எங்கே எங்கள் தலைவர்கள்? | தினகரன் வாரமஞ்சரி

எங்கே எங்கள் தலைவர்கள்?

கொவிட் 19 அச்சுறுத்தல் உலக அளவில் தணியவில்லை. ஒப்பீட்டளவில் இலங்கையில் நிலைமை ஓரளவு பரவாயில்லாதிருக்கிறது.

இதனால் யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம் போன்ற கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட மாவட்டங்களைத் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நெருக்கடி நிலை குறைந்த நிலையில் உள்ளது. அங்கெல்லாம் வரையறுக்கப்பட்ட அளவில் ஊரடங்கு உத்தரவுள்ளது. குறைந்தது வாரம் இரண்டு தடவைகளாவது வரையறுக்கப்பட்ட அளவில் ஊரடங்கு நிலை தளர்த்தப்படுகிறது.

ஆனால், யாழ்ப்பாணம், கொழும்பு, புத்தளம், கம்பஹா போன்ற மாவட்டங்கள் இறுக்கமான பிடிக்குள், தொடர்ச்சியான ஊரடங்கில் உள்ளன. இந்தத் தொடர் ஊரடங்கு உத்தரவை ஒற்றைச் சொல்லினால் அல்லது தொடர்ந்தும் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதனால் எளிதில் கடந்து விட முடியாது. ஒன்று இப்படித் தொடர்ந்தும் வீடுகளுக்குள் முடங்கியிருந்தால் குடும்பப் பொருளாதாரம் கெட்டு விடும். இரண்டாவது உற்பத்தித்துறை வீழ்ச்சியடைந்து விடும். மூன்றாவது உள நெருக்கடி ஏற்படும். நான்காவது கல்வி மற்றும் சமூக நிலைகளில் பாரிய வீழ்ச்சியும் பின்னடைவும் ஏற்படும். இப்படி ஏராளம் பின்விளைவுகளுண்டு.

இருந்தாலும் நோய்த் தொற்று அபாயத்திலிருந்து தப்புவதற்கு இதை விட வேறு வழியென்ன? உலகம் முழுவதிலும் உள்ள ஒரு பொது நிலையும் பொது நெருக்கடியும் இதுவல்லவா! என்று நீங்கள் கேட்கலாம்.

உண்மையே. இது உலகளாவிய நெருக்கடியும் உலகளாவிய நிலைமையும் என்பது மறுக்க முடியாததே. ஆனால், அந்த நாடுகளின் வாழ்க்கைச் சூழலும் பொருளாதாரமும் வேறு. ந ம்முடைய வாழ்க்கைச் சூழலும் பொருளாதார நிலையும் வேறு. இருந்தாலும் அரசாங்கத்தின் பொது அறிவிப்புக்கு இந்த நாட்களில் மதிப்பளிப்பது மிக மிக அவசியமானது என்பது மறுப்பதற்குரியதல்ல. ஆனாலும் இதை எதிர்கொள்வதற்கு அரசாங்கமும் மக்கள் அமைப்புகளும் இணைந்து ஒரு கூட்டுப்பொறிமுறையை உருவாக்கி இந்த நிலையில் மெல்லிய தணிவுகளை உருவாக்க முயற்சிக்கலாம். அதற்கான ஒரு பொறிமுறையைப் பற்றிச் சிந்திக்கலாம்.

இப்பொழுது அடுத்த மாதமளவில் (மே மாத முற்பகுதியில்) நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலையை நோக்கி முன்னகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தரப்பிலிருந்து வெளியாகும் செய்திகளும் செய்யப்படுகின்ற ஏற்பாடுகளும் இதை உணர்த்துகின்றன.

குறிப்பாக அடுத்த மாதம் 20 திகதியளவில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மீள இயங்குவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. பொதுப்போக்குவரத்தில் தொடருந்துப் பயணிகளை கொரோனா தொற்றைப் பரிசோதிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக கூறப்படுகிறது. இப்படி வரையறுக்கப்பட்ட இயல்பு வாழ்க்கையை மீள் நிலைப்படுத்துவற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தப் பொறுப்புணர்வு வரவேற்கப்பட வேண்டியது. ஆனாலும் எந்த நிலையிலும் அவசரம் கூடாது. ஏனெனில் கொரோனா தொற்று உண்டாக்கிக் கொண்டிருக்கும் அபாய நிலை உலக அளவில் பேரச்சத்தையே உண்டாக்குகிறது.

