![](https://archives1.vaaramanjari.lk/sites/default/files/styles/large/public/news/2020/11/29/a10.jpg?itok=JEEmCb5R)
தமிழ் மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கு ஒரு மாற்று அரசியல் வேண்டும் என்ற கருத்துத் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி நானும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டு வருகிறேன். மெய்யாகவே விடுதலையை விரும்புவோரிற் பலரும் இந்தக் கருத்துடன் உடன்பட்டுள்ளனர்.
ஆனால், மாற்று அரசியல்தான் முன்னெடுக்கப்படுவதாக இல்லை. அந்த மாற்று அரசியலை முன்னெடுப்பதற்குரிய தரப்பும் சரியாக உருவாகவில்லை. அதற்கான சூழலை உருவாக்கக் கூடிய, அதைப் பற்றிய புரிதலும் தகுதியும் உடைய தரப்புகள் சிதறுண்டேயிருக்கின்றன.
இது தவறு. சாதாரண தவறல்ல. பெருந்தவறு. பொறுப்பற்ற செயல். இவ்வளவுக்கும் இந்தத் தரப்புகளுக்கு ஒரு செயற்பாட்டு அரசியலைக் கொண்ட கடந்த காலப் பெறுமானமுண்டு. அதில் சரி பிழைகளுமிருக்கின்றன. அவற்றை மீள்பரிசீலனைக்குள்ளாக்கித் தம்மை ஒழுங்குபடுத்துவது இன்றைய சூழலில் அவசியம். மக்களை நிர்க்கதி நிலையில் வைத்துக் கொண்டு எந்த வகையான அரசியலைப் பற்றியும் பேச முடியாது. அதேவேளை மக்களை ஒழுங்கு முறைப்பட்ட அரசியலுக்கு, மாற்றத்துக்கான அரசியலுக்கு வழிப்படுத்துவது என்பது லேசானதில்லை என்ற புரிதலோடுதான் இந்தக் கருத்து முன்வைக்கப்படுகிறது.
அதுவும் ஒரு பக்கத்தில் சாதியச் சமூகத்தின் அதே மனநிலையை உள்ளடக்கி, உருமாற்றம் செய்யப்பட்டிருக்கும் தமிழ்த்தேசிய (தமிழ் இனவாத) அரசியல் போக்கிலிருந்து வழிப்படுத்துவது என்ற சவால் ஒருபக்கம் கடினமாக உள்ள நிலையில். மறுபக்கத்தில் மிக இறுக்கமாக வலுப்பெற்றிருக்கும் சிங்கள பௌத்த இனவாதச் சூழலில். பொதுவாகவே மிகக் கடினமான உளச் சிக்கல்களுக்குள்ளாகியிருக்கும் சமூகமொன்றை சரியான திசையை நோக்கி வழிப்படுத்துவது என்பது லேசான விடயமல்ல. இவை அனைத்தையும் கவனத்திற் கொண்டே மாற்று அரசியலுக்கான விடயங்கள் இங்கே பேசப்படுகின்றன.
ஆனால் இதை மையப்படுத்திய சிந்தனைக்குப் பதிலாக மாற்று அரசியல் அல்லது மாற்றுத் தலைமை என்ற பேரில் வெவ்வேறு அடையாளப்படுத்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தரப்பு அல்லது அவ்வாறான தரப்புகளே மாற்று அரசியலுக்குரியவை என்று அடையாளப்படுத்தப்படுகிறது.
இதுவும் தவறு. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து விட்டு பதில் தரப்பை நிறுத்தும்போது கூறப்படும் காரணங்கள், கூட்டமைப்பின் அரசியல் நிலைத்தன்மையில் காணப்படும் குறைபாடு.
சனங்களுடனான தொடர்பாடலிலிருக்கும் போதாமை. உட்கட்சி ஜனநாயகப் பிரச்சினைகளால் கூட்டமைப்பின் உறுதிப்பாட்டில் உள்ள தளம்பல், அரசியல் முன்னெடுப்புகளில் காணப்படும் வெளிப்படைத் தன்மையற்ற நிலை, வாய்ப்புகளை பெறுமானமற்றதாக்குதல் போன்றன. முக்கியமாகக் கூட்டமைப்பின் தாராளவாதப் போக்குக் குறித்த எதிர்ப்புணர்வும் விமர்சனமும்.
