அரசுக்கு ஆதரவளிக்க தயாராகவே இருக்கின்றோம் | தினகரன் வாரமஞ்சரி

அரசுக்கு ஆதரவளிக்க தயாராகவே இருக்கின்றோம்

அரசுடன் எந்தவித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எந்தவித உடன்படிக்கையும் எங்களுக்குள் கிடையாது. பிரதமர் அழைத்ததால் நாம் சென்று எமது மக்களின் நலன்களின் அடிப்படையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள் குறித்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் வலியுறுத்தியிருக்கின்றோம் என்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா. தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கி நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி: கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்து வருகின்ற நடவடிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

பதில்: - கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதே போல இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் இடங்கள் உட்பட நாடு முழுவதும் பரவி வருகின்றதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் தாமதமாகப் பரவிய இந்த வைரஸ் பரவல் தற்போது வேகமாகப் பரவுகின்றது
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கஷ்டங்களை அவர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பாதிப்புக்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. மக்களின் வாழ்வை வளப்படுத்தி வாழ்வாதார ரீதியாக அவர்களுக்கு உதவிகளை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.

நாங்கள் போரினால் பாதிக்கப்பட்டவர்கள். எங்கள் பிரதேசங்கள் பசி பட்டினியால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அரசுகள் கவலைகொள்ளவில்லை.

தற்போது கொரோனோ பரவல்  அச்சம் ஏற்பட்டிருக்கின்ற போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைக்கும் அதேவேளையில் உரிய முறையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்பதையே நாங்கள் வலியுறுத்துகின்றோம். அனைத்து சிவில் நிர்வாகச் செற்பாடுகளிலும் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதை ஏற்க முடியாது.

கேள்வி: பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டுமென கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகள் இணைந்து எடுத்த தீர்மானம் தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றது?

பதில்: - நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்த நேரத்தில் நாங்கள் உட்பட எதிர்க்கட்சிகள் பலவும் இணைந்து பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டுமென தீர்மானமொன்றை எடுத்து ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தோம்.

அந்த வேண்டுகோளில் கொரோனா பரவலைக் கட்டுப்படுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் தீரமானிப்பதற்கும், தேர்தலை நடாத்த முடியாத நிலைமை உள்ளதால் மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் ஆலாசனைகளுக்கமைய தீர்மானம் எடுக்க வேண்டுமென்றும் நிதி கையாளும் விடயங்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த மூன்று விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தீரமானம் எடுப்பதற்கு பாராளுமன்றத்தை மீளக் கூட்ட வேண்டிய அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தோம். இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் மட்டுமே தீர்மானங்கள் எடுக்க முடியாதென்பதை குறிப்பிட்டிருந்தோம்.

அரசிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம் உங்களை ஆதரிப்போம், ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் என்றெல்லாம் நாங்கள் உறுதி வழங்கியிருந்தும் கூட  பாராளுமன்றத்தை மீளக் கூட்ட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமையில்தான் மகிந்த ராஐபக்ச பிரதமர் என்ற அடிப்படையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கூட்டமொன்றை கூட்டினார்.

கேள்வி: பிரதமரின் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த போதும் கூட்டமைப்பு சென்றதற்கான காரணம் என்ன?

பதில்: - கடந்த மாதம் 30 ஆம் திகதி பிரதமரினால் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாங்கள் கூட்டமைப்பாக எமது கட்சி உறுப்பினர்களிடத்திலும் பல தரப்பினர்களுடனும் இந்த விடயம் குறித்து பேசியிருந்தோம்.

முடிவாக கூட்டத்திற்குப் போவதெனத் தீர்மானமொன்றை எடுத்திருந்தோம். அதற்கமையவே நாங்கள் கூட்டத்திற்கும் சென்று தற்போதைய நிலைமைகள் மற்றும் எமது மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்தும் பேசியிருக்கின்றோம்.

