![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/06/14/Vasu.jpg?itok=COBDHPCv)
இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதான் சிரேஷ்ட உறுப்பினர். அவரின் சமகாலத்தை சேர்ந்தவர் தான் இடதுசாரி தலைவர்களில் முக்கியமானவரான வாசுதேவ நாணயக்கார. அவரும் அண்மையில் தமது பாராளுமன்ற வாழ்வில் 50வருடத்தை பூர்த்திசெய்தார். பல தலைவர்களுடன் பணியாற்றியுள்ள இவரின் வகிபாகம் அரசியல்மாற்றங்களில் முக்கிய இடம் பிடித்தது. பல போராட்டங்களில் குதித்துள்ள இவர் சிறையிலும் இருந்துள்ளார். இன்னும் இளைஞரைப் போன்று துடிப்பாக செயற்படும் இவர், பொது ஜன பெரமுன அரசில் முக்கிய தலைவர்களில் ஒருவர். இது பாராளுமன்ற வாழ்வில் பொன்விழா காணும் ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசு தேவ நாணயக்காரவுடன் நடத்தப்பட்ட நேர்காணல்...
கே: உங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் பாராளுமன்ற அரசியல் வாழ்வில் 50வருடங்கள் நிறைவடைகிறது. அரசியலில் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்தால்..?
பதில்: நாம் ஆரம்ப காலத்தில் முதலாளித்துவ அழுத்தங்களுக்கு எதிராக போராடினோம். பிற்காலத்தில் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் யாப்பு உருவானது. பின்னாளில் முதலாளிகளின் கொட்டம் அடங்கியது.
மகாராணிக்குக் கட்டுப்படுவதாகத்தான் முதன் முதலில் சத்தியப் பிரமாணம் செய்தோம். 1972யாப்பு உருவாக்கப்பட்ட போதும் அதிகம் சந்தோசப்பட்டது நானும் மஹிந்தவும் தான். மக்களின் பிரச்சினைகளை பாராளுமன்ற குழுவிற்கு கொண்டு செல்வதில் நாமிருவரும் முக்கிய பங்காற்றினோம். அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராகக்கூட நாம் எழுந்து நின்றிருக்கிறோம்.
50வருட காலத்தில் நிகழ்ந்த சகல அரசியல் திருப்பங்களிலும் நாம் இருந்திருக்கிறோம். 1971புரட்சி..1977தேர்தல் தோல்வி, 1988அரசு மற்றும் ஜே.வி.பி. கலவரம், புலிகளின் எழுச்சி என பலவற்றையும் பார்த்தவன் நான்.
யுத்தம் தொடர்பில் எம்மிருவருக்கும் மாறுபட்ட நிலைப்பாடு இருந்தது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது எனது கருத்து. அதற்காக நான் அழுத்தம் கொடுத்தேன். யுத்தம் மூலம் தீர்க்க வேண்டும் என்பது மஹிந்தவின் கருத்து. இறுதியில் மஹிந்தவின் நிலைப்பாடு தான் வென்றது. நான் எனது கருத்தை மாற்ற நேரிட்டது. வடக்கில் உண்மையான ஜனநாயகத்தை அவர் கொண்டுவந்தார். ஒரே பாதையில் நாம் பயணித்தாலும் 1977இல் நாம் பிரிய நேரிட்டது. பின்னர் சந்திரிகா ஆட்சியில் மீண்டும் இணைந்தோம்.
கே: இடதுசாரி தலைவர்கள் தான் ஆட்சியாளர்களை இடதுசாரி போக்கிற்கு கொண்டு செல்ல அழுத்தம் கொடுக்கும் சக்தியாக செயற்பட்டார்கள். பிற்காலத்தில் அந்த நிலை மாறியதேன்.?
பதில்: 1977தேல்வியின் பின்னர் இடதுசாரிகளின் பலம் வீழ்ச்சி கண்டது. 17வருட கால ஐ.தே.க ஆட்சியில் இந்த நிலை மோசமானது. சந்திரிகா ஆட்சியுடன் தான் மீ்ண்டும் இடது சாரிச் செயற்பாடுகள் தலைதூக்கின. சந்திரிகா அரசில் இருந்தும் நான் ஒதுங்கினேன்.
கே: நீங்கள் பல தலைவர்களுடன் பணியாற்றியுள்ளீர்கள். தைரியமாக முடிவெடுத்து செயற்படக் கூடிய தலைவராக யாரைச் சொல்வீர்கள்?