பதில் தரப்பை முன்னிறுத்தும்போது அல்லது அடையாளப்படுத்தும்போது இவற்றில் உள்ள ஏனைய விடயங்களைப்பற்றிச் சிந்திப்பதை விடவும் தீவிர நிலைப்பாடே கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனால்தான் விக்கினேஸ்வரனும் கஜேந்திரன்களும் முன்னிலைப்படுகின்றனர்.
கூட்டமைப்பில் காணப்படுவதையும் விட உட்கட்சி நெருக்கடியும் ஜனநாயகப்போதாமையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் உண்டு என்பது அண்மைக்கால வெளிப்பாடுகளாகும். அதைப்போலவே மக்கள் அரசியலை, சமூகச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் முன்னணிக்கும் கூட்டமைப்புக்குமிடையில் எந்த வேறுபாடுகளுமே இல்லை. குறிப்பாக அணுகுமுறைகள் அனைத்தும் அண்ணன் தம்பி என்ற மாதிரியே உள்ளன.
ஆனால், போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வில் ஒரு நாடு இரு தேசம் என்ற கோசம் ஆகியனவற்றில் மட்டும் முன்னணி தீவிரமாகக் குரலுயர்த்துகிறது. இதற்கு அது பூகோள அரசியல் நிலவரங்களை மையப்படுத்திய நிலைப்பாட்டை முன்னிறுத்துகிறது. ஆனால், அதைச் சாத்தியப்படுத்தும் பொறிமுறைகளையோ வேலைத்திட்டங்களையோ அது தெளிவுறுத்தவில்லை.
அடுத்த தரப்பாகிய விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி அரசையும் கூட்டமைப்பையும் கடுந்தொனியில் விமர்சிப்பதற்கு அப்பால், எந்தப் புதிதாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.
மொத்தத்தில் இந்த மூன்று தரப்புகளும் சிறு சிறு ஏற்ற இறக்கங்களைத் தவிர அரசியல் பொதுமைகளில் ஒத்த போக்கினையே கொண்டுள்ளன.
ஆகவே இவர்கள் அடையாளப்படுத்தும் மாற்றுத் தரப்பு, மாற்று அரசியல் என்பதெல்லாம் கூட்டமைப்புக்கு எதிரானது, கூட்டமைப்பை விடத் தீவிர நிலைப்பட்டது என்பதற்கு அப்பால் வேறாக இல்லை. இதனால்தான் தேர்தல் முடிந்த பிறகு இந்தத் தரப்புகள் ஒருங்கிணைந்து செயற்படும் நோக்குடன் பேச்சுகளை ஆரம்பித்தன. முன்னணி இதில் பங்கேற்றவில்லை என்றாலும் அது ஒன்றும் தூரத்தில் இல்லை என்பதே உண்மையாகும்.
இந்த ஒருங்கிணைவு கூட போதாமைகளை மறுபரிசீலனை செய்து புதிய உள்ளடக்கத்தோடு அரசியலை முன்னெடுப்பதற்கானதாக இல்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னடைவுகள், சவால்களைச் சமாளித்துக் கொள்வதற்கான (கிழக்கிலும் வடக்கிலும் அரசு சார்புத் தரப்புகளின் கை ஓங்குகிறது என்பதையிட்ட கவலையின் விளைவினால் உருவான) ஒரு தற்காலிக ஏற்பாடே.
அப்படித்தான் ஒரு ஒருங்கிணைவை இவை ஏற்படுத்தித் தமிழ்த்தேசிய அரசியலை தீவிரமாக முன்னெடுத்தாலும் அது இலங்கைத்தீவின் அரசியலுக்குப் பொருத்தமானதா? நடைமுறைச் சாத்தியங்களைக் கொண்டதாக இருக்குமா? மேலும் தமிழ்ச்சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் ஈடேற்றத்துக்கான அடிப்படைகளைக் கொண்டதாக அமையுமா? இதில் வெற்றிபெற முடியுமா? அதாவது, அரசியல் உரிமைக்கான தீர்வையும் அதன் வழியான தமிழ்ச்சமூகத்தின் வளர்ச்சியையும் எட்ட முடியுமா? என்ற கேள்விகள் உள்ளன. இதற்கான பதிலை இதற்கான அடையாளப்படுத்துவோர் தெளிவாக முன்வைக்க வேண்டும். அந்தப் பதிலென்பது முன்னெடுக்கப்படும் அரசியல் என்பது எது எவ்வாறானது என்பதையும் அதை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகளையும் விளக்க வேண்டும். அதற்கான சாத்தியங்களையும் (உள்நாட்டு நிலவரம், பிராந்திய, சர்வதேசச் சூழல் உள்ளடங்கலாக) கூற வேண்டும். அதைச் செய்யாமல் மேலோட்டமாக வித்தை காட்டிப் பம்முவது சரியல்ல.
