![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/05/17/dullas-alahapperuma.jpg?itok=dW4K-EUD)
‘தேர்தல்கள் ஆணைக்குழுவின் முடிவுக்கு ஒழுக்கமான மனிதர்களாக நாம் கீழ்ப்படிய வேண்டும்’ என்கிறார் கல்வி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும.
கேள்வி; நீங்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயல்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரமாகின.அதன் உண்மை என்ன?
பதில்; சமூக ஊடகங்கள் எவ்வாறு மோசமாக நடந்து கொள்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணமாகும். இது பொய்யான குற்றச்சாட்டாகும். எனது முப்பது வருட அரசியல் வாழ்க்கையில் நான் ஒருபோதும் சட்டத்தை மீறியதில்லை. நவீன தொழில்நுட்பத்தை பொய்களை சமூகத்துக்கு வழங்க பயன்படுத்துவது தெளிவாகின்றது.
கேள்வி; கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
பதில்; இது தொடர்பான முடிவுகளை சுகாதாரப் பிரிவினரே எடுக்க வேண்டும். நாம் இது தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். மே மாதம் 11ந் திகதி பாடசாலைகளை ஆரம்பிக்க எண்ணியிருந்தோம். ஆனால் தற்போதைய நிலைமையில் அது சாத்தியமில்லை என சுகாதாரப் பிரிவினர் கருதுகின்றார்கள். பாடசாலை மாணவர்களை நோய்த் தொற்றாளர்களாக்க நாம் விரும்பவில்லை. உலக சுகாதார நிறுவனமும் கொரோனா கட்டுப்பாட்டின் இறுதிக் கட்டம் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது எனக் கூறியுள்ளது.
கேள்வி; பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும்போது முதலில் க.பொ.த (சாதாரண தர) மாணவர்களை அழைக்கும் ஆயத்தம் உள்ளதா?
பதில்; உண்மையில் பாடசாலைகளை ஆரம்பிக்க நான்கு கட்டங்களை பின்பற்ற நாம் திட்டமிட்டுள்ளோம். பாடசாலைகளைத் திறந்து தொற்று நீக்கி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை ஆயத்தம் செய்துள்ளோம். இதற்காக சுகாதாரப் பிரிவினரதும் பெற்றோரினதும் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். இரண்டாவதாக,
பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களை அழைத்து புதிய நேர அட்டவணைகளையும் செயல்திட்ட குறிப்புகளையும் தயாரிக்க வேண்டும். மூன்றாவதாக சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்களை பாடசாலைக்கு அழைக்க வேண்டும். அதற்குக் காரணம் சமூக இடைவெளியை பேண மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படும். அத்துடன் ஆசிரியர்களின் பங்களிப்பும் அதிகமாக அவர்களுக்கு கிடைக்கும். அதன் பின்னரே ஏனைய வகுப்பு மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். இந்த நான்காவது திட்டம் செயல்படுவதற்கு முதலாவது திட்டம் தொடங்கிய பின்னர் ஒரு மாத காலமாவது எடுக்கும்.
கேள்வி: ஆரம்ப முன்பள்ளி மத்திய நிலையங்களையும் ஆரம்பிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதா?
பதில்; அவற்றை ஆரம்பிப்பதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனைய பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவற்றின் சுகாதாரப் பாதுகாப்பு உறுதி செய்யபட்ட பின்னரே முன்பள்ளிகள் திறக்கப்படும்.
கேள்வி; ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்துக்கு உட்பட்டிருந்ததாக கருத்தொன்று நிலவுகின்றது. இந்நிலைமை தொடர்பாக கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதா?
பதில்; ஆம்இஎமக்குத் தெரியும் ஓடி ஆடி வெளியே திரிந்த பிள்ளைகள் ஓரிரு மாதங்கள் வீட்டில் இருக்கும் போது மன அழுத்தத்துக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும். அதனால் நாற்பது இலட்சத்துக்கும் அதிகமான பிள்ளைகளை தாம் விரும்பிய தலைப்பில் புத்தகமொன்றை எழுதுமாறு அழைப்பு விடுத்துள்ளோம். அவ்வாறு எழுதப்படும் புத்தகங்களை கல்விச் சேவைகள் குழுவும், தேசிய நூலக சேவைகள் குழுவும் இணைந்து அச்சிடவுள்ளன. அதன் மூலம் அவர்களின் திறமையையும் வெளிக்கொண்டு வர முடியும். அதே போல் கல்வியமைச்சின் வழிகாட்டலுடன் இணையத்தளம் மூலம் பாடங்கள் குறித்து கலந்துரையாடும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்பட்ட பிரச்சினை என்னவென்றால் இணையத்தள வசதிகள் இல்லாத பிள்ளைகளே அதிகமாகக் காணப்படுகின்றார்கள். அதனால் தொலைக்காட்சி, வானொலி மூலமாகவும் ஒளி, ஒலிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். வானொலி, தொலைக்காட்சி வசதியில்லாத சில மாணவர்களுக்காக பாடங்களையும் பயிற்சிகளையும் தபால் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
கேள்வி; இம்முறை க.பொ.த சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களின் திறமையைப் பாராட்டும் நிகழ்வுகளை பிரசாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதல்லவா?
