![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/04/26/unnamed.png?itok=a6FvbaI4)
இது அறிக்கை விடும் நேரமல்ல. இதனை உணர்ந்து அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும். குறிப்பாக அரசின் உதவிகள் கிடைக்கிறதா அதனை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இன்றைய பிரதான அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலைத் திட்டம் என்கிறார் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஐப் பெருமாள். அவர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.
கேள்வி – கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: - உலகம் முழுவதும் கொரோ னா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பொருளாதாரம் அரசியல் என உலகமயமாகியுள்ளது போன்று கொரோனாவும் உலகமயமாகியுள்ளது. இதனை உலக மக்கள் எல்லோரும் சேர்ந்து தான் எதிர்நோக்க வேண்டி இருக்கின்றது.
இந்த வைரஸ் தாக்கம் இலங்கையில் அண்மைய சில தினங்களாக அதிகரித்து தான் வருகின்றது. அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டியது அவசியமானது. அதேநேரம் பொதுமக்களும் தமது முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதுடன் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமானது.
கேள்வி – கொரோ னாவைக் கட்டுப்படுத்த தொடர்ந்தும் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனக் கருதுகின்றீர்கள்?
பதில்: -நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதிலும் சுகாதாரத் துறையினர் மற்றும் படையினர் இணைந்த அர்ப்பணிப்புமிக்க சேவையை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் இந்தச் சேவை பாராட்டுதற்குரியதாக இருக்கின்றது. அதே நேரம் மிகப் பெரிய அளவில் மதிக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது.
ஆயினும் அரசாங்கம் உயர் மட்டத்தில் எடுக்கின்ற முடிவுகள் அல்லது தீர்மானங்கள் அல்லது அறிவித்தல்கள் என்பவை கீழ் மட்டத்தில் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படாத நிலைமை இருக்கின்றது. எனவே அரசு எடுக்கும் தீர்மானங்கள் என்பது கீழ் மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
மேலும் கொரோனா தொற்று தென்னாசியாவிலேயே மிகக் குறைவாக இருந்து வந்த நிலையில் இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. ஆகையினால் இதனைக் கட்டுப்படுத்த மிகக் கூடுலான கவனம் தேவைப்படுகிறது. நாட்டு மக்கள் பொறுப்புணர்வுடன் நடந் து கொள்வதுடன் அரசும் படைகளும் சுகாதாரத் துறையினரும் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்திச் செயற்படுவது அவசியமான விடயமாக மாறியுள்ளது.
கேள்வி – நாட்டில் ஏற்பட்டுள்ள இன்றைய நிலைமையைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் எத்தகைய ஒத்துழைப்பை வழங்கவேண்டுமெனக் கருதுகின்றீர்கள்?
பதில்: - கொரோனா தொற்று ஆபத்தை உணர்ந்து மக்கள் தமது ஒத்துழைப்ப வழங்கி அவதானமாக செயற்பட்டு வருகின்றனர். ஆனாலும் இன்னும் அதிகமாக ஒத்துழைப்பை வழங்குவதுடன் மிக மிக அவதானமாகச் செயற்பட வேண்டியது அவசியமானது. குறிப்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பது தான் மக்களுடைய அபிப்பிராயமாக உள்ளது.
அதில் தமிழர்கள் சிங்களவர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை. கொரோனாவை முடிவிற்கு கொண்டு வர வேண்டும். மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனாலும் ஒரு சிலர் இந்தக் கட்டுப்பாடுகளை மீறுவதால் ஒட்டுமொத்தமாக நாட்டு மக்கள் ஒத்துழைக்கவில்லை எனக் குற்றஞ்சாட்ட முடியாது.