அப்படி நிகழாதவிடத்து இந்த அடையாளப்படுத்தல்கள் நிச்சயமாகத் தவறானவை. ஏனெனில் இன்றுள்ள நிலையில் இந்த அடையாளப்படுத்தல்கள் அவ்வளவும் அரச எதிர்ப்புவாதத்தில் மட்டுமே கட்டமைக்கப்பட்டவை. அதற்கப்பால் எதையுமே காணவில்லலை. இதைக்கடந்து சர்வதேச சமூகத்தை – குறிப்பாக இந்தியாவையும் அதனோடிணைந்த மேற்குலகத்தையும் தமிழ் மக்களுக்குச் சார்பாக ராஜதந்திர ரீதியாக வளைத்தெடுக்க வேண்டும். முயன்றால் அதைச் சாத்தியமாக்க முடியும் என்கின்றனர்.
மறுவளமாக இவர்களே அரசியல் என்பது நலன்களின் அடிப்படையிலானது, அரசுகளுக்கிடையிலான ரகசிய – வெளிப்படையான ஒப்பந்தங்களின் கூட்டு நடவடிக்கை என்றும் கூறுகின்றனர். இதில் தமிழ்த்தரப்பை ஆதரிப்பதன் மூலமாக எந்த வகையான நலனை இந்தியாவும் மேற்குலகும் பெற முடியும்? முன்னர் இருந்த சூழல் வேறு. இன்றுள்ள நிலைமை வேறு. 1980 களில் உலக அரசியல் இரண்டு பெரிய மையங்களில் சுழன்றது. அதற்கேற்றவாறு இந்தியா தமிழ்த்தரப்பைக் கையாண்டு இலங்கையை – கொழும்கைக் கட்டுப்படுத்த அல்லது அதன் மீது செல்வாக்குச் செலுத்துவதற்கு முயற்சித்தது. இந்த உபாயம் இப்போது சாத்தியமற்று விட்டது.
பின்னர் புலிகளின் பலமான நிலையானது ஒரு திரட்சியான அரசியல் வடிவமாக இருந்தது. அதனால் அதைப் பயன்படுத்துவதற்கு - தமிழ்த்தரப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு – வெளித்தரப்புகள் முயன்றன. அதைக்கூட அவர்கள் பின்னர் விரும்பவில்லை. அல்லது அதனுடைய பயன்பாடு முடிந்து விட்டது. அதனாலேயே புலிகளை அவை நிராகரித்து அழிப்பதற்கு ஆதரவழித்தன.
பிறகு ஒட்டுமொத்த இலங்கைச் சூழலைப் பயன்படுத்தியே கொழும்பைக் கையாள முற்படுகின்றன. இதில் தமிழ், முஸ்லிம், மலையக, சிங்களத்தரப்புகள் அனைத்தும் உள்ளடங்கும். ஏனெனில் இலங்கை அரசியல் நிலவரமும் சர்வதேச நிலவரங்களும் மாற்றத்துக்குள்ளாகி விட்டன.
அந்த மாற்றத்துக்கு அமையவே அவை தமது அரசியல் அணுகுமுறைகளைக் கையாள்கின்றன. உள்ள யதார்த்துக்கு அமைய அரசியலைக் கையாள்கின்றன. ஆனால், தமிழ்த்தரப்பில்தான் மாறா நிலையுடன் – யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
அப்படியென்றால், மாற்று அரசியல் அல்லது மாற்றுத் தரப்பு என்பதை அடையாளப் படுத்துவோர் தவறான புரிதலில் இருந்து இதைச் செய்கின்றனரா என்றால், நிச்சயமாக இல்லை. மாற்று அரசியலும் அதை முன்னெடுப்பதற்கான வினைத்திறனுடைய மாற்றுத் தரப்பு ஒன்றும் உருவாகக் கூடாது என்ற வலுக்கட்டாயமான நிலைப்பாடே இதன் பின்னால் உள்ள மனோநிலையாகும். இது ஒரு சூழ்ச்சிகரமான நடவடிக்கை.
அதாவது தமிழ் மக்களுடைய அரசியல் எந்த நிலையிலும் மாற்றத்துக்குள்ளாகக் கூடாது என்ற இறுக்கமான நிலைப்பட்ட ஒன்றாகும்.
அது எப்போதும் அரச எதிர்ப்பு, பிற சமூகங்களின் மீதான எதிர்ப்பில் கட்டமைக்கப்பட்டே இருக்க வேண்டும் என்ற பெரு விருப்பத்தின் பாற்பட்டது. இதன் அடியில் ஓடிக் கொண்டிருப்பது இனவாத மனநிலையே. அதை மேலும் உள்ளோடிப் பார்த்தால் சாதிய, வர்க்க மனோநிலையில் நரம்போட்டங்களை அடையாளம் காணலாம். அவற்றின் உளவியலே அங்கே தொழிற்படுகிறது.
இதை ஒருபக்கம் வைத்து விட்டு, அரசும் சிங்களத் தரப்பும் நியாயமாகச் செயற்படுகிறதா? அங்கே இனவாதம் இல்லையா என்று பதில் கேள்வியை இவர்கள் எழுப்பலாம்.
அரசு என்பதே அதிகார அமைப்புத்தான். அதில் ஆட்சியமைக்க முயற்சிப்போர் அல்லது அந்த அதிகாரத்திலிருப்போர் இரண்டு விதமாகத் தொழிற்படுவதுண்டு. ஒரு தரப்பினர் தமது உயரிய சிந்தனையின் மூலம் நாட்டை முன்னேற்றுவர். நாட்டின் முன்னேற்றம் என்பது மக்களையும் வளங்களையும் பாதுகாத்து, அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி மேலும் வளப்படுத்துவதாகும். இதற்குரியவாறு சட்டங்களையும் ஆட்சியையும் உருவாக்கிக் கொள்வர். இங்கே சட்டமும் ஆட்சியும் மக்களுக்கானதே தவிர, ஆளும் தரப்பினருக்குரியதாக இருக்காது. ஆகவே நாட்டின் யதார்த்தத் தன்மைக்கு ஏற்ப ஜனநாயகமும் பன்மைத்துவமும் வலுப்படுத்தப்படும். ஜனநாயகமும் பன்மைத்தன்மையும் வலுப்படப்பட மக்களுடைய பாதுகாப்பும் நாட்டின் வளர்ச்சியும் உயரும். பதிலாக உள் நெருக்கடிகள் குறைவடையும். எங்கே உள் நெருக்கடிகள் இல்லையோ அங்கே அமைதி ஏற்படும். எங்கே அமைதி ஏற்படுகிறதோ அங்கே பயணங்கள் லேசாக அமையும். வளர்ச்சியை நோக்கிய பயணம் என்பது அமைதிச் சூழலில், நெருக்கடியற்ற நிலையில்தான் சுலபமாக நிகழும். ஆகவே இதைப் புரிந்து கொண்டு ஆட்சியை முன்னெடுக்கும் தலைமை தன் முன்னாலுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வைக் காணும். அது வரலாற்று ரீதியாக முன்னிற்கும் நீண்டகால நெருக்கடியாக இருக்கலாம். அல்லது சம காலத்தில் உருவாகிய தற்காலிக நெருக்கடியாக இருக்கலாம். எதுவாயினும் அதை வென்று முன்செல்லும். ஜனநாயகத் தளத்தில், முற்போக்கான மக்கள் ஆட்சியை (அரசியலை) செயற்படுத்தும்.