இதேநேரம் எதிர்க்கட்சிகளும் அந்தக் கூட்டத்திற்குப் போவதாகவே முன்னர் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் இறுதியில் அவர்கள் போகவில்லை என அறிவித்திருந்தனர். ஆனாலும் ஐக்கிய தேசியக் கட்சியோ சஜித் பிரேமதாச தரப்பினரோ போகவில்லை என்பதால் அதனை நாங்கள் பொருட்படுத்தாமல் நாங்கள் தீர்மானித்ததன் அடிப்படையில் சென்று எமது மக்களின் பிரச்சினைகள் தேவைகளை குறித்துப் பேசியிருக்கின்றோம்.

கூட்டமைப்பை பொறுத்தவரையில் நாங்கள் எடுத்த அந்த தீர்மானம் இன்றைக்கு சர்வதேச  ரீதியாகவே பலரும் வரவேற்றிருக்கின்றர். எமது இந்த அணுகுமுறையை அல்லது நிலைப்பாட்டை பலரும் ஆதரித்து எமக்கு பாராட்டுக்களைக் கூட தெரிவித்து வருகின்றனர்.

நாங்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து எதிர்க்கட்சியாகச் செயற்பட்டாலும் அரசிற்கு ஆதரவு வழங்க ஆயத்தமாக இருக்கின்றோம்.
எதிர்க்கட்சிகளுடைய தீர்மானத்தை பிரதிபலித்திருந்தோம். பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வற்புறுத்தியிருந்தோம். ஆனாலும் 3 கட்சிகளும் கையெழுத்திட்டு ஒரு அறிக்கையை அனுப்ப ஆயத்தமாக இருந்தோம்.

உதாரணமாக இனப்பிரச்சினையை நாங்கள் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. எங்களுடைய பிரதேசங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் நடைபெறும் விடயங்கள் கொரோனோ பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை அரசிற்கு சொல்ல வேண்டுமென்றிருந்த நிலையில் அரசாங்கமே அழைத்ததால் நாம் சென்று சந்தித்து அவற்றைத் தெளிவுபடுத்தினோம்.

அந்தச் சந்திப்பின் பின்னர் இன்னொரு சந்தர்ப்பமும் எமக்குக் கிடைத்தது.. அதாவது கூட்டம் காலை நடைபெற்று முடிந்தவுடன் மலையில் எங்களை மீளவும் ஒரு சந்திப்பிற்கு பிரதமர் அழைத்திருந்தார். அந்தக் கூட்டத்தில் பசில் ராஜபக்ச மற்றும் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் கடந்த காலங்களில் இனப்பிரச்சினை விடயம் உள்ளிட்ட விடயங்களைக் கையாண்டிருக்கின்ற நிலைமையில் அவர்களிடம் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தோம். ஆக எமது மக்களின் பிரச்சினைகள் தேவைகள் தொடர்பில் இந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் அரசிற்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம்.

கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து சாதகமான சமிக்ஞை வெளிப்பட்டதா?

பதில்: நாங்கள் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து பேசியிருக்கின்றோம். கொரோனா விளைவுகள் இனப்பிரச்சினை, தேர்தல் சம்பந்தமாக நிதி கையாளும் விடயங்களை தெளிவாக ஆராய்ந்து நாம் பேசிய பின்னர் நல்ல உத்தியை உபாயத்தைக் கையாண்டிருக்கின்றீர்கள் இதனைத் தொடர வெண்டுமென்று தான் எமக்கு பலரும் சொல்லியுள்ளார்கள்.

ஆக நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் எங்கள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கின்றோம்.

இந்தச் சந்திப்பின் பின்னர் தமிழ் மக்கள் சார்பில் நாம் முன்வைத்த பல விடயங்களை பிரதமர் மகிந்த ராஐபக்ச ஏற்று அதற்கான தீர்வினைக் காண வேண்டுமென்ற அபிலாசையை வெளிப்படுத்தியிருந்தார்.

ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் முன்வைத்த விடயங்களில் இந்த அரசும் ஜனாதிபதியும் எதிர்காலத்தில் எடுக்கும் தீர்மானங்களில் தான் எல்லாம் தங்கியுள்ளது. இதற்கமையவே எங்கள் எதிர்காலம் தங்கியிருக்குமென்று நாங்கள் சொல்லியுள்ளளோம். அல்லது அடுத்த கட்டம் எதுவாக இருக்குமென்று சிந்திப்போம் என்பதையும் கூறியுள்ளோம். அதற்காக நாங்கள் யாருடனும் சேர்ந்துவிட்டோம் அல்லது உடன்பாட்டுக்கு வந்தவிட்டோம் என்ற அர்த்தம் இருக்க முடியாது.

கேள்வி: - இச் சந்திப்பின் போது கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்த சாதகமான பதில்கள் கிடைத்துள்ளனவா?

பதில்: - நாங்கள் குறிப்பிட்ட விடயங்களை பதிவு செய்தனர். கைதிகள் விடயத்தில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். அதேபோல ஏனைய பல பிரச்சினை சம்பந்தமாகவும் சொல்லியுள்ளனர். பீரிஸ் மாகாண சபைகள் குறித்தும் பேசினார். அவற்றுக்கு அதிகாரங்கள் இல்லையென்றும் அது வேண்டுமென்றும் சம்பந்தர் சொன்னபோது அதைக் குறித்தும் பேசலாம் என்று சொல்லியுள்ளனர். இதற்கு மேலாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் காண வேண்டுமென பிரதமரும் கூறியிருக்கின்றார்.

பிரதமர் மகிந்த ராஐபக்ச எங்களிடம் சொன்னதைப் போல ஆராய்ந்து பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதாக மறுநாள் அறிவித்திருக்கின்றார்.

அதனை ஒரு நல்ல சமிக்ஞையாகப் பார்க்கிறோம். அதற்காக நாங்கள் அதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைந்திருக்கவில்லை. ஏனெனில் கடந்த கால அனுபவங்கள் அவ்வாறு அமைந்திருந்தன.  அரசுடனான சந்திப்பின் போது நாங்கள் கூறிய விடயங்களுக்கு அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளைப் பொறுத்தே கூட்டமைப்பின் திருப்தி இருக்க முடியும். ஆகவே அரசாங்கம் என்ன செய்யப் போகின்றதென்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கேள்வி: பிரதமர் மகிந்தவின் சந்திப்பிற்கு கூட்டமைப்பு சென்றது குறித்து குற்றச்சாட்டுக்குள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற அதேநேரத்தில் ஒப்பந்தங்களைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறதே?

பதில்: - அப்படி எந்தவித ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை. எந்தவித உடன்படிக்கையும் எங்களுக்ககுள் கிடையாது. பிரதமர் அழைத்ததால் நாம் சென்று எமது மக்களின் நலன்களின் அடிப்படையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தேவைகள் குறித்தும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் வலியுறுத்தியிருக்கின்றோம்.

இவ்வாறு குற்றம் சுமத்துகின்ற தரப்பினருக்கு மக்கள் குறித்து அக்கறையில்லை. மக்களது பிரச்சினைகள் தேவைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறை கிடையாது அல்லது தெரியாது. இவை தொடர்பான நிகழ்ச்சி நிரல் கிடையாது.

குறிப்பாக பாராளுமன்றத்தை மீளக் கூட்டுங்கள். நாங்கள் ஆதரிக்கிறோம். தோற்கடிக்க மாட்டோம். எதிர்க்கமாட்டோம் என்றும் சொன்ன போது ஒரு வார்த்தையேனும் எவரும் விமர்சிக்கவில்லை.

அதற்கான பதிலை மக்கள் நிச்சயமாக தெரிந்து கொண்டிருப்பார்கள். அதை நாங்கள் இப்போது பதிலாக சொல்ல விரும்பவில்லை.

ஆற்றல் அறிவு படைத்தவர்கள் இராஐதந்திர வட்டாரத்திலுள்ளவர்கள் என எல்லோருடனும் ஆராய்ந்து தான் நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுத்தோம். அது எங்கள் கட்சிக்குரிய தீர்மானம் கட்சியால் கடைப்பிடிக்க வேண்டிய உபாயம்.

எதிர்காலத்தில் ஒரு வேலைத் திட்டம் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தால் அதற்கான அடித்தளமாகவும் இந்தச் சந்திப்பை பயன்படுத்த வேண்டியதாக அமையும்.