இன்றைய ஆபத்தான நிலைமையில் விதிக்கப்பட்டுள்ள கட்டப்பாடுகள் தடைகள் என்பவற்றால் மக்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கிக் கொண்டு தான் வருகின்றனர். குறிப்பாக அவர்களுக்கு வருமானம் இல்லை. பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் உதவித் திட்டங்களை வழங்கி அவர்களின் வாழ்வை வளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேள்வி – பொது மக்கள் பாதிக்கப்படுகின்ற சூழலில் எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
பதில்: - கொரோனா தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளவர்களை முதலில் மீட்டெடுக்க வேண்டும். அதன் பின்னர் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அத்தோடு கொரோனா தாக்கம் காரணமாக நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்கம் நிவாரணத் திட்டங்களையும் உதவிகளையும் வழங்க வேண்டும்.
குறிப்பாக ஊரடங்கால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவ வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்கின்ற அதே நேரத்தில் அந்த மக்களின் பிரதிநிதிகளாக இருக்கின்றவர்களும் சரி அந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற கட்சிகளும் சரி விசேட கவனமெடுத்து உதவ முன்வர வேண்டும்.
எனவே இந்த விடயத்தில் அனைத்தத் தரப்பினரும் விசேட கவனமெடுத்து செயற்பட வேண்டும். அதனைவிடுத்து அரசாங்கம் அதை செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டுமென்று மாத்திரம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல் தாமும் செய்யக் கூடியதைச் செய்ய வேண்டும். ஆகையினால் இது அறிக்கை விடும் நேரமல்ல. இதனை உணர்ந்து அரசியல் கட்சிகள் செயற்பட வேண்டும்.
குறிப்பாக அரசின் உதவிகள் கிடைக்கிறதா அதனை மக்களுக்கு எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் இன்றைய பிரதான அரசியல் கட்சிகள் செய்ய வேண்டிய வேலைத் திட்டம். அதை அவர்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது.
கேள்வி - இந்த விடயத்தில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டும்?
பதில்: - நாட்டு மக்கள் யாருக்கும் உணவு இல்லை என்ற நிலை ஏற்படக் கூடாது. இதை உத்தரவாதம் செய்யும் பணியை அரசு செய்ய வேண்டும். வெறுமனே அரச அதிகாரிகளை மட்டும் நம்பியிருக்க கூடாது. மக்கள் பிரதிநிதிகளையும் சமூகத்தின் பல்வேறுபட்ட பிரதிநிதிகளையும் இணைத்துக் செயற்பட வேண்டும்.
ஏனென்றால் இப்படியாக அனர்த்த காலம் தொடர்ந்து நீடிக்கிற பொழுது வெறும் அரச நிர்வாகம் மட்டுமே இதைக் கவனிக்குமாக இருந்தால் உண்மையாக தேவையுடைய பலர் இந்த உதவிகளை பெற முடியாத நிலைமை ஏற்படும். அது மாத்திரமல்லாமல் ஊழல்கள் மோசடிகள் பெருக வாய்ப்புள்ளது ஏற்கனவே அவ்வாறான சம்பவங்கள் பல்வேறு பாகங்களிலும் நடப்பது இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது.
குறிப்பாக அரசின் உதவிப் பணத்தை பெறுவதற்கு இலஞ்சம் கேட்கின்ற நிலைமைகள் தொடங்கி விட்டன. எனவே உண்மையான உதவிகள் தேவைப்படுபவர்கள் யார் என்பதையும் யாருக்கு உதவிகள் சென்று சேரவில்லை என்பதையும் அறிந்து அவர்களுக்கு உதவவுவதே பொருத்தமானது. கிராம சேவகர் மட்டங்களில் அவர்கள் தனிப்பட்ட ரீதியாக தீர்மானிக்கின்ற நிலைமைகள் ஏற்பட்டு விட்டன. இந்த நிலைமை மாற வேண்டும்.
