![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/07/19/Sampanthan.jpg?itok=xse8ooAl)
இந்த பாராளுமன்றத் தேர்தலானது திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் விசேட அம்சங்கள் சிலவற்றைக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக நியமனப் பத்திரங்கள் கடந்த மார்ச் 12 ஆம் திகதியிலிருந்து மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்துக்கு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 16 அரசியல் கட்சிகள் மற்றும் 24 சுயேச்சைக் குழுக்களில் இருந்தும் மொத்தம் 280 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
4 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 189 பேர் போட்டி.
வேட்பு மனுத்தாக்கல் செய்த 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் 3 கட்சிகளும் மற்றும் 10 சுயேச்சைக் குழுக்கள் என்பவற்றின் நியமனப் பத்திரங்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
1981 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 19 ஆவது பிரிவுக்கமைய, முறையாக கையளிக்கப்படாத நியமனப் பத்திரங்களே நிராகரிக்கப்பட்டதாகவும் பெரும்பாலான நியமனம் பத்திரங்கள் முறையான உறுதிப்படுத்தலுடன் சமர்ப்பிக்கத் தவறியதனாலே இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயேட்சை குழுக்களில் இருந்தும் மொத்தமாக 27 நியமனப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
சிங்கள தீப ஜாதிக பெரமுன, தேசிய காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகளின் நியமனப் பத்திரங்களே நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில் சிறிலங்கா பொது பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய இலங்கை தமிழர் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை தமிழர் மகாசபை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, ஜாதிக பல வேகய, பெரட்டுவவாதி சமாஜவாதி ஆகிய 13 கட்சிகளும் போட்டியிடுகின்றன.
நஜீப் அப்துல் மஜீதின் முயற்சி தோல்வி
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஸ்ரீலங்கா பொது பெரமுனை சார்பாக தேர்தலில் போட்டியிடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தமை இந்த தேர்தலில் ஒரு முக்கிய நிகழ்வாக நோக்க வேண்டியுள்ளது.
ஏனெனில், பாராளுமன்றம் கலைக்கப்பட்ட நாளில் இருந்து நஜீப் அப்துல் மஜீத் ஸ்ரீ லங்கா பொது பெரமுனையின் மூதூர் தொகுதி அமைப்பாளர் பதவியைப் பெறுவதற்கும் அதனூடாக தேர்தலில் போட்டியிடுவதற்கும் இறுதி வரை முயற்சி செய்து வந்திருந்தார்.
இதற்காக 30 வருடங்களுக்கு மேலாக தான் வகித்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் பதவியையும் அவர் கைவிட்டுத்தான் இந்த முயற்சியில் இறங்கியிருந்தார். ஆனாலும் இறுதி நேரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை என்ற விடயம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் அவரின் நீண்ட நாள் ஆவலும் ஆசையும் நிறைவேறத் தவறியது இதனால் அவருடைய ஆதரவாளர்களும் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்தனர்.
இந்த நிலை நஜீப் அப்துல் மஜீதுக்கான அனுதாப அலை ஒன்றை ஆதரவாளர்கள் மத்தியில் சடுதியாக ஏற்படுத்தியிருந்ததோடு, இந்தச் சூழல் எந்தக் கட்சியிலாவது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஆவலையும் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.
வேட்பு மனுத்தாக்கலின் இறுதிக்கட்ட நாட்களில் இந்த நிகழ்வு இடம்பெற்றதால், நஜீப் அப்துல் மஜீதுக்கான வாக்காளர்களின் அனுதாபங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு சென்றதை திருமலை மாவட்டத்தின் நாலாபுறங்களில் இருந்தும் ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வந்து அவருக்கு ஆறுதல் கூறிச் சென்றமை மூலம் அறிய முடிந்தது.
