![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/05/23/TNA-FT-123014.jpg?itok=UdLfb1Rg)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டைப்பற்றி கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் அரசியற் பரப்பில் மிகத் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது.
கூட்டமைப்பைப் பற்றி இப்படியொரு விவாதம் தேவைதானா என்ற கேள்வி பலருக்கும் எழலாம். எனக்கும் இந்தக் கேள்வி உண்டு. ஆனாலும் இப்போதைய இந்தத் தீவிர விவாத நிலைக்குக் காரணம், சுமந்திரன் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்த விடயங்களே.
இதனால் கொரோனா கால உள்ளடங்கலைச் சற்றுச் சூடேற்றும் விதமாக இந்த நேர்காணல் அமைந்திருக்கிறது.
இப்பொழுது சுமந்திரன் சொல்லியிருக்கும் விடயங்கள் கூட அப்படியொன்றும் புதியதல்ல. இந்தக் கருத்தை சுமந்திரன் ஏற்கனவே பல தடவைகள் சொல்லியிருக்கிறார். சம்பந்தனும் இதை ஒத்ததாகப் பேசி வந்திருக்கிறார்.
அப்படியென்றால், இருந்தால் போல இதற்கு என்ன முக்கியத்துவம் வந்தது? அல்லது இது எப்படி விவாதப்பொருளாகியது? என்ற கேள்விகள் பலருக்கும் எழலாம்.
சுமந்திரனின் இந்த நேர்காணல் மறுபடியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பேசு பொருளாக்கியுள்ளது. சுமந்திரன் நாயக பிம்பமாக்கப்பட்டுள்ளார். தமிழ்த்தரப்பு, சிங்களப் பரப்பு, வெளிநாடுகளின் ராஜதானிகளின் மத்தியில் என.
கொரோனா காலத்திலும் கூட்டமைப்பைப் பற்றிப் பேச வைத்தது என்பது சாதாரணமானதல்ல.
மறு பக்கத்தில் ஆயுதப்போராட்டத்தையும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அந்த இயக்கத்தில் உயிர் நீத்தவர்களையும் (மாவீரர்) ஆதரித்தும் கொண்டாடியும் வருகிறது ஒரு தரப்பு.
இதில் மாவை சேனாதிராஜா, சரவணபவன், சிறிதரன், சீ.வி.கே. சிவஞானம் போன்றவர்கள் முக்கியமானவர்கள். கூடவே ரெலோ செல்வம் அடைக்கலநாதனும் புளொட் சித்தார்த்தனும் இதற்குள் சேர்த்தி.
சம்பந்தனும் சுமந்திரனும் அவர்களுடைய அணியினரும் இலங்கைத் தேசியத்தை பகிரங்கமாகவே ஆதரிப்பவர்கள். ஆயுதப்போராட்டத்தை நிராகரிப்பவர்கள். அதாவது ஒற்றையாட்சிக்குள் தீர்வைக் காண முயற்சிப்பவர்கள்.
குறிப்பாக சம்பந்தனும் அதனுடைய பேச்சாளரான சுமந்திரனும் மிக வெளிப்படையாகவே ஐக்கிய இலங்கைக்குள்தான் தமிழ் மக்களுக்குத் தீர்வு எனவும் ஆயுதப்போராட்டத்தையோ, புலிகள் அமைப்பையோ தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தொடர்ச்சியாகவே கூறிவருகிறார்கள்.
கூடவே இலங்கையின் தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றையும் அவர்கள் பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வைத்தே இலங்கைத் தேசியக் கொடியை ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கையில் ஏந்தி இதை நிரூபித்தார் சம்பந்தன்.
சுதந்திர தின நிகழ்வுகள் தொடக்கம் இலங்கையின் தேசிய நிகழ்வுகள் பலவற்றிலும் பங்குபற்றி வருகிறார் சுமந்திரன். மேலும் முஸ்லிம் மக்களை புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றியது வரலாற்றுத் தவறு. அதற்குத் தமிழ்ச்சமூகம் மன்னிப்புக் கோருகிறது எனவும் சுமந்திரன் சொல்லியிருக்கிறார்.
பின்னைய அணியினர் ஆயுதப்போராட்டத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதன் அடையாளத்தைக் கொண்டாடுவோர். இலங்கைத் தேசியத்தை நிராகரிப்பதாகச் சொல்வோர். அப்படியென்றால் பிரிவினையை ஆதரிப்பவர்கள் (?) அல்லது அப்படிக் காண்பிப்போர்.
இவர்கள் மாவீரர் நாளில் விளக்கேற்றுவது, முள்ளிவாய்க்கால் நினைவு கூரலை நடத்துவது அல்லது அதில் பங்குபற்றுவது, தேவைப்படும்போதெல்லாம் பிரபாகரனின் பெயரை உச்சரித்துக் கொள்வது, போர்க்குற்றத்துக்கு விசாரணை வேண்டும் என்பர்.
