தேர்தல் கூட்டமைப்புக்கு தோல்வியைத் தரும் | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் கூட்டமைப்புக்கு தோல்வியைத் தரும்

கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயங்களையும் சூழ்ச்சிகளையும் செய்வதில் கை தேர்ந்தது. இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் மக்களுக்கு எதிரானவை. மக்களைத் தோற்கடிப்பதே கூட்டமைப்பின் பிரதான இலக்கு என்கிறார் சமத்துவக் கட்சியின் தலைவரும் சுயேட்சைக்குழு தலைமை வேட்பாளருமான முருகேசு சந்திரகுமார். தினகரன் வாரமஞ்சரிக்கான நேர்காணலில் இச்செயலை எதிர்க்க வேண்டிய பொறுப்பில் தாம் இருப்பதாகத் தெரிவித்தார். நேர்காணலின் முழு விபரம்...

கே: தேர்தலுக்கான திகதி இழுபறியில் உள்ளபோதும் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. உங்கள் கட்சியின் தேர்தல் பணிகள் எவ்வாறு உள்ளன?

பதில்: தேர்தல் விரைவில் நடக்கும் என்பது உறுதியாகி விட்டது. நாங்கள் தேர்தல் பணிகளை மட்டும் செய்கின்றவர்களல்ல. மக்களுக்கான அரசியல் பணிகளைத் தொடர்ச்சியாகவே களத்தில் நின்று, மக்களோடு நின்று செய்து கொண்டிருப்பவர்கள். ஆகவே தேர்தல் பணிகளையும் மக்களோடு இணைந்தே செய்து கொண்டிருக்கிறோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் எங்களுடைய வேட்பாளர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனிமேலாவது தாங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு மக்கள் உள்ளனர். இவ்வளவு காலமும் ஏமாந்ததைப்போலல்லாது, தங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும். அதற்காகப் பாடுபடக் கூடியவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற உணர்வோடு இருக்கிறார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எமக்குண்டு. நாங்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் மிகப் பெரிய வரவேற்புக் கிடைக்கிறது. மக்களும் எங்களைத் தேடி வருகிறார்கள். குறிப்பாக இளைய தலைமுறையினரும் பெண்களும் எங்களுக்குப் பேராதரவைத் தந்து கொண்டிருக்கிறார்கள். சிந்திக்கக் கூடியவர்கள் எங்களுடைய கட்சியின் கொள்கையையும் செயற்பாடுகளையும் வரவேற்கிறார்கள்.

கே: தேர்தல்களை முன்னிட்டு பல்வேறு புதிய கூட்டுக்ககள் உருவான போதும் நீங்கள் ஏன் உங்களை அவ்வாறானதொரு கூட்டில் இணைத்துக்கொள்ள வில்லை?

பதில்: உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்தத் தேர்தல் கூட்டுகள் எல்லாம் எந்த நோக்கில் இணைந்துள்ளன என்று. இவை பதவிகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பவாதக் கூட்டுகளே தவிர, மக்கள் விரும்பும் அரசியல் விடுதலையையும் மக்களுடைய தேவைகளையும் நிறைவேற்றும் கூட்டுகள் அல்ல. அணி சேர்வதென்பது அரசியற் கொள்கையின் அடிப்படையில் அமைய வேண்டும். அல்லது பொதுப்பிரச்சினைகளுக்கான தீர்வைக் காண்பதற்காக ஓரணியில் இணைந்து செயற்படுவதற்காக இருக்க வேண்டும். அல்லது எதிர்த்தரப்பை ஓரணியில் நின்று எதிர்கொள்வதற்கானதாக இருக்க வேண்டும். இதற்கான செயற்திட்டங்களை முன்வைத்தே நாம் அரசியற் கூட்டுக்களை உருவாக்க வேண்டும். இப்படி எந்தக் கூட்டாவது உள்ளதா? என்று கூறுங்கள் பார்க்கலாம்.

தமிழ் மக்கள் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஓரணியாகச் செயற்பட வேண்டும். தங்கள் ஒற்றுமையை உலகத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று சொல்லிக் கொண்டு கூட்டு வைத்து வெற்றியைப் பெற்றவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன பயனைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்? பதிலாகப் பின்னர் தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டதும் அணி பிரிந்ததும்தான் நடந்தது. பிறகு தேர்தல் வரும்போது மட்டும் அவசரக் கூட்டுக்களை உருவாக்கிக் கொள்வார்கள். தங்களுடைய இந்தக் கூட்டுக்களில் இணைத்துக் கொள்வதற்காக எம்மைப் பல தரப்பினர் அணுகியிருந்தனர். ஆனால், நாங்கள் அவற்றில் இணைய விரும்பவில்லை.