பதில்; இலட்சக்கணக்கான மாணவர்கள் தோற்றிய பரீட்சையில் ஒரு சிலரை மாத்திரம் பாராட்டுவது நியாயமா எனச் சிந்திக்க வேண்டும். நாம் மாணவர்களை திறமையானவர்கள், திறமையற்றவர்கள் எனப்
பாகுபடுத்தக் கூடாது. ஆகவே தேவையற்ற விதத்தில் அவர்களை மனஅழுத்தத்துக்கு உட்படுத்தக் கூடாது.
கேள்வி; நீங்கள் கூறும் மன அழுத்தம் அதிகமாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவரும் போது புள்ளிகள் தரப்படுத்தலில் ஏற்படுகின்றதல்லவா?
பதில்; ஆம்! அவர்களும் எமது பிள்ளைகளே. பிரபல பாடசாலைகளுக்கு அனுமதி பெற வழங்கும் புள்ளிகளை விட குறைந்தளவு புள்ளிகளை பெறும் மாணவர்கள் சித்தியடையாதவர்கள் எனக் கருதப்படுகின்றார்கள். அவர்கள் திறமையற்றவர்களா? இவ்விதத்தில் அவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களைய இம்முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.
கேள்வி; க.பொ.த(உயர் தர) பரீட்சை வினாப்பத்திரங்களை தயாரிக்கும் போது சில மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாகக் கூறப்படுவது உண்மையா?
பதில்; இப்பிரச்சினை கலந்துரையாடப்பட்டது. இப்பரீட்சை ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. பல மாற்றுவழிகள் ஆலோசிக்கப்பட்டன. முதலாவது பாடங்கள் பற்றியதாகும். முழுமையாகக் கற்பிக்கப்படாவிட்டால் பரீட்சையைப் பின்போடுவதாகும். இரண்டாவது கற்பிக்காத பாடங்களை
தவிர்த்து வினாத்தாளை தயாரிப்பதாகும். மூன்றாவது இவை எதனையும் கருத்தில் கொள்ளாது வழமை போன்று பரீட்சை நடத்துவது. இது நடைமுறைச் சாத்தியமற்றது. நாம் தற்போது மே மாதத்திலேயே உள்ளோம். நாம் இது பற்றி ஆராய்ந்து நியாயமான முடிவினையே எடுக்க எதிர்பார்க்கின்றோம்.
கேள்வி; ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் பாடசாலைகளில் தொழில்நுட்பக் கல்வியை பாடமாக்கியமை தற்போது பாராட்டப்படுகின்றது. நீங்கள் கல்வியமைச்சராக என்ன மாற்றங்களைச் செய்ய விரும்பிகின்றீர்கள்?
பதில்; புதிய பாடங்களை அறிமுகம் செய்வதை விட தற்போதுள்ள பாடங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவே விரும்புகின்றேன். உதாரணமாக உடற்கல்வி பாடப் பரீட்சையில் எழுத்துப் பரீட்சை மாத்திரமே நடைபெறுகின்றது. அது தவறாகும். செயன்முறை பரீட்சையும் நடைபெற வேண்டும். பரீட்சை முறைகளில் பல திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளன.
கேள்வி; ஆசிரிய இடமாற்றங்களை நவீன தொழில்நுட்பமுறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப் போவதாகக் கூறியிருந்தீர்கள்? தற்போது அதன் நிலைமை எவ்வாறுள்ளது?
பதில்; ஒரு வருட காலத்தில் ஆசிரிய இடமாற்ற ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள நான்கு மாதங்கள் தேவைப்படுகிறது. தொழில்நுட்ப உதவியுடன் ‘அப்’ ஒன்றை உருவாக்கி விரைவாக இடமாற்றங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.
கேள்வி; இளைஞர் சேவைகள் மன்றமும் உங்கள் அமைச்சின் கீழுள்ளது. அவர்களின் சக்தியை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றீர்கள்?
பதில்; ஆம் உண்மையில் எமது இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேற்றம் அடைந்தவர்களாக உள்ளார்கள். அவர்களின் அத்திறமைமையை விவசாயம் மற்றும் ஏனைய துறைகளுக்கும் பயன்படுத்தி தேசிய பொருளாதாரத்தின் பங்காளர்களாக்கலாம்.
கேள்வி; ஜூன் 20ம் திகதி தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது பற்றி நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்?
பதில்; தேர்தல் நடத்துவதா இல்லையா என முடிவு எடுப்பது தேர்தல் ஆணைக்குழுவாகும். இவ்வேளையில் தேர்தல் ஆணைக்குழு எடுக்கும் முடிவுக்கு நாம் ஒழுக்கமுள்ளவர்களாக கீழ்ப்படிய வேண்டும்.
கேள்வி; கொரோனா தொற்றானது ஜனாதிபதியின் சௌபாக்கிய நோக்கு கொள்கைப் பிரகடனத்துக்கு ஆசீர்வாதம் என உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றார்கள். நீங்களும் அதனை ஆமோதிக்கின்றீர்களா?
பதில்; இல்லை ஒருபோதும் தொற்றுநோயை ஆசீர்வாதம் எனக் கூற மாட்டேன். ஆனால் நாட்டு மக்கள் தமது வாயாலேயே இத்தொற்று ஏற்பட்டுள்ள வேளையில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருப்பது அதிர்ஷ்டம் எனக் கூறுகின்றார்கள்.
ஜயசூரிய உடுகும்புற
தமிழில்: வயலட்