![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/03/15/20col0104145940-iran-anti-us-protest-exlarge-169165322087_8243464_14032020_VKK_CMY.jpg?itok=N2Vg-OOn)
உலக ஒழுங்கில் முன்னும் பின்னுமான அரசுகள் காணாமல் போகும் நெருக்கடிக்குள் அகப்பட்டுள்ளதுடன் உலகமே நிமிர முடியாது துயரத்துடன் செயல்படுகிறது. ஆனாலும் அவ்வப் போது உலக அரசியல் பரப்பிலுள்ள ஆதிக்க சக்திகள் தமது அரசியல் இருப்பினைப் பலப்படுத்தும்’ நகர்வில் ஈடுபட்டுக் கொண்டே உள்ளன. குறிப்பாக தென் சீனக் கடலில் அமெரிக்க விமானம் மீது சீனக்கடற்படைத் தாக்குதல் நிகழ்த்தியது போல் பிரிட்டன் எல்லைக்குள் ரஷ்ய விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக பிரிட்டன் தெரிவித்தது. அவ்வாறே ட்ரம்பின் போர் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானம் இரு சபைகளிலும் நிறைவேறியது.இந்த வரிசையில் ஈராக்கிலுள்ள அமெரிக்க கூட்டுப்படைகளின் தளங்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்காவின் ஈரான் மீதான நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியின் போர் அதிகாரத்தை இரு சபைகளும் இணைந்து மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். செனற் சபையில் 55க்கு 45 என ஆதரவு தீர்மானத்திற்கு கிடைத்தது போல் பிரதிநிதிகள் சபையில் 227 க்கு 186 என்ற அடிப்படையில் தீர்மானத்தை ஆதரித்துள்ளன. அதன் பிரகாரம் சுலைமானி கொலை மட்டுமன்றி ஈராக் மீதான அனைத்து நடவடிக்கையினையும் இத்தீர்மானங்கள் நிராகரித்துள்ளன. இதன் படி ஈரான் மீது ஒருபோர் நடவடிக்கையினை மேற்கொள்ள முதல் ட்ரம்ப் பிரதிநிகள் சபையிலும் ஒப்புதல் பெறவேண்டும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் வீட்டோவைப் பயன்படுத்தி நிராகரிக்க முடியும் எனவும் அதனடிப்படையில் ட்ரம்ப் வீட்டோ அதிகாரத்தை பிரயோகிப்பார் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படியாயின் ஏன் இந்த இருசபைகளிலுமான வாக்கொடுப்பு என்ற கேள்வி நியாயமானதே. அமெரிக்க அரசியலமைப்பை பொறுத்தவரை ஒரு துறை இன்னோர் துறை மீது செல்வாக்குச் செலுத்துவதன் மூலம் சில கட்டுப்பாடுகளை கையாள முனைகிறது. இதனால் ஏற்படும் மாறுதல்கள் அந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தையும் ஆட்சியாளரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் விடயமாக அமைந்துள்ளது. அது மட்டுமன்றி ட்ரம்ப் அடுத்த தடவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப் படும் போது அவரது வெற்றியை தீர்மானிப்பவர்கள் இரு சபை உறுப்பினர்தான் என்பதையும் கருத்தில் கொண்டு செயல்படும் அரசியல் நிர்வாகமாகவே தெரிகிறது. அதே நேரம் இரு சபைகளின் ஒப்புதலுடன் அத்தகைய போரை ஒரு ஜனாதிபதி மேற்கொள்ள முடியும் என்பதையும் அவரது அமெரிக்க தேசியத்தின் பெயரால் ஏற்படும் சர்வதேசிய நலன் பாற்பட்டது என்பதுவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதாவது அமெரிக்கா ஒரு யுத்தத்தை மேற்கொள்ளும் போது, அது முழுமையான அமெரிக்க யுத்தமாக அமையுமே அன்றி தனித்து ஜனாதிபதியின் போராகவோ பிரகடனமாகவோ அமையக் கூடாது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
இரண்டாவது ஈராக்கில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கூட்டுப்படைகள் நிலை கொண்டுள்ள பகுதியில் மீண்டும் ரொக்கற் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஈராக்கின் வடக்குப் பகுதியில் டாஜி இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதுடன் 12 படைவீரர்கள் காயமடைந்துள்ளனர். இதில் அமெரிக்கப்படை வீரர் ஒருவர் உட்பட இரு படையினரும் ஒரு பிரிட்டன் படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 100 மேற்பட்ட படைமயினர் பாரிய பாதிப்புக்குள்ளாகியிருப்பதுடன் தற்போது வீசப்பட்ட 18 ரொக்கட் குண்டுகளும் முகாம் மீது வீழ்ந்து வெடித்தாக ெதரியவருகிறது. இத்தகைய தகவலை அமெரிக்க படைத் தரப்பே அறிவித்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள சேதவிபரம் தொடர்பில் சந்தேகம் இன்னும் நிலவுகிறது.
