நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கானமுயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கதீவிரப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அனைத்துத் தரப்பினருடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதுடன், இவ்விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றும் கூற முடியும். இதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் புதிய அமைச்சரவை பதவியேற்பதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கட்சி சார்பிலும், தனிப்பட்ட ரீதியாகவும் உறுப்பினர்கள் அணுகப்படுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி தனித்தனியாகச் சந்தித்திருந்தார்.
சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்காவிட்டாலும் வெளியே இருந்து அரசுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். அதேபோன்ற கருத்தையே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதும் இந்த இரண்டு கட்சிகளையும் சார்ந்த சில உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கவும், சிலர் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கும் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
நாட்டை இன்றைய நெருக்கடியான சூழலிலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கும் விடயத்தில் ஜனாதிபதி மிகவும் கவனமாக முயற்சிகளை முன்னெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், இன்றைய பதவியில் எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத்தில் அவர் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் எவ்வளவு ஆர்வம் கொண்டுள்ளாரோ, அதேயளவு எச்சரிக்கையாகவும் இருக்கின்றார். காரணம், எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி விட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு அவர் விரும்பவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
அதேநேரம், அரசாங்கத்தில் பெரும்பான்மையானவர்கள் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் மத்தியில் அதிகமான அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான அக்கறைகளும் காணப்படுகின்றன.
எதிர்க்கட்சியில் உள்ளவர்களையும் இணைத்துக் கொண்டு சர்வகட்சி அரசாங்கத்துக்குச் செல்வதாயின் அமைச்சுப் பொறுப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் காணப்படுகிறது. இதற்கான சட்ட ஏற்பாடுகள் எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கிறது.
இருந்தபோதும் அமைச்சுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதை நாட்டு மக்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் என்பது தொடர்பிலும் சிந்திக்க வேண்டியதாகவுள்ளது.
அதேவேளை, தற்பொழுது காணப்படும் நிலையில் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவராலும் தனித்து செயற்பட முடியாது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
எனவே சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாலோ அல்லது எந்தப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளாமல் விட்டாலோ அனைவரும் இணைந்து செயற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் வெறுமனே விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்காமல் ஆக்கபூர்வமாக ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும். மறுபக்கத்தில், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்காவிட்டாலும் பாராளுமன்றத்தின் குழு நடைமுறை உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் ஊடாக அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முடியும்.
தமது சொந்த இலாபங்கள் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான காலம் என்பதைக் கருத்தில் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது இவ்விதமிருக்க, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் முயற்சிகள் பற்றியும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இதனைச் சமர்ப்பித்திருந்தார். இவ்வாறான நிலையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக 9மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள விடயங்கள் இதன் ஊடாக மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
குறிப்பாக ஜனாதிபதிக்குக் காணப்படும் அதிகாரங்கள் பாராளுமன்றத்துடன் பகிரப்படவிருப்பதுடன், சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்கள் அல்லது பொறுப்புக்கள் வலுப்படுத்தப்படவுள்ளன.
இருந்தபோதும், அரசாங்கத்தில் தற்பொழுது பெரும்பான்மையாகவுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் சிலர் உத்தேச அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்தில் உள்ள சில விடயங்களுடன் உடன்படவில்லையெனத் தெரியவருகிறது. இவ்வாறான நிலையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டாலும் அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றும் விடயத்தில் மீண்டும் சவால்கள் ஏற்படலாம். இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் தேவைப்படலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் கூறியிருந்தார்.
எனவே நாட்டு மக்கள் அநாவசிய செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் பசியையாவது போக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே தான் பிரதமர் பதவியை முதலில் ஏற்றுக் கொண்டதாகவும், அதன் பின்னர் ஜனாதிபதிப் பதவியை ஏற்க நேரிட்டதாகவும் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார். பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதலில் தீர்வு காணவிருப்பதுடன், அதன் பின்னர் தேசிய ரீதியில் காணப்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் எடுக்கும் இவ்வாறான முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தினதும் ஒத்துழைப்பு அவசியம் என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
இது இவ்விதமிருக்க, ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதத்துக்கான கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை நடைபெறவிருக்கும் அமர்வில் இலங்கை விவகாரம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பயன்பாடு உள்ளிட்ட விடயங்கள் இக்கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிறைவேற்றப்படுமென சர்வதேசத்துக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதற்கும் அரசாங்கம் பதில் வழங்க வேண்டியுள்ளது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் பல்வேறு உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. இவை நிறைவேற்றப்பட்டனவா என்பது தொடர்பில் தற்பொழுது கேள்வி காணப்படுகிறது. இருந்தபோதும், நாட்டின் தற்போதை நிலைமையைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு நியாயமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் நியாயம்.
சம்யுக்தன்