இப்படி எதிரெதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் இரு தரப்பினரும் ஒரே குட்டைக்குள்ளேயே ஊறிக்கிடப்பவர்கள் அபிப்பிராயங்களை எதிரும் புதிருமாக வெளிப்படுத்தினாலும் கிடைக்கும் நலன்களை எல்லோரும் ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வர்.
எனவேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு குழப்பங்களுக்கான இடமாக தொடர்ந்துமிருக்கிறது. அதாவது இரண்டு நிலைப்பட்டதாக. இலங்கைத் தேசியம் மற்றும் அதற்கு எதிர் அல்லது தமிழ்த்தேசியம் என்பதாக. அல்லது உண்மையான நிலைப்பாடு என்னவென்றே தெரியாததாக.
இப்படி அதிரடி அறிவிப்புகள் வரும்போதெல்லாம் தமிழ்த்தேசியவாதிகளாகத் தம்மை அடையாளப்படுத்துவோரும் கூட்டமைப்புக்கு எதிர் முகாமிலுள்ளோரும் தமது கண்டனங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.
இதில் கூட்டமைப்பிற்குள் இருப்போரும் சேர்த்தியாவதுண்டு. ஆனாலும் அவர்கள் சில சந்தர்ப்பங்களில் (தேவைக்கேற்ற மாதிரி) அந்தப் பக்கத்திலிருந்து இந்தப்பக்கத்துக்கத் தாவி, அபிப்பிராயங்களைச் சொல்வர். பிறகு அந்தப்பக்கத்துக்கே ஓடிச் சென்று விடுவார்கள்.
இப்பொழுதும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
“சுமந்திரனின் கருத்துகள் பாரதூரமானவை. ஆயுதப்போராட்டத்தையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டோரையும் அவமதிப்பவை”என்று பொங்கிச் சரித்துக் கொண்டிருக்கிறார்கள் கூட்டமைப்பிற்குள்ளே இருப்பவர்கள்.
இதில் தளபதிகள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் எறிகணை, ஏவுகணைகளையெல்லாம் சுமந்திரன் மீது நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
எந்தத் தாக்குதலையும் தான் எதிர்கொள்ளத் தயார் என்று பதிலுக்குச் சுமந்திரன் சொல்லி விட்டுத் தன் பாட்டின் தன்னுடைய வேலைகளை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
இங்கேதான் நாம் சில அடிப்படையான கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. அந்தக் கேள்விகள் இவர்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்ளவும் கூட்டமைப்பின் தொடர்ச்சியான செயற்பாட்டை விளங்கிக் கொள்ளவும் உதவும்.
உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு என்ன? உண்மையாகவே அதனுடைய தலைமைப்பீடம் எது? அல்லது அதில் யார் ஆதிக்கம் செலுத்துகின்றனர்?
எல்லோருக்கும் தெரிந்த விதத்தின்படி சம்பந்தனும் சுமந்திரனுமே கூட்டமைப்பை தலைமையேற்று நகர்த்திக் கொண்டிருப்போர். சந்திப்புகள், தீர்மானங்களை எடுத்தல், தொடர்பாடல்களைச் செய்தல் என தலைமைக்குரிய வேலைகளை இவர்கள் இருவருமே செய்கின்றனர். ஏனைய தரப்பினர் இதை ஏற்றும் அனுசரித்தும் செல்வோர்.
ஆகவே கூட்டமைப்பின் தலைமைப்பீடம் என்பது சம்பந்தனும் சுமந்திரனுமே.
மாவை சேனாதிராஜா (தமிழரசுக்கட்சி), சித்தார்த்தன் (புளொட்), செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் கட்சிகளின் தலைவர்கள் என்றாலும் அவர்களால் எதையும் தீர்மானிக்க முடிவதுமில்லை. எதையும் தடுத்து நிறுத்தவும் இயலாது.
அப்படியென்றால் கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு என்பது ஐக்கிய இலங்கைக்குள் (ஒற்றையாட்சிக்குள்) தீர்வைக் காண்பதாகும். இலங்கைத் தேசியக் கொடியையும் இலங்கையின் தேசிய கீதத்தையும் ஏற்றுக் கொள்வதாகும்.
அதாவது சிங்களத் தரப்போடு இணங்கிச் செல்வதாகும்.
இதுதான் உண்மை என்றால், கூட்டமைப்பிலுள்ள மற்ற அணியினரின் நிலைப்பாடு என்ன? குறிப்பாக மாவை சேனாதிராஜா, சி.வி.கே சிவஞானம், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன். சரவணபவன் போன்றோர் என்ன செய்யப்போகின்றனர்?
ஏனெனில் இது ஒன்றும் சில தனிநபர்களுக்கிடையிலான அதிகாரப்போட்டியோ பதவிப் பிரச்சினையோ தனிநபர் முரண்பாடோ அதையொத்த விவகாரமோ அல்ல.
