"மண்வெட்டிச் சின்னமும் என்வசம் வரும்!" | தினகரன் வாரமஞ்சரி

"மண்வெட்டிச் சின்னமும் என்வசம் வரும்!"

மலையக மக்கள் முன்னணியின் பிரதிப்பொதுச்செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட விடயம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் இந்த பிரதிப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அனுஷா விலக்கப்பட்டாரா? அவ்வாறு விலக்கப்பட்டதனை அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றிய விடயங்களை பிரதிபொதுச் செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் தெரிவிக்கும் கருத்துகள் என்ன? 

கடந்த மூன்று வருடகாலமாக நீங்கள் வகித்து வந்த பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீங்கள் விலக்கப்பட்டுள்ளீர்கள் இது தொடர்பில் உங்கள் கருத்து.?

ஆம்! எனக்கு கட்சியின் உயர் பீடத்தில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த கடிதம் கிடைக்கப்பெற்றது. யாப்பு விதிகளுக்கு அமைவாகவே நான் செயற்படுகின்றேன். ஆகையால், நான் விதிமுறைகளை மீறியுள்ளேன் என்று யாராலும் கூறமுடியாது. நான் இப்போதும் பிரதிச்செயலாளர் நாயகமாக இருக்கின்றேன்.

யாப்பு விதிகளுக்கு அப்பால் தன்னிச்சையாகவே நீங்கள் செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது இது பற்றி?

எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவோ  அதில் உள்ள சரத்துக்களில் உள்ளவாறோ எனக்கு அனுப்பப்படவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்தையும் நான் அனுப்பிவிட்டேன். நான்  தேர்தலில் தனித்து இயங்குவதாக அறிவித்து இற்றைக்கு மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இந்த கொரோனா காலப்பகுதியிலும் நான் மலையக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச்செயலாளராகவே என்னை அடையாளப்படுத்தி வந்துள்ளேன். இக்காலப்பகுதியில் எனக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கண்டு  அஞ்சியே என்னை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.  நான் எனது  தந்தை உருவாக்கிய கட்சியின் பெயரை பலப்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றேன்.

நீங்கள் எப்படி அவ்வாறு கூறுகின்றீர்கள்? 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தே உங்களது கட்சியும் இருக்கின்றது அல்லவா?

2015ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டது வரவேற்கக் கூடிய விடயம். மலையகத்தில் தலைவர்கள் கூட்டாக இருப்பதை நான் எதிர்க்கவில்லை. மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்தவர்கள்  கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இந்த ஐந்து வருடகாலப்பகுதியில் என்ன செய்திருக்கின்றார்கள். மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியின் பெயரை வெளிக்கொண்டு வந்துள்ளார்களா?அவர்கள் கட்சியின் மண்வெட்டி சின்னத்தையே இல்லாது செய்துள்ளனர் என்பதை நான் இங்கு வெளிப்படையாக கூறுவேன். கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்ப்பதற்கு மாத்திரமே எனது தந்தையின் உருவப் படத்தையும் எமது கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்துகின்றார்கள் என்பதை இங்கு என்னால் பகிரங்கமாகக் கூறமுடியும். கூட்டணியை முன்னிறுத்தி செயறபட்டமையினாலே எமது கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பலம் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. இந்த கூட்டணியை தேர்தலுக்கான கூட்டணியாகவே நான் பார்க்கின்றேன். எமது மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்தி அதன் சின்னத்தை என்வசம் எடுப்பேன்.

வெற்றி பெற்றபின்னர் கூட்டணியாக இணைந்து கட்சி சார்பின்றி வீட்டு வசதிகள் உட்பட பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார்கள். இதனை இல்லை என மறுக்கின்றீர்களா?

அவர்கள் மலையகத்தில் வீட்டுத்திட்டங்களை செய்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அதனை யாருக்கு செய்தார்கள் என்பதே இங்கு எழும் கேள்வியாக இருக்கின்றது. கட்சி சார்பாகவே வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. வீடில்லாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வழங்கவில்லை. உண்மையில், மலையக மக்கள் முன்னணியாகிய எங்களது கட்சியில் இருக்கும் வீடுகள் தேவையான கட்சி அங்கத்தவர்களுக்கு கூட வீடு வழங்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது. 

நேரடியாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதற்கான காரணம்?

மலையக மக்களுக்கு முழுமையாக சேவை செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்துக்கு சென்றால் மாத்திரமே சாத்தியமாகும்.

- உரையாடல்: ஜீவா சதாசிவம் -

Comments