விக்னேஸ்வரன் மூட்டிய தீ | தினகரன் வாரமஞ்சரி

விக்னேஸ்வரன் மூட்டிய தீ

“இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே” என்ற விக்னேஸ்வரனுடைய முதல் பாராளுமன்ற உரை ஏற்படுத்திய அதிர்வலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நல்விளைவாக அல்ல. பாதமாகவே. பாராளுமன்றத்தில் மட்டுமல்ல, சிங்கள ஊடகங்கள் தொடக்கம் சிங்களப் பொதுவெளி முழுவதிலும் விக்னேஸ்வரன் ஒரு எதிர்மறைப் பாத்திரமாகவே உணரப்படுகிறார். குறிப்பாக இனவாதியாக. (தமிழ்த்தரப்பில் வேறுவிதமாக)

இதைத்தான் விக்னேஸ்வரன் எதிர்பார்த்தாரா? அல்லது அவர் ஏதோ ஒன்றை நினைத்துப் பேச அது இன்னொன்றாக மாறியுள்ளதா? அதாவது அவர் எதிர்பாராமல் இதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா?  

நிச்சயமாக விக்னேஸ்வரன் எதிர்பார்த்தபடியே அனைத்தும் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர் மூட்டிவிட வேண்டும் என்று எதிர்பார்த்த நெருப்பு நன்றாகப் பற்றிப்பிடித்துள்ளது. இப்பொழுது இலங்கை முழுவதிலும் விக்னேஸ்வரன் பேசப்படும் ஆளாகி விட்டார். விக்கினேஸ்வரனுடைய செய்திகளே முதல் பக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெற்கில் எதிர்மறையாளராக. இனவாதியாக. தமிழ்த்தரப்பில் இனப்பற்றாளராகவும் விடுதலைக் குரலாளராகவும் துணிந்து தமிழ்த்தரப்பைப் பற்றிப் பேசும் வல்லமை உள்ளவராகவும்.  

கடந்த இரண்டு வாரங்களாகத் தமிழ் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் விக்கினேஸ்வரனே இருக்கிறார். “இந்த உபாயத்தினால் தமிழ்ச் சமூகத்திடம் ஒவ்வொரு நாளும் விக்கினேஸ்வரனுக்கான ஆதரவு பெருகிக்கொண்டிருக்கிறது. தமிழரின் அரசியலில் அண்மைக்காலத்தில் பேசப்படும் நபராக இருந்த சுமந்திரனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு விக்னேஸ்வரன் முன்னரங்குக்கு வந்துள்ளார். விக்கினேஸ்வரனையும் விட தீவிரமாகத் தமிழ்த்தேசியவாதத்தை முன்வைத்த கஜேந்திரன்ஸ்களையும் விக்னேஸ்வரன் முந்திச் செல்கிறார். இதன்மூலம் அடுத்த (வட) மாகாணசபைத் தேர்தலில் தன்னுடைய தரப்பின் வெற்றிக்கான வியூகத்தை விக்னேஸ்வரன் சிறப்பாக வகுத்துள்ளார்” என்று குறிப்பிடும் அரசியல் அவதானிப்பாளர் ஒருவரின் கூற்றை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாகும்.  

இரண்டு தரப்பிலும் பேசப்பட வேண்டும் என்றால் அதற்கு இலகுவான வழி அல்லது ஆயுதம் இனவாதத்தைக் கையில் எடுப்பதே. சிங்களத் தரப்பிலும் விக்கினேஸ்வரனைப் போன்றவர்கள் உள்ளனர். அவர்களுடைய செய்திகளுக்கு சிங்கள ஊடகங்களில் மட்டுமல்ல, தமிழ்த்தரப்பிலும் தாராளமாக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதை நீங்கள் தொடர்ந்து அவதானிக்கலாம்.  

எனவே விக்னேஸ்வரன் எதை எண்ணிப் பேசினாரோ அது சிறப்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. இங்கே விக்னேஸ்வரன் என்று குறிப்பிடுவது தனியே விக்கினேஸ்வரனை மட்டும் குறிப்பதல்ல. அவரையும் அவருடைய இந்த நிலைப்பாட்டையும் ஆதரித்து நிற்கும் எல்லோரையுமே. ஆகவே இதனால் ஏற்படும் நன்மை தீமை அனைத்துக்கும் இவர்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும்.  