நாங்கள் நடைமுறை அரசியலையே வலியுறுத்துகிறோம். கற்பனைகளை வளர்த்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. அது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். ஏனென்றால், எங்களுடைய மக்கள் விசுவாசமாகப் போராடியவர்கள். ஒடுக்குமுறையை எதிர்த்தவர்கள். நம்முடைய கடந்த காலத் தலைவர்கள் வளர்த்த அரசியற் கனவுகளுக்காக மிகப் பெரிய தியாகங்களைச் செய்தவர்கள். இழப்புகளைச் சந்தித்தவர்கள். இப்போது மிகப் பெரும் துயரங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள். இப்படியான மக்களுடைய உணர்வுகளுக்கும் அபிலாசைகளுக்கும் நாம் மதிப்பளிக்க வேண்டும். நேர்மையாகச் செயற்பட வேண்டும். இந்த மக்களின் ஆதரவையும் வாக்குகளையும் பெறுவதென்பது சத்தியத்துக்கு ஒப்பானது. அந்தச் சத்தியத்தைக் காப்பாற்றவே நாம் விரும்புகிறோம். இந்த மக்களுடைய வாக்குளைப் பொய் சொல்லிப் பெற்று வெற்றியடைவது மாபெரும் துரோகமாகும். அது போன்ற அநீதியான செயல் வேறில்லை.

கே: தமிழர் பகுதிகளில் தற்போது அனேக கூட்டணிகள் முளைத்துள்ளன. ஒவ்வொன்றும் தமிழ் அரசியலுக்கான மாற்று தாமே என்றும் கூறுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்று அரசியல் பயணத்துக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை வெறுமனே தேர்தல் கால கூட்டுக்களாக முடிவுறுகின்றனவே?

பதில்: இதற்கான பதிலை ஏற்கனவே தெளிவாகக் கூறியிருக்கிறேன். மேலும் விளக்குவதாக இருந்தால், தாமே மாற்று அரசியலை முன்னெடுக்கிறோம். மாற்றாளர்களாகச் செயற்படுகிறோம் என்றால் அதை அவர்கள் மக்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டும். எந்த வகையில் தாம் மாற்றாக, மாற்றாளர்களாக இருக்கிறோம் என. அதற்கான வழிவரைபடத்தையும் (Roadmap) அவர்கள் பகிரங்கமாக முன்வைக்க வேண்டும். தாங்கள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாட்டை எட்டுவதற்கான வழிமுறைகள் என்ன? அதற்கான சாத்தியப்பாடுகள் என்ன? அதற்கான காலவரையறை என்ன? என்றும் சொல்ல வேண்டும். இல்லையென்றால், அது சுத்த ஏமாற்றாகவே இருக்கும்.

இதைப்போன்ற தேர்தல்கால வாக்குறுதிகளும் கற்பனை உருவாக்கங்களும்தான் கடந்த காலத்திலும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், என்ன நடந்தது? ஏமாற்றம்தானே! இதனால்தான் நீங்களே குறிப்பிட்டிருப்பதைப்போல இவையெல்லாம் வெறுமனே தேர்தல்காலக் கூட்டுகளாக முடிவுறுகின்றன. தேர்தலில் வெற்றிபெற்றால் மட்டும்தான் கூட்டு நீடிக்க வேண்டும் என்றில்லை. தோல்வியைச் சந்திக்க வேண்டி வந்தாலும் கூட்டுகள் நீடிக்க வேண்டும். வெற்றி தோல்விகளுக்கு அப்பாலானது அரசியற் பணி. அப்படிச் செயற்படுவதுதான் உண்மையான அரசியற் கூட்டாக இருக்க வேண்டும். அப்படி இங்கே நிகழ்வதில்லை.

