இந்தோ-பசுபிக் தந்திரோபாய அரசியலில் சிக்கியுள்ளதா இந்தியா? | தினகரன் வாரமஞ்சரி

இந்தோ-பசுபிக் தந்திரோபாய அரசியலில் சிக்கியுள்ளதா இந்தியா?

இந்தியா - சீனா மோதலுக்கான நகர்வுகள் தீவிரமாக அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரு நாட்டுக்குமான போரை எவ்வளவு ஊக்குவிக்க முடியுமோ அந்தளவுக்கு முதன்மைப்படுத்த முயலுகிறது அமெரிக்கா. 1962இல் நிகழ்ந்தது போல் 2020 காலப்பகுதியும் இந்தியா அமெரிக்கா சீனா என்ற மூன்று நாடுகளுக்குமிடையில் நிகழ்ந்து வருகிறது. ஆனால் 1962 அனுபவத்தினைத் தான் இந்திய ஆட்சியாளர் மட்டுமல்ல புலமையாளர்களும் புரிந்து கொள்ளத் தயங்குகிறார்கள். இந்த யுத்தத்தின் விளைவால் இந்தியா –சீனா மட்டுமல்ல முழு ஆசியாவும் பாதிப்புக்கு உள்ளாகப் போகின்றது. இதன் அதிக விளைவு இந்தியாவுக்கானதாக அமையும். இக்கட்டுரையும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் போர்ச் சூழலை விபரிப்பதாக அமையவுள்ளது.

அமெரிக்கா இந்தப் போரை எவ்வாறு ஊக்குவிக்கிறது என்பதை அவதானிப்போம்;.

இந்த நெருக்கடியில் இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்ப தாம் தயாராக இருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பாம்பியோ பல தடவை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இதற்கு ஆதரவை இன்னும் அதிகரிக்கும் விதத்தில் சீனா தனது எல்லையோர நாடுகள் மீது மோசமான அத்துமீறல்களை நிகழ்த்தி வருகிறமையை  பொறுத்துக் கொள்ள முடியாது என்று அவர் மேலும் தெரிவித்து வருகிறார். இதனை உள்நோக்கமாகக் கொண்டே சீனாவை முறியடிக்கும் வகையில் ஜேர்மனியில் நிறுத்தியிருந்த அமெரிக்க படைகளை ஆசியாவிற்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் 30.06.2020 முதல் பசுபிக் கடலில் அமெரிக்கா மூன்று போர்க் கப்பல்களை களமிறக்கியுள்ளது.