தேர்தலில் போட்டியிடுவதற்காக நஜீப் அப்துல் மஜீதுக்கு ஸ்ரீ லங்கா பொது பெரமுனையில் இடம் கிடைக்கவில்லை என்பதை கேள்விப்பட்டதும் , ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லா மகரூப் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) இம்ரான் மகரூப் (ஐ.தே.கட்சி. சஜித் அணி), எம்.எஸ். தௌபீக் ( ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) ஆகியோரும் அவரது வீட்டுக்குச் சென்று, சந்தித்து கைலாகு கொடுத்து ஆறுதல் கூறியதையும் இங்கு ஒரு முக்கிய நிகழ்வாக குறிப்பிட வேண்டியிருக்கிறது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் இந்த சந்திப்பானது நஜீபின் ஆதரவாளர்களை தங்கள் வசம் ஈர்ப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம் என அந்த நேரம் பேசப்பட்டது. மறுபுறம், இந்த ஆறுதல் கூறிய விடயம் நஜீப் அப்துல் மஜீதுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பமாக அமையலாம் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும் இதுவும் சாதகமாக அமையவில்லை.
ஏனென்றால், ஐக்கிய மக்கள் சக்தியில் நஜீப் அப்துல் மஜீத் போட்டியிடுவதை மூன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் விரும்பவில்லை என்றதொரு அபிப்பிராயம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்திக்கு நஜீபின் வருகையினால் தங்களுடைய வெற்றி பாதிக்கப்படலாம் என இவர்கள் கருதியிருக்கலாம்.
இந்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தனது கட்சி சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுவதற்கு வாக்குப் பலம் உள்ள ஒருவரை தேடிக் கொண்டிருந்த தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது.
இந்த நிலையில், அத்தாவுல்லாவின் அழைப்பை ஏற்ற நஜீப் அப்துல் மஜீத், அவரது தலைமையில் தேசிய காங்கிரஸ் சார்பில், திருமலை மாவட்டத்தில் தனியாக போட்டியிடுவதற்காக இறுதி நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த விடயம் திருகோணமலை மாவட்ட அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக ஏன் கருதப்படுகிறதென்றால், 1989 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்டு வந்த நஜீப் அப்துல் மஜீத், அந்த பிரதிநிதித்துவத்தை இழந்து, இந்த தேர்தலில் வேறு ஒரு கட்சியில் தேசிய காங்கிரஸில்) போட்டியிட நியமனப் பத்திரம் தாக்கல் செய்தமையும் இந்த தேர்தலில் ஒரு முக்கியமான நிகழ்வே ஆகும்.
தேசிய காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரம் நிராகரிக்கப்படல்
இறுதிக்கட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேர்தலில் களம் இறங்க, நஜீப் அப்துல் மஜீதும் அவரது ஆதரவாளர்களும் எடுத்த முடிவின் பிரகாரம் தேசிய காங்கிரஸ் சார்பில் அவர், வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எனினும் சமாதான நீதவானால் முறையாக உறுதியுரை செய்யப்படாமையினால் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தேசிய காங்கிரஸினால் தாக்கல் செய்யப்பட்ட நியமனப் பத்திரம் நிராகரிக்கப்பட்டமையும் ஒரு முக்கியத்துவம் மிக்க விடயமாகவே பேசிப்படுகின்றது.
இதற்கு பல காரணங்கள் உண்டு. ஒன்று முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் முதன்மை வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டு, பரபரப்பான சூழ்நிலையில், அவரால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு என்ற காரணத்தினால் இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அடுத்து, 1994 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்ற அனைத்து பாராளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வந்த இவர், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை வேட்புமனு நிராகரிப்பின் மூலம் இழந்திருப்பதானது திருகோணமலை அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
அக்காவும் தம்பியும் இரு வேறு கட்சிகளில் போட்டி
திருமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் அடுத்து முக்கியமான விடையம் என்னவென்றால் அக்காவும் தம்பியும் எதிரும் புதிருமாக இரு வேறு கட்சிகளில் நியமனப் பத்திரம் தாக்கல் செய்திருக்கின்றமையாகும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் ஐக்கிய மக்கள் சக்தி தொலைபேசி சின்னத்திலும் இவரது அக்கா ரோஹினா மகரூப் ஐக்கிய தேசிய கட்சி யானைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இருவரும் காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான எம்.ஈ.எச். மகரூபின் பிள்ளைகளாவர்.