மேலும் பாஸ் அனுமதி கொடுக்கிற முறையிலும் இலஞ்சம் புகுந்து விட்டது. இது வெறுமனே அரசாங்க நிறுவனங்களை மட்டும் நம்பியிருப்பதால் ஏற்படுகின்ற பாதகமான பக்கங்களாக இருக்கின்றது. எனவே உள்ளுர் மட்டங்களில் செயற்படுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களினதும் சனசமூக நிலையங்களினதும் ஈடுபாட்டை ஏற்படுத்த வேண்டும். அதுவே அனைவருக்கும் சமமான உதவிகள் கிடைப்பதையும் அனைவரும் பாதிக்கப்படாமல் இருக்கின்ற நிலைமையையும் ஏற்படுத்தும்.
கேள்வி – அரசின் தீர்மானங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள்?
பதில்: - நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட பின்னர் அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற அதே நேரத்தில் பொது மக்களின் நலன் கருதி சில தீர்மானங்களையும் எடுத்து அறிவித்திருந்தது. குறிப்பாக அத்தியாவசியப் பொருட்களுக்கு அரசாஙகம் விலை நிர்ணயம் செய்திருந்தது.
ஆனால் அந்த நிர்ணய விலைகளுக்கு பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமையே இருக்கின்றது. ஏனெனில் கட்டப்பாட்டு விலைகளில் பொருட்கள் இல்லை. குறிப்பாக அரசாங்கம் அறிவித்தாலும் அரசின் சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் கூட அதனைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இங்கு வியாபாரிகள் கட்டப்பாட்டு விலைக்கு பொருட்கள் இல்லை என கூறி விடுகின்றனர். சதொச கூட்டுறவு போன்ற அமைப்புக்களில் அதனை வாங்க பொருட்கள் இல்லை. எனவே அரசின் அறிவிப்புக்களுக்கும் நடைமுறைக்கும் இடையே பாரிய இடைவெளி ஏற்படுகின்றது.
இந்த இடைவெளியை அரசாங்கம் அறிந்து தீர்த்து வைக்க வேண்டும். அதற்குரிய வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை வழிப்படுத்த வேண்டும். எனவே ஜனாதிபதி ஆளுநர்களுக்கும் மாவட்டச் செயலாளர்களுக்கும் போதிய அதிகாரங்களையும் உரிய வழிகாட்டுதல்களையும் அவர்களுக்கான கடப்பாடுகளையும் தெளிவாக வரையறுத்து வழங்குதல் வேண்டும்.
கேள்வி – மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நிலைமையில் அரசியல் பிரதிநிகளின் செயற்பாடுகள் எவ்வாறாக உள்ளதெனக் கருதுகின்றீர்கள்?
பதில்: - சமூகம் பாதிக்கப்படுகின்ற நிலைமையில் சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறு சமூகப் பொறுப்புடன் சிலர் செயற்பட்டுக் கொண்டிருந்தாலும் சில உறுப்பினர்கள் அரசியல் இலாபம் கருதியும் செயற்படுகின்றனர். குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல அரசியற் கட்சிகளும் பல உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் அவை அனைத்து மக்களுக்கும் சென்றடைவதில்லை. அகவே இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கின்ற வேலையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இதற்கமைய அரசியல் கட்சிகளின் உள்ளூராட்சி மட்டங்களில் இருக்கும் பிரதிநிதிகள் சமூகத் தலைவர்கள் என ஒவ்வொரு கிராமங்களிலும் ஒரு குழுவாக இணைந்து செயற்படுகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
இன்றைய நிலைமையில் அரசியல் தலைவர்கள் என்ன பேசுகின்றனர்; என்பது முக்கியமில்லை. அரசாங்கம் தன்னுடைய செயற்பாட்டை மட்டும் நம்பி;யிருக்க கூடாது. அது மோசமான நிலையை உருவா க்கும். அரசின் இராணுவம் உட்பட பலரும்; அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். ஆனால் சமூகத்தின் தேவையை ஒருங்கிணைக்க அது போதாது. ஆகவே சகலரையும் ஒருங்கிணைத்துச் செயற்படுகின்ற அரசியற் கட்சிகளும் அரசும் இணைந்து வேலைகளை முன்னெடுக்க வேண்டும்.
