![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/06/07/Untitled-1.jpg?itok=0QkgKjUs)
தமிழ் அரசியல் கட்சிகளில் வேட்பாளராக களமிறங்கினால் நிறைய பொய்களைக் கூறி ஏமாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அந்த நிலைமைக்கு ஆளாவதற்கு தான் விரும்பவில்லை என்கிறார் ஓய்வுநிலை பிரதம கணக்காளரும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண முன்னாள் பணிப்பாளரும் பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ரவீந்திரன். தான் இதுவரையில் எவரையும் பொய் கூறி ஏமாற்றியதில்லை என்றும் தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலில் அவர் தெரிவித்தார். நேர்காணலின் முழு விபரம் வருமாறு..
கேள்வி : சமய சமூகப்பணி செய்து வந்த நீங்கள் திடீரென அரசியலுக்கு வரக் காரணம் என்ன?
பதில்: மதத்துக்காகவும் சமூகத்துக்காகவும்; பல்வேறு சேவைகளை நான் ஆற்றிய போதிலும் மதம் தொடர்பில் காத்திரமான முடிவுகளை எடுக்க முடியாத சூழ்நிலை இருந்தது. காத்திரமான சேவையாற்றுவதற்குரிய தடங்கல்கள் பல ஏற்பட்டன. சட்டபூர்வமான அதிகாரம் எமது கையில் இருக்குமானால் அந்த அதிகாரங்களைக் கொண்டு சமய சமூக நிறுவனங்களுக்குரிய தேவைகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற எண்ணம் தோன்றியதனாலும் தொடர்ந்து பல பொது அமைப்புக்கள் ஆதரவாளர்கள் எனப் பலராலும் எனக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையினாலும் நான் அரசியலில் இறங்கினேன்.
அதிலும் எந்தக் கட்சியில் களமிறங்கி போட்டியிட்டால் வெற்றி பெற்று மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு நிறைவான சேவையைச் செய்ய முடியும் என்பதன் அடிப்படையில் ஆளும் கட்சியாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியை நான் தெரிவு செய்து அதில் போட்டியிடுகின்றேன்.
கேள்வி: உங்களது முதல் அரசியல் பிரவேசத்திற்காக தேசியக் கட்சி ஒன்றைத் தெரிவு செய்யக் காரணம் என்ன?
பதில்: அனேகமாக தமிழ் அரசியல் கட்சிகள் தமிழர் உரிமை பற்றிப் பேசுகின்றன. ஆனால் தமிழர் உரிமை என்பது என்ன? என யாரும் பட்டியலிடவில்லை. தமிழர்களுக்கான அபிலாசைகளை வென்றெடுப்போம் என கூறுகின்றார்கள். ஆனால் அபிலாசைகள் என்ன என்பதை யாரும் கூறவில்லை. அவ்வாறு வெளிப்படுத்தாமல் எந்த அபிலாசைகளைப் பெற்றுக் கொடுத்தார்கள் என்பதையும் கூறவில்லை. 1948 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் உரிமைகளையெல்லாம் பெற்றுத் தருகின்றோம் என்று கூறியவர்கள் எந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தார்கள்? அதுபோல் அபிவிருத்தி சம்பந்தமான வேலைகளையும் யாரும் முன்னெடுக்கவில்லை. சில காலங்களில் ஆளுகின்ற கட்சிகளுக்கு முட்டுக் கொடுக்கின்றவர்களாகவே அவர்கள் ஆகின்றார்களே தவிர தமிழ் உரிமை பற்றியோ தமிழர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் பற்றியோ எதுவுமே பேசாது வாய்மூடி மௌனமாக இருந்த காரணத்தினால் தமிழ் அரசியல் கட்சிகளில் போட்டியிடுவது பொருத்தமானதாக இருக்கும் என எனக்குத் தோன்றவில்லை. தமிழ் அரசியல் கட்சிகளில் வேட்பாளராக போட்டியிட களமிறங்கினால் நிறைய பொய்களைக் கூறி ஏமாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். அந்த நிலைமைக்கு ஆளாவதற்கு நான் விரும்பவில்லை. ஏனெனில் நான் இதுவரையில் எவரையும் பொய் கூறி ஏமாற்றியதில்லை.
