கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவது சாத்தியமா? | தினகரன் வாரமஞ்சரி

கலைக்கப்பட்ட பாராளுமன்றை மீண்டும் கூட்டுவது சாத்தியமா?

அரசாங்கங்கள் மாறலாம் ஆட்சியாளர்கள் மாறலாம் ஆனால் ஒரு நாட்டில் மக்களுக்கான ஆட்சியின் அடிப்படை தர்மத்தை தராதரத்தை, சட்டதிட்டங்களை, நிபந்தனைகளை கைகொள்ள வேண்டிய விடயத்தை உள்ளடக்கியதுதான் அந்நாட்டின் அரசியல் யாப்பு. நாட்டின்  அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் அந்நாட்டு அரசாலும் மக்களாலும் அர்ப்பணிப்புடனும் பயபக்தியுடன் நடைமுறை படுத்தபடவேண்டும். யாப்பில் குறைகள் இருக்கலாம், அனால் இருப்பதை சொல்லப்பட்டதை நடைமுறைப்படுத்தவேண்டும்.

அது பாராளுமன்றத்தை கலைப்பதாகட்டும் கூட்டுவதாகட்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஆகட்டும் , தேர்தல் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் யாப்பில் சொல்லபட்டவாறே நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அவ்வாறு அரசியல் யாப்பின் பிரகாரம் நாட்டை நிர்வகிக்கும், ஆட்சி செய்யும் நாடுகள் தான் முன்னேற்றகரமான ஜனநாயகத்தை கொண்ட நாடுகளாகவும் , அபிவிருத்தி அடைந்த நாடுகளாகவும், ஸ்திரமான பொருளாதார வளர்ச்சியை கொண்டதும் மனித உரிமைகளை , சட்டத்தை மதிக்கும் நாடுகளாகவும் இருகின்றது.

ஆகவே இலங்கையிலும் எது நடக்கவேண்டும் என்றாலும் அது அரசியல் யாப்பின் பிரகாரமே நடைபெற வேண்டும். யாப்பை இலங்கை மக்களும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களும், ஜனாதிபதியும்  மதித்து நடைமுறைப்படுத்த வேண்டும். யாப்பில் சொல்லப்பட்டுள்ள அனைத்து  விடயங்களும் சரியாக  நடைமுறைபடுத்தப்படுவதில்லை என்பது தெரியும் . இருந்தாலும் மக்களாகிய நாம், எம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள், உணர்வுகள், அனுபவங்களுக்கு அப்பால் யாப்பில் சொல்லப்பட்டதின் பிரகாரம் ஒரு நாட்டின் ஆட்சி இருக்க வேண்டும் என்ற நிலைபாட்டில்  இருந்து தவறக்கூடாது. அதற்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கவேண்டியது  இந்நாட்டை நேசிக்கும் ஒவ்வொரு குடிமக்களினதும் கடைமையாகும்.

இதனடிப்படையில், மார்ச் 3 ஆம் திகதி  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்துக்குள் தேர்தல் நடாத்தப்பட்டு பாராளுமன்றம் கூட வேண்டும் என்பது யாப்பின் விதி .
அதாவது 3 மாதத்துக்கு மட்டுமே ஒரு நாடு பாராளுமன்றம் இல்லாமலும் அரசாங்கம் இல்லாமலும் இருக்கலாம் .

அரசாங்கமும் பாராளுமன்றமும் ஏன் முக்கியம் ?

1. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான அரசாங்கம் இருப்பது முக்கியம்.
2. நாட்டில் நடக்கும் எல்லா நடவடிக்கைகளும் மக்களுக்கு வெளிப்படைதன்மையுடன் தெரியப்படுத்தவும் பொறுப்பு கூறவும்
3. நிதி உதவிகள் கடனுதவிகள் போன்றவற்றுக்கு  அப்பொறுப்பு கூறவும், அவை எவ்வாறு கையாளப்படுகின்றது என்று பாராளுமன்றம்தான் முடிவு எடுக்க வேண்டும். குறிப்பாக கொரோனா நிவாரண உதவியாக பெருந்தொகைப்பணம் மற்றைய நாடுகளால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன   
4.  சட்டம் ஒழுங்கு போன்றவற்றை நடைமுறைபடுத்த ,தேவையான சட்டங்கள் உருவாக்க, சட்டத்திருத்தம் செய்ய .
5. ஒரு நாடு பாராளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் இன்னொரு நாட்டிடம் இருந்து கடனை பெற்று கொள்ளமுடியாது,
6. அவசர கால அதிகாரங்களை உருவாக்குவதற்கு பாராளுமன்றம் தேவை.