கேள்வி - இந்த நேரத்தில் தமிழ்க் கட்சிகளின் செயற்பாடுகள் எவ்வாறாக உள்ளது?
பதில்: - தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் சரியோ பிழையோ கூட்டமைப்பிலேயே அதிகம் உள்ளனர். ஆகையினால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நிலைமையில் அவர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பானது பாதிப்புக்களிலிருந்து மக்களை மீட்டெடுப்பதாகவே அமைய வேண்டும்.
ஆகையினால் இன்றைக்கு மக்களை பாதிப்புக்களிலிருந்த மீட்டெடுக்கும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். எனவே தமிழர் தரப்பிலுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் அனைவரையும் அழைத்து பேசி சகலரையும் இணைத்து பொதுவான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வெண்டியது மிக அவசியமானது.
அதனைச் செய்யாமல் விட்டுவிட்டு இங்குள்ள கட்சிகள் பலவும் இந்த நெருக்கடி நிலைமைகளிலும் எப்படி தேர்தல் பிரச்சாரம் செய்லாம் என்ற அடிப்படையில் தான் செயற்படுகின்றன. அதுவும் கூட்டமைப்பு இப்படி செயற்படுமாக இருந்தால் தமிழ் மக்களின் தலைவிதி அவ்வளவு தான். இது எமது மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். அரசியல் கட்சி என்பது மக்களின் அன்றாட வாழக்கையோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அதடிப்படையிலேயே செயற்பட வேண்டும்.
கேள்வி – பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்: -பாராளுமன்றம் ஊடாக எதனையும் செய்வதில்லை. பாராளுமன்றம் ஒரு சட்டவாக்க நிறுவனம் மட்டும் தான். அங்கு சட்டம் ஆக்கலாம். அங்கு அரசியல்வாதிகள் பேசலாம். ஆனால் அங்கு கொரோனா சம்பந்தமாக நிர்வகிப்பதற்கோ தேர்தல் நடாத்துவதற்கோ பாராளுமன்றம் தான் தீர்மானிக்க வேண்டிய அவசியமில்லை.
எல்லாவற்றையும் விட முக்கியமானது என்னவென்றால் அதாவது பாராளுமுன்றத்தை விட மாகாண சபைகளை செயற்பட வைப்பது மிகப் பிரதானமானது. ஏனெனில் மாகாண சபைகள் என்பது வெறும் பேசுகின்ற மேடைகளைக் கொண்ட நிறுவனம் அல்ல. மாகாணங்களில் உள்ள வைத்தியசாலைகள் சுகாதார நடவடிக்கைகள் எல்லாம் பெரும்பாலும் அதற்குள் தான் உள்ளது. அப்படிப்பட்ட நிறுவனங்களை கூட்ட வேண்டும். தேர்தல் இல்லாமல் அதனைக் கையாள வேண்டும். அது தான் இன்றைய தேவை.
கேள்வி – அவ்வாறாயின் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டுமென எதிர்க்கட்சிகள் எதற்காக கோரி வருகின்றன?
பதில்: - எதிர்க்கட்சிகள் தங்கள் அரசியலுக்காகவே பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமெனக் கோருகின்றன. ஏனெனில் பாராளுமன்றத்தைக் கூட்டினால் அடுத்தவரும் தேர்தலுக்கு அதனைப் பயன்படுத்த முனைகின்றனர். தங்கள் அரசியலுக்காகவே பாராளுமன்றத்தை கூட்டு கூட்டு என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
அவ்வாறு பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் இந்த நாட்டில் என்ன நடக்கப் போகிறது. வெறுமனே பாராளுமன்றத்தைக் கூட்டினால் கொரோனா பாதிப்பை நிறுத்த முடியுமா. பாராளுமன்றம் என்ன சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கமா அல்லது பொருளாதார நிபுணர்களின் மன்றமா. கொரோனாவை கட்டப்படுத்தவோ பொருளாதார முன்னேற்றத்திற்காகவோ அல்லாமல் வெறுமனே பாராளுமன்றத்தில் தங்களுடைய வாய்ச்சவால்களைக் காட்டத் தான் கேட்கின்றனர். ஆனால் வாய்சவால்களைக் காட்ட இதுவல்ல நேரம்.
