![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/06/14/unnamed-%284%29.jpg?itok=MteYPdHX)
மலையக மக்கள் முன்னணியின் பிரதிப்பொதுச்செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட விடயம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் இந்த பிரதிப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அனுஷா விலக்கப்பட்டாரா? அவ்வாறு விலக்கப்பட்டதனை அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றிய விடயங்களை கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவிக்கும் கருத்துகள் என்ன?
பிரதிப் பொதுச்செயலாளராக இருந்த அனுஷாவை தீடீரென பதவி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன?
திடீரென அவரை நாம் பதவி நீக்கம் செய்யவில்லை. அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதான அறிவித்தல் கடிதமொன்றை 11/05அன்று அவருக்கு அனுப்பிவைத்தோம். ஒரு கட்சியில் பொறுப்பான பதவியில் இருக்கும் அவர் கட்சியின் யாப்பு விதிகளை மீறி புறம்பாக செயற்பட்டமையினாலேயே இவ்வாறு ஒழுக்காற்று விசாரணைக்காக பதவியிலிருந்து இடைநீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவரை விசாரணை செய்வதற்காக சட்டத்தரணி ஒருவருடன் கூடிய மூவர் அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்திற்கு அனுஷா பதில் அனுப்பினாரா?
ஆம்! நாங்கள் கடந்த மே மாதம் 11ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு 25ஆம் திகதி எமக்கு பதில் தந்தார். அந்த கடிதத்தில் கட்சி யாப்பின் குறிப்பிட்ட ஒரு சரத்தை சுட்டிக்காட்டி அந்த சரத்திற்கு அமைவாக என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று பல விடயங்களை குறிப்பிட்டு தனது பக்க நியாயங்களைச் சொன்னார். மார்ச் 19வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் இவ்வாறு ஒரு அறிவிப்பை விடுத்திருப்பதன் நோக்கம் என்ன?
அனுஷா வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே அவர் தனித்து போட்டியிடுவது உறுதியானது. 2017ஆம் ஆண்டு அவர் மலையக மக்கள் முன்னணியில் பொறுப்பான பதவியை ஏற்றார். அதன்போது, தொடர்ச்சியாக கட்சியில் அனுபவங்களைப் பெற்றபின்னர் மத்திய மாகாண சபையில் அவரை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்தது. ஆனால், அவர் பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவார் என நாம் எண்ணவில்லை.
அவர் சுயேச்சையாக களமிறங்கிய தீர்மானம் உறுதியான பின்னர் கட்சியின் நிர்வாகக் குழு ஒன்றுகூடி பேசி தீர்மானமொன்றை எடுத்தது. ஏனெனில் ஒரு கட்சிக்கு செயலாளரின் செயற்பாடு மிகவும் முக்கியம். அந்தவகையில், எமது கட்சி தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து சுயேச்சையாக போட்டியிடும் அனுஷா எமது கட்சி வேலைகளில் ஈடுபட முடியாது.
உண்மையில் கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாக கட்சியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு சுயேச்சையாக இயங்கும் போது கட்சியில் பொறுப்பான பதவியில் செயற்படுவதற்கு அனுமதிக்க முடியாது. ஆகையால், அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உயர் மட்ட உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக பேராசிரியர் விஜயசந்திரனை பிரதிப்பொதுச் செயலாளராக நியமித்தோம்.
விஜயசந்திரன் கட்சிக்கும் இந்தப்பதவிக்கும் புதியவர் அல்ல. அவர் நீண்டகால உறுப்பினர் என்பதுடன் இவர் வகித்த பிரதி பொதுச்செயலாளர் பதவியையே 2017ஆம் ஆண்டு அனுஷாவின் அரசியல் பிரவேசத்தையடுத்து அவருக்கு விட்டுக்கொடுத்திருந்தார். கட்சி யாப்பை மீறி சுயமாக செயற்பட்டதால் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யபட்டு ஒழுக்காற்று நடவடிக்கை தொடரும் என நாம் ஏற்கனவே அவருக்கு கடிதம் மூலம் அறிவித்துவிட்டோம்.
பதவியில் இருந்து விலக்கியதை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்வதாக தெரிவித்திருக்கிறார் இது பற்றி உங்கள் கருத்து?
அவர் ஒரு சட்டத்தரணி. கட்சியின் யாப்பு விதிகள் பற்றி அனுஷா நன்கறிவார். அதற்கமைவாகவே நாம் செயற்பட்டோம். வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அவர் அறிவித்திருக்கின்றார். அவர் எந்த அடிப்படையில் வழக்குத்தாக்கல் செய்தாலும் நாம் முகங்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.
விஜயசந்திரன் தொடர்ச்சியாக இப்பதவியில் நிலைப்பாரா?
விஜயசந்திரன் ஏற்கனவே பிரதிப்பொதுச் செயலாளராக பதவி வகித்தார். தான் நிதிச்செயலாளராக பதவி வகிப்பதாகக் கூறி அனுஷாவின் அரசியல் பிரவேசத்தின் போது தான் வகித்த பதவியை விட்டுக்கொடுத்தார். செயலாளராக அனுஷா தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கட்சி கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில்லை. கட்சி வேலைகள் இடம்பெறாத நிலையில் வேறு ஒருவருக்கு இப்பதவியை கொடுப்பதை விட ஏற்கனவே பதவி வகித்தவருக்கே இதனை வழங்குவது சிறப்பானது எனத் தீர்மானித்தே வழங்கப்பட்டது.
தேர்தல் நெருங்கும் காலத்தில் இவ்வாறு பதவி மாற்றம் செய்திருப்பது உங்களது வாக்கு வங்கியைப் பாதிக்காதா?
மக்கள் தான் அதைனை தீர்மானிக்க வேண்டும். நாங்கள் மக்களுக்கு எங்கள் கட்சியினுடாக பல சேவைகள் செய்துள்ளோம். அது மட்டுமல்லாது கட்சி உயர் பீடத்தில் இருந்தோ அல்லது உறுப்பினர்களோ அனுஷா பதவி விலக்கப்பட்டால் தாமும் விலகுவதாகக் கூறி என அவர் பின்னால் செல்லவில்லை. கட்சியின் அங்கத்தவர்கள் எப்போதும் எம்முடனேயே இருக்கின்றனர். வாக்கு வங்கியில் சிறு எண்ணிக்கை வித்தியாசம் ஏற்பட்டாலும் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன்.
ஸ்தாபகத் தலைவரின் மகளையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள் என பரவலாகப் பேசுகின்றனர். இதற்கு உங்களது பதில் எவ்வாறானதாக இருக்கும்.?
அமரர் சந்திரசேகரன் ஸ்தாபகத் தலைவராக இருந்தாலும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் தான் கட்டாயமாக கட்சியின் பொறுப்பான பதவியில் இருக்க வேண்டும் என்ற யாப்பினை அவர் உருவாக்கவில்லை.
அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. நானும் வேறு கட்சியில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினராகவே மலையக மக்கள் முன்னணியில் இன்று தலைமைப்பதவியில் இருக்கின்றேன். எனவே கட்சிக்கு முரணாக செயற்பட்டால் அது யாராக இருப்பினும் யாப்பின் படியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- உரையாடல்: ஜீவா சதாசிவம் -