையையும் இதுவரை செய்யவில்லை. அது மட்டுமல்ல, ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசிய கட்சியும் திட்டமிட்டே ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார்கள் என்பதை இன்று மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். அதற்கான ஒரு பதிலை இத்தேர்தலில் மக்கள் வழங்குவார்கள்.
உண்மையில் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே அப்படி என்னதான் பிரச்சினை?
உண்மையைக் கூறுவதாக இருந்தால் தான் கடைசிக்காலம் வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவே இருக்க வேண்டுமென ரணில் நினைக்கிறார். அவருக்கு ஐ.தே.க மீதோ அல்லது இந்த நாட்டு மக்கள் மீதோ எந்தவொரு அக்கறையுமில்லை. அவரது தேவையெல்லாம் தமது பதவியை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் சஜித் பிரேமதாசவை பொறுத்தளவில் அவர் இந்த நாட்டைப் பற்றியும் ஐக்கிய தேசிய கட்சி சிதைந்து விடக்கூடாது என்பதிலும் மிகவும் கவனமாக இருக்கின்றார். ரணிலுக்கு நான் என்ற ஒரு மமதை இருக்கின்றது. அது தான் அவருடைய வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. யார் ஒருவர் எந்தவொரு விடயத்திலும் நான் என்று மமதையுடன் செயற்படுகின்றாரோ, அதுவே அவருடைய அழிவிற்கு காரணமாக அமைந்துவிடும்.
ஆளும் கட்சியிடமும் ஐ.தே.கவிடமும் தற்போது சிறுபான்மைக் கட்சிகள் அங்கம் வகிக்காத ஒரு சூழலையும் பெரும்பாலான சிறுபான்மையினக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருப்பதைப் பார்க்கிறோம். இது பேரின, பெளத்த வாதப் போக்கை மேலும் மேம்படச் செய்வதாக அமையும் அல்லவா?
அப்படிக் கூற முடியாது. காரணம் சிறுபான்மை கட்சியான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்துடனேயே இருக்கின்றார். மேலும் அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழுமையாக இனவாதத்துடனேயே செயற்பட்டது. அதன் காரணமாகவே சிறுபான்மை கட்சிகள் அவர்களுடன் இணைந்து செயற்படவில்லை. எனவே அரசாங்கம் அனைவரையும் இணைத்துக் கொண்டு பயணிப்பதற்கு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஒரு பெரும்பான்மை பெளத்த மதத்தை சார்ந்த ஒருவர் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அவர் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒருவரல்ல.
கொரோனா வைரஸ் இலங்கையில் பரவலாம் என்ற நிலையில் தேர்தல் பின்போடப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா?
இதுவரையில் அரசாங்கத்தின் அறிவித்தலின்படி தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகின்றது. அதே நேரம் அரசாங்கம் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும். ஏனென்றால் நிச்சயமாக இதனை ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு நாடு என்ற வகையில் நாங்கள் சிந்திக்க வேண்டும். எதிர்க்கட்சியில் இருக்கின்றோம் என்பதற்காக அரசாங்கத்தின் அனைத்து வேலைத்திட்டங்களையும் எதிர்ப்பது என்பது பொருள் அல்ல. எனவே நல்ல விடயங்களை பாராட்ட வேண்டும். மேலும் இவ்வாறான ஒரு நிலைமையில் நாம் அனைவரும் இலங்கையர் என்ற வகையில் சிந்திக்க வேண்டுமே தவிர கட்சி ரீதியில் சிந்திக்கக்கூடாது. மேலும் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது என்றே நான் எதிர்பாரக்கின்றேன்.
நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன? 50 ரூபாவை பெற்றுத்தர முடியாமற்போனது பின்னடைவாக அமைந்துள்ளதாக கருதுகிறீர்களா?
நுவரெலியா மாவட்டத்தைப் பொறுத்தளவில் எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றி மிகவும் தெளிவாக இருக்கின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியைப் போலவே இந்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம். 50 ரூபாய் விடயத்தில் நாங்கள் மிகுந்த பிரயத்தனத்தை எடுத்தோம். அதனை எப்படியாவது பெற்றுக் கொடுக்க வேண்டும் என நினைத்தோம். அதனை அன்று பெருந்தோட்ட அமைச்சராக இருந்த நவீன் திசாநாயக்கவும் ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொண்டார். ஆனால் பின்பு அவரேதான் அதனை பெற்றுக் கொடுக்க முடியாது எனவும் அப்படி பெற்றுக் கொடுத்தால் தான் அமைச்சு பதவியைவிட்டு வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.