இன்று மக்கள் படும் கஷ்டங்களில் எதிர்க்கட்சிகள் எத்தகைய பங்களிப்பை செய்து வருகிறன என்று பாருங்கள். அவ்வாறு மக்களுக்கு எதனையாவது செய்வதை விடுத்து பாராளுமன்றத்தை கூட்டு கூட்டு என்று தான் கேட்கின்றனர். அவ்வாறு அவர்கள் கேட்பது தங்கள் அரசியலுக்காகவே தான்.
கேள்வி – தேர்தலை நடாத்தப் போவதாக அரசும் தேர்தலை பிற்போட வேண்டுமென எதிர்த் தரப்பும் கூறி வருகின்ற நிலையில் தேர்தல் திகதி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளதே?
பதில்: - தேர்தல் நடாத்தாமல் விடுவதாலும் நெருக்கடி ஏற்படும். நடாத்தாமல் எப்படி தீர்வு காணுவது என்பது குறித்த எல்லாரும் கலந்துரையாடி தேர்தல் இல்லாமலே இந்த விடயத்திற்கு தீர்வைக் கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும். ஆனால் அதற்காக சட்டபூர்வமற்ற முறைகளில் அல்லது அரசியல் யாப்புக்களை மீறி அல்லது நிராகரித்து அதனை மேற்கொள்ள முடியாது.
நாட்டின் சட்டங்களையும் கட்சிகளின் அபிப்பிராயங்களையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் தான் வழி என்றால் கொரோனா பாதிப்பு விரிவடைய எந்தச் சந்தர்ப்பமும் கொடுக்காமல் இன்றைய சூழலக்கு ஏற்ற வகையில் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக தேர்தலை நடாத்த முயற்சிப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும்.
ஆயினும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திகதியிலும் தேர்தல் நடாத்துவது சந்தேகத்திற்கிடமானது. கொரோனா சில நாட்களாக தொற்றும் வேகத்தை பார்க்கையில் இன்னும் பல மடங்காக விரிவடை யுமா என்ற அச்சம் உள்ளது. அப்படியான நிலையில் அந்தத் திகதியில் கூட எப்படி நடக்கப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் நோய்ப் பாதிப்பு ஏற்படுத்தாமல் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் சேர்ந்து தீர்மானிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் ஒரு தீர்வும் வரப்போவதில்லை. தேர்தலை தள்ளிப் போடுவதால் அரசியல் யாப்பு நெருக்கடி ஏற்படும். பாராளுமன்றத்தைக் கூட்டினாலும் அந்த அரசியல் யாப்பு நெருக்கடி ஏற்படும். இவை எல்லாவற்றையும் கவனமெடுத்து செயற்பட வேண்டும்.
இதற்குள் இங்குள்ள எதிர்க்கட்சிகள் தமக்கு ஒரு வேலை வேண்டுமென்பதற்காக வெறுமனே அரசைக் குறை சொல்லி அறிக்கை விடும் சுயநல அரசியல் பொருத்தமில்லாதது.
எனவே அரசியல் யாப்பு நெருக்கடியை தீர்ப்பதற்கு தேர்தல் அவசியமானது. ஆனால் அந்த தேர்தலை இந்த நெருக்கடியான காலத்தில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதனை அரசும் அரசியல் கட்சிகளும் இணைந்து தீர்மானிக்க வேண்டும்.
எஸ்.நிதர்ஷன் - பருத்தித்துறை விசேட நிருபர்