![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/06/14/744e615b00d9f6e778a3168fedf9e38c_XL.jpg?itok=Hgvhz9wX)
பொதுத் தேர்தலில் சிறுபான்மைத் தலைமைகளின் அரசியல் காய் நகர்த்தல்கள் அறிவு பூர்வமானவையாக இல்லையென, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் விட்ட தவறுகளிலிருந்து இத்தலைமைகள் படிப்பினை பெறாமல் தொடர்ந்தும் ரணில், சஜித் அணி மோதல்களுக்குள் மாண்டு போனதால் சிறுபான்மை மக்கள் தென்னிலங்கையிலிருந்து அந்நியப்படும் நிலைமைகளே ஏற்பட்டு வருகின்றன. தமிழர்களை அரசியலில் வழி நடத்திய தவறுகளின் வடுக்கள் இன்னும் மறையாது கறைகளாக இருக்கையில், தொடர்ந்தும் இத் தவறுகள் விடப்படுவதேன்.
எனினும் தேசிய காங்கிரஸும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் எடுத்துள்ள நிலைப்பாடுகள்தான் சிறுபான்மை சமூகத்தினரை ஆறுதல் படுத்துகின்றன. தென்னிலங்கையில் காலூன்றியுள்ள ராஜபக்ஷ க்களுக்கு நிகராக ஒரு சிங்களத் தலைமை தோன்றும் வரை, இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது. விளையாட்டுப் பிள்ளையும் புரிந்து கொள்ளும் இந்த யதார்த்தம் சில சிறுபான்மைத் தலைமைகளுக்குப் புரிவதில்லை ஏன். இப்போது ரணிலும் சஜித்தும் உள்ள லட்சணத்தில் ஆட்சி, அதிகாரம் இவர்களிடம் செல்லப் போவதுமில்லை. இதை, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ,எல்,எம் அதாஉல்லா ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மேடைக்கு, மேடை தெளிவாகச் சொல்லி வந்தார்.
பயங்கரவாதத்தின் கெடுதலை ஒழித்து, வெளிநாடுகளின் தலையீடுகள், ஆதிக்கத்தை இல்லாதொழித்த ராஜபக்ஷ க்களின் “இமேஜ்” இன்னும் இருபது வருடங்கள் இந்நாட்டை ஆளுமென்றார். அந்நிய சக்திகளின் அழுத்தத்தால் 2015இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் வடுக்கள் தென்னிலங்கையை சமூக மயப்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டத் தவறவில்லை. தென்னிலங்கையின் இந்த சமூக விழிப்பு சிறுபான்மையினருக்கு ஆபத்தாகக் கூடாதென்பதில் தேசிய காங்கிரஸ் கவனமாக இருந்து காய் நகர்த்தியது. இதன் வெளிப்பாடாகவே ராஜபக்ஷ க்கள் தலைமையிலான தனது இருபது வருட ஆதரவைத் தொடர்ந்து பேண விரும்பியது தேசிய காங்கிரஸ். தென்னிலங்கையின் அள்ளுகை அலைகளுக்குள் சிறுபான்மையினரின் சில உரிமைகள் கண்டு கொள்ளாமல் விடப்படலாம்.
அதற்காக இதனை கடைக் கண் பார்வை அரசியலாகப் பார்க்க முடியாது. அவ்வாறு பார்ப்பது, நோக்குவது மேலும் தேசிய அரசியலிலிருந்து சிறுபான்மை சமூகங்களை தூரப்படுத்தவே செய்யும். இருபது வருடங்களாக ராஜபக்ஷ க்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளிலிருந்த முஸ்லிம் தலைமைகள் வீறாப்பு அரசியலும், எதிர்ப்பு நிலைப்பாடுகளும் இனிமேல் சிறுபான்மையினரின் உரிமைகளை வென்று தரப் போவதில்லை என்பதை உணர வேண்டும். பயங்கரவாதத்தின் தோல்வியும் சில சிறுபான்மைத் தலைமைகளின் பிரிவினைவாத சித்தாந்தங்களுமே பெரும்பான்மையினரை விழிப்பூட்டி சமூக மயப்படுத்தியுள்ளது. எனவே சிறுபான்மை அரசியல் புதிய பரிமாணத் தோற்றத்தை எடுக்க வேண்டியுள்ளது. இதற்காகவே காலத்தின் தேவையுணர்ந்து தேசிய காங்கிரஸ் பயணிக்கிறது. அம்பாரை மாவட்டத்தில் இதன் தலைமையை அழிக்க முனையும் சக்திகள் வெவ்வேறு முனைகளில் தாக்குதல் தொடுத்தாலும் இம்முறை இது சாத்தியமாகப் போவதில்லை.ஆயிரம் ரூபாவைக் கூட வங்கியில் வைப்பிலிடவில்லை, ஒரு இலட்சம் ரூபா கடன் கோருவது எப்படி! இதே நிலைமையைத்தான் இன்று முஸ்லிம் காங்கிரஸும் மக்கள் காங்கிரஸும் ஏற்படுத்தியுள்ளன. இந் நிலைமைகளை மாற்ற அதிகளவான முஸ்லிம்கள் இம்முறை தேசிய காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, அதிலிருந்து வெளியேறியுள்ள ஜனநாயக மக்கள் சக்தி, பங்காளிகளாகியுள்ள சிறுபான்மைத் தலைமைகளின் எதிர்பார்ப்புகள் இம்முறை ஈடேறப் போவதில்லை.
இந்த நேரத்தைப் பயன்படுத்தியாவது, தனித்துவ தலைமைகள் தனித்துக் களமிறங்கி இருக்கலாம். இதுவே பலரது எதிர்பார்ப்பு. இவ்வெதிர்பார்ப்புக்கள் வெறுப்புக்களாகி விடாதவாறு சிறுபான்மைத் தலைமைகளால் நடந்து கொள்ள முடியுமா? ஆள்பவர்களின் கண்டு கொள்ளாமைகள் தொடர்ந்து நீடித்தால் சிறுபான்மைச் சமூகங்களின் நிலமைகள் என்ன? எரியூட்டல் உள்ளிட்ட எத்தனையோ மத, அரசியல் உரிமைகளைப் பெற வேண்டிய தேவைகள் உள்ள சமூகத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் தலைமைகள் இனியும் ஐக்கிய தேசியக் கட்சி சார்புப் போக்கிற்குள் இருக்க முடியாதென்பதையே கடந்த கால நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. உலகில் கொரோனாவால் மக்கள் கூட்டம் கொத்துக் கொத்தாகச் செத்து மடிகையில் பதினொரு பேரையே இலங்கை இழந்திருக்கிறது.
இது, எதிரணிகளின் எறிகணைகளிலிருந்து அரசைக் கட்டாயம் பாதுகாக்கும். இப்படிப் பெரிய மவுசுள்ள ஒரு அரசை தேர்தலில் எதிர்த்து நின்று களமாட இத்தலைமைகளால் முடியுமா?
ஏ.ஜீ.எம். தௌபீக்