ஆகவே கொரோனாவால் வீழ்ந்த பொருளாதரத்தை கட்டி எழுப்புவதன் பிரதான நடவடிக்கையாக வெளிநாட்டு முதலீடுகள் இலங்கையில் செய்யப்படவேண்டும் . இவ்வாறு முதலீடு செய்ய வரும் நாடுகள் ஒரு நாட்டில் அரசாங்கம் அதிகாரத்தில் இல்லாவிட்டால்,அரசியல் யாப்பின் பிரகாரம் சட்டம் ஒழுங்கு போன்றவற்றை நடைமுறைபடுத்துகின்றோம் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் முதலீடு செய்ய மாட்டார்கள். பொறுப்பு கூற அரசாங்கம் ஒன்று தேவை இல்லையா ?
இந்த இக்கட்டான சூழலில் சர்வதேசம் நாம் எவ்வாறு covid19 ஐ கையாண்டோம், நாட்டில் எவ்வகையான அதிகார கட்டமைப்பு உள்ளது  என்றுதான் பார்ப்பார்களே ஒழிய எத்தனைபேர் இறந்தார்கள் , எத்தனைபேர் குணப்படுத்தப்பட்டார்கள் என்பதை கவனிக்க மாட்டார்கள்.

ஆகவே அரசாங்கம், எதிர்க்கட்சி,  பாராளுமன்றம் என்பவை  தற்போது இன்றியமையாதவை.

கொரோனா தொற்று உள்ளவர்கள் இனங்காணப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நிலைமையில் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுப்பது கொரோனாவை விட ஆபத்தானது , காரணம் தேர்தல் திட்டமிடப்பட்டபடி நடக்க வேண்டும் என்றால் முதலாவது அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்யவேண்டும் , மக்கள் கூடும் கூட்டங்களை கூட்டவேண்டும் , சந்திப்புக்களை செய்யவேண்டும் , சாதாரண காலத்தை விட தேர்தல் காலத்தில் பெரிய அளவிலான மக்கள் சந்திப்புக்கள், போக்குவரத்துக்கள்  நடைபெற வேண்டும்.
இரண்டாவது கட்டமாக தேர்தல் நடக்கும் நாள் வாக்கு சாவடிகளுக்கு மக்கள் செல்லவேண்டும், அதன் பின் வாக்கு என்னும் இடங்களிலும் மக்கள் கூடுவர்.
அதுமட்டுமல்ல உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையுடன் செயல்பட வேண்டுமாயின் நாம் முன்னையை விட அதிக பணத்தை சுகாதார பாதுகாப்புக்கு செலவு செய்யவேண்டும்.

ஏற்கனவே, சிறு வியாபாரம் செய்பவர்கள், அன்றாடம் தொழில் செய்து பிளைப்பவர்களின் வருமானம் கேள்விக்குறியாகி உள்ளது.

நாடு ஸ்தம்பித்து போனதால் பொருளாதாரம் ஸ்தம்பிக்கவில்லை மாறாக அதள  பாதாளத்தில் விழுந்துள்ளது . இந்நிலையில், தேர்தல் செலவுக்கு முன்னர் கணித்ததை விட, அதிகமாக பணம் தேவை. இப்பணம் பொருளாதாரத்தால் வருமானம் இல்லாமல் நலிந்து போனவர்களுக்கு உதவலாம் இல்லையா? மேலும், மேலும் பொருளாதாரம் பாதிப்படைந்தால் பட்டினியால் வாடப்போவது மேல்வர்க்க மக்களோ, அரசியல்வாதிகளோ, ஆட்சியாளர்களோ அல்ல இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் கீழ் மட்ட மக்களே.

மக்களின் வாழ்வையும், ஆரோக்கியத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு  ஆட்சியாளர்கள்  தேர்தலை பிற்போட்டு கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டி இலங்கை தேசத்தை கட்டி எழுப்ப முன் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது இந்நாட்டை நேசிக்கும் குடிமக்களின் அவாவாகும்.
இன்னுமொரு விடயத்தையும் இங்கே சொல்ல வேண்டும். தேர்தல் நடத்தப்படும்போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் வருவது கட்டாயம்.

ஆனால், இன்று உலகமே லொக்டவுனில் இருக்கும்போது அவர்கள் வருவதென்பது சாத்தியமில்லை. இந்த நிலையில் தேர்தலை நடத்துவதும் சாத்தியமாகுமா?

நளினி ரட்ணராஜா

Comments