இந்திய சீன முறுகல் போக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலும் அமெரிக்கா  தென் சீனக் கடற் பகுதியில் இரண்டு அமெரிக்க போர் கப்பல்கள் அதிரடியாக பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தனது நட்பு நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனாவிற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தென்சீனக் கடல் பகுதிக்கு யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் யு.எஸ்.எஸ். ரொனால்ட் ரீகன் ஆகிய இரு விமானம் தாங்கி போர்க் கப்பல்களையும் துல்லியமாக இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் தாங்கிய விரைவு போர்க்கப்பல்களையும் தாக்குதல் திறன் கொண்ட நடுத்தர போர்க் கப்பல்களையும் அமெரிக்கா இப்பகுதிக்குள் அனுப்பியுள்ளது. இதனை விட நிலையான போர் விமானங்கள் (fixed wing warplanes) மற்றும் ஹெலிகாப்டர்களுடன் சேர்ந்து 10,000 க்கும் அதிகமான பயிற்சி பெற்ற படையணியும் விமானம்தாங்கி போர்க் கப்பல்களில் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அத்தகைய படைகளைக் கொண்ட கப்பல்கள் பிலிப்பைன்ஸ் கடல்பகுதியையும் தென்சீனக்கடல் பகுதியையும் இணைக்கும் கடல்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரியவருகிறது. இரண்டு போர்க் கப்பல்களும் தென்சீனக் கடல் பகுதியில் இராணுவப் பயிற்சியில் ஈடுபடுகின்றன என ரொனால்ட் ரீகன் கப்பலின் கடற்படை அதிகாரி அட்மிரல் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையத்தின் இயக்குனர் போனிக் கிளாசர் கூறுகையில் இத்தகைய நடவடிக்கை அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் செயல் என்றே சீனா  நிச்சயமாக பார்க்கும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு வியூகத்தில் சீனாவுக்கு முக்கிய இடம் உண்டு என்பதை இது காட்டுகிறது எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்க பாதுகாப்பு மையமான பென்டகனின் அதிகாரிகள் குறிப்பிடும் போது இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கு அதிக அளவிலான இராணுவத் துருப்புக்களை கொண்டு வர முயற்சித்து வருகின்றதாக தெரிவித்துள்ளனர். இந்தோ பசுபிக் கட்டளையின் செயல்பாட்டு இயக்குனர் ரியர் அட்மிரல் ஸ்டீபன் கோஹ்லர் கூறுகையில் இந்த ரோந்து அமெரிக்காவின் திறனைகளை காட்டுவதற்கான ஒரு பகுதி மட்டுமே. சீனா இராணுவ கட்டமைப்புக்களை அதிகரித்து வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார். சீனா மெதுவாகவும் தொடர்ச்சியாகவும் தென்சீனக் கடலில் இராணுவத்தை நிலைநிறுத்தி வருவதாகவும் அங்கு ஏவுகணைகள் மற்றும் அணுவாயுத போர் அமைப்புக்களை நிலை நிறுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மூன்று போர்க் கப்பல்களும் வெவ்வேறு காரணங்களுக்காக களமிறக்கப்பட்டுள்ளதாகவும் அதில் பிரதானமானது இந்தியாவின் நலன்களுக்கானது எனவும் பென்டகன் தெரிவித்துள்ளது. அதாவது இந்திய சீன முறுகலை தவிர்க்கவும் நெருக்கடி கொடுக்கவுமே இத்தகைய மூன்று கப்பல்களையும் வேறு வேறு திசையில் நிறுத்தியுள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. குறிப்பாக  ஒரு போர் கப்பல் இந்தோ பசுபிக் பெருங்கடலின் எல்லைகளை இலக்கு வைத்து நகர்கிறது.  இன்னொரு கப்பல் தென் சீன கடல் எல்லையில் பிலிப்பைன்ஸ் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. மூன்றாவதாக மிக முக்கியமான போரக் கப்பலான யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் (USS Theodore Roosevelt) வியட்னாம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் கொண்டு விசேடமாக இந்தியாவிற்கு உதவுவதற்காக கொண்டுவரப்பட்டது. சீன-,இந்திய மோதல் ஏற்பட்டால் யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் மூலம் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படும் என்பதை தெரிவிப்பதாக அமைந்துள்ளது என பென்டகன் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அது எந்தளவுக்கு சரியானது என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

அதன்படி யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்  வியட்நாம் எல்லையில் நிறுத்தப்பட்ட கப்பல் இந்திய எல்லைக்குள் நகர ஒரு மணித்தியாலம் எடுக்கும் எனத் தெரியவருகிறது. அந்த நேரப்பொழுது சீனாவின் நகர்வு எப்படியானதாக அமையும் என்பதையும் இந்திய நிபுணர்கள் புரிதல் வேண்டும்.

யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் மிகவும் சக்தி வாய்ந்த போர்க் கப்பல் என்பது தெரிந்ததே.  இந்தியா சீனாவிடம் இருக்கும் பெரிய போர்க் கப்பல்களை விட மூன்று மடங்கு பெரிய போர் கப்பல் என்பதும் தெரிந்ததே. இதிலிருந்து ஏவுகணைகளை அணு ஆயுதங்களை ஏவ முடியும்.

அனைத்து விதமான போர் விமானங்களையும் இதில் இறக்கமுடியும். அதோடு இதில் நீர் மூழ்கி கப்பல்களும் தயார் நிலையில் இருக்கிறது. இந்த யு.எஸ்.எஸ் தியோடர் ரூஸ்வெல்ட் இனை வங்க கடலில் இறக்கினால் அது போருக்கான மிகப் பெரிய் திசைதிருப்பமாக இருக்கும்  என்பதுவும் தெரிந்த விடயம். ஆனால் சீனா அதில் எத்தகைய போக்கினை தீர்மானிக்கும் என்பது தெரியும் வரை இத்தகைய வலிமைகள் அனைத்தும் ஆபத்தானவையே. 1971இல் இந்துசமுத்திரத்துக்குள் நுழைந்த அமெரிக்க போர்க் கப்பல் பின்வாங்கியதை நினைவில் கொள்வது அவசியமானது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்தி அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியாவை சீனாவுடன் மோத வைக்க முயலுகிறது.

இதனால் இரு ஆசிய வலிமைகளும் அழிந்து விட்டால் தனது திறனை கட்டுப்படுத்த எந்த சக்தியும் இல்லை என அமெரிக்கா கணிப்பிட்டுள்ளது. இதற்காகவே சீனாவுக்கு  நிகரான நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக திட்டமிட்டுவருகிறது அமெரிக்கா. இத்தகைய விளைவு அனைத்தும் இந்தியாவுக்கே ஆபத்தானதாக அமையும் சந்தர்ப்பங்கள் அதிகம்.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments