அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்; நவதாராளவாத ஜனநாயகத்தின் தோல்வியா? | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்; நவதாராளவாத ஜனநாயகத்தின் தோல்வியா?

அமெரிக்க ஜனநாயகத்தின் தேர்தல் களம் நீண்ட இழுபறிக்குள் அகப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தேர்தல் திணைக்களம் வாக்கு எண்ணும் பணியை நிறைவு செய்யும் முன்னரே வாக்கு மோசடி தொடர்பில் அதிக வழக்குகளை குடியரசுக் கட்சியினர் பதிவு செய்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் வில்லியம் புஷ் எதிர்நோக்கிய அதே சூழல் மீளவும் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமன்றி வெள்ளை மாளிகையை விட்டு டொனால் ட்ரம்ப் வெளியேற மறுத்து வருவதுடன் தேர்தலில் மோசடி நிகழ்ந்துள்ளதாகவும் தானே வெற்றி பெற்றதாகவும் அவர் மீள மீள அறிவித்துவருகிறார். இந்தக் களத்தினை அவதானித்தால் முன்னர் மூன்றாம் உலக நாடுகள் என்று அழைக்கப்பட்ட தற்போது தென் பூகோள நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளது மூன்றாம் தர அரசியலுக்கு ஒப்பானதாக அமைந்துள்ளது. இக்கட்டுரையும் அமெரிக்க அரசியல் கலாசாரத்தின் போக்குகளை தேடுவதாக அமைந்துள்ளது.

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் நிறைவு பெற்ற நிலையில் அந்த நாட்டின் வாக்களிப்பு வீதம் கடந்த 120 வருடங்களிலும் பார்க்க மிக அதிகமானதாக அமைந்திருப்பதுடன் அது 66.9 வீதம் அதிகரித்துள்ளது. இரு வேட்பாளருக்குமான போட்டி ஒவ்வெரு மாநிலத்திலும் சொற்ப இடைவெளியுடையதாகவே அமைந்திருந்தது. கொவிட்-19 இன் தாக்கம் அதிகமான போதும் மக்களது அரசியல் செயற்பாடுகள் மாற்றமடையாத போக்கும் அதற்கு அமைவாக அதிகமான வாக்குப் பதிவு தபால் மூலமானதாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கவைகளாகும்.

ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் குடியரசுக் கட்சி வேட்பாளரும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் 98 சதவீதமான வாக்குகளை பகிர்ந்து கொண்டனர். இது அமெரிக்க அரசியலில் காணப்படும் மரபான விடயமாக தெரிகிறது. எப்போதும் இரு கட்சிப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள அமெரிக்க அரசியல் இரு கட்சிக்குமான போட்டியாகவே அமைந்திருப்பது வழமையாகும். தற்போதைய முடிவுகளின் படி ஜோ பைடன் அடுத்த ஜனாதிபதியாகும் நிலை உறுதியாகிவிட்டது. அவர் அமெரிக்க மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் அமெரிக்க ஆட்சித்துறையின் அரசியல் போக்கு எத்தகைய நிலையை நோக்கி நகர்கிறது என்பதை அவதானிப்பது அவசியமானது.

ஒன்று அரசியல் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு ஒப்பான மரபுகளை அதிகம் பின்பற்ற விளைவதை கடந்த கொரோனா காலத்தில் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக ஜனாதிபதி கொரோனா தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் பின்பற்ற அறிவுறுத்திய தீர்மானங்கள் அனைத்தையும் மீறியதுடன் வெளிப்படையாக முகக் கவசம் அணியாது செயல்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றினால் பீடித்துள்ளதாக நான்கு நாட்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென வெளியே வந்து மக்களுக்கு முன் தோன்றினார். உலகமே பெரும் தொற்றுக்குள் அகப்பட்டிருக்கும் போது எந்தவித பொறுப்புணர்வும் அற்ற நிலையில் ட்ரம்ப்ன் செயல்பாடு அமைந்திருந்தது. தனது தனிப்பட்ட நலனுக்காக அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் பயன்படுத்தும் போக்கானது பொறுப்பற்ற நடத்தை மட்டுமன்றி அருவருப்பான மூன்றாம்தர அரசியலாக தெரிகிறது.