கேள்வி: பொதுஜன பெரமுன கட்சியை மட்டக்களப்பு தமிழ் மக்கள் எந்த அளவிற்கு புரிந்து வைத்துள்ளார்கள் என நினைக்கின்றீர்கள்?
பதில்: பொதுஜன பெரமுனக் கட்சிக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பில் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவு கிடைக்கவிலலை என்பதை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும். ஆனால் பொதுஜன பெரமுனக் கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் சிறந்த ஒரு நிர்வாகி என மட்டக்களப்பு மக்கள் இனம் கண்டுள்ளனர். கொரோனா வைரசின் தாக்கத்தை ஏனைய உலக நாடுகளை விட நமது நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது எமது நாடு மிகவும் உன்னதமான நிலையில் இருப்பதைக் காட்டுகின்றது. ஜனாதிபதியின் நிர்வாகத் திறனாலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்கள் கவனத்தை அவர் பால் திருப்பியிருக்கின்றார்கள். மேலும் அவர் “வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என பேசுவதனால் தமக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்ளையும் வளங்களையும் பெற்றுக் கொடுப்பார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் உணர்கின்றார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இரு இனங்கள் செறிந்து வாழ்கின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய மனங்களை வென்று அவர்களுக்குச் சேவையாற்றுவதற்காக பொதுஜன பெரமுனக் கட்சி போட்டியிடுகின்ற 8 வேட்பாளர்களையும் தமிழர்களாகவே நிறுத்தியிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எமது கட்சிக்கு ஆதரவு தருவார்கள் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையைக் குறைப்பதற்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பதில்: மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரமல்ல பெரும்பாலான தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்கள் அனைத்தும் வறுமை நிலையிலுள்ள மாவட்டங்களாகக் காணப்படுகின்றன. ஏனைய இன மக்கள் பிரதிநிதிகளைப் போல் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இதுவரையில் இருந்த மக்கள் பிரதிநிதிகள் திட்டமிட்டுச் செயற்படவில்லை. தமிழ் மக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. விவசாயம் மீன்பிடி கல்வி சமூகமேம்பாடு பொருளாதார விருத்தி ஆகியவை தொடர்பாக இதுவரையில் இயங்கிவந்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எதுவித அக்கறையும் காட்டவில்லை. அதுமாத்திரமின்றி அவர்கள் திட்டமிடுவதிலும் பின்தங்கியவர்களாகவே காணப்பட்டனர்.
ஏனைய சமூக அரசியல் பிரதிநிதிகள் தங்களது சமூகத்திலுள்ள புத்திஜீவிகளை உள்வாங்கி அவர்களுடாக சமூக நலத்திட்டங்களை உருவாக்கி சமூகத்தை அபிவிருத்தி செய்துள்ளார்கள். அதனால் அவர்களுடைய சமூகம் முன்னேற்றமடைந்துள்ளது. மாறாக இன்னும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்கள் மீதுதான் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள். கற்றறிந்த புத்திஜீவிகள் பாராளுமன்றம் செல்வார்களாயின் புத்திஜீவிகளையெல்லாம் ஒன்றிணைத்து பல திட்டங்களை வடிவமைத்து அதனூடாக மட்டக்களப்பு மாவட்ட மக்களை வறுமைக்கோட்டின் கீழிருந்து விடுவிக்க முடியும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதுவரையில் அரசியலாளர்கள் செய்யாத வேலையை ஆட்சியாளர்களாக இருக்கின்ற அதிகாரிகள் செய்கின்றனர். ஆனால் அந்த அதிகாரிகளுக்கு போதிய உந்து சக்தியை எங்களது பிரதிநிதிகள் கொடுக்கவில்லை. இந்தக் குறைபாட்டை நீக்காவிட்டால் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களுக்கு நியாயம் வழங்க முடியாது என்பது எனது எண்ணம்.