அது முழுமையாக எங்கள் மக்களை பழிவாங்கும் ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன். நவீன் திசாநாயக்கவிற்கு இந்த தேர்தலில் எங்களுடைய மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகால ஆட்சியில் தமிழ் முற்போக்கு முன்னணியின் செயலாற்றும் தன்மையும் மேற்கொண்ட நடவடிக்கைகளும் திருப்தியளிக்கிறதா?
(அ) அமைச்சர் மட்டத்தில் ஆற்றிய பணிகள் நிறைவு தந்துள்ளதா?
நிச்சயமாக! தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற வகையில் நாம் எங்களுடைய சேவைகளில் திருப்தி அடைகின்றோம். ஏனெனில் கடந்த பல வருடங்களாக செய்ய முடியாமல் இருந்து பல பணிகளை நாம் செய்திருக்கின்றோம். குறிப்பாக மலையக மக்களின் உரிமை சார் விடயங்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். பிரதேச சபைகளை அதிகரித்தது. தோட்டப்புறங்களுக்கு பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை செய்வதற்கான உரிமை போன்ற பல உரிமைசார் விடயங்களையும் மலையக அதிகார சபையை பெற்றுக் கொடுத்தமை போன்றவற்றை குறிப்பிடலாம். என்னுடைய அமைச்சை பொறுத்தளவில் ஆற்றிய பணிகளில் 100 வீதம் திருப்தி கொள்ள முடியாது. ஆனால் பல்வேறு போராட்டகளுடன் மலையகத்தின் கல்வி வளர்சிக்கு பங்களிப்பு செய்திருக்கின்றேன். அதன் பயன்கள் தற்பொழுது கிடைத்து வருகின்றன. இன்று மலையகத்தில் பரீட்சை பெறுபேறுகள் அதிகரித்திருக்கின்றது. அதற்கு காரணம் கடந்த காலங்களில் நாங்கள் முன்னெடுத்த சேவையின் பயனாகவே இன்று பெறுபேறுகள் அதிகரிக்கின்றன. எதிர்காலத்தில் இதன் பயன்களை அதிகமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மலையகத்துக்கு அவசியமான அபிவிருத்திகளை பட்டியலிடுவீர்களா?
நிச்சயமாக, கல்வியில் இன்னும் பல அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மலையகத்துக்கான பல்கலைக்கழகம் அல்லது ஒரு வளாகம் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக மலையகத்திற்கு என தேசிய பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும். கணித, விஞ்ஞான ஆசிரியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். சுகாதாரத்துறை இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். வீடமைப்புத் திட்டத்தை இன்னும் விரைவுபடுத்த வேண்டும். வீதிகள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும். எங்களுடைய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
தலைவர் சந்திரசேகரனின் மகள் இம்முறை தனித்து போட்டியிடப் போவதாக கூறியுள்ளார். அவருக்கு சில அதிருப்திகள் இருப்பதாக தெரிகிறது. அவருடன் பேசினீர்களா?
என்னைப் பொறுத்தளவில் அவரை எனது மகளாகவே சிந்தித்து செயற்பட்டேன். அவருக்கு கட்சியில் எந்தக்குறையும் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவரும் தான் அதிருப்தியுடன் கட்சியில் இருப்பதாக என்னிடமோ அல்லது கட்சியின் வேறு யாரிடமோ எதனையும் கூறவும் இல்லை. கலந்துரையாடவும் இல்லை. நான் அவரிடம் கதைத்தேனா என்று என்னிடம் கேள்வி கேட்கின்ற நீங்கள் அவரிடம் கேட்டுப் பாருங்கள் அவர் என்னிடம் கதைத்தாரா என்று இதை தவிர வேறு எதனையும் நான் கூற விரும்பவில்லை.
மலையக மக்கள் முன்னணியில் ஜனநாயகம் இல்லை என்று கூறப்படுகின்றதே இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
அது முற்றிலும் தவறான ஒரு கருத்தாகும். மலையகத்தில் இருக்கின்ற கட்சிகளில் அதிக ஜனநாயகத்துடன் இயங்கும் ஒரு கட்சி மலையக மக்கள் முன்னணி என்று கூறினால் அது மிகையாகாது. இதனை நான் கூறுவதைவிட எமதுளுடை கட்சியின் அனைத்து தரப்பினரிடமும் இக்கேள்வியை கேட்டுப்பார்க்கலாம். வெளியில் இருந்து கொண்டு எதனையும் கூற முடியும். ஒரு சிலர் கட்சியில் இருக்கின்ற பொழுது அனைத்து சலுகைகளையும் பெற்றுக் கொண்டு வெளியில் சென்றவுடன் விமர்சனம் செய்வது என்பது அரசியலில் ஒன்றும் புதிய விடயமல்ல. எதிர்வரும் காலத்தில் ஒரு சில உண்மைகளையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நேர்காணல் - பி.வீரசிங்கம்