கேள்வி - கூட்டமைப்பின் இத்தகைய புதிய அணுகுமுறையால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென்று எதிர்பார்க்கின்றீர்களா?

பதில்: இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டில் கொரோனாவை கட்டப்படுத்துவது மட்டுமல்ல இனப்பிரச்சினை உட்பட்ட ஏனைய பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் உச்ச அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகத்தை பலமாக்கி அந்த ஜனாநாயகத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்.

மஹிந்த  ஒரு பழுத்த அரசியல்வாதி பலமுறை ஜனாதிபதியாக பிரதமராக இருந்தவர். அரசாங்கமும் அவர்களது கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசிய பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதிபலிப்பு என்னவாக இருக்கிறதென்பதை இப்பொழுது அறிவித்திருக்கிறார்கள். அதை உலகமும் இராஜதந்திர வட்டாரமும் கவனத்தில் கொள்ளும்.

ஆனால் எங்களுக்கு இருக்கும் அனுபவங்களின் அடிப்படையில் நாங்கள் உடனடியாக திருப்தி மகிழ்ச்சியோ படவில்லை.  ஆனால் எதிர்காலத்தில அரசின் நடவடிக்கைகள் மிக முக்கியமாக கொரோனா முடிவிற்கு கொண்டு வரப்பட வேண்டும். கொரோனாவை முடிவிற்கு கொண்டு வரப்பட்டு அடுத்ததாக நாட்டிலுள்ள இனப்பிரச்சினை மக்களுடைய வாழ்வாதாரம் வாழ்வுரிமையை நிறைவேற்றக் கூடிய சந்தர்ப்பம் உருவானால் அது தான் சிறந்த செய்தியாக இருக்கும்

கேள்வி: தேர்தலை இலக்கு வைத்து கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?

பதில்: - இவ்வாறான குற்றச்சாட்டுக்களைச் சுமத்துபவர்களுக்கு அவ்வாறு பேச மட்டுமே தெரியும்.  அதுபற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாட்டில் தேர்தல் ஒன்று வரப்போகிறது தான்.  தேர்தலுக்கு முன்னர் எந்த விடயங்களை பேச வேண்டுமோ அதை நாங்கள் பேசியுள்ளோம்.

ஆகவே தேர்தல் வருகின்ற போது தேர்தலைப்பற்றி அந்த நேரத்தில் பேசலாம். இப்போது பேசுவது தேர்தலைப்பற்றியது அல்ல. இதை நாங்கள் தெளிவாகவே சொல்லியுள்ளோம்.
எங்கள் இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. அதற்காக பல இலட்சக்கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்த பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. முதலில் எதைக் குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமோ அதை நாங்கள் பேசியிருக்கிறோம். எதிர்க்கட்சிகளின் அறிக்கையின் மூலம் அரசுக்குச் சொல்லியதை நாங்கள் நேரில் சொல்ல சந்தர்ப்பம் கிடைத்த போது அதனை வற்புறுத்தியிருக்கிறோம்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பொழுது அடுத்த நாள் கொரோனா தாக்கம் தீவிரமடைந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காலம் குறிக்கப்படாமல் இருக்கிறது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மூன்று மாதங்களில் மீள கூட்டப்பட வேண்டுமென்ற ஒரு முறை இருந்தாலும் அதைச் செய்ய முடியாத ஒரு நிலைமை உள்ளது. உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது போல இலங்கையிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் அதனைக் கட்டுப்படுத்தி அதற்கான தீர்வை காண வேண்டும்.
இவ்வாறான நிலைமைகள் இருக்கையில் இப்பொழுது நாங்கள் சென்று பேசியது தவறு என்று சொல்வது ஒரு அறிவிலித்தனமான அல்லது கொள்கையற்ற சந்தர்ப்பவாதமான பேச்சாக அல்லது செயற்பாடாகவே பார்க்கிறோம்.

எஸ்.நிதர்ஷன் - பருத்தித்துறை விசேட நிருபர் 

Comments