இது அரசியல் நிலைப்பாட்டுப் பிரச்சினை. அரசியற் கோட்பாட்டு விவகாரம். அரசியற் தீர்வோடு நேரடியாகத் தொடர்புபட்ட விடயம். தமிழ் மக்களுடைய அரசியற் போராட்டத்தின் தொடர்ச்சிக்குரியது.
எனவே இது சீரியஸான விடயம். இதை இலகுவாகக் கடந்து செல்ல முடியாது.
முதலாவது, அரசியல் தீர்வை கூட்டமைப்பு எப்படி எதிர்பார்க்கிறது? தேர்தலில் கூட்டமைப்பு வெற்றிகளைப் பெறும் தரப்பாக இருக்குமானால் அது முன்வைக்கும் அரசியல் கோரிக்கையானது எந்த அடிப்படையிலானதாக இருக்கும்? சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இருக்குமா? அல்லது மாவையின் நிலைப்பாட்டின் அடிப்படையில் இருக்குமா?
அதாவது பிரிவினையை ஆதரிப்பதாக இருக்குமா? அல்லது அதை எதிர்ப்பதாக இருக்குமா?
இவை இரண்டும் நேரெதிராக ஒன்றுக்கு ஒன்று முரண்படுதாகும்.
இதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக தெரிவிக்குமா?
இரண்டாவது, இவ்வாறு எதிரும் புதிருமான அரசியல் நிலைப்பாட்டோடு, அடிப்படை முரண்பாடுகளோடு ஒரு கட்டமைப்பு எப்படிப் பயணிக்க முடியும்?
உண்மையில் சுமந்திரனும் சம்பந்தனும் மட்டும்தான் இப்படித் தவறிழைக்கிறார்கள் என்றால், ஏனையோர் இந்த இருவரின் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியுமே! அந்த அடிப்படையில் அவர்களிடம் சுய விளக்கம் கோரலாம். இருவரையும் தமிழரசுக் கட்சியை விட்டு (தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை என்பதால் அதைச் செய்ய முடியும்), ஏன் கூட்டமைப்பை விட்டே விலக்கி விடலாமே!
அப்படி ஏன் இவர்கள் செய்யவில்லை? அப்படி அவர்கள் ஒரு போதுமே செய்யப்போவதில்லை.
இங்கேதான் உள்ளது கூட்டமைப்பின் இரண்டக நிலை.
இரண்டாவது, கூட்டமைப்பின் தலைமைப்பீடம் சொல்லும் ஆயுதப்போராட்டத்தை தாம் ஆதரிக்கவில்லை என்ற கூற்றுப் பற்றியது.
ஆயுதப்போராட்டத்தின் பெறுபேறுகளில் ஒன்று இப்போதுள்ள மாகாணசபைகளின் முறைமை. ஆயுதப்போராட்டம் இல்லையென்றால் மாகாணசபை சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. தமிழரசுக் கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் போராடிப் பெற முயற்சித்தது மாவட்ட அபிவிருத்திச் சபையையே. அது பயனற்றது. உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தையே கொண்டிருக்காத மாவட்ட அபிவிருத்திச் சபை 80 இன் தொடக்கத்திலேயே தமிழ்ச்சமூகத்தினால் நிராகரிக்கப்பட்டது.
ஆயுதப்போராட்டம் மாகாண சபைக்கும் அப்பால் செல்ல முயன்றது. அதனுடைய தொடர்ச்சியான போராட்டமே இதற்காத்தான் நடந்தது.
ஆகவே இதை எப்படி நிராகரிக்க முடியும்?
அப்படி நிராகரிப்பவர்களாக இருந்தால், அவர்கள் 2009 க்குப் பின்னரான தமிழ் அரசியல் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு சாதித்ததென்ன? கடந்த பதினொரு ஆண்டுகளில் தீர்வு குறித்தும் அரசியல் பெறுமானங்கள் குறித்தும் தமிழ் சமூகத்தின் பொருளாதாரம், சமூக முன்னேற்றம், சமூகப் பாதுகாப்பு குறித்தும் எட்டிய முன்னேற்றங்கள் எவை?
இதெல்லாம் துல்லியமாக விவாதிக்கப்படவும் பதில் காணப்படவும் வேண்டிய விடயங்கள். சும்மா வாய்க்கு வந்தபடி கதைத்துப் பொழுதைப் போக்குவதற்கான சங்கதிகளல்ல. ஏனெனில் தமிழ் மக்கள் தங்களுடைய உயிரைக்கொடுத்தே போராடியிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கையை இழந்தே அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். என்பதால் அவர்களுடைய வாழ்க்கையோடும் வரலாற்றோடும் விளையாடக் கூடாது.
எனவே இதைக்குறித்தே நாம் தீவிரமாகச் சிந்திக்கவும் பேசவும் வேண்டும்.
கருணாகரன்