இவர்களில் ரோஹினா மகரூப் அரசியலுக்கு புதியவர். இத்தேர்தலே இவரின் அரசியலின் புதிய பிரவேசமாகும். இம்ரான் மகருப் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் ஊடாக ஐக்கிய தேசிய முன்னனி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அரசியலில் கால் பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்முனைப் போட்டி
மேலும் இத்தேர்தலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயம் என்னவென்றால் பல கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்ற போதும், மூன்று கட்சிகளே தலா ஒரு ஆசனத்தை பெறக்கூடிய நிலையைக் கொண்டிருக்கின்றது. இதனை கடந்த பல பாராளமன்ற தேர்தல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இம் மாவட்டத்தில் அளிக்கப்படுகின்ற மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு கட்சியோ அல்லது சுயேட்சைக் குழவோ பெற்றால், அது ஓர் ஆசனத்தைப் பெறுவதற்கான தகுதியாக பெரும்பாலும் இருக்கும். இதனைப் பெறக் கூடிய நிலையில் மூன்று கட்சிகள் மாத்திரமே களத்தில் உள்ளன. எனவே, இந்த மாவட்டத்துக்கான நான்கு ஆசனங்களில் மூன்று ஆசங்களை இந்த மூன்று கட்சிகளுமே தலா பெற்றுக் கொள்ளக் கூடிய வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் போனஸ் ஆசனத்துக்கான வாங்கு வங்கியை இதில் இரு கட்சிகளே பெரும்பாலும் கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றும் எனவே, போனஸ் ஆசனத்துக்காக இரு முனைப் போட்டி ஒன்றையே பெரும்பாலும் எதிர்பார்க்கலாம் என்றும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கிழக்கிலே ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளர்.
ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன சார்பில், அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் கிழக்கு மாகாணத்திலே ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடுகின்றார். இந்த வேட்பாளர் திருகோணமலை மாவட்டத்துக்கு கிடைத்திருப்பதும் இந்த தேர்தலில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
தொழிலதிபரும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனயின் மூதூர் தொகுதி அமைப்பாளருமான எம்.எஸ்.உவைஸ் என்பவரே அந்த வேட்பாளராவார்.
கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன சார்பில்,
போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதால் இந்த விடயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இரா சம்பந்தனின் சாதனை
2020 பாராளமன்ற தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த மாவட்டத்தில் ஏழாவது முறையாகவும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு நபராக பதியப்படுகின்றார்.
இது இந்த மாவட்ட தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனையாகும்.ஏனெனில் இதுவரை இவ்வாறு ஏழு பாராளமன்றத் தேர்தலில் எவரும் போட்டியிடாத காரணத்தினால் இது அரசியல் முக்கியத்துவம் மிக்க விடயமாக பேசப்படுகின்றது.
1977 ஆம் ஆண்டில் தொகுதிவாரியா பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், அதன் பிறகு 1989, 2001, 2004, 2010, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் விகிதாசார முறையின் கீழ், மாவட்ட ரீதியாக நடாத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் இந்த மாவட்டத்தில் அசியல்வாதி ஒருவர் அதிகூடிய பாராளமன்ற தேர்தலில் போட்டியிட்ட சாதனையை தனதாக்கிக் கொண்டிருக்கிறார்.
அத்தோடு, இவர், தான் இதுவரை போட்டியிட்ட ஆறு தேர்தல்களில் ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பதும் இந்த மாவட்ட அரசியல் வரலாற்றில் மற்றுமொரு சாதனையாகும். 1989 ஆம் ஆண்டு தேர்தலில் மாத்திரமே தோல்வியைத் தழுவியுள்ளார். தற்போது வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் சம்பந்தன் ஐயாவே ஆகக் கூடியதான 87 வயதைக் கொண்ட வேட்பாளராவார்.
இந்த மாவட்டத்தின் அரசியல் வரலாற்றில் இதுவரை எவரும் இந்த வயதில் போட்டியிடவில்லை என்பதனால், இந்த தேர்தல் முக்கியத்துவம் பெறுகின்றது. அடுத்து இரா. சம்பந்தன் ஐயா பாராளுமன்றத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இத்தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தமையானது இம் மாவட்டத்தின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக கொள்ளலாம். ஏனெனில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஒருவர் போட்டியிடுவது இதுவே முதல் சந்தர்ப்பம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கியாஸ் ஷாபி - கிண்ணியா மத்திய நிருபர்