தமிழ் அரசியலுக்கான மாற்று என்பது இதுவரையான நம்முடைய படிப்பினைகளிலிருந்து பிறக்க வேண்டும் புதிய சிந்தனையிலிருந்து உருவாக வேண்டும். உள்நாட்டு நிலவரத்தையும் சர்வதேச சமூகத்தின் இசைவையும் பிராந்தியச் சூழலையும் கவனத்திற் கொண்டு உருவாக்கப்பட வேண்டும். நமது எண்ணங்களையும் பிரகடனங்களையும் செயற்பாடாக்கும் உறுதிப்பாட்டையும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கொண்டதாக அமைய வேண்டும். இதையெல்லாம் யார் கொண்டிருக்கின்றனர்?

எந்தச் சிங்களத் தலைவர்களும் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் உரிமைகளைத் தரப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்தும் அரசியலை முன்னெடுத்தால் எப்படி அது மாற்று அரசியலாகும்? சிங்களத் தரப்பிடமிருந்து எந்த வகையில் நாம் உரிமைகளைப் பெறுவது? அவர்களை எப்படி வெற்றி கொள்வது என்ற மாற்றுச் சிந்தனையும் மாற்று அணுகுமுறையுமே மாற்று அரசியலாகும். நாம் இதில் தெளிவான ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறோம். முதலில் தமிழ்ச்சமூகத்தைப் பலமடையச் செய்ய வேண்டும். அதற்கான வேலைகளைச் செய்ய  வேண்டும். பலமான ஒரு சமூகத்தினால்தான் அரசியலில் உறுதியாக நிற்க முடியும். தன்னுடைய இலக்கை நோக்கி போராடவும் நகரவும் முடியும். ஆகவே தமிழ்ச்சமூகத்தைப் பல வழிகளிலும் பலப்படுத்தும் பணிகளை நாம் செய்ய முயற்சிக்கிறோம். பயனற்ற கூட்டுக்களை விட சிறப்புறச் செயற்பட்டுக் கொண்டு தனியாக நிற்பதே நல்லது.

கே: யுத்தம் தந்த அழிவுகள்,  வாழ்வாதார இழப்புகள், தற்போது COVID 19 இனால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் என்பனவற்றுக்கு மத்தியில் தமிழ் மக்கள் உண்மையில் சமஷ்டி முறையிலான தீர்வு,  பாராளுமன்றம் கூட்டப்படுதல் என்பன பற்றியெல்லாம் அக்கறை கொண்டுள்ளாரர்களா?

பதில்: தமிழ் மக்கள் மட்டுமல்ல, எந்த மக்களும் அரசியற் பிரகடனங்களோடு வாழ்க்கையைத் தொடங்குவதோ வாழ்வதோ இல்லை. அவர்களுடைய மனங்களில் அரசியற் பிரகடனங்கள் விதைக்கப்படுகின்றன. பிறகு அவை அவர்களுடைய தலைகளில் சுமத்தப்படுகின்றன. இதை அந்தந்தச் சமூகங்களில் உள்ள அரசியல் தலைமைகளும் ஊடகங்களும் கருத்துருவாக்கிகளும் செய்து விடுகின்றனர். இந்த நாட்டில் தமிழ் மக்கள் இரட்டைச் சுமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அல்லது அப்படி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், இழப்புகள், துயரங்கள் ஒரு புறம். அதிகாரத்துக்கான, உரிமைக்கான கோரிக்கையும் போராட்டமும் இன்னொரு புறம். இவையெல்லாம் ஒரு சுமை. அடுத்து சுமை, தேசிய ரீதியிலான நெருக்கடியாகும். இலங்கைத்தீவு எதிர்கொள்ளுகின்ற நெருக்கடிகளை தமிழ் மக்களும் எதிர்கொள்ள வேண்டும் என்பது. இந்த இரட்டைச் சுமையைச் சுமந்து கொண்டிருப்போரின் மனநிலை என்பது சாதாரணமானதல்ல. அது கொந்தளிப்பானது. ஆனால், இதைப் பலரும் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். அதிலும் தமிழ்ச்சமூகத்தில் உள்ள உயர் குழாம் இதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்துவதே இல்லை. அவர்கள் சனங்களை வேறு திசைகளை நோக்கித் திருப்புவதிலேயே கவனமாக உள்ளனர். இதில் துரதிருஸ்டவசமாக தமிழ் ஊடகத்தரப்பில் ஒருசாராரும் உடந்தையாக உள்ளனர் என்பது கவலையே. இந்தக் குழாமின் சிந்தனையைப் பற்றியே நீங்கள் கேட்கின்றீர்கள். சாதாரண மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகளும் தேவைகளும் உள்ளன. அவர்களுடைய கவனமெல்லாம் அவற்றில்தான். இதனால்தான் அவர்கள் தமது தேவைகளை நோக்கிச் சிதறுண்டு போகிறார்கள் என்பதை நீங்கள் அவதானிக்கலாம். அதேவேளை அவர்களுடைய அரசியல் அடையாளங்களும் அபிலாசைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுக்க வேணும்.

