![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/04/19/Capture--1.jpg?itok=XqQNxbTN)
எங்கும் கொரோனா எதிலும் கொரோனா! உலகம் முழுவதும் இன்று உச்சரிக்கின்ற ஒரே சொல்லாகிப்போயிருக்கிறது இந்தக் கொரோனா. மக்களை ஒவ்வொரு நொடியும் உயிருடன் கொல்லாமல் கொன்றுகொண்டிருக்கிறது கொரோனா என்கின்ற இந்த வைரஸ்.
மனிதர்களை காலத்திற்குக் காலம் எத்தனையோ விதமான நோய் நொடிகள் பீடித்து வாட்டி வதைக்கின்றன. ஆனால், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு மனிதன் தக்க சமயத்தில் வழியைக் கண்டுபிடித்திருக்கிறான். ஆனால், இந்தக் கொரோன வைரஸ் என்பது, மனிதனின் அறிவியல் மூளைக்கே சவால்விடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனானப்பட்ட வல்லரசுகளின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிக்கொண்டிருக்கிறது. ஆயுதத்தால் சவால் விடுத்தவர்கள் எல்லாம் வாய்மூடி மௌனிகளாகியிருக்கிறார்கள். இந்தக் கொரோனா வைரஸை விஞ்சுவதற்கு உலகில் எந்த ஆயுதமும் இல்லை என்ற நிலை நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.
அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை இறுக்கமாக்கியது அமெரிக்கா. அதனால், உலகில் நியாயமான சில போராட்டங்கள்கூடப் பயங்கரவாதப் பட்டியலுக்குள் வந்தன. அன்று ஆரம்பித்த அந்த ஆட்டத்தை இன்னமும் உலக நாடுகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. நீண்டகால நிலையான ஆட்சிகள் சிதைந்து சின்னாபின்னமாகின. எல்லாவற்றுக்கும் பயங்கரவாதமே ஒரே துரும்புச்சீட்டு, இன்று கொரோனாவைப்போல.
இன்றைய நிலையைப் பொறுத்தவரையில், உலக இருப்பைத் தீர்மானிககும் சக்தியாகத் திகழ்வது கொரோனாவே. மனிதனுக்கு இது வாழ்வா சாவா போராட்டம். எதிரி நாடுகள் மீது தொடர்ந்தும் பகைமையைப் பாராட்டுவதா, இல்லை, பேச்சுவார்த்தை நடத்துவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய காலகட்டம்.
இப்படி வீட்டிலிருந்துகொண்டு உலக நடப்புகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது ஸ்ரீமான் பொதுசனம்!
மனிதனின் வரலாறு கொ.மு என்றும் கொ.பி என்றும்தான் இனி எழுதப்படும். கொரோனாவுக்கு முன்னர் மனிதன் எப்படி வாழ்ந்தான்? கொரோனாவுக்குப் பின்னர் எப்படி வாழ்கிறான்? என்பதுதான் இன்றுள்ள கேள்வி.
இதுவரை தன்னைப் பற்றியே சிந்தித்து வந்தவன் இன்று ஊரைப்பற்றியும் உலகைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான். இதுவரை காலம் ஊராரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் சிந்தித்து வாழ்ந்துகொண்டிருந்தவன் இனித் தன்னைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான். எல்லாவற்றுக்கும் காரணம் கொரோனா.
மொத்தத்தில் மனிதனின் குணத்தையெல்லாம் புரட்டிப்போட்டுவிட்டிருக்கிறது கொரோனா. பாரம்பரிய பழக்க வழக்கங்களை மூட நம்பிக்கையென்று புறந்தள்ளியவன், இன்னு அறிவியல் என்று கண்டுகொண்டுவிட்டான். எல்லா வினைக்கும் ஓர் எதிர்வினை ஆற்றப்படும் என்பதைப் புரிந்துகொண்டுவிட்டான். தொழில் செய்ய சோம்பேறித்தனம் கொண்டிருந்தவன், இன்று தொழிலுக்குச் செல்லத் துடித்துக்கொண்டிருக்கிறான். வாழ்க்கையில் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்தவன், இன்று குணத்தைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறான்.
இஃதெல்லாம் இவ்வாறு இருக்க, நண்பர் சொல்லுவது வேறு விதமான இருக்கிறது. ஆனால், அர்த்தம் இருக்கிறது. கொரோனா மனிதனின் குணத்தை மாற்றியிருக்கிறது என்னவோ உண்மைதான். ஆனால், அவனது குணம் மாறும்போது எல்லாவற்றுக்கும் காலம் கடந்துபோய்விட்டிருக்கிறது என்கிறார் நண்பர்.
அஃதெப்படி?
எதிரே வந்தவன் சிரித்தால், ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, எனக்கு உன்னைத் தெரியுமா? என்று கேட்டவன், இன்று வலிந்து வந்து புன்னகைக்கிறான். ஆனால், அவன் புன்னகைக்கும்போது மனப்பூர்வமாகச் சிரிக்க முடியாமல் உள்ளது. மகிழ்ச்சியில் கைகுலுக்க முடியாமல் உள்ளது. யாரைக் கண்டாலும் பயமாக இருக்கிறது. கொரோனா தொற்றை வைத்திருக்கிறாரோ என்ற ஓர் ஐமிச்சம் ஏற்படுகிறது. அருகில் நின்று பேச முடியாமல் ஒரு மீற்றர் விலகி நிற்கத் தோன்றுகிறது. எதிரே இருப்பவன் மூச்சுக்காற்றைச் சுவாசிக்கவும் பயமாக இருக்கிறது. அப்படியென்றால், மனிதன் இனிக் குணத்தை மாற்றிக்கொண்டுதான் என்ன செய்யப் போகிறான் என்பது நண்பரின் கேள்வி.
அடுத்தவனுக்கு ஈயாமல் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தவனுக்கு இன்று அந்தப் பணத்தை வைத்துக்கொண்டும் சாப்பிட வசதியில்லாமல் இருக்கிறது. பணம் இருக்கிறது பொருள் இல்லை. பொருள் இருந்தபோது பணம் இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கான வரைவிலக்கணத்தைக் கவிஞர் மு.மேத்தாவின் கவிதையில்தான் சொல்ல வேண்டும்.
நிலாச்சோறுண்ண
நீண்டநாள் ஆசை
அபூர்வமாய் கிடைத்தது ஓய்வு
அன்று அமாவாசை!
கொரோனா தடுப்புக்காக வீட்டில் முடங்கிக்கிடப்பவரின் நிலையும் இதுதான். மனிதன் விழித்துக்கொண்டபோது இயற்கை கண்ணை மூடிக்கொண்டுவிட்டது. இயற்கை விழித்திருந்தபோது மனிதன் நித்திரையில் இருந்தான்.
இன்று அவன் ஆழ்ந்த நித்திரையில் இருந்துகொண்டு இருக்கிறான். இயற்கையால் இலகுவாக சுவாசிக்க முடிகிறது. இயற்கை சுவாசத்தைத் தடுத்து வந்தவனுக்கு, இந்தக் கொரோனா மட்டும் ஒரு தண்டனையாக இருக்காது. அடுத்து வரும் காலமும் இயற்கையினதுதான்.
மனிதன் வீட்டில் முடங்கிக் கிடப்பதால், இயற்கைக்கு எந்தப் பங்கமும் இல்லை. இயல்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனிதன் இயல்புக்குத் திரும்பும்போதுதான், இயற்கையின் இன்னொரு முகத்தையும் காணப்போகிறான்! எல்லாவற்றுக்கும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!