பதில்: மஹிந்த ராஜபக்ஷவைத்தான் கூறுவேன். மக்கள் குறித்தும் நாட்டை பற்றியும் சிந்தித்து நேர்மையான முடிவெடுக்கக் கூடியவர்.
கே: உங்கள் 50வருட அரசியல் வாழ்வில் உங்களால் சாதிக்க முடியாமல் போனதாக இன்று கவலைப்படும் விடயங்கள் எவை?
பதில்: இடதுசாரி அரசாங்கமொன்றை உருவாக்க முடியாமல் போனது எனக்கு வருத்தத்தை தருகிறது. 1956இல் ஆரம்பித்து 1970இல் முன்னோக்கிச் சென்ற புரட்சியை அடுத்த கட்டம் வரை நகர்த்த முடியாமல் போனது இன்றும் கவலை அளிக்கிறது.
கே: ஆரம்பம் முதல் நீங்கள் சிறுபான்மையினரின் உரிமைக்காக குரல் கொடுத்தீர்கள். இனியும் அது தொடருமா?
பதில்: சிறுபான்மை உரிமை என்று கூறமுடியாது. அவர்கள் ஆட்சியாளர்கள் காரணமாக அநீதி இழைக்கப்படும் தரப்பினர். கஷ்டத்தில் தள்ளப்படும் பிரிவினர். புறக்கணிக்கப்படுவோர் சார்பில் குரல் கொடுக்க பின்நிற்கமாட்டோம். தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த போது அவர்களுக்காக குரல் கொடுத்தேன். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் தமது நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அதிகாரம் வழங்க வேண்டும். ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாக உச்ச பட்ச அதிகாரம் வழங்க வேண்டும் .இதற்காக எதிர்காலத்திலும் குரல் கொடுப்பேன்.
கே: பாதிக்கப்படும் தரப்பினருக்காக குரல் கொடுக்கும் நீங்கள் கொரோனா தொற்றினால் இறக்கும் முஸ்லிங்களின் உடல்களை புதைக்க இடமளிப்பது தொடர்பான பிரச்சினையில் குரல் கொடுக்கவில்லையே.?
பதில்: இது அரசியல் பிரச்சினையல்ல. சுகாதார தரப்பு தான் இதில் முடிவு செய்தது .புதைப்பதால் நிலத்தடி நீரினூடாக பரவலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். ஒரு வீத சந்தேகம் இருந்தாலும் அதனை தவிர்ப்பது தான் உகந்தது. அரசியல் சார்ந்த விடயமாக இருந்தால் நான் குரல் கொடுத்திருப்பேன். எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் தலைவர்கள் எமக்கெதிராக இந்த பிரச்சினையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துவார்கள்.
கே: பொதுத் தேர்தலுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இன்னமும் முடிவுறாத நிலையில் அதிகாரத்திற்காக அரசாங்கம் அவசரப்படுவதாக குற்றஞ்சாட்டப்படகிறதே.?
பதில்: சுகாதாரத் தரப்பின் ஆலோசனைப் படிதான் தேர்தல் நடைபெறுகிறது. நாம்முடிவு செய்யவில்லை.
கே: 18மற்றும் 19ஆவது அரசியலமைப்புகளை திருத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவருவது பற்றி முன்னர் பேசப்பட்டதே?
பதில்: அவர் ஜனாதிபதி பதவியை எதிர்பார்க்கவில்லை. அரசியலமைப்பை மாற்றி பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியை தெரிவு செய்ய முடியும். தேர்தல் முறையையும் மாற்ற வேண்டும். புதிய அரசியலமைப்பை கொண்டுவர புதிய அரசு பங்களிக்கும்.
கே: எதிர்வரும் தேர்தல் பொதுஜன பெரமுனவிற்கு சாதகமாக இருக்குமா?
பதில்: ஆம் மிகவும் சாதகமாக இருக்கும். குறைந்தது 150ஆசனங்களாவது பெற முடியும். எதிரணி இரண்டுபட்டுள்ளது எமக்கு இன்னும் சாதகமாக உள்ளது. தொகுதிவாரி முறையில் தேர்தல் நடைபெறுமாக இருந்தால் 1977போன்ற பெறுபேற்றை பெறமுடியும்.
ஷம்ஸ் பாஹிம்