இரண்டாவது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஜோ பைடன் மீதான குற்றச்சாட்டுக்களை அரசியல் நாகரீகத்தைக் கடந்து வெளிப்படுத்தியிருந்தார். உக்ரையின் நாட்டு ஆட்சியாளரையும் தனது நலனுக்காக பயன்படுத்த விழைந்த அரசியல் அபாயமானதாகவே தெரிகிறது. அமெரிக்க நாட்டின் ஜனநாயகத்தினை தனது நலனுக்காக பயன்படுத்தும் முனையத்தில் கடந்த தேர்தலிலும் ரஷ்யாவுடன் இணைந்து ஹிலாரி கிளின்டனைத் தோற்கடித்தார். அத்தகைய நடத்தை என்பது அமெரிக்க மக்களால் கட்டிக்காக்கப்பட்ட அரசியல் நாகரீகத்தை ரஷ்யாவுக்கு அடிமையாக்கியதாகவே மதிப்பீடுகள் உண்டு. அமெரிக்கர்கள் வெட்கி தலைகுனியும் அரசியலை செயல்படுத்தியவர் ட்ரம்ப் என்பது கவனத்திற்குரியதாகும்.

மூன்றாவது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாத ட்ரம்ப் இப்பந்தி எழுதும் வரை வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறுவதை மறுத்துவரும் தலைவராக விளங்குகிறார். இது ஒருவகையில் சர்வாதிகார அல்லது இராணுவ ஆட்சியாளர்கள் போல் ஆட்சியில் இருப்பதற்கான முனைப்பினையே காட்டுகிறது. ஜனநாயக பாரம்பரியத்தையும் மரபையும் 1776 முதல் பின்பற்ற விழைந்த தேசத்திற்குள் ஏற்பட்டுள்ள அவமானமாகவே தெரிகிறது. உலகத்தையும் பிற நாடுகளையும் அடிமையாக கருதும் அமெரிக்கா தனக்குள் ஒரு ஜனநாகத்தை கொண்டிருப்பதாக இதுவரை காட்டிவந்தது. அதனை பாதுகாப்பதற்காக ஆபிராம் லிங்கன் காலத்தில் தென் மாநிலங்கள் முன்னெடுத்த போராட்டத்தையே இராணுவ உத்திகளாலும் கறுப்பினத்தவருக்கு வாக்குரிமை கொடுத்ததாலும் அழித்தொழித்த தேசம் என்பதை நினைவு கொள்ளுதல் வேண்டும். அத்தகைய தேசத்தில் ஒரு சர்வாதிகாரியை ஆட்சியில் கொண்டுவந்தது மட்டுமல்லாது தற்போதும் அத்தகைய வேட்பாளருக்கு அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதன் முக்கியத்துவமும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
நான்கு கறுப்பினத்தவர் மீது ட்ரம்ப் இன் ஆட்சியின் போது ஏற்பட்ட தாக்குதலானது அமெரிக்க ஆட்சித்துறையின் அரசியல் கலாசாரத்தை முழுமையாக தெளிவுபடுத்தியது. அமெரிக்கா அமெரிக்க வெள்ளையருக்கு சொந்தம் என்ற உணர்வுடனேயே ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்தன. பொது விடயங்களை கையாளும் போதும் அமொிக்காவின் தனித்துவத்தில் அந்த நாட்டிலுள்ள பல்இனத் தேசியத்தை சார்ந்ததாகவே அத்தேசம் வடிவமைக்கப்பட்டது. அதன் வளர்ச்சியும் இருப்பும் பல்இனத் தேசியத்துடன் இணைந்ததொன்றாகவே அமைந்துள்ளது. அதனை எல்லாம் நிராகரித்து ஆட்சியையும் அதிகாரத்தையும் ஏனைய இனங்களுக்கு எதிராக பயன்படுத்தியது ட்ரம்ப் இன் ஆட்சியிலேயாகும்.

