![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/10/05/a20.jpg?itok=QrXMvVF-)
ரூபிகா தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவி. இவரின் வீட்டு முற்றத்தில் சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க வேப்ப மரமொன்று நன்கு கிளைபரப்பி செழிப்பாக வளர்ந்திருந்தது.
இம் மரத்திலிருந்து பருவகாலத்திற்கேற்ப இலைகள் உதிர்வதும், பூக்கள் சொரிவதும், பழங்கள் வீழ்வதும் இயல்பாகவே நடந்தேறிக் கொண்டிருக்கும். இதனைவிட வேப்பமரத்தை நாடிவரும் பறவைகள் மற்றும் விலங்குகள் எச்சமிடுவதும் கூட இங்கு வருடம் முழுவதும் காணக்கூடிய நிகழ்வுகளாகும்.
ரூபிகாவின் தந்தை குமரனிற்கு தினமும் காலைவேளைகளில் வேப்பமரத்தின் கீழ் உள்ள குப்பைகளையும் கழிவுகளையும் கூட்டி அள்ளுவது பிரதான கடமையாகவும் காணப்பட்டது.
அன்றொருநாள் ரூபிகா தனது வகுப்பறை நண்பர்களுடன் ஐந்து நாட்கள் கல்விச் சுற்றுலா ஒன்றிற்கு சென்றிருந்தார்.
ரூபிகா கல்விச் சுற்றுலா சென்ற மறுதினம் இவரின் தந்தை குமரன் தன் காலைநேர வேலைப்பளுவை குறைப்பதற்காக வேப்பமரத்தைத் தறித்துவிட்டார். அடிமரத்தை கொல்லன் பட்டறைக்கும், மேல் கிளைகளை விறகாலைக்கும் விற்று பணத்தைப் பெற்று அதனை ரூபிகாவின் பெயரில் வங்கியிலும் வைப்பிலிட்டார்.
இப்போது வேப்பமரம் இருந்த இடம் வெறிச்சோடி சோபை இழந்த இடம்போல் தோன்றியது. வீட்டின் முகப்புச் சூழலும் வெப்பம் மிகுதியாகக் காணப்பட்டது.
ஐந்து நாட்கள் கல்விச் சுற்றுலாவை முடித்துகொண்டு வீடு திரும்பிய ரூபிகா வீட்டின் முற்றத்தில் நின்ற வேப்பமரம் இல்லாததைப் பார்த்து அழ ஆரம்பித்தாள். எவ்வளவு சமாதானப் படுத்தியும் அழுகையை நிறுத்துவதாயில்லை.
ரூபிகாவின் சிறிய தந்தை குகனும் சென்று சமாதானப்படுத்த முயற்சித்த போதும் அவள் மேலும் தேம்பித் தேம்பி அழுதாள்.
அவள் அழுதபடியே "சித்தப்பா இந்த மரத்தில் நிறைய அணில்கள், காகங்கள், கிளிகள் இருந்தன. இவற்றுக்கெல்லாம் இம்மரந்தானே வீடு? இப்போது அவ் உயிரினங்கள் எல்லாம் எங்கே தங்கும்?" கவலை தோய்ந்த முகத்துடன் சித்தப்பாவை நோக்கி தொடர்ந்து வினா தொடுத்த வண்ணமிருந்தாள் ரூபிகா.
தனது அண்ணனின் தவறான செயற்பாட்டால் குகனும் கவலை அடைந்தவனாய் வீட்டினுள் இருந்த ரூபிகாவின் அண்ணன் மதுரனையும் அழைத்து ரூபிகாவின் கவலையைப் போக்க பல்வேறு சுவாரஸ்யமான சம்பாசனைகளிலும் ஈடுபட்டார்.
ஒருவாறாக மாலை வேளையில் ரூபிகாவின் அழுகை ஓரளவு ஓய்ந்தாலும் கவலை போகவில்லை. ரூபிகாவிற்கு மட்டுமன்றி குகன், மதுரன் போன்றோருக்கும் கவலைதான்.
சித்தப்பா குகன் தனது பெறாப்பிள்ளைகளுக்கான அறிவுரைகளை வழங்கினார். "மரத்தை வெட்டுவதால் அதில் வசிக்கும் ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல நமக்கும் தீமைதான். எப்படி நாம் ஒட்சிசனை சுவாசித்து காபனீரொட்சைட்டை வெளியேற்றுகிறோம் அல்லவா? மரங்களோ இதற்கு நேரெதிரான வேலையைச் செய்கின்றன. இவை ஒளித்தொகுப்பு எனும் உணவு தயாரிக்கும் பணிக்காக காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளியிடுகின்றன. எனவே நாம் சுவாசிக்கும் வளியில் ஒட்சிசன் இருக்க வேண்டுமாயின் மரங்கள் இருக்கத்தான் வேண்டும்" என தன் கருத்தை முன்வைத்தார்.
பெறாப்பிள்ளைகள் இருவரும் அவரது ஆலோசனையை ஆவலுடன் கேட்கவே அவர் மேலும் தொடர்ந்தார். "விலங்குகளால் சுவாசத்தின் போதும், சூழலில் நடைபெறும் பல்வேறுபட்ட செயற்பாடுகளின்போதும் வெளியிடப்படும் காபனீரொட்சைட்டின் அளவு சூழலில் அதிகரிக்கும்போது, சூழல் வெப்பநிலை உயரும். அதன் விளைவாகப் புவியின் துருவப்பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் உருகும். இதன்பேறாகக் கடல்மட்டம் உயரும். இதனால் கடல் நாட்டுக்குள் வரும்" என்றார். "மரத்தை வெட்டுவதால் இவ்வளவு பாதிப்புகள் எல்லாம் வருமா? என வினவினான் மதுரன்.
இவற்றையெல்லாம் சாய்பு நாற்காலியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த ரூபிகாவின் தந்தை குமரன் தன் தவறை உணர்ந்து கொண்டதுடன் மறுநாளே இரண்டு வேப்பங்கன்றுகளை வாங்கிவந்து வீட்டின் முற்றத்தின் இருமருங்கிலும் நாட்டினார்.
தவறை உணர்ந்த ரூபிகாவின் தந்தை தனது பிள்ளைகள் இருவரையும் அழைத்து இந்த உலகத்தில் வாழ்வதற்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை மரம் உட்பட அனைத்து ஜீவராசிக்கும் இருக்கிறது" எனக்கூறினார்.
அன்று முதல் இன்று வரை ரூபிகாவின் தந்தை குமரன் இரு பிள்ளைகளைப்போல் இரண்டு வேப்பங்கன்றுகளையும் கண்ணும் கருத்துமாகப் பேணிக் காத்து வருகிறார்.
ப. அருந்தவம்,
உரும்பராய்.