பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டங்களை வலுப்படுத்துவது அவசியம்! | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றத்துக்கு அதிகாரங்களை வழங்கும் வகையில் சட்டங்களை வலுப்படுத்துவது அவசியம்!

நாட்டில் தற்பொழுதுநிலவும் அரசியல்மற்றும் பொருளாதாரநொருக்கடி என்பவற்றைத் தீர்ப்பதற்குப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், இந்த இரு பிரச்சினைகளும் ஒன்றுடன் ஒன்றுபிணைந்திருப்பதால் சரியான அணுகுமுறையுடன் தீர்வுகளை எட்டுவதே நீண்டகாலஸ்திரத்தன்மைக்குஅவசியமானதாகும்.

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாமல் பொருளாதார நெருக்கடிக்கு மாத்திரம் தீர்வு கண்டால், அது குறுகிய காலத்துக்கானதாகவே அமையும். எனவே தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்பவர்கள் இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டு செயற்படுவது அவசியமானதாகும்.

அதேநேரம், காலிமுகத்திடல் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்ளை முன்னெடுத்துள்ளவர்கள் நாட்டில் ஊழல், மோசடி அற்ற ஆட்சியாளர்களை உருவாக்கக் கூடிய அரசியல் கட்டமைப்பு மாற்றமொன்றையே வலியுறுத்தி வருகின்றனர்.

எதிர்கால சந்ததியினரின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்டமைப்பு மாற்றமொன்றை உருவாக்குவதற்கான தேவையும் உணரப்பட்டுள்ளது. அதற்கான சிறந்த சந்தர்ப்பமாகவும் இதனைப் பார்க்க முடியும். எனவே நாட்டின் மீது உண்மையான பற்று வைத்துள்ள அரசியல் தலைவர்கள் இவற்றையும் கவனத்தில் கொண்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறான பின்னணியிலேயே நிறைவேற்று அதிகாரத்துக்கும் சட்டவாக்கத்துக்கும் இடையிலான அதிகாரங்களைப் பகிர்வது குறித்த கருத்தாடல்கள் வலுப்பெற்றுள்ளன. அதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 20ஆவது திருத்தத்தில் மீண்டும் திருத்தங்களைக் கொண்டு வந்து பாராளுமன்றத்துக்கான அதிகாரங்களைப் பலப்படுத்தும் வகையில் 21ஆவது திருத்தத்தை முன்வைப்பது பற்றி இப்போது பேசப்படுகிறது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 21ஆவது திருத்தத்துக்கான வரைவை முன்வைத்திருந்ததுடன், இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார்.

 21ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மத்தியில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும், நாட்டின் கள நிலைமையைப் புரிந்து கொண்டு தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.

அதிகாரங்களைக் குறைப்பதற்கு சமாந்தரமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வருகின்றன. இதனை இரண்டாவது கட்டமாக நிறைவேற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அண்மையில் நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தியிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார். அது மாத்திரமன்றி பாராளுமன்றத்திற்குக் காணப்படும் அதிகாரங்களை வலுப்படுத்துவது பற்றியும் அவர் தனது உரையில் பிரஸ்தாபித்திருந்தார்.

இலங்கையில் தற்பொழுது காணப்படும் பாராளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகக் கட்டமைப்பில் பல்வேறு முக்கிய விடயங்களை முன்னெடுக்க முடியும். குறிப்பாகப் பாராளுமன்றத்தைப் பொறுத்த வரையில் மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்தில் கலந்துரையாடும் விடயங்களுக்கு அப்பால் பல்வேறு குழுக்கள் செயற்படுகின்றன.

நாம் அடிக்கடி கேள்விப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு), அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோப குழு), அரசாங்க நிதி பற்றிய குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் பலமான நிலையில் செயற்படுகின்றன.

சட்டவாக்கம், நிதி முகாமைத்துவம், மேற்பார்வை ஆகிய முக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாராளுமன்றத்தில் காணப்படும் குழு முறைமை மிகவும் முக்கியமானதாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்தில் தமது அரசியல் நிலைப்பாடுகளை மாத்திரம் வெளிப்படுத்துவதற்கு அப்பால் சென்று நாட்டின் அரச கட்டமைப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணிகளை இந்தக் குழுக்கள் முன்னெடுக்கின்றன.

விசேட குழுக்களுக்கு அப்பால் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களின் ஊடாக அமைச்சு சம்பந்தமான பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இது தவிரவும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் குறித்து பாராளுமன்றத்துக்குத் தெரியப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமனுக்கள் பற்றிய குழு காணப்படுகிறது.

இவற்றை விடவும் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் காணப்படுகின்றன. இவை தற்பொழுது இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மீண்டும் செயற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு துறை சம்பந்தமாக எடுக்கப்படும் தீர்மானங்களை குறித்த மேற்பார்வைக் குழுவில் ஆராய முடியும். கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்படும் போது பாராளுமன்ற மேற்பார்வைக் குழு அது பற்றி ஆராய்ந்து தனது பரிந்துரையை வழங்க முடியும்.

இதுபோன்ற பாராளுமன்ற குழு முறைமையை பலப்படுத்துவது குறித்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் தெரிவித்திருந்தார். பிரதமர் தனது உரையில் குறிப்பிடுகையில்,  தற்போது, பாராளுமன்றத்தின் கட்டமைப்பை மாற்றி, தற்போதுள்ள பாராளுமன்ற முறை அல்லது ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறை மற்றும் அரசியலமைப்பு முறை ஆகியவற்றை இணைத்து புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்.  அவ்வாறான சந்தர்ப்பங்களில் பாராளுமன்றம் நாட்டை ஆள்வதில் பங்கேற்கலாம். முதலாவதாக, நாணய அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பாராளுமன்றத்திற்கு அந்த அதிகாரங்களை வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாங்கள் வலுவான மற்றும் சக்தி வாய்ந்த சட்டத்தை முன்மொழிகிறோம். தற்போது அரசாங்க நிதி தொடர்பாக மூன்று குழுக்கள் உள்ளன.  பொது நிதிக் குழு, கணக்குக் குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகிய மூன்று குழுக்கள் ஆகும்.  இந்த மூன்று குழுக்களின் அதிகாரங்களை பலப்படுத்துவதற்காக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன பல யோசனைகளை முன்வைத்துள்ளார். மேலதிகமாக அதற்கு. நாங்களும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம் எனப் பிரதமர் கூறியிருந்தார்.

