![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/08/31/a19.jpg?itok=AaT9tx2-)
உலக அரசியலில் ஆட்சியாளர்கள் தமது இருப்பினை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை கடந்த பல நூற்றாண்டாக காணமுடிகிறது. அதில் பிந்தியதாக அமைந்திருப்பது ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைமைக்கு ஏற்பட்ட படுகொலை முயற்சியாகும். இதன் உண்மைத் தன்மைகள் பற்றிய தேடல் ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் அது ஏற்படுத்தியுள்ள அரசியல் வல்லரசுகளுக்கிடையிலான முரண்பாடாக வளர்ந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பிடேன் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் உக்ரையின் ஜனாதிபதியை தூண்டி ஜோ பெய்டன் மீதான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முயன்றதன் விளைவுகளை பற்றிய உரையாடல் நிழந்திருந்தது. அதனைக் கடந்து தற்போது ரஷ்ய ஜனாதிபதி புட்டினது நடவடிக்கை அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. அதற்கான காரணத்தையும் தற்போதுள்ள போக்கினையும் தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
20.08.2020அன்று சைபீரியாவின் டோம்ஸக் கரிலிருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்றுகொண்டிருந்த ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்சி நவல்னி விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென சுகவீனமுற்று மயக்கநிலையை அடைந்தார். அதனால் ரஷ்யாவின் ஓம்ஸ்க் நகரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். உயிருக்காக போராடிய நவல்னி செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் கோமா நிலையை அடைந்தார். இந்த சந்தர்ப்பத்தில் நவல்னி விமானம் புறப்படுவதற்கு முன்பு விமான நிலையத்தில் தேநீர் அருந்தியதாகவும் அதில் நஞ்சு கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதனால் மேலதிக சிகிச்சை வழங்குவதற்கு ஜேர்மன் தொண்டு நிறுவனம் ஒன்று முன்வந்ததை அடுத்து அவர் ஜேர்மனி பெர்லினில் உள்ள சாரியட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நவல்னி உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார் எனவும் அவரது உடலில் போதைப் பொருளுக்கு பயன்படுத்தப்படும் நச்சுப் பொருள் கலந்துள்ளது என்றும் பூச்சிகளை அழிக்கும் இந்த பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் ஆனால் எத்தகைய நச்சுப் பொருள் பயன்படுத்தப்பட்டது என்று தெளிவாகத் தெரியவில்லை எனவும் ஜேர்மனிய வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.
2017இல் ரஷ்ய அரச ஆதரவாளர்கள் அவர் மீது கிருமிநாசினி தெளித்ததனால் அவரது ஒரு கண்பாதிப்புக்குள்ளாகியது அவ்வாறே அண்மையில் நடைபெற்ற தேர்தலில் புட்டினுக்கு எதிராக போட்டியிடுவதற்கு நீதிமன்றம் நவல்னிக்கு தடை விதித்திருந்தது. இவர் மீது புட்டின் அதிக தாக்குதலை நிகழ்த்துவதாகவும் இவர் புட்டினை எதிர்த்து பிரசாரம் செய்வதாகவும் கூறப்படுகிறது. பெருமளவுக்கு ரஷ்ய ஜனாதிபதியின் அரசியல் ஊழல்களை வெளிப்படுத்துவதுடன் அவரது நடவடிக்கைகளை நிராகரித்து மக்களை ஒன்றிணைத்துப் போராடுவதிலும் நவல்னி அதிக முக்கியத்துவம் உடைய தலைவராக விளங்கினார்.
இதே நேரம் புட்டின் தான் நவல்னிக்கு நஞ்சு கொடுத்து கொல்ல முயன்றதாகவும் அதற்கான பதிலை புட்டின் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜேர்மனி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அரசுகள் தெரிவித்துள்ளன.
இனி விடயத்திற்கு வருவோம்.
முதலாவது நவல்னிக்கு உண்மையிலேயே நஞ்சு கொடுக்கப்பட்டதா என்பது அவதானிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதனையும் புட்டினது ஆதரவாளர்கள் தான் மேற்கொண்டனரா என்பதுவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏனெனில் புட்டினது அரசியல் எதிரிகள் ரஷ்யாவில் அதிகம் என்பதை விட மேற்குலகத்தில் அதிகம் என்றே கூறலாம். அதுவும் மேற்கு ஐரோப்பா முழுவதும் அமெரிக்கா உட்பட தற்போது புட்டினுக்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். அனைத்து வல்லரசுகளும் ரஷ்யா மீது பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்ற போது நவல்னியின் கொலை முயற்சியை சர்வதேச அரசியலாக மாற்றியுள்ளமை அவதானிக்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது. அந்த விடயம் உண்மையாக நடைபெற்றிருந்தாலும் நவல்னியின் ஆதரவாளர்களும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதன் விளைவாக அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை புட்டின் இலகுவில் கையாண்டுவிடும் திறன் உடையவராக உள்ளமை கடந்தகால அனுபவமாகும்.
இரண்டாவது இதனை ஒரு சர்வதேச விடயமாக மாற்றியதனால் அல்லது நவல்னியை ஜேர்மனிக்கு கொண்டு சென்றதனால் அவர் பாதுகாக்கப்பட்டார் என்பது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் புட்டினது அரசியல் எதிரி நாட்டை விட்டு விலகியுள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டி விடயமாகும். புட்டினைப் பொறுத்தவரை தனது அரசியல் எதிரிகளிடமிருந்து விலகியிருயிருப்பதை பாதுகாப்பானதாகவே அவர் கருதுகிறார். நவல்னியின் போராட்டம் இனி ஆதரவாளர்களால் மட்டுமே சாத்தியமாகும். அதாவது தலைமையில்லாத போராட்டமாகவே அமையும். படிப்படியாக புட்டினாலும் அவரது அரசாங்கத்தினாலும் அத்தகைய போராட்டங்கள் நெருக்கடிக்குள்ளாகும். அந்த வகையில் புட்டினுக்கு இலாபகரமானதாகவே அமைந்துள்ளது.
மூன்றாவது நவல்னியை மேற்கு நாடுகள் ஒரு அரசியல் பொருளாகவே கருதுகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது புட்டினது அரசியல் நகர்வுகளுக்கு இலாபகரமானதாகவே அமையும். ரஷ்ய மருத்துவா்களால் நவல்னி பாதுகாக்கப்பட முடியாது என்பதை விட புட்டினது நடவடிக்கை அவரை பாதுகாக்காது என நவல்னியின் ஆதரவாளர்கள் கருதினர். ஆதலால் விடயம் தற்போது தலைகீழாக மாறிவிட்டது. மேற்கு நாடுகளே திட்டமிட்டு ரஷ்யாவையும் ரஷ்யாவின் இருப்பினையும் குலைக்க முயல்வதாக புட்டின் செய்வாராயின் ரஷ்ய மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். ரஷ்ய மக்கள் மேற்குலகம் மீது அதீத வெறுப்புடையவராக உள்ளனர். அதனால் அத்தகைய பிரசாரங்கள் இலகுவில் ரஷ்யாவில் செல்லுபடியாகும். அதனை முதன்மைப்படுத்திக் கொண்டு நவல்னி விவகாரத்தை புட்டினும் அவரது அரசாங்கமும் கையாண்டுவிடும்.
நவல்னியின் மீதான நடவடிக்கைக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் அவரது ஆரோக்கியம் முக்கியம் என்றும் அவரது ஆரோக்கியத்தை அறிய ஆவலுடன் இருப்பதாகவும் ரஷ்ய அறிவித்துள்ளது. நான்காவது ரஷ்யாவின் அரசியல் மரபில் இத்கைய சர்வாதிகார அணுகுமுறை வழமையானதாகவே தெரிகிறது. தற்போதைய நவல்னி மீதான நடவடிக்கை ஸ்டாலின் காலத்தில் ரொஸ்கி மீதான நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக உள்ளது. ரஷ்யாவின் காலநிலையும் அதன் இயற்கைக் கட்டமைப்பும் அதன் பண்பாட்டுத் தளத்தில் ஆழமான பதிவை ஏற்படுத்தியுள்ளது. அதனை தவிர்த்து ரஷ்யாவை விளங்கிக் கொள்வது கடினமானது. ஜார் மன்னனது பிடியிலிருந்து விடுபட எழுந்த சோஷலிஸப் புரட்சி ஸ்டாலினை ஒரு சர்வாதிகாரியாக்கியது. அவ்வாறே தற்போது புட்டினது அரசியல் நகர்வுகள் அமைந்துள்ளன. புட்டின் ஒரு அரசியலமைப்புக்கு உட்பட்ட சர்வாதிகாரியாக விளங்குகிறார். அவரது அணுகுமுறைகள் ரஷ்யாவுக்கு மரபானதாகவே தெரிகிறது.
எனவே நவல்னி மீதான புட்டின் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியானவை என்பதை விட புட்டினது அரசியலமைப்புக்குள் உட்பட்ட சர்வாதிகாரத்தையே முதன்மைப்படுத்துகின்றார் என்பது அவரது அரசியல் நகர்வுகளில் தெரிகிறது. அவர் மேற்கை விரட்டும் அரசியல்வாதியாக விளங்கலாம் ஆனால் அவர் பின்பற்றும்“அரசியல் மரபுகள் அனைத்து சர்வாதிகாரத்திற்கு உட்பட்டதே. ரஷ்யா எப்போதும் உலகத்தின் இருதய நிலமாக இருக்க முயலுகிறதே அன்றி ஆரோக்கியமான அரசியல் மரபை பின்பற்றவோ எழுச்சி பெறவோ முடியாத தேசமாக அமைந்துள்ளது. அல்லது அத்தகைய எழுச்சிக்கு மேற்குலகம் ஒரு போதும் அனுமதியாத அணுகுமுறையால் அச்சமடையும் தேசமாக உள்ளமையும் தற்போதைய சூழலுக்கு பிரதான காரணமாகும். சோவியத் யூனியனை தகர்த்துவிட்டு ஜெல்சினை முன்னிறுத்தி ரஷ்யாவை அமெரிக்கா கையாண்ட விதமே புட்டினது தற்போதைய போக்குக்கான காரணம் என்று வாதிப்பவர்களும் உண்டு. ஆனால் தேசம் ஒவ்வொன்றும் அந்த தேசத்தின் ஆட்சியாளர்களால் நியாயத்தின் பெயரால் ஆளப்பட வேண்டும். அதுவே நிலையான இருப்பினையும் இலட்சியவாதத்தையும் உருவாக்கும்.
கலாநிதி கே. ரீ.கணேசலிங்கம்