கே: தமிழ் மக்கள் தமிழ் கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள் என்ற விமர்சனங்கள்  தொடர்ந்தும் முன் வைக்கப்பட்டாலும் தேர்தல்களில் தமிழ் மக்களின்  தேர்வு  கூட்டமைப்பாகத்தானே இருந்திருக்கின்றது?

பதில்: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வரவரத் தோற்றுக் கொண்டிருக்கிறது, பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வரப்போகின்ற தேர்தல் கூட்டமைப்புக்கு மேலும் தோல்வியைத் தரும். அதைப் பலவீனப்படுத்தும்.

ஒரு காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கூட்டமைப்பு இப்போது 13 உறுப்பினர்கள் என்ற நிலைக்காளாகியுள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது பலமான அடியை வாங்கியிருந்தது. இதையெல்லாம் சீர் செய்யக்கூடிய வகையில் அது தனக்குள்ளம் மாற்றங்களை உருவாக்கவில்லை. மக்களிடத்திலும் முன்னேற்றங்களை அடையாளம் காட்டவில்லை. தவிர, ஆசனங்களில் மட்டும் வீழ்ச்சியில்லை. அதனுடைய கட்டமைப்பிலும் வீழ்ச்சியும் உடைவும் நிகழ்ந்துள்ளது. சுரேஸ் பிரேமச்சந்திரன் அணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்பினர், விக்கினேஸ்வரன் அணி, சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, ஐங்கரநேசன், அனந்தி சசிதரன் போன்ற பலரும் கூட்டமைப்பை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.

இது மட்டுமல்ல, தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமலே தேர்தலில் மக்களைக் கூட்டமைப்புச் சந்திக்கிறது. ஒரு புதிய அரசியற் சிந்தனையைக் கூட அதனால் முன்வைக்க முடியவில்லை. இந்த நிலையில் அது எதிர்பார்க்கும் வெற்றிகளைப் பெற முடியாது. அதேவேளை மக்களைச் சரியாக வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் சிந்திப்போருக்கும் உண்டு. அவர்கள் வரலாற்றை மாற்றியமைப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும். மக்களுக்காகச் செயற்பட வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்த்தரப்புகள் சரியாகப் புரிந்து கொண்டு முறையாகச் செயற்பட்டால் வரலாற்றை மாற்றி எழுத முடியும். கூட்டமைப்பைத் திட்டிக் கொண்டிருப்பதை விடவும் இதுவே தேவையானது. மேலானது.

கே: கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களில் உங்கள் கட்சி ஒரு புதிய கட்சியாக இருந்தபோதும் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தது.  இன்னமும் கூட்டமைப்பை சவாலாக நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: நாம் எந்தத் தரப்பையும் சவாலாகக் கருதவில்லை. ஏனெனில் எங்கள் அரசியல் நிலைப்பாடும் வழிமுறையும் வேறானது. எங்களுடைய ஆதரவுத் தளமும் வேறு. ஆகவே நாம் வெற்றியை நிச்சயமாகப் பெற்றே தீருவோம்.

ஆனால், கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயங்களையும் சூழ்ச்சிகளையும் செய்வதில் கை தேர்ந்த ஒன்று. இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் மக்களுக்கு எதிரானது. மக்களைத் தோற்கடிப்பதே கூட்டமைப்பின் பிரதான இலக்கு. மக்களைத் தோற்கடித்து விட்டுத் தாங்கள் வாழ்வதே அதனுடைய ஒரே நோக்கு. இதன் மூலம் அது மறைமுகமாக ஒடுக்குமுறையாளருக்கு அனுசரணையாக இருக்கிறது. மறுவளத்தில் தமிழ்ச்சமூகத்தைப் பலவீனப்படுத்துகிறது. இதை எதிர்க்க வேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம். இது வரலாறு எமக்குத் தந்திருக்கும் பாரிய கடமையாகும். மிகப் பெறுமதியான பொறுப்பாகும். இதில் நாம் வெற்றியடைவோம்.

வாசுகி சிவகுமார்

Comments