“விக்னேஸ்வரன் ஒன்றும் தவறாகப் பேசவில்லையே! அவர் உண்மையைத்தானே சொன்னார். வரலாற்று (தமிழ்) அறிஞர்களின் கருத்தைத்தானே கூறியிருக்கிறார்? இது எப்படித் தவறாகும்? சிங்களத் தரப்பினர் அரசியல் உள்நோக்கங்களோடு பொய்யான கற்பிதங்களை உருவாக்கி, வரலாற்றையே மாற்ற முற்படுகின்றனர். அதை மறுத்து, உண்மையைப் பேச முற்படுவது எப்படிப் பிழையாகும்? ஒடுக்கப்படும் மக்களின் வரலாற்றை மறைக்க முற்படுவதே ஒடுக்கும் அரசின் நோக்கமாகும். இந்த அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ள விக்கினேஸ்வரனைப் பாராட்ட வேண்டும். இதை, விக்னேஸ்வரன் கூறிய இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் அவரை ஒரு இனவாதியாகச் சித்தரித்து பிரச்சினையைத் திசைதிருப்ப முற்படுகிறார்கள். இதுதான் சிங்களத்தரப்பில் எப்போதுமுள்ள தவறாகும்...” என்று விக்கினேஸ்வரனை ஆதரிப்போர் கூறுகின்றனர் (வாதிடுகின்றனர்).  

மேலோட்டமாகப் பார்த்தால் அல்லது தர்க்கத்தின் அடிப்படையில் நோக்கினால் இந்த வாதம் சரிபோலவே தோன்றும். ஏனெனில் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் சிங்களத் தரப்பானது தன்னுடைய வரலாற்றைப் பலமாக்குவதற்கு எடுக்கின்ற முயற்சிகள் ஏனைய மக்களை நிர்க்கதி நிலைக்குத் தள்ளியுள்ளது. அல்லது உள அச்சத்தை உருவாக்கியுள்ளது. அரசியலமைப்பிலும் சரி இலங்கை முழுவதிலும் உள்ள நிலப்பரப்பிலும் சரி பௌத்தப் பேரடையாளமே நிறுவப்படுகிறது. என்பதால்தான் விக்னேஸ்வரன் போன்றவர்களின் குரலை ஒடுக்குமுறைக்குள்ளாகிய சமூகத்தினர் பெரிதாகக் கொண்டாடுகின்றனர்.  

ஆனால், அரசியலில் ஒரு விடயம் ஏற்படுத்தும் விளைவு எப்படி என்றே பார்க்க வேண்டும். அது எத்தகைய விளைவுகளை உடனடியாகவும் நீண்டகாலத்திலும் ஏற்படுத்தக் கூடியது என்று நோக்குவது அவசியம். தெற்கில் (அரசாங்கம், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், கட்சிகள், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள்) இனவாதம் பேசப்படுகிறது என்பதற்காக நாமும் (தமிழ்பேசும் தரப்பினரும்) பதிலாக இனவாதத்தையே கையில் எடுக்க முடியாது. அப்படியான அணுகுமுறையே கடந்த காலத்தில் நடந்தது. எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜீ.ஜீ. பொன்னம்பலம், நாகநாதன், வி. சுந்தரலிங்கம், அமிர்தலிங்கம் தொடக்கம் மாவை சேனாதிராஜா வரையில் இதுதான் நடந்தது. வேண்டுமானால் பழைய சுதந்திரன் தொடக்கம் அத்தனை தமிழ்ப் பத்திரிகைகளையும் பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது நினைவுபடுத்திப் பாருங்கள். இந்தச் செய்திகளில் பயன்படுத்தப்பட்ட சொற்களே மிகக் கடுமையானவை. ஊடக முறையியலுக்கும் ஜனநாயகப் பண்புக்கும் மாறானவை. உதாரணமாக “அரசுக்குப் பதிலடி, இடித்துரைப்பு, எச்சரிக்கை, காட்டம், சூளுரைப்பு, ஆவேசம், முழக்கம், கர்ஜனை, நிராகரிப்பு என எதிர்மறை உணர்வையும் வன்முறைக்கான தூண்டலையும் கொண்டவை. குறிப்பாகப் போர் மனநிலையைக் கொண்டவை.  

இதனால்தான் நாம் வாயைக் கொடுத்து வயிற்றைப் பழுதாக்கியவர்களாக கசப்பான வரலாற்றனுபவங்களைப் பெற வேண்டிவந்தது. ஏட்டிக்குப் போட்டி என இனவாதிகள் (அவர்கள்) வைக்கின்ற பொறியில் சிக்கியவர்களாக மாறியதால் வந்த வினை இது. இதன் விளைவை ஒரு பெரும் போரிலும் பேரழிவிலும் அனுபவித்தவர்கள். இன்னும் அந்த அழிவிலிருந்தும் அது உண்டாக்கிய பின்னடைவிலிருந்தும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள்.  