இவற்றுக்கு மேலதிகமாக நிதிக் கட்டுப்பாடு என்ற பாராளுமன்றத்தின் செயற்பாட்டை நிறைவேற்றும் நோக்கில் புதிய குழுக்களை அமைப்பது பற்றிய பரிந்துரைகளையும் பிரதமர் முன்மொழிந்திருந்தார்.

“பண விவகாரங்கள் தொடர்பாக இரண்டு புதிய குழுக்களை அமைக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய சட்ட மற்றும் வழிமுறைக் குழுவை நியமிப்போம்” என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

'இரண்டாவதாக, நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் நிதிநிலை ஆகும்.  பலவீனமான பிரச்சினைகள் பல இதில் உள்ளன. எங்களின் நிலையியற் கட்டளை 111இன் கீழ் நாம் மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க முடியும்.  இதற்கு முன் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்படவில்லை.  எனவே, பத்து மேற்பார்வைக் குழுக்களை நியமிக்க நாங்கள் முன்மொழிகிறோம்.  அதற்கு பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஐந்து நிதிக் குழுக்கள் மற்றும் பத்து மேற்பார்வைக் குழுக்களின் தலைவர்கள் பின்வரிசை உறுப்பினர்களால் நியமிக்கப்படுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  அவர்கள் அமைச்சர்களால் நியமிக்கப்படுவதில்லை. எனவே, அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து சுயாதீனமான மற்றும் அமைச்சர் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இருவருடனும் இணைந்து செயல்படும் ஒரு வழிமுறையை உருவாக்க எங்களுக்கு வாய்ப்பு உள்ளது” எனப் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இது இவ்விதமிருக்க, அரசியல் கட்டமைப்பு மாற்றமொன்றை எதிர்பார்க்கும் இளைஞர்களையும் இதில் இணைத்துக் கொள்வதற்கான யோசனையைப் பிரதமர் முன்மொழிந்துள்ளார்.  துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் உள்ளடங்கலான 15குழுக்களிலும் வெளியிலிருந்து குறிப்பாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிலிருந்து தலா நான்கு பிரதிநிதிகளை நியமிப்பதற்கும் பிரதமர் முன்மொழிந்துள்ளார்.

அவர்களில் ஒருவர் இளைஞர் பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவார்.  மற்ற மூவரும் போராட்டக் குழுக்கள் மற்றும் பிற ஆர்வலர் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.  இந்த நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறையை இளைஞர் அமைப்புகளே தீர்மானிக்க முடியும். அத்துடன், குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தலாம் என்று நம்புகிறோம்.  இப்பணியின் மூலம் இளைஞர்கள் தாங்களாகவே பிரச்சினைகளை அறிந்து அதற்கான தீர்வுகளை வழங்க முடியும்.  அவர்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட  முடியும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக தேசிய கவுன்சிலையும் பிரதமர் முன்மொழிந்துள்ளார். சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழு தேசிய கவுன்சில் என்று அழைக்கப்படுகிறது. தேசிய சபை மிகவும் முக்கியமானது என்றே கூற வேண்டும்.  நாட்டின் கொள்கைகள் குறித்து இதில் பேசலாம்.  அமைச்சரவையின் முடிவுகள் குறித்தும் பேசலாம்.  இந்நாட்டின் பாராளுமன்ற மறுசீரமைப்பு குறித்தும் பேசலாம்.  அப்படியானால், அதை அரசியல் அமைப்பு என்று சொல்லலாம் எனப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்தார். 

'நாம் முன்வைத்துள்ள புதிய முறைமையின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.  அமைச்சர்களின் அமைச்சரவையும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.  தேசிய கவுன்சிலும் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.  பதினைந்து குழுக்கள் மற்றும் மேற்பார்வைக் குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும்.

அமைச்சரவை மூலம் அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும், ஜனாதிபதியின் பணிகளை ஆராயவும், தேசிய சபையின் மூலம் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடவும், மற்ற பதினைந்து குழுக்களின் நிதி விவகாரங்கள் மற்றும் பிற விஷயங்களை மேற்பார்வையிடவும் ஒரு அமைப்பு உள்ளது. வேறு பல அமைப்புகளும் இதே போன்ற திட்டங்களை முன்வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன்' எனக் கூறி பிரதமர் தனது உரையை முடித்திருந்தார்.

ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று அரசியல் கட்டமைப்பு மாற்றமொன்றை எதிர்பார்த்துப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளவர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை வழங்கும் வகையில் பிரதமரின் இந்த முன்மொழிவுகள் அமைந்துள்ளன. நாட்டின் எதிர்காலத்தையும், இங்குள்ள எதிர்கால சந்ததியினரையும் கவனத்தில் கொண்டு இந்த யோசனைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கு மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். இதுபோன்று வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்கி அவற்றின் அடிப்படையில் பொருளாதார உதவிகளைக் கோரும் போது சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புக்களும் எவ்வித அச்சமும் இன்றி இலங்கைக்கு உதவ முன்வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம்.

சம்யுக்தன்

Comments