மறுதரப்பு என்ன செய்யுமென்றால், இதற்கெல்லாம் மறுவளமாகவே செயற்படும். அது அதிகாரத்தைக் கைகளில் வைத்துக் கொண்டு நாட்டையும் மக்களையும் தன்னுடைய காலடியின் கீழே வைத்து ஆட்சியை நடத்தும். இதற்கு எப்போதும் நெருக்கடிகள் தேவை. அந்த நெருக்கடிகளையே தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும். மக்களைச் சமூகங்களாக, இனங்களாகப் பிரிவு நிலையில் வைத்துக் கொண்டு தன்னுடைய ஆட்சியை – அதிகாரத்தைக் கட்டமைக்கும். இது காட்டுகின்ற வளர்ச்சி ஒரு முழு மொத்தத் தேசத்தின் வளர்ச்சியாக மாறவே மாறாது. என்னதான் முயற்சிகளைச் செய்தாலும் அவை வெறும் வித்தைகளாகவே காலத்தில் மிஞ்சும். நாடே வரவரப் பின்னடைந்து கொண்டே போகும். இதைப் பயன்படுத்தி வெளிச்சக்திகள் உள் நுழைந்து விளையாடும். இந்த உள் நுழைவுக்கு நாட்டில் காணப்படும் முரண்நிலைகளையும் நாட்டில் ஏற்படுகின்ற வளர்ச்சியின்மையையும் பயன்படுத்திக் கொள்ளும். அது முதலீடுகளாகவும் கடன்வழியாகவும் அமையும். சில சந்தர்ப்பங்களில் நேரடியான அரசியல் தலையீடுகளாக அமைவதும் உண்டு. குறிப்பாக மனித உரிமை விவகாரங்கள் போன்ற காரணங்களின் வழியாக.
ஆகவே அரசு என்பது எப்போதும் அதிகார மயப்பட்ட ஒன்றாக இருப்பதாலும் இலங்கையில் அது இனவாத மயப்பட்ட ஒன்றாகத் தொழிற்படுவதாலும் இரட்டைச் சவாலைச் சிறுபான்மைத் தேசிய இனமாக உள்ள தமிழ்த்தரப்பு எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இதனையே கடந்த காலத்திலும் தமிழ்ச்சமூகம் எதிர்கொண்டு வந்துள்ளது. இதை முறியடிப்பதற்காக அது கடந்த காலத்தில் முன்னெடுத்த அத்தனை அரசியல் வழிமுறைகளும் நடவடிக்கைகளும் வெற்றியைக் கொடுக்கவில்லை. பதிலாக எதிர்த்தரப்பை இனவாத ரீதியில் மேலும் வலுப்படுத்துவதிலேயே போய் முடிந்துள்ளது
எனவே இனவாதத்தை இனவாதத்தினால் வெற்றி கொள்ளவே முடியாது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. இது சிங்களத்தரப்புக்கும் பொருந்தும். தமிழ்த்தரப்புக்கும் பொருந்தும். முஸ்லிம் தரப்புக்கும்தான்.
என்பதால்தான் நாம் மாற்று அரசியல், மாற்றுத் தரப்பு, மாற்றுத் தலைமை என்பதை குணாம்ச ரீதியாக வேறுபடுத்தி நோக்க வேண்டும் என்கிறோம். இது மாற்று என்பது மெய்யாகவே மாற்றத்துக்குரிய அரசியல் பண்பாட்டைக் கொண்ட ஒன்று. இதுவரையான அரசியற் பாடங்களின் அடிப்படையிலும் நாட்டின் வரலாற்றுச் சூழலுக்கேற்பவும் சர்வதேச அணுகுமுறைகளின்பாற்பட்டும் அமையக் கூடிய ஒன்று. சுருக்கிச் சொன்னால், யதார்த்தம், நடைமுறை, சரி என்ற வகையில் அரசியலை முன்னெடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
இதையே நாம் போருக்குப் பிந்திய அரசியல் என்று குறிப்பிடுகிறோம். போருக்குப் பிந்திய அரசியல் என்பது போருக்கு முந்திய கால, போர்க்கால எதிர்ப்பு அரசியல் அல்ல. அது எதிர்ப்பு அரசியலில் திரட்சி பெற்றது. அந்த எதிர்ப்பு அரசியலானது சிங்களத் தரப்பை மட்டுமல்ல, முஸ்லிம்களையும் அந்நியமாக்கியது. கூடவே இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்தையும்தான். இதைச் சுலபமாக விளங்கிக் கொள்ள வேண்டுமானால், 1970, 80 களில் தமிழ்த்தரப்பின் அரசியல் மோதுகைகள் அரசுடனேயே இருந்தன. அப்போது இந்தியா தமிழ்த்தரப்புக்குப் பக்கபலமாக இருந்தது முஸ்லிம்களும் தமிழ்த்தரப்புடன் இணைந்து நின்றனர்.
2009 இல் உலகமே தமிழ்த்தரப்புக்கு எதிராகவே – மாறாகவே நின்றது. இன்றும் அதுதான் நிலைமை.
