ஐக்கிய தேசிய கட்சியின் கிளையாகவே செயற்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஐக்கிய தேசிய கட்சியின் கிளையாகவே செயற்பட்டது தமிழ் தேசிய கூட்டமைப்பு

தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பற்ற முயன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே ஜனநாயகம் இல்லையே என்கிறார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில் கூட்டமைப்பு இதுவரைகாலமும் ஐக்கியதேசியக் கட்சியின் கிளையைப் போன்றே செயற்பட்டது என்கிறார் அவர். அவரது நேர்காணல் முழுமையாக....

கே: நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?  

பதில்: 70 வருடமாக ஒரு இனமாக, உரிமைக்காக போராடிய மக்கள் நாம். இதுவரை காலமும் உரிமையையும் சிந்தித்துத் தான் தேர்தலில் வாக்களித்து வந்திருக்கின்றோம். ஆனால் வாக்கை வென்றவர்கள் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கவில்லை, இன்று வாய்ப்புக்களை எல்லாம் இழந்து நிற்கிறோம். சர்வதேச அங்கீகாரம் உள்ள அரசாங்கம், சர்வதேசம் கொண்டு வந்த அரசாங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரித்த அரசாங்கம் எனச் சொல்லப்பட்ட நல்லாட்சி அரசாங்கம், இன்று தமிழ் மக்களுடைய பிரச்சினையை கணக்கில் எடுக்கவில்லை என்பது மிகப் பெரிய வேதனை,  

ஏனெனில், இன்று அடிக்கடி சொல்லும் விடயம். சர்வதேசம் கொண்டு வந்த அரசாங்கமே எமது பிரச்சினையை கவனிக்காத நிலையில், 70 வருட உரிமைக்கான அரசியலில் நாங்கள் எமது இருப்பைத் தக்கவைக்க மறந்துவிட்டோமே என்ற கேள்வி எழுகின்றது.  

இன்றுள்ள எமது சனத்தொகையின் விகிதாசாரமாக இருக்கட்டும், எமது கல்வி பொருளாதாரம், என்பனவாகட்டும் நாங்கள் கீழ் நோக்கிப் போகின்றோம் என்பதனையே காட்டுகின்றன.  

வருகின்ற 5 வருடமும், எமது மக்களுக்குப் பிரயோசனமானதாக இருக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்தாலும், அவர் பெரும்பான்மை பலத்துடன் ஜனாதிபதியாக பதவியேற்றார், இனி தமிழ் மக்களின் வாக்குகளின்றி வெல்ல முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.  

ஒரு காலத்தில் மார்தட்டி நின்ற சமூகம் கல்வியில் மீண்டும் முதலிடத்துக்கு வரவும் அனைத்து துறைகளிலும் மறுபடியும் முதலிடத்திற்கு வரவும் வேண்டும் என்பதே எமது அவா.  

அதனை நிறைவேற்றக் கூடிய வல்லமை, இந்த அரசாங்கத்திடம் மாத்திரமே இருக்கின்றது.  

கே: கொவிட் -19 வைரஸ் பிரச்சினை நிலவுகின்ற இந்தக் காலப்பகுதியில், தேர்தல் சுமுகமாக நடைபெறுமென நினைக்கின்றீர்களா?  

பதில்: நிச்சயமாக, மக்கள் பிரதிநிதித்துவம் என்பது மிகவும் முக்கியமான விடயம். தேர்தலுக்காக பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், தேர்தலைத் தள்ளிப் போட்டுக்கொண்டு போனால், பொறுப்புக்கூறல் இல்லாமல் போய்விடுகின்றது. 5 வருடத்திற்கு ஒரு முறையாவது, அரசியல்வாதி என்பவர் மக்களை சென்று சந்தித்து மக்களின் ஆணையைப் பெற்று வர வேண்டும். பொறுப்புக்கூறல் என்ற விடயத்தை எப்போதுமே முன்னிலைப்படுத்த வேண்டும். தேர்தல் மிக முக்கியமானது.  

வல்லரசு நாடுகளில் கூட கொரோவுடன் தான் வாழப் பழக வேண்டுமென்ற மனநிலையில் இருக்கின்றார்கள். பாதுகாப்பான நடவடிக்கைகள் மூலம், இந்த தேர்தலை நடாத்தி, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தை உருவாக்கி, அதனூடாக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வேலைத்திட்டத்திற்குள் இறங்குவதே மிகச் சிறந்ததென நான் நினைக்கின்றேன். 

கே: பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஹுல் தெரிவித்திருக்கின்றார். அவரின் கருத்து தொடர்பாக உங்களின் நிலைப்பாடு என்ன?  

பதில்: மிகவும் பக்கச்சார்பாக செயலாற்றும் விடயமாக பார்க்கின்றேன். ஒரு போட்டி என்று வரும் போது, நடுவராக இருக்க வேண்டியவர் பக்கச்சார்பாகச் செயற்பட முடியாது.  

யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்கக் கூடாது என சொல்வதில்லை தேர்தல் ஆணைக்குழு உறுப்பினரின் வேலை. தேர்தல் நீதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுகின்றதா என்பதைக் கண்காணித்து, அதற்ககுரிய நடவடிக்கை எடுப்பது.  

தேர்தல் ஆணைக்குழுவைத் தாண்டி, அரசியல் நோக்கத்துடன் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு நிலவுகின்றது. வேட்பாளர்கள் மற்றும், கட்சிகளின் பெயர்களைச் சொல்லிக் கதைக்கின்றார். பொதுஜன பெரமுனவை மட்டுமன்றி வேறு கட்சிகளின் பெயர்களையும் சொல்லிக் கதைக்கின்றார்.   

கே: தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களின் இவ்வாறான கருத்துக்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்துவதுடன், தேர்தல் ஆணைக்குழு மீதான நம்பிக்கை இன்மையை எடுத்துக் காட்டுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?  

பதில்: மக்கள் தேர்தல் பற்றியும், அரசியல்வாதிகளின் செயற்பாடுகளைப் பற்றியும், தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளைப் பார்த்தும், குழப்பமடைந்துள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள ஒருவர், அரசியல் கட்சிக்கு சார்பாக நடக்கின்றார். இது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது.  

கே: தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?  

பதில்: அரசியலமைப்புச் சபைதான் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில், நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தான் இருக்கின்றார்கள். இந்த தேர்தல் தமக்கு சார்பாக அமைய வேண்டும் என்பதற்காக தான், அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. புதிய பாராளுமன்றம் வந்தால், அதற்குரிய புதிய அரசியலமைப்புச் சபை உருவாக்கப்படும். அதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குப் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.  

கே: அரசியல்வாதிகள் தேர்தலில் காட்டும் ஆர்வத்தை மக்களிடம் காட்டுவதில்லையே?  

பதில்: அரசியல்வாதிகள் தேர்தலில் காட்டும் அக்கறை, மக்களின் பிரச்சினைகளில் காட்டுவதில்லை என்பதையே நீங்கள் கூறுகின்றீர்கள். அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை பிழையாக விளங்கிக்கொள்வதால் தான், அவ்வாறு நடக்கின்றது.  

இதுவரை காலமும், தமிழ் தேசியம் பேசிய தமிழ் கட்சிகள், தமிழ் தேசியத்தை மட்டும் பேசி, அரசியல் செய்த காலம் மாறி, அபிவிருத்தியையும் கொண்டு செல்ல வேண்டும் என்ற தெளிவு அவர்களிடத்தில் வந்துள்ளது.  

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் அரசியலையும், அபிவிருத்தியையும் சரிசமமாக கொண்டு செல்ல வேண்டுமென்று சொல்கின்றார். அதுவும் ஒரு வேடிக்கையான விடயம். அவர்கள் ஆதரித்த நல்லாட்சி அரசாங்கம் இருந்த காலத்தில் அதனைச் செயற்படுத்த முடியாத கட்சியினர், இன்று எவ்வாறு, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, அதைச் செயற்படுத்தப் போகின்றார்கள்.  

ஆகையினால், மக்களின் தேவைகளை இவர்கள் சரியான முறையில் விளங்கிக்கொள்ளவில்லை என்றே நான் நினைக்கின்றேன். தேர்தலில் கூட மக்களின் சேவைக்கான ஈடுபாடு குறைவு. மக்கள் இந்த விடயத்தில் தெளிவாக இருக்கின்றார்கள். எதிர்வரும் 5 வருடங்கள் கோட்டாபயவே ஜனாதிபதியாக இருப்பார். அப்போது அபிவிருத்தி அடைந்த மாவட்டங்களாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உருவாக்க முடியும். அதனூடாக எமது உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாங்கள் நேரடியாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்தவில்லை. மக்கள் இந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். ஒரு கூட்டணியாக, தமிழ் மக்களுக்கு தேவையான எந்தவொரு அபிவிருத்தி திட்டத்திற்கும், தீர்வுதிட்டத்திற்கும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும், நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அழுத்தங்களையும், ஆலோசனைகளையும் வழங்குவோம்.   

கே: தெற்கில் பெரமுன கட்சியும் வடக்கில் கூட்டமைப்பும் வெற்றி பெறும் என ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் கருத்து பற்றி என்ன கருதுகின்றீா்கள்?  

பதில்: அது அவருடைய கருத்து நாங்கள் அவருடைய கட்சி இல்லை அதனால் நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. ஆனால் என்னால் ஒன்று சொல்ல முடியும். இந்த தடவை அப்படி நடக்க வாய்ப்பில்லை. அதாவது வடக்கை முழுமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்ற வாய்ப்பில்லை. ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பல தடவைகள் வாய்ப்புக்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதை பயன்படுத்தவில்லை. அவர்கள் தங்களுக்கு அரசாங்கம் இல்லை என்றார்கள்.  