அமெரிக்காவில் தினமும் கொரோனாவினால் பலியாகுவோரின் தொகை என்பது அது கடந்த காலங்களில் (ஈராக், ஆப்கானிஸ்தான்) போர்க்களங்களில் சந்தித்த இழப்புகளையும் விட மிக அதிகம்.

லண்டன், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் மக்கள் மரண பீதிக்குள் உறைந்து போயிருக்கிறார்கள்.

கொவிட் 19 பீதியிலிருந்து மீண்டதாக நம்பப்பட்ட சீனாவில் மறுபடியும் கொரோனா தாக்குதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. குறிப்பாக வூஹான் மாகாணத்தில் மறுபடியும் தொற்றுக்களின் வேகம் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கும் தொற்றுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, மீள் நிலை – இயல்பு வாழ்க்கை கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த இயல்பு வாழ்க்கை கொண்டு வரப்பட்ட இரண்டு வாரத்துள் மறுபடியும் லொக்டவுண் நிலைமை உருவாகியுள்ளது.

இந்த நிலையில்தான் நாமும் எமது நாட்டுச் சூழல் தொடர்பாக சிந்திக்க வேண்டியுள்ளது. இயல்பு நிலை மீள்நிலைப்படுவது எல்லோருக்கும்  மகிழ்ச்சியளிப்பது என்றாலும் எச்சரிக்கையும் வேணும்.

இது தொடர்பாகப் பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவினாலும் நோய்த்தொற்றுக் குறைவதும் இயல்பு நிலை உருவாகுவதும் நாட்டுக்கும் நல்லது. மக்களுக்கும் நல்லதே.

ஆனால், இதற்கு மக்களும் அரசாங்கமும் ஏனைய தரப்புகளும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியம். அரசாங்கம் ஒரு முனையிலும் மக்கள் இன்னொரு முனையிலும் பிற தரப்புகள் வேறொரு முனையிலும் நின்று செயற்பட்டால் அது மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.

படிப்படியாக கொண்டு வரப்படும் இயல்பு நிலையை அதன் தாற்பரியத்தோடு மக்கள் அனுசரிப்பது அவசியம். இதை மக்களிடம் விழிப்புணர்வாக்கிச் செயற்படுவதற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம். இதற்கான கதவுகளை அனைவரும் திறந்து முன்வருவது நல்லது.

எப்போதும் நெருக்கடி நிலையில் பகைமை மற்றும் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபடுவதே அவசியமானது. சுனாமி அனர்த்தத்தின்போது, மண் சரிவுகளின்போதெல்லாம் இந்த மாதிரியான பொது நிலைகள் நம் சூழலில் உருவாகியதுண்டு. அதைப்போல இந்தப் பேரிடர் காலத்திலும் ஒரு ஒருமித்த செயற்பாட்டுத்தளம் உருவாக வேணும்.

பேரிடர் எப்போதும் பேதங்களை இல்லாதொழிப்பது என்பது பொது விதியாகும். ஏனெனில் பேரிடர் எவரையும் இனம், மதம், வர்க்கம், பிரதேசம், ஆண் – பெண் என்ற பேதங்களைப் பார்த்துத் தாக்குவதில்லை. அதற்கு அனைவரும் ஒன்றுதான். ஆகவேதான் அதை எதிர்கொள்வதற்கும் அதை முறியடிப்பதற்கும் அனைவரும் ஒருமித்திருக்க வேண்டும் என்று கூறப்படுவது.

ஆனால், கவலையளிக்கும் விசயம் என்னவென்றால் அத்தகைய ஒரு சூழல் இன்னும் நம் நாட்டில் உருவாகவில்லை. உலக அளவில் இலங்கைக்குக் குறிப்பிடத்தக்க அளவிலான நிதி ஊட்டம் கிடைத்துள்ளது. இதை எப்படிக் கையாள்வது, கூடவே சமூக மட்டத்தில் எப்படிப் பணியாற்றுவது, மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்றெல்லாம் யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

சாதாரண பொதுமக்கள், நலன் விரும்பிகள், அரசியல் சாராத ஏராளம் மக்கள் அமைப்புகள், புலம்பெயர் சமூகத்தினர் போன்றோர் செய்து கொண்டிருக்கும் சமூகப் பங்களிப்புகள் அளவுக்கு பிறருடைய – குறிப்பாக அரசியல் தரப்புகளின் – பங்களிப்புகளில்லை என்பது வருத்தத்திற்குரியதே. குறிப்பாக உழைப்பின்றியிருக்கும் வறிய குடும்பங்களின் உணவு மற்றும் பிற அத்தியாவசியத் தேவைகளை இவர்கள் நிறைவு செய்து வருகின்றனர். அரசின் உதவித்திட்டங்களோடு இந்த உதவியும் சேர்வதால் வறிய மக்கள் ஓரளவுக்குச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே இந்த நெருக்கடிகால மனிதாபிமானப் பணியில் மக்களின் பங்களிப்புப் பெரியதாகவே உள்ளது. இந்தப் பண்புச் செயல் வரலாற்றுப் பெறுமதிமிக்கது.