இதற்குப் பல நியாயங்களைச் சொல்லலாம். ஆனால், எதிர்ப்பு அரசியலின் குணாம்சம் எப்போதும் பிற தரப்புகளை அந்நியப்படுத்துவதிலேயே முடியும் என்பது வரலாற்றுண்மை. ஆகவே எதிர்ப்பு அரசியல் தோற்றுப்போன, காலங்கடந்ததாகி விட்டது. அதனால் நம்மை நாமே சூடேற்றிக் கொள்ளலாம். நமக்குள் சுய திருப்தி அடைந்து கொள்ளலாமே தவிர, பயனெதையும் விளைக்க முடியாது.
அதைப்போலத்தான் இணக்க அரசியல் என்பதும். போரிலே தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக இணக்க அரசியல் மேலும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அது நிபந்தனையற்ற விட்டுக்கொடுப்புகளின் பின்னே செல்வதாக அமைந்துள்ளது. 2009 க்குப் பிந்திய சூழலில் இணக்க அரசியல் என்பது முதலுதவிச் செயற்பாடுகள் என்பதற்கு அப்பால் எதையும் சாதிக்கக் கூடிய ஒன்றாகவே இல்லை. அது அரசாங்கத்தில் தங்கியிருக்கும் அரசியலாக இருப்பதால், அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் அதனால் எதையுமே செய்ய முடியாது. எனவே இவை இரண்டும் பயனற்றவை.
போருக்குப் பிந்திய அரசியல் அவ்வாறானதல்ல. அது கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் முரண்நிலைகளை மறுதலிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்பட வேண்டியது. பகை, எதிர்ப்பு என்பவற்றை நீக்கம் செய்ய வேண்டியது. நல்லிணக்கத்தை மையமாகக் கொண்டது.
ஜனநாயக அடிப்படைகளைப் பலப்படுத்துவது. சமூகங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை வலியுறுத்துவது. முரண், பகை, பிரிவு, எதிர்ப்பு என்பதெல்லாம் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகமானது என்ற புரிதலின் அடிப்படையில் உருவாக்கப்படுவது சமூகப் பிளவுகள், இனமுரண்பாடுகள் எல்லாம் வெளிச் சக்திகளுக்கு நிபந்தனையற்ற வாய்ப்பைக் கொடுத்து விடும் என்ற அபாய நிலையை உணர்ந்து செயற்படுத்துவது. பன்மைத்துவத்தை வலியுறுத்துவது. பல்லினத் தன்மைகளை உறுதிப்படுத்துவது.
சரி, இவையெல்லாம் நியாயமானவையே. ஆனால், இதையெல்லாம் எப்படிச் செயற்படுத்துவது? ஆளுந்தரப்பும் அரசும் சிங்களப் பெரும்பான்மையும் இதற் எதிராகப் போர்க்கொடியோடு நிற்கும்போது நாம் எப்படி தனித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்? போரில் வெற்றி பெற்றவருக்கும் தோற்கடிக்கப்பட்டவருக்கும் இடையில் எப்படிச் சமனிலையைக் காண முடியும்? அதை விட போரின் வெற்றியை அரசியல் முதலீடாக்கிக் கொண்டிருக்கும் தரப்புகளிடமிருந்து எப்படி நல்லிணக்கத்துக்கான சமிக்ஞைகளைக் காண முடியும்?
இழப்புகளுக்கான பதிலீட்டைப் பற்றிப் பேசாத அரசோடு எவ்வாறு உடன்பாடுகளைக் காணவியலும்? சிறுபான்மைச் சமூகங்களை தேசிய இனங்களாக அங்கீகரிக்காமல் தனக்குக் கீழே வைத்திருக்க விரும்பும் சமூகத்தினரோடு எப்படி நெருக்கமாகலாம்? பிற சமூகங்களின் அடையாளத்தையும் மன உணர்வுகளையும் அங்கீகரிக்கத் தயாரில்லாதவர்களோடு எப்படிச் சேர்ந்திருப்பது? பல்லின நாடு என்ற அப்படையில் ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதைப் பற்றிச் சிந்திக்கத் தயாரில்லாத வர்கள் உள்ள சூழலில் எதை வைத்து நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது? என்ற கேள்விகளை இதற்கு யாரேனும் அடுக்கலாம்?
கருணாகரன்