மேற்குறித்த இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகும். சிலவேளைகளில் அமெரிக்காவின் இரு சபைகளதும் தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதியின் எதிர்கால போர் நகர்வுகளை கட்டுப்படுத்த திட்டமிடுவதை விட அதனை மிக நேர்த்தியாக நகர்த்த திட்டமிடுகிறது எனக் குறிப்பிட முடியும். எதிர்காலத்தில் ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா திட்டமிடுவதனை குறிப்பிடுவதாகவே தெரிகின்றது. அதற்கான நகர்வை தொடக்கிவைக்கும் விடயமாக பார்த்தல் பொருத்தமானதாகும். அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நகர்வுகளில் காணப்படும் பலவீனங்களை சரிசெய்யும் விடயமானது சரியான தீர்மானத்தை மேற்கொள்வதற்கான போக்காகவே அமையும். எதிர்காலத்தில் அமெரிக்கா ஈரான் மீதான போரை திட்டமிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் அது ஏற்கனவே அத்தகைய முயற்சிகளுக்குள் அமெரிக்க படைகளையும் புலனாய்வுத் தகவல்களையும் திரட்ட ஆரம்பித்துள்ளது. ஈராக்கிலிருந்து படைவிலகல் ஆப்கானிஸ்தானிலிருந்து படை வாபஸ் போன்றன ஏறக்குறைய ஒரு போருக்கான நகர்வை நோக்கியதாகவே தெரிகிறது. ரஷ்யாவின் முன் நகர்வுகள் இல்லாது விட்டிருக்குமாயின் ஒரு போரை அமெரிக்கா இலகுவில் சாத்தியப்படுத்தியிருக்கும். தற்போது அதனிடம் உள்ள குழப்பமும் ரஷ்யா பற்றிய விடமேயாகும். சிரியா துருக்கி மோதலும் சாத்தியமற்றதாகப் போனமை அமெரிக்காவுக்கு பெரும் குழப்பமாகிவிட்டுள்ளது. சுரைலமானியின் படுகொலையை ஒரு போராக மாற்ற எடுத்த முயற்சியை ரஷ்யா தடுத்துவிட்டதாவே பென்ரகன் கருதுகிறது. ஆனாலும் இத்தகைய உத்திகளுடன் ஒரு போரை அமெரிக்கா திட்டமிடுகிறது. அதனை தனித்து எதிர்கொள்ளாது கூட்டுப்படைகளின் தாக்குதலாக மாற்றிக் கொள்ள விரும்புகிறது. அதற்கு ஏற்ற வகையிலேயே நேட்டோ படைகளையும் அவற்றுடனான ஒப்பந்தங்களையும் கையாண்டு வருகிறது.
எனவே அமெரிக்காவின் இரு சபைகளும் எடுத்த முடிவானது முழுமையான போருக்கு திட்டமிடுவது போல் அமைந்துள்ளது. அமெரிக்கா ஒரு போரை உருவாக்கும் உத்திகளை அவ்வப் போது ஏற்படுத்தும். அவ்வாறே அதனை கூட்டாக எடுக்க முயலும். அது சிலவேளைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவோ அல்லது அமெரிக்காவுக்கு ஆதரவானதோ எதுவானதாகவும் அமையலாம். இரு விடயமும் ஒன்று என்றே அமெரிக்கா கருதுகிறது. இரு தரப்பினது நலன்களும் ஒன்றானதே. இஸ்ரேலின் அரசமைப்பினைக் கட்டுப்படுத்தும் வல்லமை அமெரிக்காவுக்கு இருக்கிறது என்பதை விட அமெரிக்காவைக் கட்டுப்படுத்தும் திறன் இஸ்ரேலுக்கு உண்டு என்பதை நிராகரிக்க முடியாது. அமெரிக்கா இஸ்ரேலின் நலன்களுக்காகவே மேற்காசியா முழுவதும் தனது படையையும் தாக்குதலையும் மேற்கொண்டு வருகிறது.
கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்