ஆகவே இவ்வாறான மிகக் கசப்பான வரலாற்று அனுபவங்களைக் கொண்டிருக்கும் நாம் இனிமேலாவது கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் மிக எச்சரிக்கையாக, மிகக் கவனமாக, மிக நுட்பமாக விடயங்களைப் புரிந்து கொள்ளவும் கையாளவும் வேண்டும். உணர்ச்சிகரமான இழுவிசைகளில் சிக்கக் கூடாது. கூடியவரை அவதானமாகச் செயற்பட வேண்டும். எச்சரிக்கை உணர்வுக்கும் கவனத்திற்கும் நுட்பங்களுக்கும் எப்போதும் தேவையாக இருப்பது அறிவே. ஆகவே இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியலை அல்லது இனப்பகை அரசியலை அறிவுபூர்வமான அணுமுறையின் வழியாகவே எதிர்கொள்ள முடியும். இதையே சூழலும் நிகழ்காலமும் வரலாறும் நம்மிடம் கோருகின்றன.  

போருக்குப் பிறகும் சிங்களத்தரப்பினரில் பெரும்பாலானோர் வரலாற்றுப் போக்கிற்கு மாறாக அநேகமாக முரண்பாட்டு அரசியலையே கையாள முற்படுகின்றனர். இது நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் எதிரானது. அவர்கள் மீள மீள நமக்குப் பொறியையே வைக்கிறார்கள் என்றால், நாம் அதற்குள் போய் முட்டாள்தனமாகச் சிக்கிக் கொள்ள வேண்டுமா? அந்தப் பொறிக்குள் சிக்காதிருப்பதும் அதை உடைத்தெறிய வேண்டியதும் அல்லவா நம்முடைய வேலை?!  

வரலாறும் நிகழ்காலமும் எதிர்காலமும் கூட வற்புறுத்தி நிற்பது முரண்பாட்டு அரசியலை அல்ல. அவை வலியுறுத்திக் கொண்டிருப்பது, பகை மறப்பு அரசியலை. கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் நல்லிணக்கத்தை. அமைதியையும் நிலையான சமாதானத்தையும் நோக்கிய புதிய அரசியலை. இதைச் செய்யாமல் மறுபடியும் முரண்பாட்டு (பகை வளர்ப்பு) அரசியலை அரசாங்கமும் சிங்களத்தரப்பும் செய்ய முற்படும் என்றால் அதுவே வரலாற்று நெருக்கடிக்குள் சிக்க வேண்டியதாக இருக்கும். சமகாலத்திலேயே அது வெளியுலகினால் எதிர்ப்புக்குள்ளாகும். நெருக்கடிக்குள்ளாகும். ஏனெனில் வெளியுலகம் (சர்வதேச சமூகம்) வலியுறுத்திக் கொண்டிருப்பது பகை மறப்பையும் நல்லிணக்கத்தையும் அமைதியையும் நீடித்த சமாதானத்தையுமே. இதற்கு எதிராகச் செயற்பட்டால் அது எப்படி அதனை அனுமதிக்கும்? ஆதரிக்கும்?  

ஆகவே தவறான அரசியலை மேற்கொள்ளும் சக்திகளை நாம் தனிமைப்படுத்தி, அம்பலப்படுத்த வேண்டும். அதுவே அவற்றைத் தோற்கடிப்பதற்கான உபாயம். இதற்கு நமக்கு மிகுந்த நிதானம் தேவை. பொறுமையுடன் கூடிய நுட்பமான மாற்றுச் செயற்பாட்டு முறை அவசியம். அப்படிச் செய்ய வேண்டும் என்றால் இனவாதத்துக்குப் பதிலாக –  பல்லின அடையாளத்தையும் பன்மைத்துவத்தையுமே வலியுறுத்த வேண்டும். தொடர்ந்து இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்க வேண்டும். (இனவாத) விசத்தை இறுக்குவதற்கு மருத்துவர்கள் எடுக்கின்ற கடுமையான முயற்சியைப்போல, இதில் நாம் தீவிரமாகச் செயற்பட வேண்டும்.  

விக்கினேஸ்வரனுடைய உரை பன்மைத்துவத்தைப் பற்றிப் பொருட்படுத்தவே இல்லை. அது தனியே தமிழ்ச்சமூகத்தை மட்டுமே மையப்படுத்தியது. இதனால்தான் அது இலகுவாக இனவாதமாகச் சித்திரிக்கப்படவும் உணரக்கூடியதாக இருந்தது. அவருடைய கூற்றுப்படி “தமிழ் மக்கள்தான் இலங்கையின் பூர்வ குடிகள், தமிழ் மொழியே உலகின் மூத்தமொழி” என்றால் சிங்களர் மட்டுமல்ல, முஸ்லிம்கள், மலையக மக்கள் போன்றோரின் வரலாற்றுப் பெறுமானம் என்ன? இது அந்தச் சமூகங்களையும் கேள்விக்குட்படுத்தி, வரலாற்று வெளியில் பின்தள்ளுவதாகவே அமையுமல்லவா. இதனால்தான் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை யோசப், தனிப்பட்டதொரு உரையாடலின்போது “ஆமா .. இப்ப என்ன பார்லிமெண்டுல தமிழாராய்ச்சி மாநாடா நடக்குது ?” என்று கேட்க வேண்டியிருந்தது.  