ஆனால், இதற்கு முன் எப்போதும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் தங்களை வைத்திருந்த தலைவர்களை இந்த நாட்களில் காணவேயில்லை. மட்டுமல்ல, உட்பக்கச் செய்திகளில் கூட எந்த அரசியல் தலைவர்களையும் காணவில்லை.

எல்லோருக்கும் என்ன நடந்தது? எங்கே எங்கள் தலைவர்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எல்லோரும்?

கொவேிட் 19 இவர்களை சமூகத்திலிருந்தே தனிமைப்படுத்தி விட்டதா? அல்லது எப்போதையும்போல இப்போதும் – இந்த நெருக்கடிக் காலத்திலும் – தங்களுடைய சொந்த அடையாளத்தை – சுய புத்தியைக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்களா? சனங்களின் நெருக்கடிகளுக்கும் அவர்களுடைய பிரச்சினைகளுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. அவர்களுடைய பிரச்சினையை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும். அவர்கள் பாடுகளை அவர்களே தீர்க்கட்டும் என இப்போதும் வாழாதிருக்கிறார்கள் போலும்.

ஏனென்றால் வாராவாரம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்த வட மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், எப்போதுமே அதிரடிப் பட்டாசுகளை “அரசுக்கு எச்சரிக்கை, விரைவில் போராட்டம் வெடிக்கும்” என்றெல்லாம் வெடிக்க வைக்கும் மாவை சேனாதிராஜா போன்றோருடைய சத்தத்தையே காணவில்லை.

இவர்கள் மட்டுமல்ல, சுமந்திரன், சிறிதரன், கஜேந்திரகுமார் என எவரையும்தான் காணமுடியவுமில்லை. அறிய முடியவுமில்லை.

சாதாரண மக்களிடத்திலிருந்து பணியாற்றுவோருக்கிருக்கும் சமூக அக்கறையம் பொறுப்புணர்வும் இவர்களிடம் காணாமல் போனதேன்?

தேர்தலும் அதன் நிமித்தமான பதவிகளும்தான் இவர்களின் குறிக்கோளா?

இடர்காலத்தில் களத்தில் நின்று பணியாற்றுவதே உண்மையான அரசியல் பணியாகும் என்பதை ஏன் இவர்கள் உணரவில்லை?

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் நடமாட்டம் முடக்கப்பட்டிருக்கும்போது எப்படி நாங்கள் அதற்கு மாறாக களப்பணியாற்ற முடியும்? என்று இந்தச் சிங்கங்களும் புலிகளும் கேட்கக் கூடும்.

அவர்களை நாம் திருப்பிக் கேட்கலாம், இந்த நிலைமைக்குள்ளும் வறிய மக்களின் தேவைகளைக் கவனத்திற் கொண்டு ஏராளம் பொது அமைப்புகளும் தனி ஆர்வலர்களும் செயற்படும்போது உங்களுக்கு அப்படியென்ன பிரச்சினை என?

இதையே நாம் தென்பகுதியிலும் கேட்க முடியும்?

இதேவேளை மலையகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கான உதவிகளும் தேவைப்படுகின்றன. அரசாங்கத்தின் உதவியோடு பிற உதவிகளும் கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் ஓரளவுக்கு நிலைமையைச் சமாளிக்கக் கூடியாக இருக்கும்.

ஆம், நாம் அனைவரும் ஒரே நிலையில் உள்ளவர்கள். ஒருவரை ஒருவர் பாதுகாக்க வேண்டியவர்கள் என்ற உணர்வோடு செயற்பட வேண்டிய இன்னொரு காலம் பிறந்திருக்கிறது. இது நாளை இந்த நாட்டின் வரலாற்றில்  பல புதிய மாற்றங்களை உருவாக்குவதற்கான விதைகளாகவும் முதலடிகளாகவும் கூட இருக்கலாம்.

எனவே இனியாவது உரியவர்கள் முன்வந்து களப்பணியாற்ற வேண்டும். அதற்கான காலமும் களமும் திறந்து கிடக்கிறது.

கருணாகரன்

Comments