ஐந்தாவது அவரது நிறுவனங்கள் மீதும் அவரது தனிப்பட்ட வாழ்கை மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தொடுத்துள்ள வழக்குகள் மிக அதிகமானவை. குறிப்பாக அவரது நிறுவனத்தின் மீதான வழக்குகளே 3500 மேற்பட்டவை என்ற தெரியவருகிறன. அவற்றை விட அவரது தனிப்பட்ட பழக்கவழக்கம் தொடர்பிலும் அதிக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இது பெருமளவுக்கு அமெரிக்க ஆட்சித் துறைக்குள் எத்தகையவர் நுழையலாம் என்ற வரையறைகளை மீறியதுடன் அத்தகைய பலவீனங்கள் அந்த நாட்டின் அரசியலமைப்பில் காணப்படுகிறது என்பதை காட்டுகிறது. ஆளுமையை மையப்படுத்திய பொறிமுறையானது கட்சியின் நலன்களுடன் தொடர்புபட்டதாக அமைய முயலுகிறது என்பது ட்ரம்ப் இன் நடைமுறையை குடியரசுக் கட்சியினரது அணுகுமுறையிலிருந்து தெரிகிறது. அதாவது குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் ட்ரம்ப்பிற்க்காக வீதியில் இறங்குவதும் கொரனோ தொற்றின் மத்தியில் பெரும் பேரணியில் ஈடுபடுவதும் அந்த நாட்டின் அரசியல் கலாசாரத்தைக் காட்டுகிறது. இதனைப் பார்க்கும் போது பின்தங்கிய ஆசிய ஆபிரிக்க நாடுகளின் அரசியலில் நிகழ்பவை போல் தெரிகிறது.
ஆறாவது ட்ரம்ப் இன் ஆட்சிக்காலத்தில் பின்பற்றப்பட்ட பல கொள்கைகள் அமெரிக்கரை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. குறிப்பாக குடியேற்றவாசிகளை தடுத்தமை இஸ்லாமிய நாடுகளையும் பிரஜைகளையும் முற்றாக அமெரிக்காவிலிருந்து அப்புறப்படுத்தியமை மெக்ஸ்சிக்கோவுடனான எல்லையில் சுவர் எழுப்பியமை மனித உரிமை பேரவையிலிருந்தும் சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்தும் உலக சுகாதார அமையத்திலிருந்தும் வெளியேறிமை, கியூபா ஈரான் வடகொரியா, சிரியா போன்ற நாடுகளுடனான உறவை பலவீனப்படுத்தியமை மற்றும் இஸ்ரேலுடனான உறவைப் பலப்படுத்திக் கொண்டு ஜனநாயக விரோத செயல்களை முதன்மைப் படுத்தியமை என்பன அதன் மூன்றாம் தர அரசியலாகவே தெரிகிறது.

எனவே முழுமையாக அவதானித்தால் அமெரிக்காவை ஒரு வியாபார நிலையமாகக் கருதி இலாப நட்டம் பார்க்கும் ஆட்சியாளராகவும் அதற்கு ஆதரவளிக்கும் மக்களாகவும் அமெரிக்கர்களைப் பார்க்கும் போது அதன் அரசியல் கலாசாரம் செழிப்பினை நோக்காது அபாயமானதாக மாறிவருகிறது. இது முழு உலகத்திற்கும் பலவீனமானதாகவே தெரிகிறது. நவதராள முதலாளித்துவத்தின் ஆட்சி முறைமையில் காணப்படும் மிகப் பெரும் பலவீனமாகவே தெரிகிறது. அத்தகைய அனுபவத்தினை பகிரும் நாடுகள் அனைத்துமே ஆபத்தான பொறிமுறைக்குள் நுழைவதற்கான நுழைவாயிலாக அமெரிக்கா மாறுகிறது.

கலாநிதி கே.ரீ. கணேசலிங்கம்

Comments