இங்கே பிரச்சினை என்னவென்றால் நாம் எப்போதும் எண்ணிக் கொண்டிருக்கிறோம், எங்களுடைய நிலைப்பாடே சரியானது. நம்முடைய கருத்துக்களே சரியானவை. நம்முடைய சிந்தனையே சரியாகவே உள்ளது. நாம் சொல்வதெல்லாம் உண்மையானவையும் நியாயமானவையும். எங்களுடைய பிரச்சினையே ஆகப் பெரிய பிரச்சினை என்றவாறாக.  

ஆனால், பல சந்தர்ப்பங்களிலும் இதெல்லாம் மற்றவர்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது? எப்படி நோக்கப்படுகிறது? என்று நாம் பார்ப்பதில்லை. “என்னுடைய சொற்களுக்கு எதிராளியின் மனதில் இன்னோர் அர்த்தமுண்டு” என்ற த. அகிலனின் கவிதையை இங்கே நினைவு படுத்த வேண்டும். ஆளாளுக்கு வேறுபடுகின்ற அர்த்தம் மாதிரித்தான் சமூகத்துக்குச் சமூகம் வேறுபட்ட மனநிலை, சிந்தனைப்போக்குகளுடன் இருக்கும். இது அந்தந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பிரக்ஞை, அரசியல் விளைவுகள், பொருளாதார நெருக்கடிகள், வாழ்நிலை, பண்பாட்டுச் செல்வாக்கு எனப்பலவற்றினால் உருவாகுவது.  

இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு அதிகம் சிரமப்படவேண்டியதில்லை. சாதாரண நீதிமன்ற வழக்குகள், பொலிஸ் நிலையத்தில் நடக்கும் விசாரணைகள் போன்ற சந்தர்ப்பத்தி​லெல்லாம் ஒரு தரப்பின் நியாயத்துக்கும் நோக்கு நிலைக்கும் மறுதரப்பின் நியாயத்துக்கும் புரிந்து கொள்ளும் முறைமைக்கும் இடையில் உள்ள தன்மைகளை நாம் பார்க்கிறோமே. இங்கு மட்டுமல்ல, வகுப்பறையில், ஏன் நம்முடைய வீடுகளில், குடும்பத்தில், நட்பு வட்டத்தில் கூட இத்தகைய வேறுபட்ட புரிதல்கள், மனநிலைகள் உள்ளது என்பதைப் பார்க்கிறோம். அதிகம் ஏன், “நாம் ஒன்றை நினைக்கத் தெய்வம் வேறொன்றை நினைக்கிறது” என்ற பழமொழியை இந்த இடத்தில் நினைவிற் கொள்ளலாம்.  

ஆகவே விக்கினேஸ்வரனுடைய உரையென்பது நிச்சயமாக தவறான – பாதகமான விளைவுகளையே உண்டாக்கும் என்ற கவலை சமூக நன்மைகளைக் குறித்துச் சிந்திப்போரிடம் காணப்பட்டது. இப்பொழுது அதுவே நடந்திருக்கிறது. சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்பதைப்போல அமைந்து விட்டது. தனிப்பட்ட ரீதியில் அவர் தமிழ்ச்சமூகத்தில் ஒருசாராரிடம் வழிபாட்டுக்குரிய அளவுக்கு உயர் நிலையில் வைத்துக் கொண்டாடப்படலாம். அதனால் அவருக்குச் சில லாபங்கள் தற்போது கிடைக்கலாம். அவர் இந்த மாதிரியான ஆட்களிடம் பெரும் புகழையும் பெறக்கூடும். ஆனால், தமிழ்ச்சமூகத்துக்கு அவர் நெருக்கடிகளை உருவாக்கியவராகவே வரலாறு நிரூபிக்கும். உண்மையில் நடப்பதும் நடக்கப்போவதும் அதுதான். இது விக்கினேஸ்வரனையும் அவரை ஆதரிப்போரையும் நிச்சயமாக வரலாற்றின் குப்பைக் கூடைக்குள்ளேயே தள்ளும். சாதாரணமாக அலல, குற்றவாளிகளாக.

கருணாகரன்

Comments