22 ஆசனங்கள் இருந்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பால் செய்ய முடியாத விடயத்தை இனிமேல் சாதிக்க இயலாது. நடைபெறவுள்ள தேர்தலில் அது 8 ஆக மாறும் வாய்ப்பும் உள்ளது.  

இதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்கு வீதம் குறைந்து கொண்டு போவது மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகின்றது. தமிழ் மக்களுடைய தேவைகளை அறிந்து நேர்மையாக நடந்திருந்தால், இன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்காது.

கே: கடந்த கால அரசாங்கத்துடன் கூட்டமைப்பிற்கு உடன்படிக்கை ஒன்று இருந்தது. அதே போன்று, இந்த அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கைகள் ஏதாவது உள்ளவா?  

பதில்: எந்த உடன்படிக்கைகளும் எட்டப்படவில்லை. உடன்படிக்கை எட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என நான் நினைக்கின்றேன். ஏனென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரு கட்சிகளையும் சரிசமனாக பார்க்கவில்லை. ஜக்கிய தேசிய கட்சியின் வடக்கு, கிழக்கின் கிளை போல தான் அவர்கள் நடந்து கொண்டார்கள். தற்போதைய அரசாங்கததுடன் நல்ல உறவைப் பேணுவதற்கு அவர்களால் முடியவில்லை. அதனால் எந்த ஒப்பந்தமும் செய்ய மாட்டார்கள்.  

கே: அண்மையில் பிரதமரை சந்தித்து பிடிபட்ட கைதிகளின் விடுதலைகாக இரகசிய ஒப்பந்தம் நடத்தப்பட்டதாக செய்தி வெளி வந்ததே?  

பதில்: இரகசிய ஒப்பந்தம் எவையும் இடம்பெறவில்லை இதனை தேர்தலுக்கான நடவடிக்கையாகத் தான் நான் பார்க்கின்றேன். ஏனென்றால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 6 மாதங்களாகி விட்டன. அவர்களுடைய செல்வாக்கு இல்லாத காலத்தில் அவர்களுடைய கருத்துக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா எனபது சந்தேகமே. தனித்தனியாக ஒவ்வொருவரும் பிரதமரை சந்தித்துக் கதைப்பதும் படம் எடுத்துப் போடுவதும், இது தேர்தலுக்கான நடவடிக்கையாகத்தான் இருக்கிறது தேர்தலை வெல்வதற்காக எந்த பொய்யையும் சொல்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது. நேர்மையாக செயற்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வும் காணலாம் அவர்களுடைய கட்சியும் பாதுகாக்கப்படும்.

கே: தமக்குச் சாதகமான அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுமானால் அறுதிப் பெரும்பான்மைக்கான ஆதரவு தரத் தயாராக இருப்பதாக சுமந்திரன் கூறியுள்ளாரே?  

பதில்: இந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைபின் ஆதரவு தேவை இல்லை. ஏனெனில் 2/3 வாக்கு பலத்தால் வெல்லக் கூடிய பலம் ஏற்கனவே இந்த அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதேநேரம் அவர்களை வெல்ல வைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தேவையில்லை. தமிழ் மக்களுடைய ஆதரவு அவர்களுக்கு கட்டாயம் தேவை. அதைப் பெற்றுக் கொடுக்க உண்மையானவர்கள் அவர்களுக்கு தேவை. அரசாங்கத்தின் பிரதிநியாக இல்லை தமிழ் மக்களின் பிரதிநிதியாக அரசாங்கத்துக்கு. சென்ற அரசிடம் தமிழ் மக்களை அடகு வைத்து தமிழ் மக்களை இன்னும் பலவீனப்படுத்தியவர்களுடன் அரசு ஒப்பந்தம் செய்யத் தயாராக இல்லை.

கே: தெற்கை அடிப்படையாக கொண்ட கட்சிகள் வடக்கில் வாக்குக் கேட்பது கூட்டமைப்பின் வாக்கு வங்கியை உடைப்பதற்காகவா?  

பதில்: அவற்றை தெற்கில் இருக்கின்ற கட்சிகள் என்று சொல்ல முடியாது அவை தேசிய கட்சிகள் 70 வருட தமிழ் மக்களின் பாரம்பரியத்தை காப்பற்ற முயன்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்ளேயே ஜனநாயகம் இல்லையே. இருக்கிறவர்களே ஒருவரை ஒருவர் வெட்டிச் சாப்பிடும் அளவிற்கு இருக்கின்றார்கள். எமது மக்கள் இழந்த இடைவெளிகளை மீளவும் பெற்றுக் கொடுப்பதே இன்றைய தேவையாக உள்ளது.

சுமித்தி தங்கராசா

Comments