கேள்வி: தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண முன்னாள் பணிப்பாளர் என்ற வகைளில் பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பரஸ்பர நல்லுறவைக் கட்டியெழுப்ப நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பதில்: பொலிசாருக்கும் மக்களுக்கும் உரிய உறவைக் கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. “பிரஜா பொலிஸ் சேவை” அதாவது பொலிஸ் பிரஜைகள் இணைந்த குழுக்கள் என்றாலும் கூட சில உத்தியோகத்தர்கள் ஒரு சில சந்தர்ப்பங்களில் சரியான முறையில் செயற்படவில்லை என்பது தெளிவாகின்றது. அவை பற்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மாகாணப் பணிப்பாளராக நான் சேவையாற்றியபோது என்னிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பங்கள் இனங்காணப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. எது எவ்வாறு இருப்பினும் பொதுமக்கள் பொலிசாரை சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். இதனால் பொலிசார் செய்வது அனைத்தும் தவறு என்ற எண்ணத்தை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
எனக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுள் 60 சதவீதமானவற்றில் பொலிசார் சரியாக சேவை செய்திருந்த போதிலும் அந்த முறைப்பாட்டைச் செய்த பொதுமக்கள் பொலிசார் தொடர்பில் சந்தேகம் கொண்டிருந்ததாகவே காணப்பட்டது. பொலிசார் மீதான சந்தேகத்தை விடுத்து உண்மை நிலவரம் அறிந்து சட்டத்தின் முன் அவ்வாறு செய்ய முடியுமா? செய்ய முடியாதா? என்பதை அறிந்து பொலிசார் மீது குற்றம் சுமத்த வேண்டும்.
அதேவேளை சிற்சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவறு விடுவதை என்னால் மறுக்க முடியாது. அவ்வாறானவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படுமிடத்து அதற்குரிய தண்டனைகளும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.
கேள்வி: கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போதும் அது இறுதிவரையில் கைகூடாமல் போய்விட்டதே அதுபற்றி கூறுங்கள்?
பதில்: கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என கிழக்குத் தமிழ் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வில் நானும் பங்குபற்றினேன் இதன் செயற்பாடு எவ்வாறு நகரவேண்டும் என்பதையும் தெரிவித்திருந்தேன். அதனடிப்படையில் அவர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள் என்றாலும்கூட கிழக்கிலிருக்கின்ற தமிழ் அரசியல் கட்சிகள் தங்களுக்குரிய தனித் தன்மையைப் பேண வேண்டும் என்பதற்காக அவர்கள் இதற்குள் இணையவில்லை.
இவர்களது நோக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வீழ்த்திவிட்டு தாங்கள் பிரதிநிதிகளாக வருவதே! அவ்வாறு வந்தாலும் இதுவரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதைச் செய்ததோ அதையே இவர்களும் செய்யவிருக்கின்றார்கள். இங்கே அவர்களுக்குரிய தனித்துவம் பேணுகையும்; முன்னுரிமையை விட்டுக் கொடுக்காத தன்மையையுமே இவர்கள் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதில் தடையாக இருந்தது.
கேள்வி: எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்குகின்றீர்கள்?
பதில்: தேசியம் என்று கூறிக் கொண்டிருப்பதைவிட பல்வேறு உரிமைகள் தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன. அவ்வாறான உரிமைகளை போராடி வெல்லவேண்டும். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் அனைவருக்கும் அவர்களின் தகைமைக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குதல் வேண்டும். அதுபோல் விவசாயம் மீன்பிடி உள்ளிட்ட தொழில்களை காத்திரமான முறையில் செய்வதற்கு உரியவகையில் அவற்றை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட மக்களின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்ல வேண்டும்.
கேள்வி: தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து என்ன கருதுகின்றீர்கள்?
பதில்: நான் என்னைப்பற்றி மக்களிடத்தில் தெரிவித்து வாக்குச் சேகரிப்பேனே தவிர ஏனைய கட்சிகளைத் தூற்றுவதோ ஏனைய கட்சியினரை விமர்சிப்பதோ என் பணி அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்பதில் உண்மைத் தன்மை இல்லாலும் இல்லை. ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்ட திட்டங்கள்பற்றி போதிய அறிவு, போதியளவு மொழியாண்மை, சுற்றறிக்கைகளை வாசித்தறிதல், உரிமைகள் மறுக்கப்படுகின்ற போது அதனைத் தட்டிக் கேட்டல் போன்ற ஆற்றல்கள் காணப்படவில்லை. அதனால் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது வெறுப்படைந்துள்ளார்கள் என நான் கருதுகின்றேன்.
வ.சக்திவேல்